குதிரைப் பந்தயம்

குதிரைப் பந்தயம் நடந்த சாலையில் உள்ள ரஜினி படத்தின் பெயர் கொண்ட ஒரு விடுதி, ஆணல்ல….(எந்த இடம் கண்டுபிடிங்க பார்ப்போம்..🙂)

இது எந்த இடம் என்று கண்டுபிடித்து அங்கே போக வேண்டும்….

இப்படி புதிரங்கத்துடன் நடந்த ‘தேக்கா பேட்டை வேட்டை’ ஒரு கலகலப்பான கலக்கல் போட்டி.

மீடியார்ப்கார்ப்பின் ‘செய்தி’ பிரிவு நடத்திய இந்த போட்டியின் ஏற்பாட்டுக்குழுவுக்கு என் பாராட்டுகள், சிறப்பாக கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் நேரத்துல முடிச்சிட்டாங்க. வேறு ஒரு வேலை இருந்ததால் பரிசு அறிவிப்பு நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ள முடியவில்லை.

சரி, உங்களுக்கு பரிசு கிடைச்சுசானு கேக்குறீங்களா? நாங்க ‘டாப் 8’ல வந்தோம்….

தெரியும்….எத்தனை குழுக்கள் கலந்துகிட்டாங்கனு தானே கேக்குறீங்க…

மொத்தம் 8 குழுக்கள் கலந்துகிட்டாங்க, அதுல நாங்க ‘டாப் 8’, ஆனா முதல் மூனுல இல்ல:)

எப்படிங்க, வர முடியும்? நம்ம ‘பிக் பாஸ்’ ஸ்டைல்ல, பூ கட்ட சொல்றாங்க, பெண்கள் முடியில தலை பின்ன சொல்றாங்க(அட சௌரி முடி தாங்க கொடுத்தாங்க, உடனே கற்பனைல மிதக்காதீங்க..). எங்க குழுவில நாலும் ஆம்பளைங்க…முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்…
ஒரு கூடை சாமந்திபூவ முன்னால வச்சு, ஒரு சின்ன நூல கொடுத்து கட்ட சொன்னாங்க. அது எப்படினு கட்டனும்னு ஒரு காணொளி வேற போட்டாங்க….இரண்டு நிமிஷத்துல, நான் எடுக்கவோ, தொடுக்கவோனு பூ கட்டி முடிக்க, அத எடுத்து உதறி பார்த்து என்னங்க எல்லாம் விழுந்திருச்சுனு ஏற்பாட்டாளர் கேட்க, ஆஹா ‘வடை போச்சேனு’ பார்க்க, அந்த ‘டாஸ்குக்கு’ ‘மார்க்’ போச்சு, நான் கட்டின அழகான பூமாலை, பூச்செண்டாக மாறிடுச்சு.
சரி விட்டத பிடிக்கலாம்னு அடுத்த ‘ஸ்பாட்’ல போய் பார்த்தா, ஒரு முடிய கொடுத்து தலைபின்ன சொன்னாங்க, இதெல்லாம் பெண்களே மறந்து போய் பல காலமாச்சேனு, இத சொதப்ப வேணாம்னு, குழு நண்பர்கள பின்னட்டும்னு சும்மா இருந்தேன்…இருந்தாலும் மனசு கேக்காம, நானும் ஒரு முடிய எடுத்து பின்ன ஆரம்பிச்சு அருமையா 5 பின்னல் பின்னிடேங்க, என்ன ‘லேட்டா’ ஆரம்பிச்சதால ‘முடி’க்க முடியல, இங்கேயும் மார்க் போச்சு.

