#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்
(இது சிறுவர்களுக்கும் புரியும்படி எளிய சொற்களைக் கொண்டு மரபு கவிதையில் ஒரு சின்ன முயற்சி)
சிங்கை பவன்!
உண்ண உணவு சிங்கையிலே – எல்லாம்
உடனே கிடைக்கும் அருகினிலே
என்ன வகைகள் என்றாலும் – அதில்
எத்தனை சுவைகள் கேட்டாலும்
சின்ன கடைகள் ஆனாலும் – பெரிய
சீமான் விடுதி போனாலும்
அன்ன பூரணி அவள்தானே – நம்
அனைவரின் பசியும் போக்குவதால்
வித்தை எதுவும் செய்யவில்லை – எந்த
விளைச்சல் இல்லா நிலமெனினும்
அத்தனை நாட்டு உணவுமிங்கே – என்றும்
அனைத்து இடத்தும் கிடைக்குமிங்கே
சுத்தமாய் சோதனை செய்தபின்னே – நற்
சுகாதா ரசான்றும் கொடுத்தபின்னே
மொத்த பொருளும் தீவினிலே – நல்
முத்திரை யுடன்விற் கப்படுதே
பத்திய சாப்பா டானாலும் – மிக
பலமாய் உண்ண கேட்டாலும்
சத்தான உணவு உண்ணுவதால் – இங்கே
சராசரி வயது எம்பதாச்சு
புத்தம் புதுநோய் வராவண்ணம் – என்றும்
போதுமாய் சட்டம் கொண்டுவந்து
அத்தனை பாதிப் புற்றபுலால் – வரவு
அனைத்தும் தடைகள் செய்திடுமே
ஹாக்கர் செண்டர் கடைகளிலே – நல்ல
ஹலால் உணவுடன் சைவமுண்டு
பாக்குற எல்லா பண்டமுமே – மிக
பரிசுத் தமாய் சமைப்பதுண்டு
விக்குற அத்தனை உணவுகளும் – நமக்கு
விலையும் மலிவாய் கிடைப்துண்டு
கேக்குற அளவு கொடுப்பதினால் – நம்
கொள்ளும் வயிறு நிறைவதுண்டு
பிரபல கோழிச் சோறுமுண்டு – நமக்கு
பிடித்த லக்சா மீகோரிங்
நிறைந்த மீன்கறி தலையுடனே – ரொம்ப
நல்ல சார்கோவ் தியோவுமுண்டு
கார நண்டும் ருசித்திடலாம் – கடையில்
காயா டோஸ்ட்டும் சுவைத்திடலாம்
தரமுடன் விருந்தும் தித்திக்கும் – சீன
திம்சம் பரிமா றும்போது
பல்வகை பிரியா ணிதேக்காவில் – மற்றும்
பலவகை உண்டு பரோட்டாவில்
சில்லென செண்டோல் பானமுமே – இனிக்கும்
சீனி மைலோ டைனோசரும்
பல்லில் பட்டால் கூசிடுமே – இருந்தும்
பதமாய் சுகமும் அளித்திடுமே
உள்ளம் கொள்ளை போய்விடுமே – நம்ம
உயர்ந்த சிங்கை உணவிடமே