அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் தமிழ்மொழி விழாவினையொட்டி இந்தாண்டு ஏப்ரல் 20(வியாழன் மாலை மணி 3:30), ஏப்ரல் 21 (வெள்ளி மாலை மணி 3:00, இரவு மணி 8:00), ஏப்ரல் 22 (சனி இரவு மணி 8:00) ஆகிய மூன்று நாள்கள் நான்கு காட்சிகள் “தெனாலிராமன் – விகடகவி” என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். மாலை காட்சிகள் மாணவர்களுக்கானது.
நான் வெள்ளிக்கிழமை இரவு மணி 8:00 காட்சிக்கு 7:00 மணிக்கே சென்றுவிட்டேன்.
நாடகம் குறித்த கையேடு உதவியாக இருந்தது. என்னுடைய இந்த பதிவு இந்த காட்சியை குறித்து மட்டுமே.
நாடகம் தொடங்கும் முன் ‘யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், காணொளியில் பதிவு செய்யலாம், முகநூலில் நேரலையாக ஒளிப்பரலாம்’ என அறிவிப்பு செய்தது எதிர்பார்க்காதது. வரவேற்கத்தக்க அறிவிப்பு.
சரியாக மணி 8:00க்கு நாடகம் தொடங்கியது. முதலில் சாமியார் ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுடன் அனைவரது இருக்கைக்கு அருகில் சென்று நலம் விசாரித்து வரவேற்றார். சிஷ்யர்களாக வந்த குழந்தைகள் அனைவரும் அழகாக சில பார்வையாளர்களிடம் சென்று ‘வாங்க, வணக்கம்’னு பேசியது மிக அழகு. திரை விலகுவதற்கு முன்னரே வித்தியாசமான இந்த வரவேற்பு, நாடகத் தொடக்கம் நன்றாகயிருந்தது.
கடந்தாண்டு இதே நாளில்(28-ஏப்ரல்-2016) இவர்களுடைய, ‘சங் நீல உத்தமன்’ என்ற நாடகம் குறித்து பின்னூட்டம் எழுதிய போது.
“கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பு கொண்ட நடிகர்களை தேர்வு செய்தால் நாடகத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.” என எழுதியிருந்தேன்.
இந்தாண்டு, கதாபாத்திரங்கள் தேர்வு மிக கச்சிதம், தெனாலியில் தொடங்கி கிருஷ்ணதேவராயர், பங்கஜம், சூரன்னா, பெத்தன்னா, கொற்றவை, அப்பத்தா, பகவன் வரை அனைவரும் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தினர். சிறப்பான தேர்வு.
தெனாலியாக நடித்த நவீன்நேசன், இயல்பாக கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தினார். தெனாலியின் அம்மா இறந்த காட்சியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார், நவீன். இன்னொரு காட்சியில் படியின் மேல் நின்றுகொண்டே அப்படியே பின்பக்கமாக நேராக விழுவார். அருமை, அருமை. அவரை தாங்கி பிடித்தவர்களும் சிறப்பாக செய்திருப்பார்கள். இதற்கு எத்தனை ஒத்திகை பார்த்தார்களோ அத்தனையும் உழைப்பு, வீண்போகவில்லை.
கடந்தாண்டு நவீன் ‘சங் நீல உத்தமன் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார்.
பங்கஜமாக நடித்த யோகினி கடந்தாண்டு ‘மதப்பு’ என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்தவர். இந்த நாடகத்தில் அவருடைய நடிப்பு பற்றி சொல்லத்தேவையில்லை. மிக இயல்பாகவே நடித்தார். வறுமையில் இருந்து பணம் வந்தவுடன் அந்த உடை, அலங்காரம் எல்லாம் மாறுவது சிறப்பு.
வயதான அப்பத்தாவாக நடித்த திவ்யா சிவகிருஷ்ணன் குரலில் அந்த வயதிற்கேற்ற நடுக்கத்தையும், முகத்தில் காட்சிக்கேற்ற பாவனைகளையும் சிறப்பாக செய்தார்.
சூரன்னாவாக நடித்த இராம்குமார் சந்தானம் நடிப்பில் வெளுத்து வாங்கினார். மிக அருமையான நடிப்பு. பல ஆண்டுகளாக அவரை நன்கு தெரிந்தவன் என்ற முறையில் எனக்கு அது பெரும் ஆச்சரியத்தை தரவில்லை மாறாக மகிழ்ச்சியாக இருந்தது. சொல்லப்போனால் சூரன்னாவாகவே(கதாபாத்திரத்திரமாகவே) வாழ்ந்திருந்தார். அவருக்கு இது முதல் மேடையென யாராலும் சொல்லமுடியாது. உண்மையில் இப்பத்தான் புதிய ‘அவதாரம்’ எடுத்துள்ளார். அவர் மேலும் நடிப்பில் பல வெற்றிகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனால் மேடையில் பல கதாபாத்திரங்கள் நடிக்கும் போது நாம் தனித்துவமாக தெரியலாம் ஆனால் தனியாக தெரியக்கூடாது என்பது என் கருத்து. சில இடங்களில் சத்தம் கொஞ்சம் அதிகமாக தெரிந்தது.