அப்புறம் எங்கிட்டு முதல்ல வர்றது? ஆனா புதிர பார்த்து அந்தந்த இடங்களுக்கு முதல்ல போயிட்டோம். என்ன, எங்க ‘ரூட்’டு கொஞ்சம் பெரிசு போல:)

தமிழ் ‘செய்தி’ செயலிய பார்த்து, ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல் கண்டுபிடிக்கிறது, ஒரு பத்தியில் எத்தனை உயிரெழுத்து இருக்கிறது என சொல்வது, குட்டி இந்தியா பற்றி மீடியாகார்ப் ‘செய்தி’ல வந்த செய்தியை பார்த்து, சில பல கேள்விகளுக்கு பதில் அளிப்பது என நல்ல புதிரங்கங்களுடன், குட்டி இந்தியாவை சுற்றி வருவது என இந்தப் போட்டி, இனிமையான அனுபவமாக இருந்தது.

வந்திருந்தவர்களுக்கு ‘தேக்கா பேட்டை
வேட்டை’ என பொறிக்கப்பட்ட துணிப்பை, அதில் ‘செய்தியின்’ பெயருள்ள ஒரு குடை, விசிறி என பயனுள்ள பொருட்களுடன் உணவும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு விஷயமும் நன்றாக யோசித்து செய்திருக்கிறார்கள். ‘தேக்கா பேட்டை வேட்டை’ என்ற ‘புதிர் அட்டை’ அருமை.

என்ன கடைசியில் முடிவு சொல்ல
அவ்வளவு நேரம் எடுத்திருக்க வேண்டாம். ஒரு சில ‘டாஸ்க்’குக்கு நேரம் குறைவு. மதிப்பெண்ணிடும் முறையும் அடுத்த முறை
மாற்றலாம். குழுக்களுக்கு கொடுக்கும் வழித்தடத்தின் மொத்த தொலைவு ஒரே அளவாக இருந்தால் சிறப்பு. மழையோ, கடும் வெயிலோ இல்லாமல் இயற்கை காப்பாற்றிவிட்டது. அடுத்த முறை கூடுதல் குழுக்கள் பங்கேற்க வாழ்த்துகள்.

மொத்தத்தில் ‘செய்தி’ பிரிவின் இந்த முதல் முயற்சி பாராட்டபட வேண்டிய ஒன்று. செய்தி குழுவின் அனைவருக்கும் குறிப்பாக துடிப்புமிகு இளையர் பட்டாளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

படத்தில் : தீவிர களப்பணியாற்றும் போராளி தலைகள்😄

Google office

It was like visiting a Star Hotel than a work place. Starting from the Reception to Cafeteria everything is designed with the purpose, artistically.

They have brainstorming rooms with wall to scribble, quiet think-tank corners, lobby and open places which provide an ambience to innovate and excel.

Every department has its own micro kitchen, vending machine with all sorts of soft drinks, healthy staples.

The main cafeteria has a juice corner where you can make your own juice. Soup with different flavours, Salad counter, various cuisines like Western, Chinese, Indian, Peranakan etc. Also, you can find a ice cream stall, ice kachang hut and a coffee shop.

All you can have without paying a single cent, if you are an employee or guests of this organization. You know something, I had lunch there and it was really nice with quite bit of spread.

There is a fully equipped Gym, Games room, Music room, Spa and Saloon inside the office. If an employee wants to take a nap, they have a sleeping room as well:) There is also a Wellness Garden where you can wander around. Basket Ball court outside the office premises for the employees. But I couldn’t manage to see those because of the entry restrictions.

The office is spread across 3 buildings in 15 floors together. You can walk up the stairs to reach out to design or engineering or any other divisions.

If you are wondering which office I am referring to, it’s nothing but Google’s Office. I am not referring to the one in US or any other country but Google’s APAC headquarters opened last year in Singapore.

