இளையர்களை, அவர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுதல் எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் 20 நிமிட காட்சி வடிவில் ‘கொலுசு’ என்ற தலைப்பில் குறும்படமாக அழகாக சொல்லியிருக்கிறார் இளையரான திரு Saleem Hadi . இப்படத்தின் கதாசிரியர் செல்வி Piriyadarisiniயின் உயிரோட்டமுள்ள எழுத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சுமார் இருபது நிமிடம் ஓடும் இந்த ‘கொலுசு’ குறும்படம் பல உலக திரைப்படவிழாக்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நியூயார்க்கில் நடந்த ‘வின்டர் திரைப்பட விழா’வில் 650 படங்களை பின்னுக்கு தள்ளி ‘கொலுசு’ திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
சரி இப்ப எதுக்கு, ‘கொலுசு’ பத்தி சொல்றேனு கேக்குறீங்களா?
கடந்தாண்டு இறுதியில ஏதாவது ஒரு நல்ல தமிழ்படம் போட்டு காண்பித்து அதிலுள்ள கருத்துகளை, அதன் தாக்கத்தை குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தி, அதன் மூலமாக குழந்தை வளர்ப்பு, கல்வி, குடும்பம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா எங்களிடம் கூறினார். சிண்டாவின் (SINDA) உதவியுடன் அப்படி ஒரு நிகழ்வை நடத்த நாங்களும் ‘அப்பா’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற படங்களை தேர்வு செய்யலாம் என்று எண்ணியிருந்தோம். அதற்கான உரிமம், திரையிட தேவையான ஒளிஒலி அமைப்பு போன்றவை குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.
இதற்கிடையே, கடந்த மாதம் சிண்டாவின் புதிய துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, நண்பர் திரு அன்பரசு அவர்களை சந்தித்து இது குறித்து பேசிய போது உள்ளூர் இயக்குனரின் ‘கொலுசு’ படத்தை திரையிட யோசனை தெரிவித்தார். அதற்கான ஏற்பாட்டையும் சிண்டாவே முன்னெடுத்து செய்தது.
சரி, இந்த நிகழ்வை எங்கே நடத்தலாம் என்று சில இடங்களை பார்த்த போது, சட்டென்று என் நினைவுக்கு வந்தது சிங்கப்பூர் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் எடுப்பது குறைந்து வருகிறது என்று நூலகத்தின் தமிழ் பிரிவு தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நண்பர் திரு அழகியபாண்டியன் கூறியது. உடனே அவரை தொடர்பு கொண்டு தமிழ் புத்தகம் எடுக்க ஒரு யோசனை உள்ளது அதற்கு தேசிய நூலகத்ததின் இடத்தை ஒரு நிகழ்வுக்கு தர வேண்டும் என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.
படத்தோடு சேர்த்து குழந்தை வளர்ப்பு, பதின்ம வயதினரை புரிந்து கொள்வது எப்படி என திரு கணேஷ் அவர்களை கொண்டு நல்ல ஒரு உரையுடன் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்தது சிண்டா.
இப்படியாக, ஒரே நிகழ்வில் குறும்படம், அது குறித்து கலந்துரையாடல்,
பெற்றோர்கள் பதின்ம வயதினரை புரிந்து கொள்வது பற்றி உரை, நூலகத்தில் புத்தகம் இரவல் பெறுவது, தேசிய நூலகத்தின் ‘அரிய தொகுப்புகளை’ சுற்றி பார்ப்பது, குழந்தைகளுக்கு வினா விடை போட்டி, கைவினை பொருள் செய்வது என அனைத்தையும் தஞ்சோங் பகார், தியாங் பாரு இந்திய நற்பணி செயற்குழுக்கள், சிண்டா, தேசிய நூலகத்துடன் இணைந்து கடந்ந ஞாயிறு, 18 மார்ச் மதியம் 3 முதல் 6 வரை நடத்தியது.
இந்த நிகழ்வு வசதி குறைந்த குடும்பங்களுக்காக ஏற்பாடு செய்திருந்தாலும் மற்ற சிலரும் பங்கேற்றனர். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பார்களின் வீடுகளுக்கு சென்று
நிகழ்வு பற்றி எடுத்துச்சொல்லி, பதிவு செய்தோம். மூன்று இடங்களிலிருந்து பேருந்தும் ஏற்பாடு செய்திருந்தோம். பதிவு செய்தவர்களில் வரமுடியாமல் போன்றவர்களும் உண்டு.
