திலகவதியார் – நாட்டிய நாடகம்

“இப்ப நம்ம எங்க போறோம்னு தெரியுமா? நம்ம வீரமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்ல, அங்க சிவன் சன்னதிக்குப் பின்னாடி ஓரத்துல நாலு பேரோட சிலை வச்சிருப்பாங்க தெரியுமா?”னு என் மனைவி என் மகளிடம் கேட்க, “ஆமாம்மா, அப்பா கூட அங்க நின்னு அந்த சாமிககிட்ட பேசிட்டிருப்பாங்களே?” என்று அவள் என்னை வம்பிழுக்க, சிரித்துக்கொண்டே, “ஆமாம், அங்க இருக்கிற நால்வர்ல, முதல்ல உள்ள சாமி கையில, நீ ‘பீச்சு’க்கு மண்ல விளையாட எடுத்துட்டு போவையே, நீளமா மண்ணள்ளுற கரண்டி, அதே மாதிரி வச்சிருப்பார்ல, அவர் பேர் தான் ‘திருநாவுக்கரசர்’. அவரோட அக்கா பெயர் ‘திலகவதியார்’. இவரு இங்க சாமியா நிக்க காரணம் அவங்க அக்கா தான். அவங்கள பத்தின நாட்டிய நாடகம் பார்க்கத்தான் இப்ப நம்ம போயிட்டுருக்கோம்”னு ஒரு முன்னுரை கொடுத்தாங்க என் மனைவி.

நேத்து பிஜிபி அரங்கத்துல நடந்த ‘திலகவதியார்’ நாட்டிய நாடகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த சிறந்த ஆன்மீக கலைப் படைப்பு. பல்வேறு வயதுடைய சிவத் தொண்டூழியர்களின் தன்னலமற்ற உழைப்பு.

நாட்டிய நாடகக் கதைச்சுருக்கம்: சைவக் குடும்பத்தில் பிறந்த ‘மருள் நீக்கியார்’ அவரின் அக்கா ‘திலகவதி’ இருவரும் சிவ வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர்கள். ‘திலகவதி’க்கு மணமுடிக்க ‘கலிப்பகையார்’ரை மாப்பிள்ளை பேசி தேதி நிச்சயிக்கப்பட, திலகவதியாரின் பெற்றோர்கள் திடீரென மரணமடைகின்றனர். பிறகு போரில் ‘கலிப்பகையாரும்’ இறந்துவிட, மணமுடிக்காமலேயே விதவைக் கோலம் பூண்டு உடன்கட்டை ஏற முற்பட, ‘மருள் நீக்கியார்’ ‘திரகவதியார்’ரின் காலில் விழுந்து அதை தடுக்கிறார். பிறகு அவர் தம்பிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிறார். ஆனால் ‘மருள் நீக்கியார்’ சமண மதத்தைத் தழுவி தன் அக்காவை விட்டுப் பிரிந்து ‘தரும சேனன்’னாக சமண ஆசிரமத்தில் வாழ்கிறார். இதனை சிவபெருமானிடம் ‘திலகவதியார்’ முறையிட அவர் ‘தரும சேனனை’ சூலை நோய் ஏற்படுத்தி ஆட்கொள்வதாய்ச் சொல்கிறார். அது போல் ‘தருமசேனனுக்கு’ தீரா வயிற்று வலி ஏற்பட , சமணத்துறவிகளின் சிகிச்சையிலும் குணமாகாத அவர் தன் அக்கா ‘திலகவதியார்’இன் உதவியை நாடி அங்கு செல்கிறார். அவர் ‘தரும சேனன்’னுக்குத் திருநீறு கொடுத்துப் பூசச் சொல்ல, அதைப் பூசி, ‘கூற்றாயின வாறு விலக்கிலீர்….’ என்ற பதிகத்தைப் பாட வயிற்று வலியிலிருந்து விடுபடுகிறார்.’திருநாவுக்கரசர்’ என்று பெயர் பெற்று சிவனடி சரணடைகிறார். இது தான் இந்நாடகத்தின் கதைச்சுருக்கம்.