பேச்சுப் போட்டி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக தமிழ் பேச்சுப் போட்டியில் சிங்கை பல்கலைகழக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான ‘பேசு தமிழா பேசு’ என்ற பேச்சுப்போட்டி ஒன்றை SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மேடைத்தமிழை வளர்ப்பதும், உலகத்தமிழர்களிடையே உறவுகளை வளர்ப்பதுமே மூலநோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல்கலைகழக மாணவர்களுக்காக நடத்துவது இதுவே முதல் முறை. நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த இப்போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் தேர்வு காலத்தையொட்டி இருந்ததால் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. ஆனால் வேறு சில காரணங்களால் போட்டி டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இந்த முறை மாணவர்கள் பங்குபெற பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. தேர்வு முடித்த கையோடு போட்டியில் கலந்து கொள்ள விமானம் நிலையம் சென்ற மாணவர்கள் ‘வர்தா’ புயல் காரணமாக விமானமின்றி திரும்பி விட்டனர். மீண்டும் அடுத்தநாள் சென்னை சென்று, பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்ற திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன், திரு செம்பியன் சோமசுந்தரம், திரு ஜெரமி ஜோயல் பீட்டர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். “மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார் என்று பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கின்றனர், ஆனால் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கின்றது” என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் என்னைத் தொடர்புக் கொண்டார். அதற்கான முயற்சியில் எனக்கு உதவிய மாணவர்கள் அருள் ஓஸ்வின், அருண் வாசுதேவ் அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து தகவல்கள் கொடுத்து ஊக்கப்படுத்தி சிங்கையிலிருந்து மாணவர்கள் பங்கு பெற விரும்பிய பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கும் என் நன்றி. இப்போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுச் செலவை எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஏற்றுக் கொண்ட தமிழர் பேரவை அதன் தலைவர் திரு பாண்டியன், வணக்கம் மலேசியா திரு தியாகா, ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன், புரவலர் திரு ஜோதி மாணிக்கம், சமூக தலைவர் திரு நிஜாம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏 தொடர்ந்து அனைத்துலக அரங்கில் சிங்கை மாணவர்கள் தடம் பதிக்க வாழ்த்துகள்💐💐 பி.கு: வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ‘மாணவர் முழக்கம்’ என்ற பெயரில் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் துபாயில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிங்கை தொடக்கக்கல்வி மாணவி ஹர்ஷிகா மூன்றாம் பரிசு பெற்றார்.

உணவும் உதவியும்

“டே, சாப்பிட்டா என்னைப் போல இலைய சுத்தமா துடைச்ச மாதிரி, ஒரு பருக்கை மிச்சம் வைக்காம சாப்பிடனும். இப்படி சோத்தையும் காய்கறியையும் மிச்சம் வைக்கலாமா?”னு கல்யாண மண்டபத்தில பக்கத்தில சாப்பிட்டிட்டுருந்த என் நண்பனை கேட்டேன்.

‘அட, சாப்பிடறதுக்கு பிறந்தவனே, இப்படி சுத்தமா வழிச்சு சாப்பிட்டு, கழுவுன மாதிரி இருக்கிற இலையை கொண்டு போய் குப்பத்தொட்டியில போட்டா, அங்க வர்ற நாய்யி, நமக்கு முன்னாடி ஒன்னு வந்து நல்ல நக்கிட்டு போயிடுச்சேனு, திட்டிட்டே போகுமாம்”னு சொன்னான் நண்பன்.

இது நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆச்சு. அதுக்காக எல்லாம் நான் ரோஷப்பட்டு சின்ன வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் கொள்கைய மாத்திக்கிறதில்லை. இன்றைக்கும் தட்டிலோ, இலையிலோ பரிமாறினத காலி பண்ணாம எழுந்திருக்க மாட்டேன். அத பல பேர் சில காரணங்களுக்காக திட்டியதும், கேலி செய்ததும் உண்டு.

உணவு எங்கெல்லாம் எப்படியெல்லாம் வீணாகுதுனு பார்ரப்போமா?
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதல் படி சமைக்கப்பட்ட உணவை சாதாரன தட்பவெட்பநிலையில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக வைக்கக்கூடாது. நான்கு மணி நேரமென்பது சமைக்கப்பட்ட நேரத்திலிருந்து உட்கொள்ளும் நேரத்தை குறிக்கும். அதனால் தான் சிங்கையில் விழாக்களில், நிகழ்வுகளில் எத்தனை மணிக்குள் சாப்பிட உகந்தது என்ற குறிப்பை சாப்பாட்டுக்கு பக்கத்தில வச்சிருப்பாங்க. அதற்கு மேல் போனால் யாரும் சாப்பிட முடியாது. குப்பைக்கு தான் போகும். அதனால விழா/நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நம்ம வருகையை முன்னரே தெளிவாக சொல்லிவிட்டால் இதை ஓரளவு தவிர்க்கலாம்.

இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை வீட்டில் உணவை வீணாக்குவது. 77 விழுக்காடு சிங்கப்பூரர்கள் வீட்டில் உணவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. பொரும்பாலோனோர் வீட்ல உணவை அப்புறம் சாப்பிடலாம்னு குளிர்ப்பதன பெட்டியில வச்சிருவாங்க. அடுத்து புதுசா சமைச்சு அதுல மீதியானத பழசுக்கு முன்னாடி வைப்பாங்க. அப்படியே தினமும் முன்னால பழைய சாப்பாட்ட வச்சு முதல் நாள் வச்சது, திருடன் மாதிரி உள்ள ஒழிஞ்சுகிட்டு இருக்கும். தலைவர்கள் பிறந்தநாள் அன்றைக்கு சில கைதிகள விடுவிக்கிற மாதிரி என்றைக்காவது நம்ம விடுதலைக் கொடுத்தா அந்த உணவு பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கும். நம்ம பண்ண அகழ்வாராய்ச்சி வீணாப்போச்சேனு யாருக்கும் தெரியாம அந்த இடத்தைவிட்டு காலி பண்ண வேண்டியது தான். நான் எங்க வீட்டை பத்தி சொல்லல்ல….அட உங்க வீட்டை பத்தியும் சொல்லல்ல, பொதுவாச் சொன்னேன். ஆனா உண்மை என்னன்னா 92 விழுக்காடு குளிர்பதன பெட்டியில வைக்கிற உணவு வீணாவதாக 2015ல் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் எடுத்த ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

கடந்த பத்து ஆண்டில் 50 விழுக்காடு அதிகரித்து சிங்கையில 2015ல் உணவு கழிவின் அளவு 785,500 டன்னாக உயர்ந்தது. அதாவது நாம் ஒவ்வொருவரும் இரண்டு குவளைச் சோற்றை குப்பையில் கொட்டுவதற்கு சமமானது. சிங்கப்பூரில் விளைநிலம் இல்லாததால் தேவையான உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2014ல் ஏறக்குறைய 15 பில்லியன் வெள்ளிக்கு உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன அதில் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மதிப்புடையவை வீணாக்கப்பட்டதாக புள்ளிவிவரம் சொல்லுது. அதை அப்புறப்படுத்துவது, அழிப்பது, மறுசுழற்சி செய்வது இப்படி இந்த உணவு கழிவு மேலான்மை பத்தி தனியா ஒரு புத்தகமே போடலாம்.

சரி இந்த உணவு வீணாகமாக எப்படி பயனுள்ளதாக மாத்துறாங்கனு பார்ப்போம். சிங்கையில் எல்லாரும் அதிகமாக சாப்பிடும் ரொட்டி(பிரட்), தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 7 நாள் வரை சாப்பிட உகந்ததாக இருக்கும். அதற்கு பிறகு காய்ந்து பூஞ்சை படிய ஆரம்பிக்கும். அதனால அதற்குள்ளாகவே அதை விற்க வேண்டும். அப்படி விற்காத ரொட்டிகளை குப்பையில் தான் போட வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு மாதமும் வீணாகும் ரொட்டிகளின் அளவு 336 டன்னாகும்.

இன்னொரு பக்கம் இந்த உணவு தேவைப்படுபவர்களுக்கு சென்றடைந்தால் பயனுள்ளதாக அமையும்.

அந்த நோக்கில் இவர்கள் இருவருக்கும் பாலமாக “புட் ஃபிரம் த ஆர்ட்(Food from the Heart)” என்ற லாபநோக்கமற்ற அற நிறுவனம் 2003ம் ஆண்டு சிங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. விரைவில் காலாவதியாகும் உணவு பொருள்களை இவர்கள் அடுமனைகளிடமிருந்தும், கடைகளிலிருந்தும், உணவகத்திலிருந்தும் நன்கொடையாக பெற்று அதை நலக் காப்பகத்துக்கும், முதியோர் இல்லங்களுக்கும், சுய சேகரிப்பு மையங்களுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் விநியோகிக்கிறார்கள்.