ஆனால் குழந்தைகள், பதின்ம வயதினர், பெற்றோர்கள் என வந்திருந்த அனைவரும் ‘கொலுசு’ குறும்படத்தை கண்டு மகிழ்ந்தனர். தத்தம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் சில கேள்விகள் கேட்டனர். அதிலும் இளையர்கள் தங்கள் பார்வையை, தங்கள் பிரச்சினையை கலந்துரையாடலில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். பின்னர் அவர்களுக்காக அந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை தேர்வு செய்து எடுத்துக்கொண்டனர். சுமார் 155 தமிழ் புத்தகங்கள் ஒரே நாளில் இரவல் பெற்றது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. திரு அழகியபாண்டியனுக்கும் தேசிய நூலகத்திற்கும் இதில் மகிழ்ச்சி, எனக்கும்தான்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு வந்திருவர்களுக்கு புரியும்படி பிள்ளை வளர்ப்பின் யதார்த்த நிலையை எடுத்துக்கூறினார்.
செல்வி நிர்மலா, எப்படி நூலகத்தின் நூல்களை நம் கைப்பேசி வழி நூலக செயலி (NLB Mobile) மூலம் நாமே பதிவு செய்து எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கினார். சிறுவர்களை, குழந்தைகள் பிரிவுக்கு கூட்டிச் சென்று பயனுள்ள தகவல்கள் வழங்கினார்.
அடுத்து 11,13 தளங்களில் உள்ள ‘அரிய தொகுப்புகள்’ அடங்கிய ‘ரேர் கேலரி’ என்ற இடங்களை குடியிருப்பாளர்கள் பார்த்தனர். இது சாதாரணமாக பொதுமக்கள் செல்ல முடியாது. இதில் ‘சிங்கையிலிருந்து விமானம் மூலம் 8 நாளில் லண்டன் செல்லலாம்’ என விளம்பரம் அடங்கிய அந்தகால புத்தகம் உட்பட அரிய தகவல்கள் அடங்கிய பல புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.
அனைவருக்கும் ருசியான பல உணவு வகைகள் அடங்கிய அருமையான ஒரு ‘ஹை டீ’ மாடி தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அத்தனை அடித்தளத் தலைவர்களுக்கும், சிண்டாவுக்கும், அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதனுக்கும், நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு Anbarasu, இந் நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவிய, ஒருங்கிணைத்த சிண்டாவின் அதிகாரி திருமதி ஜெயந்தி, செல்வி ஜூனைடாவுக்கும், இடம் கொடுத்து நல்ல ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த தேசிய நூலகத்துக்கும், அதன் தமிழ் பிரிவுத் தலைவர் திரு Azhagiya Pandiyan , நூலகத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குடியிருப்பாளர்களுக்காக வந்திருந்து உதவிய நூலக அதிகாரி செல்வி Nirmala, திருமதி மகேஸிற்கும் மிக்க நன்றி.
இப்படி சிறப்பாக, முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சிண்டாவுக்கும், தேசிய நூலகத்துக்கும் மாதிரி நிகழ்வு, எங்களுக்கும்தான்.
இந்நிகழ்வில் சிலர் முதன்முறையாக தேசிய நூலகம் வந்திருந்தனர். பலர் பல ஆண்டுகளுக்கு பிறகு அன்று புத்தகம் இரவல் பெற்றிருந்தனர். தமிழ் பேசவோ, எழுதவோ தயங்கும் பலர் அங்கு வந்திருந்து ஒரு நல்ல அனுபவத்தை பெற்றனர். வந்திருந்த பெற்றோர்களுக்கு குறும்படமும், கலந்துரையாடலும் ஒரு மாற்றுச் சிந்தனையை தூண்டியது. குறிப்பாக சில குழந்தைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது. அவர்கள் வாசிப்பு பதக்கத்தையும், அனுபவத்தையும் மேம்படுத்தும்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், நிகழ்ச்சி முழுக்க தமிழில் நடந்தது. பேச்சாளர்கள் அனைவரும் தமிழலேயே உரையாடினார்(இது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்). ஒரு நல்ல பயனுள்ள தமிழ் நிகழ்வை நடத்தி முடித்த மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.