தமிழ்ச்சுடர் – சமூக விருது

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு முதன்முறையாக ஏற்பாடு செய்திருக்கும் “தமிழ்ச்சுடர் – சமூக விருது” வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை Grand Copthorne Waterfrontஇல் நடைபெற்றது.

செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் நுண்கலைக் கழகம்(SIFAS) இசைக்குழுவினரின் இசையோடு 8:05 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. புல்லாங்குழல் இசையும், குழுவினரின் இசையும் சிறப்பான தொடக்த்தை அளித்தது.

திரு ந குணாளன், தலைவர், தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, மீடியாகார்ப், வரேற்புரையாற்றினார். இந்நிகழ்வு விருது வழங்குவதோடு முடியாமல் தமிழ்மொழி வாழும் மொழியாக இருப்பதற்கு விருதாளர்களுக்கு திட்டங்கள் செய்ய ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். ஈராண்டுக்கு ஒரு முறை தமிழ்ச் சுடர் விருது வழங்க இருப்பதாகவும் சொன்னார்.

அவரே சிறப்பு விருந்தினரை உரையாற்ற அழைத்தார். திரு விக்ரம் நாயர் தமிழ்
மொழி வளர்ச்சிக் குழுவின் திட்டங்கள் குறித்து பேசினார்.

அடுத்து திரு சபா முத்து நடராசன் எழுதிய தமிழ்ச் சுடர் சிறப்பு பாடலை திரு முகமது ரஃபி இசை அமைத்து பாடினார். பாடல் வரிகளும் இசையும் நன்று.

பின்னர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

விருந்து நடைபெறும்போதே விருதுகளும் அறிவிக்கப்பட்டு பின்னர் மேடையில் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. விருதாளர்கள் ஒவ்வொருவரும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த காணொளி காட்டப்பட்டது. விருது விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உஷாராணி மணியம் நடன பள்ளியின் நடனம் மிக அருமை. ஆடை அணிகலன்களும் அருமை. மாறுப்பட்ட படைப்பு.

தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து சரவணன் சண்முகம், இந்து இளங்கோவன் இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவை நாடகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. தமிழ்மொழி புழக்கத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற செய்தியோடு நகைச்சுவை கலந்த அங்கத்தை படைத்த அவர்களுக்கு பாராட்டுகள்.

Kahoot.it இணையதளத்தில் அனைவருக்கும் புதிர்ப் போட்டி நடத்தப்பட்டது. நல்ல பல கேள்விகள் கேட்கப்பட்டன.

திரு சபா முத்து நடராசன் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆதரவாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கினார்.

திரு முகமது ரஃபியின் “தங்கமே தமிழுக்கு…”, பாடல், ‘தமிழுக்கு அமுதென்று..’ என்ற பாடல்களுடன் நிகழ்ச்சி இரவு 10:47க்கு இனிதே நிறைவுற்றது. (பதிவு நேரம் 10:47😔😉)

திருமதி இலக்கியா சொல்வராஜி, திருமதி மீனா ஆறுமுகம் இருவரும் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர். மேடையில் மட்டுமில்லாமல் விருந்தினர்களிடைய நடமாடி தொகுத்து வழங்கியது மிகவும் அருமை.

கலைப்பிரிவில் இலக்கியமும் உண்டு என்று கூறப்பட்டாலும் கலைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தயவு செய்து அடுத்த முறை இலக்கியத்திற்கு ஒரு தனி பிரிவு ஏற்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொள்கிறேன். யாரும் இக்கலைப்பிரிவில் இலக்கியத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம். அது கலைக்காக விட்டுவிடலாம். கலைச்சுடர் விருது பெற்ற இருவரும் அவ்விருதுக்கு மிகவும் தகுதியானவர்கள். அவர்கள் மட்டுமல்ல இன்றைய விருதாளர்கள் அனைவருமே விருதுக்கு தகுதியுடையவர்களே. விருதாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வளவு செலவுசெய்து ஏற்பாடு செய்யப்பட்ட விருது நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட விருது மிக சிறிதாக, எளிமையாக கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் பெரிதாக கண்ணைக் கவரும் வண்ணம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