கிருஷ்ணதேவராயராக நடித்த நிர்மலுக்கு இரண்டாவது மேடை. அவருக்கு ஏத்த கதாபாத்திரம். நன்றாக நடித்தார். கொஞ்சம் கம்பீரம் குறைவாக இருந்தது.
பெத்தன்னாவாக நடித்த காசிநாதனுக்கு இது மூன்றாவது மேடை, அமைதியான கதாபாத்திரம், அமைதியான நடிப்பு. கொற்றவையாக நடித்த ஜெயஶ்ரீ பாலகிருஷ்ணனுக்கு முதல் மேடையானாலும் எந்த பதட்டமும் இல்லை. நல்ல நடிப்பு. அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது.
அந்த சாமியாராகவும் திருடராகவும் நடித்த விக்னேஷ்வரன் சுப்ரமணியன் வழக்கம் போல் சிறப்பாக நடித்தார். என்ன, அந்த சாமியார் உடை, கையில் ஒரு பந்து மல்லிகை பூவை மொத்தமாக சுத்தியிருந்தது இதெல்லாம் பொருத்தமாக இல்லை. அதுவும் மாணவர்களை சிஷ்யர்களாக வைத்துக்கொண்டு ‘கும்,கும்…’ என சத்தம் கொடுத்ததையும் தவிர்த்திருக்கலாமோ என தோன்றியது.
என்னை மிகவும் கவர்ந்த நடிப்பு பகவனாக நடித்த தர்ஷன் மூர்த்தி என்ற மாணவருடைய நடிப்பு. இரண்டாவது காட்சியில் அந்த குழந்தைகள் விளையாடும் காட்சியில் சுத்தி சுத்தி ஓடி வருவதும் அப்பத்தாவிடம் ‘எந்த ஊரு..’ என்று தொடங்கி அவரை சுத்திகிட்டே தொடர்ந்து
“என்ன கொட்டு”
“முரசு கொட்டு”
“என்ன முரசு”
“அரசு முரசு”
….இப்படியே தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட கோள்வி கேட்பதும் அதற்கு அப்பத்தா பதில் சொல்வதும் அருமையான காட்சி. இதில் பகவன் ரொம்ப எதார்த்தமா நடித்திருப்பார். அப்பத்தாவும் தான்.
பூனையாக நடித்த பூஜா என்ற மாணவியும் சிறப்பாக செய்திருந்தார். குழந்தைகள், அரண்மனை காவலாளி, அரசவை உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பங்கேற்பை சரியாக செய்தனர்.
நாடகத்தில் அரங்கமே சிரித்து இரசித்தது அந்த கிளியாக நடித்த ஓவியா என்ற மாணவி ‘நாசமா போச்சு’ என்று சொல்லும் போதுதான். இந்த மாதிரியான நகைச்சுவை வசனங்கள், காட்சிகள் நாடகத்தில் குறைவு என்பது என் கருத்து. கொற்றவையின் காட்சி, சில சோக காட்சிகள் இவைகளை குறைத்து நகைச்சுவை காட்சியை நிறைய சேர்த்திருக்கலாம் என எனக்கு தோன்றியது.
நிறைய பேர் நாடகத்துக்கு புதியவர்கள் என்றாலும் நல்ல முயற்சி, ஒருவர் கூட வசனத்தை மறந்துவிடவோ தவறாக பேசவோ இல்லை. ஒரே ஒரு விஷயம் சொல்லவேண்டுமென்றால் மேடையில் ஒருவர் வசனம் பேசும்போது மற்றவர்களும் சில பாவனைகள் செய்து நடித்தால் ஒட்டுமொத்தக் காட்சியும் நன்றாக இருக்கும். இன்னும் சிலவற்றை மேம்படுத்தலாம் என தோன்றியதை நான் தனியாக இயக்குனர் புகழேந்தியிடம் தெரிவித்து விட்டேன். அதனால் இங்கே குறிப்பிடவில்லை. அது அடுத்த காட்சியில் சரிசெய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
நாடகத்துக்கேற்ற அருமையான அரங்கம், முதல் தடவை இந்த அரங்கத்திற்கு சென்றேன். மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு போன்ற அமைப்பு கொற்றவை, அரசர் காட்சிகளுக்கு வலு சேர்த்தது.