இப்ப நாடகத்தைப் பார்ப்போம். இதில் நடித்தவர்கள் யாரும் தொழில்முறை நடிகரல்ல. அவர்கள் திருமுறை மாநாட்டுக் குழுவில் உள்ளவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தான். அனைவரும் தங்களுக்கான பங்கைத் திறம்படச் செய்தனர். கதையை காட்சிப்படுத்திய விதம் மிக அருமை. தேவைக்கேற்ப காட்சிகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் பாடல் சற்றே நீளமானதாக இருந்ததால் நடிப்பவர்கள் ஒரே விதமான அசைவுகளை மீண்டும் மீண்டும் செய்ய நேரிட்டது. குறிப்பாகத் ‘திலகவதியார்’ரிடம் ‘தருமசேனர்’ரின் வயிற்று வலி குறித்து முறையிடும் காட்சியின் போது நம் கவனம் சற்றே தடைபட்டது.
பாடல்கள் அனைத்தும் எளிதாக புரியம்படியும் கதைக்கு ஏற்றவாறும் அமைந்தது. அதில் வார்த்தைகள் புகுத்தப்படாமல் அழகாய் எதுகை மோனையோடு அமைந்திருந்தன. சில வெண்பா இலக்கணத்தில் இருந்தன. பல பாடல்களின் இலக்கணம் என் சிற்றறிவுக்குப் பிடிபடவில்லை. இன்னும் நிறைய படிக்க வேண்டும் அ.கி. அய்யாவின் மரபுப்பாடல் புரிவதற்கு. ஒரு நாடகத்தின் மொத்தக் கதையையும் தன் பாடல்களால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருப்பது மிக அருமை. அப்பாடல்களை பாடிய, இசையமைத்த கலைஞர்கள் நாடகத்துக்கு உயிரூட்டினார்கள்.
இது நாட்டிய நாடகம் என்றாலும் நாட்டியம் குறைவாகவே காணப்பட்டது. பாடல்கள் இருந்த அளவு நாட்டியம் இல்லை என்று சிலர் நினைக்கலாம். முழுக்க நாட்டியம் இருந்திருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்திருக்காது என்பது என் கருத்து. இக்கதைக்கு ஏற்றவாறு காட்சி அமைந்தது. ‘திலகவதி’ நிச்சயதார்த்த நிகழ்வில் மாப்பிள்ளையும், பெண்ணும் எதிரெதிரே அமர்ந்து தங்கள் ஒப்புதலைச் சொல்லும் போது, ‘ஆஹா நம்ம காலத்தில இப்படி இல்லையே நேரா தாலி கட்டதான கூட்டிட்டுப் போனார்கள். அந்தக் காலத்திலேயே இப்படி கருத்துச் சுதந்திரம் இருந்திருக்கே’ என்று எண்ணும்படி அமைந்திருந்தது அந்தக் காட்சி. போர்க்காட்சி மிக தத்ரூபமாக இருந்தது. அதிலும் அந்தக் காட்சியில் ஒலி ஒளி அமைப்பு மிக அருமை. காட்சியைத் தூக்கி நிறுத்தியது.
உடை, அணிகலன்கள், பொருட்கள் பல காட்சிகளுக்கு மிகவும் பொருத்தமாய் அக்காலத்திற்கேற்ப இருந்தன. பின்னணி திரையைக் காட்சிக்கேற்ப மிக அழகாய் மாற்றி அமைத்தார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் இடையே மிகக் குறுகிய நேரமே எடுத்துக்கொள்ளப்பட்டது நாடகத்தை சலிப்புத் தட்டாமல் நேரத்தில் முடிக்க உதவிற்று. அதற்கு உழைத்த பின்னணி கதாநாயகர்களுக்கு என் பாராட்டுகள்.
நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று திரைச்சீலை. இவ்வரங்கு நாடகத்திற்காக வடிவமைக்கப்படவில்லை என்பதால் முன்னால் திரைச்சீலை இல்லை. அதை
அமைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். காரணம், அங்கு சுவத்திலோ, தரையிலோ எங்கும் எந்த ஆணியும் அடிக்க முடியாது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அந்த திரைச்சீலையை கொண்டு மூடுவதற்கும் திறப்பதற்கும் இரு பக்கமும் கையில் இழுத்துக்கொண்டு ஓடினர் சிலர். அவர்கள் அப்படி ஓடும் போது எங்கே கழண்டு விழுந்துவிடுமோ என்ற பயம் நாடகம் முடியும் வரை எனக்கிருந்தது. ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்காமல் சிறப்பாக அந்த வேலையைச் செய்தார்கள் திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தவர்கள்.

நம்ம ஒரு விஷயம் மனசில் வச்சிகணும் இந்நாடகத்தை மேடையேற்றியவர்கள் எந்த ஒரு நாடக கம்பெனிக்கும் சொந்தக்காரர்கள் அல்ல. எல்லோரும் இதை ஓர் தொண்டூழியமாக செய்தவர்கள். அந்த வகையில் இந்நாடகத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் நம் பாராட்டுக்குரியவர்கள். குடும்பத்துடன் மிக அருமையான ஆன்மீக நாட்டிய நாடகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பை எனக்கு நல்கிய அ.கி. வரதராஜன் ஐயாவுக்கும் அவருடைய குழுவினர்க்கும், திருமுறை மாநாட்டுக் குழுவினர்க்கும் இச்சிறுவனின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இப்படிச் சிறப்பாக சிங்கையில் ஒரு ஆன்மீக கலைப் படைப்பை படைத்தவர்களுக்கு இந்நாடகத்தை கூட்டாக ஏற்பாடு செய்த இந்து அறநிலையத்துறை அடுத்த ஆண்டு மேலும் நல்ல வசதிகளைச் செய்து கொடுப்பார்களேயானால் நாட்டிய நாடகத்தைப் படைப்பவர்களுக்கும் அதைக் காண வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு நல்லாதரவு வழங்குவது நம் போன்றோரின் கடமை.

பி.கு: ‘திருநாவுக்கரசர்’ கையில் இருக்கும் கருவிக்குப் பெயர் “உழவாரம்” என்ற விவசாயக் கருவி. அவர் செய்த உழவாரப்பணி சிறப்பு வாய்ந்தது.

Leave a Comment