அடுத்த முறை பிரிவுகளை மறுபரிசீலனை செய்யலாம். மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நிகழ்ச்சிக்காக உழைத்து சிறப்பாக நடத்திய ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகள், நன்றி🙏

விருது பிரிவுகள்/ எண்ணிக்கை
——————————-
நூற்றுக்கும் மேலான விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அமைப்புகள் / நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கீழ் கண்ட பிரிவுகளில் மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டன.

1.கல்வி – 3 விருதுகள்- தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களித்த 3 பள்ளிகளுக்கு இளஞ்சுடர் விருது வழங்கப்பட்டது. அந்த பள்ளிகள் தமிழை மாணவர்களிடத்தில் கொண்டுசெல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது.

1.கான்கார்டு தொடக்கப்பள்ளி
2.பார்ட்லி உயர்நிலைப்பள்ளி
3.உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

2.கலை – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் திரு சலீம் ஹாடிக்கு (நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை) கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

குழு பிரிவில் அவான்ட் நாடகக் குழுவிற்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

3.மின்னிலக்கத் தொழில்நுட்பம் – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் நவசுடர் விருது திரு மோகன் சுப்பையாவிற்கு வழங்கப்பட்டது. இவர் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழாசிரியர்.

குழு பிரிவில் இவ்விருது கிரசண்ட் பெண்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

4.இளம் சாதனையாளர் – 2 விருது

இளம் சாதனையாளருக்கான வளர் சுடர் விருது செல்வி ஜெயசுதா சமுத்திரன் அவர்களுக்கும் திரு செம்பியன் சோமசுந்தரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

5.வாழ்நாள் சாதனையாளர் – 1 விருது

வாழ்நாள் சாதனைக்கான செஞ்சுடர் விருது “சிங்கை செந்தமிழ்ச்செம்மல்” முனைவர் சுப திண்ணப்பன் ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

லா பாய்ன்ட்

ஆட்டோ சங்கரின் பேட்டி இதை விட தெளிவாக இருக்கும், நித்தியின் ‘லா பாய்ன்ட்’ செல்லும்படி இருக்கும், குற்றவாளிகள் பலர் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் சிரித்து கொண்டே செல்வதை பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாம்.

உணர்ச்சிவசப்படாமல் பிரச்சனைகளை, சூழ்நிலைகளை சமாளிப்பது, சாதுர்யமாக பேசுவது, பேட்டி கொடுப்பது ஒரு தலைவனுக்கான தகுதி என்று வைத்துக்கொண்டாலும் அது மக்களுக்காக, மக்கள் நலனுக்காக இல்லாமல், பலரின் வைத்தெரிச்சலைக் கொட்டி கொள்ளையடித்த சொத்தை, புழக்கடைவாசல் வழியாக, பணத்தால் வந்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பதை உணராத மக்கள் இருக்கும் வரை தின(ம்) க(ரன்)ரையான்கள் நம்மை அரித்துக் கொண்டேதான் இருக்கும், நாம் உணர்ச்சிவயப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்.

