நினைவின் தடங்கள்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு முதன் முறையாக ‘நினைவின் தடங்கள்’ என்ற நகழ்ச்சியை நடத்துகிறது. இதில் இந்தாண்டு மறைந்த 7 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து 7 பேச்சாளர்கள் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி, சனிக்கிழமை சரியாக மாலை ‪6:00‬ மணிக்கு விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியத்தின் 5வது தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் தொடங்குகிறது. ‪7:30‬ மணிக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும் என அறிகிறேன்.

படைப்பாளிக்கு மரணம் என்பது என்றுமே இல்லை. அவனின் எழுத்துகள் என்றும் அவன் பெயர் சொல்லும். அந்த வகையில் கீழ்கண்ட எழுத்தாளர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், அவர்களுடைய படைப்புகள் என்றும் நமக்கு அவர்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் படைப்பாளர்களில், நான் நேரில் சந்தித்தது திரு எம் ஜி சுரேஷ் அவர்களை மட்டும்தான். தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் ஒரு மாதாந்திர கூட்டத்தில் என் கவிதைக்காக அவரிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத தருணம்.

மறைந்த அந்த எழுத்தாளர்களின் பெயர்கள் இதோ:

1. அசோகமித்ரன் – தோற்றம் : 22 செப்டம்பர் 1931, மறைவு : 23 மார்ச் 2017
2. மேலாண்மை பொன்னுசாமி – தோற்றம் : 1951, மறைவு : 30 அக்டோபர் 2017
3. எம் ஜி சுரேஷ் – தோற்றம் : 1953, மறைவு : 2 அக்டோபர் 2017
4. பெ திருவேங்கடம் – தோற்றம் : 28 செப்டம்பர் 1944, மறைவு : 9 செப்டம்பர் 2017
5. பி பி காந்தம் – தோற்றம் : 2 ஜனவரி 1937, மறைவு : 21 ஜூன் 2017
6. பாக்கியம் ராமசாமி – தோற்றம் : 1 ஜூன் 1932, மறைவு : 7 டிசம்பர் 2017
7. மா நன்னன் – தோற்றம் : 30 ஜூலை 1923, மறைவு : 7 நவம்பர் 2017

நம் சிங்கை நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு இந்நிகழ்ச்சியை நடத்துவதால், இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது. அப்படி அதிக அளவில் கலந்துகொண்டால்தான் மேலும் நல்ல பல நிகழ்ச்சிகள் நடத்த நூலகம் ஊக்கம் கொடுக்கும். அதிலும் இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற திரு Azhagiya Pandiyan அவர்களின் முயற்சியால் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவும், தரமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 7 எழுத்தாளர்களின் படைப்புகள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்படும். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்லலாம்.

அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரவும்.

தேடல்

இன்று ‘தேடல்’ இரண்டாமாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைப்பெற்ற பொங்கல் நிகழ்ச்சி ஒரு திருமண நிகழ்வுக்கு நண்பர்களோடும், உறவுகளோடும் போய் வந்த ஒரு மன நிறைவை தந்தது. பொங்கல் பொங்கியது, உறி அடிப்பது, மாணவர்களுக்கான போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம் என களைக் கட்டியது. அருமையான சாப்பாடு. அழகா உட்கார வைத்து அன்பாய் பரிமாறிய விதம், நீண்ட நாட்களுக்கு பிறகு வடை பாயாசத்தோடு பாராம்பரிய கல்யாண சாப்பாடு சாப்பிட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி. இதுவரை இந்த மாதிரி வாழை இலைச் சாப்பாடு எந்த சமூக மன்றம் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் நான் பார்த்ததில்லை. அவ்வளவு பெருமையும் நிஜாமுக்கு போய் சேரும். அருமையான தலைமைத்துவம் நல்ல செயல் வீரர்கள் கொண்ட குழு. அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி🙏🙏🙏

 

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக தமிழ் பேச்சுப் போட்டியில் சிங்கை பல்கலைகழக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது.

வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான ‘பேசு தமிழா பேசு’ என்ற பேச்சுப்போட்டி ஒன்றை SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மேடைத்தமிழை வளர்ப்பதும், உலகத்தமிழர்களிடையே உறவுகளை வளர்ப்பதுமே மூலநோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல்கலைகழக மாணவர்களுக்காக நடத்துவது இதுவே முதல் முறை.

நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த இப்போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் தேர்வு காலத்தையொட்டி இருந்ததால் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. ஆனால் வேறு சில காரணங்களால் போட்டி டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இந்த முறை மாணவர்கள் பங்குபெற பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. தேர்வு முடித்த கையோடு போட்டியில் கலந்து கொள்ள விமானம் நிலையம் சென்ற மாணவர்கள் ‘வர்தா’ புயல் காரணமாக விமானமின்றி திரும்பி விட்டனர். மீண்டும் அடுத்தநாள் சென்னை சென்று, பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்ற திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன், திரு செம்பியன் சோமசுந்தரம், திரு ஜெரமி ஜோயல் பீட்டர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

“மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார் என்று பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கின்றனர், ஆனால் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கின்றது” என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் என்னைத் தொடர்புக் கொண்டார். அதற்கான முயற்சியில் எனக்கு உதவிய மாணவர்கள் அருள் ஓஸ்வின், அருண் வாசுதேவ் அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து தகவல்கள் கொடுத்து ஊக்கப்படுத்தி சிங்கையிலிருந்து மாணவர்கள் பங்கு பெற விரும்பிய பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கும் என் நன்றி.

இப்போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுச் செலவை எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஏற்றுக் கொண்ட தமிழர் பேரவை அதன் தலைவர் திரு பாண்டியன், வணக்கம் மலேசியா திரு தியாகா, ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன், புரவலர் திரு ஜோதி மாணிக்கம், சமூக தலைவர் திரு நிஜாம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

தொடர்ந்து அனைத்துலக அரங்கில் சிங்கை மாணவர்கள் தடம் பதிக்க வாழ்த்துகள்💐💐

பி.கு: வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ‘மாணவர் முழக்கம்’ என்ற பெயரில் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் துபாயில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிங்கை தொடக்கக்கல்வி மாணவி ஹர்ஷிகா மூன்றாம் பரிசு பெற்றார்.

உருளி என்னை உருட்டிய கதை

போன வாரம் திங்கள்கிழமை மாலை, ஆயுத பூசைனு “‘கார’ சுத்தம் பண்ணி பூசை போடுங்க”னு மனைவி சொன்னாங்க. “அப்படியே, ஒவ்வொரு சக்கரத்துக்கு(சுழலி) கீழேயும் ஒரு எலும்பிச்சை பழம் வச்சு, வண்டிய எடு”னு அம்மா சொன்னாங்க. சரி, ஆண்டுக்கொரு முறையாவது சுத்தம் செய்வோமேனு மாலை கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி, வண்டிய சுத்தம் பண்ணி பூவு, பொட்டு எல்லாம் வச்சு அழகா வண்டிக்கு ‘மேக்கப்’ போட்டு கிளப்புனா…அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு எலுமிச்சை பழம் வைக்கலேயேனு. நாலாயிரம் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ல ஓடாத வண்டியா இந்த நாலு எலுமிச்சை பழத்துல ஓடப்போவதுனு கேக்கறவங்க அடுத்த பத்திக்கு தாவிடுங்க.

கீழே இறங்கி முன்னாடி சுழலிக்கு அடியில பழத்தை வச்சுட்டு பின்னாடி வைக்கும்போது தான் பார்த்தேன் உருளியில(டயர்) காத்தே இல்ல. ஆஹா சந்தனம், குங்குமம் வைக்கும் போது கூட இத பார்க்கலேயேனு யோசிச்சிட்டே உருளிய பார்த்தா, யாரோ ஒருவர், ஒரு ‘ஸ்குரூ’வ அழகா உருளிக்கு நடுவுல திருப்புளி வச்சு நுழைச்ச மாதிரி இருந்தது.

என்னடா இது ஆயுத பூசையும் அதுவுமா பூசை போட்டு வண்டிய எடுத்துட்டு கோயிலுக்கு போகலாம்னு பார்த்தா இப்படி ஆயிடச்சேனு ஒரு நிமிடம் தோனுச்சு. அடுத்த ஆயுத பூசை வரை வண்டி ஒழுங்கா ஓடனுமே அப்படினும் தோனுச்சு. ஆனா இதெல்லாம் அபசகுனமா எடுத்திட்டு மனச குழப்பிக்க வேண்டாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டிருக்கேன், மனைவி கிட்டயிருந்து ‘ஃபோன்’ வந்துச்சு.

மேலும் படிக்க…

கவிதைனாலே காதலிருக்கும்.

கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க. இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு. இன்றென்ன காதல் ஜெயந்தியா என் வீடெங்கும் உன் கால் தடங்கள் இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும். “எப்போதும் போல் இயல்பாகப் பேசிச்சிரிக்கும் தோழிகள் தோழிகளாகவே இருக்கின்றனர் அதைக்கண்டு சிறு கோபம் கொள்ளும் நீ காதலியாகிக் கொண்டிருக்கிறாய்” என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது. கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும். கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார். நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க. நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016, இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்) நேரம் : மாலை 7 மணி