#தமிழ்மொழி_விழா_2016 #athipathi யின் சங் நீல உத்தமன்
முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழ், கண்ணுக்கும் செவிக்கும் இன்பந்தரும் கலைவடிவம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். சிங்கப்பூரில், 1923 மற்றும் 1924ஆம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வந்த நாடகக் குழுக்களாலேயே பெரிய அளவில் நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன. சிங்கப்பூரில் அதிகமான நாடகங்கள் முன்பு நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருந்த “அலெக்சாண்ட்ரா மேடை” என்ற இடத்தில் நடைபெற்றன. நாடகச்செம்மல் சங்கரதாஸ் சுவாமிகளின் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.1949ஆம் ஆண்டு ‘இந்திய நுண்கலைக் கழகம்’ ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகம் தேவன் எழுதிய “கோமதியின் காதலன்” நாடகத்தை அரங்கேற்றியது.1950 மேடை நாடகத்தின் பொற்காலம் என்று குறிப்பிட வேண்டும். 1960க்குப்பின் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் ஆதிக்கத்தால் சிங்கை நாடகங்கள் சற்று நலிவடைந்தன. சே.வெ.சண்முகம் எழுதிய “கல்யாணமாம் கல்யாணம்”, ச.வரதன் இயக்கிய “முக்கனி விருந்து”, “சின்னஞ்சிறுசுகள்”, “நீரில் பூத்த நெருப்பு”, “கோயில் கோபுரம்” மற்றும் “சிங்கப்பூர் மாப்பிள்ளை” போன்ற நாடகங்கள் பிரபலமடைந்தன. 1966 முதல் 1970 வரை சிங்கை நாடகத் துறைத் தொய்வுக் கண்டிருந்த நேரத்தில் இசை, நடன, நாடகக் கலைகளை வளர்த்து வந்த ஏறத்தாழ 200 கலைஞர்களை ஒருங்கிணைத்து ‘சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்’ 1970இல் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் அரகேற்றிய நாடகங்கள் சிங்கப்பூர் வாழ்கைப்பின்னணியை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டன. சில நாடகங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தற்கால நாடகக்குழுக்கள் ——————————– 1988ஆம் ஆண்டு இளைஞர்களால் “ரவீந்திரன் நாடகக்குழு” சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் குழுவிற்கு வளம் சேர்த்ததோடு ஆங்கில நாடகங்களையும் அவ்வப்போது அரங்கேற்றியது. சிங்கை பொன்விழாவையொட்டி கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி தமிழவேள் ஐயா கோ சாரங்கபாணியின் வாழ்க்கை வரலாற்றை “முரசு” என்ற நாடகம் மூலம் மேடையேற்றி பலரின் பாராட்டையும் பெற்றது. இன்று “வேட்டை”, “அண்ணாமலை” போன்றத் தொலைக்காட்சி நாடகங்களுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. சிங்கையில் இயங்கி வரும் குறிப்பிடத்தக்க மற்ற நாடகக் குழுக்கள் அவாண்ட் நாடகக் குழு, இவண் தியேட்டர்ஸ், ஏ.கே.டி. கிரியேஷன்ஸ், அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டர் ஆகியவையாகும். தற்போது இவர்களின் ஆக்கத்தால் பல நல்ல நாடகங்கள் மேடையேற்றப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. சங் நீல உத்தமன் —————– அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டரின் “சங் நீல உத்தமன்” நாடகம் தமிழ்மொழி விழாவையொட்டி மூன்று காட்சிகள் அரங்கேறின. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பெரும்பாலும் மேடைப் பேச்சுக்களே அதிகம் பார்ந்திருந்த நமக்கு நாடகத்தை காண்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இங்கு ஒலிஒளியமைப்பு அருமையாக இருந்தது. இரண்டு மூன்று ஒலிவாங்கிகள் பயன்படுத்தினால் இங்கு சில சமயங்களில் ஏற்படும் கீச்சொலி அன்று எழவில்லை. பெரிய அளவில் மேடையமைப்பு, திரைகள் இல்லாமல் காட்சிகளை வெகுநேர்த்தியாகத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பின்னணியில் காட்டியவிதம் மிக அருமை. காட்சிமாற்றமும் உடனுக்குடன் அழகாக செய்யப்பட்டது. கடலுக்கடியில் இருப்பது போன்ற காட்சி நன்கு வடிவமைகப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தக் கப்பலில் புயலில் செல்லும் காட்சி மிக தத்ரூபமாக இருந்தது. இந்தக் காட்சியில் ‘கப்பல்’ போன்று மாதிரி செய்து அதையும் சிறப்பாக பயன்படுத்தினார்கள். அதற்கு தனி பாராட்டுகள். இதற்கும் கணிசமான பொருட்செலவு, உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அடுத்து, கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம். சுமார் 13 பள்ளிக்குழந்தைகளுடன் 27 கதாபாத்திரங்கள் கொண்ட இந்நாடகத்தில் அனைவரும் சிறப்பாக தங்கள் பாத்திரத்தினை ஏற்று நடித்திருந்தனர். மூன்றாவது காட்சி என்பதாலோ என்னவோ யாரும் வசனத்திலோ, காட்சிக்குள் வந்துபோகும் நேரத்திலோ, நடிக்கும் நேரத்திலோ ஒரு சிறு தவறும் செய்யவில்லை. எல்லோரும் இரசித்து கைத்தட்டி கொண்டாடியது ‘லஹரி’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை தான். அந்த பாத்திரத்தில் ஏற்று நடித்த சிவா நடிப்பில் கொஞ்சம் நடிகர் வடிவேலுவை ஞாபகப்படுத்தினாலும் மிக அருமையாக அங்க அசைவுகளுடன், வசன உச்சரிப்புடன் அருமையாக இரசிகர்ளை மகிழ்வித்தார். அவருக்கு நடிப்பில் சிறந்த எதிர்காலம் உள்ளது. சங் நீல உத்தமனாக நடித்தவர் மிக கச்சிதமாக நடித்தார். சக நடிகர்களுடன் தோன்றும் காட்சியில் அடுத்தவர்களின் நடிப்புக்கும் துணை நின்றார். அருமையான நடிப்பு அவருடையது. எனக்கு மிகவும் பிடித்த நடிப்பு, ‘மதப்பு’ கதாபாத்திரத்தில் தோன்றிய யோகினியின் நடிப்பு தான். காதல் கணவனை விட்டு பிரியும் தருணத்தில் அவரின் அழுகையுடன் கூடிய நடிப்பு மிக அற்புதம். கதை சொல்லி காட்சியை நகர்த்திக்கொண்டு செல்லும் ‘புலவர்’ஆக தோன்றிய ஹரிஷிகா என்ற மாணவி தமிழ் உச்சரிப்பிலும், வசனத்தை தங்குதடையின்றி தெளிப்பதிலும், கொஞ்சும் கவிதை வரிகளை ஏற்ற இறக்கத்துடன் சரியாக பாடுவதிலும் முதலிடத்தை பிடிக்கிறார். எனக்கு நாடகத்தில் பிடித்த காட்சி அந்த குழந்தைகள் நடிக்கும் காட்சிதான். அந்த காட்சியமைப்பு இம்மாதிரியான ஃபாண்டஸி நாடகத்தில் கொண்டு வருவது மிகவும் நேர்த்தியாக கதையுடன் ஒட்டிவந்தது. குழந்தைகளின் நடிப்பு அபாரம். அவர்களுடைய ஒருங்கிணைப்பு, வசன உச்சரிப்பு, மேடைப் பயன்பாடு, தங்களை சரியாக வெளிக்காட்டிகொண்டது என்ற அனைத்திலும் அவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுகின்றனர். மகிபாலன், மாறன், வள்ளி, பாண்டிரன், விசித்திரன், பல்லவன் என்று பாத்திரத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். நாடகத்தில் நடித்த ஒன்றிரண்டு கதாபாத்திரத்தைத் தவிர மற்றவர்கள் அனைவருமே இளையர்கள் என்பது இந்நாடகத்தின் கூடுதல் சிறப்பு. நாடகத்தின் கதை நாமனைவரும் அறிந்தது தான் என்றாலும் அதை ராஜா சுரன் காலத்தில் ஆரம்பித்து சிறப்பாகக் கதை சொன்ன விதம் அருமை. வசனங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து திரையில் காண்பித்த விதமும் பாராட்டுக்குரியது. இந்த முயற்சிக்கு பின்னால் உழைத்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், துணை நின்ற நாடக குழவினர்க்கும் எனது பாராட்டுகள். இந்நாடகத்தின் இயக்குனர் திரு இரா புகழேந்தியின் உழைப்பும், சிந்தனையும், இயக்கமும் மிகவும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் வாழ்த்துகள். நாடகத்தில் ஒரு சில மேம்பாட்டிற்கான விஷயங்கள் என்றால் முதலில் ஆடைஅலங்காரம் சில கதாபாத்திரங்களுக்கு முற்றிலும் சரியாக பொருந்தவில்லை. தமிழ் உச்சரிப்பு, வசனத்தில் ஆவேசம் சரியாக வெளிப்படவில்லை. குறிப்பாக அரசவை காட்சியில் அவை காட்சிக்கேற்ப இல்லை என்றே சொல்ல வேண்டும். முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டுமானால் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பு கொண்ட நடிகர்களை தேர்வு செய்தால் நாடகத்துக்கு மேலும் வலு சேர்க்கும். இது ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மற்ற கதாபாத்திரங்களுக்கு பொருந்தியே அமைந்தன. காட்சியமைப்பும் மேலும் மேம்படுத்தப்பட்டால் உலகதரத்துக்கு இணையானதாக மாற்றமுடியும். நாடகத்தை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடத்தி மாணவர்களுக்கு பிரத்யேக காட்சிகள் அமைத்தது சிறப்பு. சனி, ஞாயிறுகளிலும் நடத்தியிருந்தால் மேலும் பல பொதுமக்களை சென்றைடைந்திருக்கும். இந்நாடகத்தைக் காண நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என இருந்தாலும் அதை காசு கொடுத்து வாங்கி ஆதரவு வழங்கியவர்கள் பலர். கிட்டத்தட்ட நான்கு நாடகங்களை உள்ளடக்கிய இந்தத் தமிழ்மொழி விழா மேலும் சிறப்பு பெறுகிறது. வழக்கமாகக் காணப்படும் முகங்களைக் காணமுடியவில்லை. புதிய விருந்தினர்களை, அரங்கு நிறைந்த கூட்டத்தை ஈர்த்த இந்தத் தமிழ்மொழி நிகழ்ச்சி நம் பாராட்டைப் பெறுகிறது. இந்நாடகக்கலை மேலும் வளர்ச்சியடைய நாடகக்கலைஞர்களுக்கும், தாயாரிப்பாளர்களுக்கும் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். நாடகங்கள் நூலுருப் பெறவேண்டும். நாடகத் திறனாய்வுகள் பெருகவேண்டும். ஆங்கில மொழியில் நாடகக்கலையை வளர்க்கும் பயிற்சிமையங்கள் போல தமிழுக்கும் அமைக்கப்பட வேண்டும். பொது மக்கள் ஆதரவு நல்கிட வேண்டும். தமிழ் மக்களிடம் மொழியுணர்வு பெருகும்போது முத்தமிழும் செழித்து வளரும்.