பாண்டேவை ஏளனபடுத்துவதாக நினைத்து பாம்புக்கு மகுடி ஊதுகின்றனர்….😱

#தந்தி_பேட்டி
#புகழும்_போராளிகள்

‘ஒரு நம்பி அப்பூதி’ என்ற இசை நாடகம் இன்று அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆலயம் நிர்வாகமும், திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரும் இணைந்து நடத்தும் இந்நாடகம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகளின் கதையை கருவாக கொண்டது. திரு அ கி வரதராஜன் ஐயாவின் பெருமுயற்சியில் திருமுறை மாநாட்டு குழுவினருடன் இணைந்து அரங்கேறும் நான்காவது நாடகம். கடந்தாண்டு திலகவதியார்’ நாட்டிய நாடகம் அரங்கேறியது நமக்கு நினைவிருக்கலாம். குறைந்தபட்ச வசதியை வைத்து சிறந்த ஒரு நாடகத்தை படைத்த பெருமை திருமுறை குழுவினரை சாரும். இதில் நடித்தவர்களும் யாரும் தொழில்முறை நடிகரல்ல. அவர்கள் திருமுறை மாநாட்டுக் குழுவில் உள்ளவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தான். அதேபோல் இந்தாண்டும் சிறப்பானதொரு நாடகத்தை அரங்கேற்ற பல ஒத்திகைகள் முடித்து தயாராக இருக்கின்றனர் இக்குழுவினர். இந்த இசை நாடகத்துக்கான எல்லா பாடல்களையும் அறுசீர் விருத்தம் என்ற மரபில் எழுதியுள்ளார் ‘வெண்பா கவிஞர்’ அ கி வரதராஜன். வெண்பா எழுதுவதில் வித்தகரான அ கி வரதராஜன் ஐயா தன்னுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் வெண்பா எழுதி வரவேற்பார். கடந்தாண்டு சிங்கப்பூர் இலக்கிய விருது நிகழ்வில் தன்னுடைய இரண்டு நூல்களுக்கு பாராட்டுப் பரிசு பெற்றது குறிப்பிடதக்கது. இந்நாடகத்தில் அப்பூதி அடிகளாரின் சைவப்பற்று, திருநாவுக்கரசர் மேல் அவர் வைத்திருந்த அன்பு, மரியாதை, அதை அவர் வெளிப்படுத்திய விதம், தன் மகன் இறந்தது தெரிந்தும் விருந்து படைத்த பக்தி போன்ற காட்சிகள் இசையோடு நம்மை மெய்மறக்கச் செய்ய காத்திருக்கின்றன. உங்கள் குழுந்தைகளோடு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய நாடகம். அனைவரும் வருக! ஆதரவு தருக! நாள் : 22-07-2017(இன்று), சனிக்கிழமை நேரம் : மணி 6:00 இடம் : அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத் திருமண மண்டபம். 100 டிப்போ சாலை.

முகநூல் போராளிகள்

இந்த முகநூல் போராளிகள், கோலாவ கூவி கூவி வித்து அவருக்கு கல்லாகட்ட உதவுறதோட முதல்வர் நாற்காலியிலும் உட்கார வச்சு அழகு பார்க்காம ஓய மாட்டாங்க போலையே #ப்பா_நம்மளும்_போட்டாச்சு.

ரமலான் மாதத்தையொட்டி சிங்கையின் வட மேற்கு பகுதிகளில் வசிக்கும் சில இஸ்லாமிய குடும்பங்களுக்கு நோன்பு துறக்க 5000 நோன்பு கஞ்சியும், பிரியாணி உணவும் தயாரிக்க தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள். “இதயத்தில் ஒளியேற்று இல்லத்திற்கு வெளிச்சம் கொடு” என்ற குழு இதற்கு உதவ முன் வந்துள்ளது. நீங்களும் இதில் சேர்ந்து உதவ முன் வர வேண்டுகிறோம். தொண்டூழியர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை, 4-ஜீன்-2017 அன்று 100, அட்மிரால்டி சாலை, சிங்கப்பூர் 739980 என்ற முகவரியில் அமைந்திருக்கும் மார்ஷ்லிங் சமூக மன்றத்துக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். காலை மணி 9:00 முதல் 1:00 மணி வரை, மதியம் மணி 12:00 மணி முதல் 4:00 மணி வரை என இரண்டு வேளைகளாக நடைபெறும் இதில் சமையல் செய்வது, காய்கறிகள் நறுக்குவது, சாப்பாடு கட்டுவது என தொண்டூழியர்கள் தங்களுக்கு ஏற்ற வேலைகளை செய்யலாம். இயன்றவர்கள் வருக, இப்புனித பணிக்கு உதவி புரிக.