நாடகத்துக்கு பயன்படுத்திய அரசர் காலத்து உடைகள், ஒப்பனைகள், அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள் எல்லாமே மிக சிறப்பு. குறிப்பாக அந்தகாலத்து ‘டிரங்க்’ பெட்டி பயன்படுத்தியது அருமை. அதற்காக அவர்கள் கண்டிப்பாக நிறைய உழைத்திருப்பார்கள். ஒலிஒளி அமைப்பு பெரும்பாலும் நன்றாகவே இருந்தது. ஒலிவாங்கியை உத்திரத்தில் தொங்கவிட்டிருந்தது நல்ல யோசனை, பயனளித்தது.
திரையில் ஓடிய பின்னணி படங்கள் பெரும்பாலான காட்சிகளில் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, திருடர்கள் கிணற்றிலிருந்து பெட்டியை எடுக்க கயிறு போட்டு தண்ணீரை இறைக்கும் போது பின்னால் திரையில் கிணற்றை காண்பிக்க முன்னால் தண்ணீர் இறைக்க நன்றாக அமைக்கப்பட்ட காட்சியது.
நான் முன்பே கூறியதுபோல் இந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மொத்தம் உள்ள 48 நிகழ்வுகளில் (4 பள்ளி நிகழ்வு இல்லாமல்) இரண்டே இரண்டுதான் சமூக மன்றங்களில் நடந்தன. ஒன்று உலு பாண்டான் சமூக மன்றத்தில் நடந்த இந்த தெனாலிராமன் நாடகம். இன்னொன்று கீட் ஹாங் சமூக மன்றத்தில் நடந்த முடிந்த பட்டிமன்றம். பெரும்பாலும் உமறுப்புலவர், தேசிய நூலகம், மரபுடைமை நிலையம் என மத்திய வட்டாரத்தில்(நான்கு நிகழ்ச்சிகள் வட்டார நூலகங்களில் நடைபெறுகிறது) நடைபெற்று வருகிற தமிழ்மொழி விழாவை சிங்கையின் வெளிவட்டார வீடமைப்பு பேட்டைகளுக்கு எடுத்துச் செல்வது சிறப்பாகும். வழக்கமாகக் காணப்படும் முகங்களைக் நான் அன்று காணவில்லை. தனியார் பள்ளி ஆசிரியர் அனுராதா தன் சொந்தசெலவில் பள்ளியின் அனுமதியுடன் தன்னுடைய மாணவர்களை அழைத்து வந்திருந்தது சிறப்பு.
இந்நாடகத்தை அரங்கேற்ற கண்டிப்பாக நிறைய உழைப்பு தேவைபட்டிருக்கும். அதுவும் ஒரு வரலாற்று நாடகத்தை எடுப்பது, அதற்கான ஒப்பனைகளை தயார் செய்வது, நான்கு காட்சிகள் மேடையேற்றுவது அவ்வளவு சுலபமில்லை.
நுழைவுச்சீட்டில் $25வெள்ளி என போட்டிருந்தாலும் $15வெள்ளிக்குதான் விற்றார்கள். கேட்டவுடன் நுழைவுச்சீட்டு கொடுத்த நண்பர் புகழ் அவர்களுக்கு நன்றி. கடந்தாண்டு $25வெள்ளிக்கு வாங்கினேன் இந்தாண்டு $15வெள்ளிக்கு வாங்கினேன். நான் பார்த்த காட்சியில் அரங்கம் பாதிக்குமேல் நிறையவில்லை. ஆனால் மற்ற காட்சிகளில் அரங்கு நிறைந்திருக்குமென நினைக்கிறேன்.
கடந்தாண்டு மகிச்சிறப்பான ‘சங் நீல உத்தமன்’ நாடகத்தை அரங்கேற்றி அதிபதி இந்தாண்டு அரங்கேற்றிய ‘தெனாலி’ இன்னும் சிறப்பாக செய்வார்கள் என நான் எதிர்பார்த்தேன். தமிழுக்கும், நாடகக்கலைக்கும் ஆதரவு தர வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஆனால் நல்ல பொழுதுபோக்குகாக நாடகம் பார்க்க வரும் பொது மக்கள் பணம் கொடுத்து நாடகத்தை பார்க்க வர வேண்டுமானால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
நான் கடந்தாண்டு கூறியது போல், இந்நாடகக்கலை மேலும் வளர்ச்சியடைய நாடகக்கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். நாடகங்கள் நூலுருப் பெறவேண்டும். நாடகத் திறனாய்வுகள் பெருகவேண்டும். ஆங்கில மொழியில் நாடகக்கலையை வளர்க்கும் பயிற்சிமையங்கள் போல தமிழுக்கும் அமைக்கப்பட வேண்டும். பொது மக்கள் ஆதரவு நல்கிட வேண்டும்.
பி.கு: நாடகத்தின் கதைச்சுருக்கம் புகைப்படத்தில் உள்ளதால் அது குறித்து சொல்லவில்லை.