120 தொண்டூளியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 1,700 தொண்டூளியர்களுடன் செயல்படுக்கின்றது.

இந்நிறுவனம் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 28,000 கிலோ ரொட்டிகளைக் ஏறக்குறைய 15,000 பயனாளிக்கு விநியோகிக்கிறது.

அதே போல மற்ற உணவு பொருள்களையும் சேர்த்து 25,000 பயனாளிகளுக்கு உதவுகிறது. நடைமுறைச் சிக்கல் உள்ளதாலும், வசதியின்மை காரணமாகவும் சமைக்கப்பட்ட உணவை இவர்கள் விநியோகிப்பது இல்லை.

இவர்களுக்காக தான் நான் சில வாரங்களுக்கு முன் உணவு நிறுவனங்களை அழைத்து இந்த அற நிறுவனத்துக்கு உணவு பொருள்களை தந்து உதவும்படி தொலைபேசி வழி கேட்டுக் கொண்டேன்.அந்த பதிவை #உணவும்_உதவியும் என்ற ஹாஷ்டாகில் பார்க்கலாம்.
(https://www.facebook.com/ShanmugamTam/posts/1298966733448833)

நீங்களும் இவர்களுக்கு பல வழிகளில் உதவலாம். வாகன வசதி இருந்தால் உணவுப் பொருள் விநியோகிக்க உதவலாம். அதை ஒழுங்குப்படுத்த உதவலாம். பணமாகவோ பொருளாகவோ கொடுத்துதவலாம். இந்நிறுவன இணையதள முகவரி மற்றும் அழைப்பு எண் கீழேயுள்ளது.

உணவை வீணடிப்பது என்பது வெறும் காசை வீணடிப்பது மட்டுமல்ல, பயிரிட்டவர் முதல் பரிமாறியவர் வரை பலரது உழைப்பை, வியர்வையை, ஆற்றலை, திறமையை வீணடிப்பதாக நான் கருதுகிறேன். ஆசையாய், பாசத்தோடு நமக்கு சமைத்து பரிமாறப்பட்ட உணவை குப்பைத்தொட்டிக்கு பகிர்ந்தளிப்பது என்பது சமைத்தவர்களின்/பரிமாறியவர்களின் மகிழ்ச்சியை, அன்பை குப்பைத்தொட்டியில் கொட்டி அவர்களை அவமதிப்பதற்கு சமம்னு என்பது என் கருத்து.
இதை படித்த பிறகு உணவை தட்டுல விட்டு போகும் நாலு பேராவது வீணாக்காமல் சாப்பிட்டால் அதுவே மகிழ்ச்சி.

இனிமே சாப்பிடற படங்கள முகநூல்ல போடுறவங்க, சாப்பிட்டு முடிச்ச பிறகும் அந்த தட்ட படம் பிடிச்சு, ‘நான் உணவ வீணாக்கல’னு சொல்ற மாதிரி முகநூல்ல போடலாம்:)

Contact details of Food from the Heart:

தொலைப்பேசி எண் : 62804483

https://www.facebook.com/foodheart/

www:foodheart.org

PC: https://goo.gl/images/cFO4bP

கவிதைனாலே காதலிருக்கும்.

கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க. இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு. இன்றென்ன காதல் ஜெயந்தியா என் வீடெங்கும் உன் கால் தடங்கள் இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும். “எப்போதும் போல் இயல்பாகப் பேசிச்சிரிக்கும் தோழிகள் தோழிகளாகவே இருக்கின்றனர் அதைக்கண்டு சிறு கோபம் கொள்ளும் நீ காதலியாகிக் கொண்டிருக்கிறாய்” என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது. கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும். கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார். நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க. நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016, இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்) நேரம் : மாலை 7 மணி