அன்னையர்களுக்கு வாழ்த்துகள்

யாருக்கு, எது தினம் ?

நாடு
விடுதலையடைந்த தினமே
அந்நாட்டிற்கு
சுதந்திர தினம்!

நாடு
உருவான தினமே
அந்நாட்டிற்கு
தேசிய தினம்!

என்னுள் காதல்
தோன்றிய தினமே
எனக்கு
காதலர் தினம்!

மணமுடித்த தினமே
எங்களின்
திருமண தினம்!

என் மகன்
பிறந்த தினமே
என் மனைவிக்கு
அன்னையர் தினம்!

உலகம் முழுக்க
பொதுவாய் ஏற்படுத்துவது
வணிகர்கள் தினம்!

காதல் பிறந்தநாள்

என் பதிவுகளுக்கு
நீயிட்ட பின்னூட்டம்
என்னைப் பரவசப்படுத்திய நாளும்,
வேறோருத்தியிட்ட பின்னூட்டம்
உன்னைக் கோபப்படுத்திய நாளுமே
நம்மில் காதல் பிறந்தநாள்!

வெயில்

கத்திரிவெயில் மெய்யுருக்க
கனவுச்சாலை கருகியோட
தலைக்கவசத்தை கதிர்கள்கிழிக்க
வாகனங்கள் வனவிலங்குபோல்
உறுமிக்கொண்டு பயம்துரத்த
மான்குட்டியாய் ஈருருளியில்
திக்குத்தெரியா
பெருநகரக் கட்டிடக்காட்டில்
இடர்கடந்து
மயிரிழையில் மறுபிறவி சில கண்டு
வாடிக்கையாளர் பசி தீர்க்க
நிறுவனத்தின் பெயர் காக்க
புதிர்ப்போட்டியில் மறுமுனைதேடிய
குட்டிப்பையனாக
எல்லைக்கோட்டு முகவரியடைந்து
பெட்டிபெட்டியாய் அடுக்ககமாடியில்
முக்குவீட்டை வேர்க்கவிறுவிறுத்து
தாமதமாய் தேடிப்பிடித்து
தாகத்தோடு தயக்கம்சேர
அழைப்பு மணியழுத்தினான்
விரைவுஉணவு சேர்ப்பனையாளன்!

மூடிய கதவிடுக்கின்வழி தப்பிவந்த
செயற்கைக் குளிர்க்காற்று
வியர்வை துடைத்தது!

திறந்தகதவின் பின்னிருந்து
வாங்கியவன் வசவுபாட
உக்கிரமாய் உறைத்தது
வெயில்!

– தாம் சண்முகம்

முகநூல்கவிதை

படுக்கை அறையில்
விளக்கை அணைத்து
கணவனும் மனைவியும்
போர்வைக்குள் புகுந்தபடி
சிரித்து விளையாடி
இறுக்கப் பிடித்து
கைப்பேசியுடன் உறவாடினர்
தனித்தனியாக!

-தாம் சண்முகம்.

யாக்கை

பேருந்து கவிமாலையின் போது மார்ச் மாத கவிதை போட்டிக்கான தலைப்பை ஆசான் Karuna Karasu ‘யாக்கை திரி’ என்று கொடுக்க, அந்த அருமையான தலைப்பில் பலரும் கவிதைகள் படைத்தனர்.

இன்று கவிமாலையில் இரண்டாம் பரிசு பெற்ற ‘யாக்கை’ தலைப்பிலான என் கவிதை..

யாக்கை
———
யாக்கை பேணி
காக்க மறந்து
கைப்பேசியுடனே
காலம் கழித்து
தூக்கம் துறந்து
வேலை புரிந்து
துரித உணவில்
உடம்பு வளர்த்து
அதையும் ஒழுங்காய்
அசைக்க மறுத்து
செரிக்கத் தவித்து
துருவும் பிடிக்க
மருந்தெனும் பேரில்
இரசாயனம் உண்டு
மேலும் சீக்கு
மெல்ல வளர்த்து
‘புற்று’ தின்னு
முற்றுப் பெறாமல்
வாழ்ந்த முறையை
பின்னோக்கிப் பார்த்தால்
புரிந்தது உண்மை…

மின்சாரம் மட்டும்
கண்டிராவிட்டால்
இந்தக் கட்டை
வாழும்போதும்
மட்டுமின்றி
நீட்டிய பின்னும்
நிதானமாய் வெந்திருக்கும்!