சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பெருமையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் செம்மொழியான தமிழ்மொழியை கொண்டாடுவோம், அதனை ஆவணப்படுத்துவோம் அதே வேளையில் எல்லோரும் ஒன்றிணைந்த ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற பெருமையைக் கட்டிக்காப்போம் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
திரு ஏ பி ராமன் ஐயா அவர்கள் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்களுடன் இணைந்து எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)’ என்ற தமிழ் நூலும், திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் திரு ஏ பி ராமன் ஐயா அவர்களுடன் இணைந்து எழுதிய “The Tamil Community and the Making of Modern Singapore”(சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ்சமூகத்தினர்) என்ற ஆங்கில நூலும் 13-மே-2018 அன்று காலை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இம்மாதிரியான நூல்கள் தம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும், நம் பாராம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் என்றும் தன்னுடைய முன்னோர்கள் நான்கு தலைமுறையினருக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிங்கைக்கு குடிபெயர்ந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூருக்கான இந்திய தூதுர், சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத்தூதர், இந்து அறநிலையத்துறை தலைவர் என பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலையில் விமானம் நிலையம் செல்ல நேரிட்டதால் சற்றே தாமதமாக, திரு நா ஆண்டியப்பன் ஐயா பேசும் பொழுதே நிகழ்ச்சிக்கு சென்றேன். அதற்கு முன்னர் பேசிய சுப திண்ணப்பன் ஐயாவின் பேச்சை கேட்கும் வாய்ப்பை இழந்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவரான திரு நா ஆண்டியப்பன் தன்னுடைய உரையில், “நான் எழுத்தாளராவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறேன், நான் இன்னும் எழுத்தாளர் ஆகவில்லை போலும், ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இல்லை” என்று சுட்டிக்காட்டினார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு கே கேசவபாணி, கவிமாலைக் காப்பாளர் திரு மா அன்பழகன், இந்நூலின் பிழை திருத்தத்துக்கு உதவி புரிந்த திரு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இரு நூல்கள் குறித்தும் தி மீடியா, தயாரிப்பாளர் திரு முகம்மது அலி, இந்து அறநிலையத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த ராஜசேகர், இருவரும் கலந்துரையாடினர்.

திரு ராஜசேகர் புத்தகம் குறித்து கூறும்போது, இருநூற்றாண்டுகால வரலாற்றை சுருக்கமாக ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் போன்று திரு ஏ பி ராமன் ஐயா கொடுத்திருக்கிறார் என்றும் ஒவ்வொரு அத்தியாத்தையும் மேலும் விரிவுபடுத்தி தனியாக புத்தகம் போடலாம் என்றும் கூறினார்.

இப்புத்தகம் ஒரு தகவல் திரட்டு, திரு ராமன் ஐயா, தன்னுடைய காலகட்டத்தில் நடந்ததை அவதானித்து ஒரு காலக் கணிதன் போன்று பத்திரப்படுத்தி கொடுத்திருப்பதாக கருத்துரைத்தார் திரு முகம்மது அலி.

இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற தன்னை அணுகி இந்நூல் எழுதியதற்கு முக்கியமான காரணமாக திருமதி சவுந்திர நாயகி வைரவன் இருந்தார் என்றும் இந்நூல் ஆய்வு நூலல்ல 1950ல் சிங்கை வந்து இன்று வரை பத்திரிக்கையாளனாக இருக்கும் என்னுடைய அனுபவநூல் என்று தனது ஏற்புரையில் திரு ஏ பி ராமன் ஐயா கூறினார்.

பின்னர் நன்றியுரையாற்றிய திருமதி சவுந்திர நாயகி வைரவன் இந்நூல் ஆய்வு நூலல்ல என்றும் ஆனால் பல தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் நூல் உருவாக உதவி புரிந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

திரு ஜி டி மணி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் இனிதே விழா நிறைவுற்றது.

நிறைய பேருக்கு ஆங்கில நூல் குறித்து குழப்பம் உள்ளது. அதற்கு காரணம் அது குறித்த சரியாக நிகழ்வில் விளக்கப்படவில்லை.

எனது பார்வையில் இரு நூலும் ஒரே அட்டைப்படத்தை கொண்டிருந்தாலும் ஆங்கில நூலில் 25 அத்தியாயங்களும், தமிழ் நூலில் 19 அத்தியாயங்களும் உள்ளன. படங்களும், செய்திகளும் சற்றே மாறுபட்டிருக்கின்றன.

சிங்கையில் நடக்கும் எந்த ஒரு தமிழ் நிகழ்வையும் உடனுக்குடன் முகநூலில் எழுதி வருகிறார் திரு ஏ பி ராமன் ஐயா. உடலுக்கு வயதானலும் என்றும் கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் முகநூலில் பதிவிட கற்றுக்கொண்டு தமிழ்மொழியை பலருக்கும் கடத்தி மகிழ்கிறார். ஒரு விபத்தின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டாலும் தன்னைத் தொடரும் பலருக்கும் செய்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் மூலம் செய்தி சேகரித்து பதிவு செய்கிறார். அதோடு வீட்டில் ஓய்வில் இருக்கும் காலத்தில் ஓய்வெடுக்க விரும்பாமல் நூல் எழுதியது அவரின் உழைப்புக்கு ஒரு சான்று. நல்ல உடல்நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இந்த நூல்கள் குறித்த என்னோட பார்வையை விரிவாக பிறகு பகிர்கிறேன்.

தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா

ஏழு நாட்கள், ஏழு நூல்கள், ஏழு நண்பர்களை இணைத்தல் என்ற தொடரில் Rengaprasath Gopalakrishnan, Malarvizhi Elangovan ஆகியோர்கள் என்னை கோர்த்துவிட்டார்கள். இதில் விளக்கமோ, விமர்சனமோ வேண்டோம் ஆனால் அட்டைப்படம் மட்டும் முகநூலில் போட்டால் போதுமானது என கடைசியில ஒரு கடலைமிட்டாய் வேற கொடுத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பேர் சொந்தக்கதை, முன்னுரை, பின்னுரை என பல விளக்கங்களோடுதான் பதிவு போட்டார்கள். அந்த வரிசையில் நாமும்…. புத்தகத்திலுள்ள விஷயங்களை ’அடிஷனல் பேப்பருடன்’……….ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் முடியாது. எனக்கு புத்தகப் பதிவு போட நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போடுவேன்…

இன்றைய புத்தகம் ‘தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா’. இந்தப் புத்தகத்தை 3 மாதங்களுக்கு முன்னர் என் மகளுக்காக வாங்கினேன். அவர்கள் பள்ளியில் செட்டி மலாக்கா பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியதால், தகவல்கள் பெற நண்பரிடம் சொல்லி வாங்கினேன். ஆனால் புத்தகம் வருவதற்குள் கட்டுரைக்கான தேதி முடிந்துவிட்டது:(
சரி, புத்தகத்துக்குள்ள போவோமா…

இந்தப் புத்தகத்தை மலேசிய அருங்காட்சியகத் துறை கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் நாளை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இதன் ஆசிரியர்கள் கேரன் லோ & ஜெகதீசன் வேலுபிள்ளை புத்தகத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

“‘சிட்டி மெலாக்கா’ அல்லது ‘செட்டி மலாக்கா’ என்றும் அழைக்கப்படும் இந்த இனக்குழு மலேசியாவின் முதல் பெரனாக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ‘கிளிங்’ என தொடக்கத்தில் அழைத்துள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து வணிகத்துக்காக மலாக்கா சுல்தான் ஆளுகைக்குட்பட்ட காலத்துல வந்த இவர்கள் அங்கேயே திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தக் கலப்புத் திருமணத்தால் இவர்கள் மொழி, உணவு, உடை,வழிபாடு, பண்பாடு எல்லாமே இருசாராருடைய பாதிப்பும் கலந்து தனித்து விளங்குகிறது. இவர்கள் மலாக்காவில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும் மலேசியாவின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை” என் இப்புத்தகம் சொல்கிறது.

மலேசியாவின் அப்போதைய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இந்த புத்தகம் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கும் ‘சிட்டி மலாக்கா’ பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என பாராட்டி அனுப்பிய செய்தி இதில் உள்ளது. அது உண்மை என தோன்றும் அளவிற்கு 240+ பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் பல அரிய படங்களுடன் இச்சமூகத்தின் தற்கால வாழ்வியல், பண்டிகைகள்,விழாக்கள், திருமணங்கள், குழந்தை பிறப்பு, நீத்தார் நினைவு என அவர்களின் சமகால பழக்கவழகங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ‘கம்போங் ச்சிட்டி’ என 25 வீடுகளை கொண்ட 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இன்றும் உள்ளது. இங்கு சில கோயில்களும், ‘சிட்டி அருங்காட்சியகமும்’ உள்ளது.

இச்சமூகத்தினரின் மூதாதையர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டிலுருந்து மெதுவாக வழக்கொழிந்து ‘மலாய்’ மொழியே வழக்கு மொழியானது. பின்னர் தற்போது மலாய், தமிழ், ஆங்கிலம் கலந்தே குடும்பங்களில் பேசுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் 84 மொழிகள் பேசிய 190,000 பேர் அந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களே தங்கள் அடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என புத்தகம் சொல்கிறது.

இவர்கள் ‘இந்து’ மதத்தை பின்பற்றி இங்குள்ள கோயில்களில் பூசை வழிபாடு செய்கின்றனர், விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு நடத்துவது குறைந்து வரும் காலக்கட்டத்தில் இவர்கள் சடங்கு விழா நடத்துவது மாறுபட்டிருக்கிறது. தாலி கட்டி திருமணம், நலுங்கு, பாலும் பழம் என பல சடங்குகள் தமிழ்த் இந்துத் திருமணங்களை ஒத்திருக்கிறது. இவர்களுடைய உணவு முறை மலாய் உணவு முறையை ஒத்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது அதற்கு தேவையான சான்றுகளும், சரியான தரவுகளும் மிக முக்கியம். அப்படி இல்லாமல் கதை சொல்லும் போக்கில் தனக்கு வேண்டியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களை வரலாற்று நாயகர்களாக சித்திரிப்பது அபாயகரமானது. அது ஒரு புனைவு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த புத்தகத்தில் அந்த மாதிரியான எந்த இடைச்செருகலும் இல்லாமல் வரலாற்றாசிரியர் திரு சாமுவேல் துரைசிங்கம் உட்பட பல வரலாற்று ஆவணங்களை புரட்டிப்பார்த்து நிகழ்கால வாழ்வியலை அவர்களிடையே வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைக்கலாம் ஆனால் வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, நாளை கேட்டுச் சொல்கிறேன்:)

         

 

காந்தள்சூடி

ஒரு புத்தக வெளியீட்டில் பேசுகின்ற சிறப்பு விருந்தினர் எப்படி பேச வேண்டும் என்பதை பேசிக்காட்டினார் கவிஞர் சுகிர்தராணி. கண்ணன்னின் கவிதை புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதை தாண்டி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அதிலுள்ள சிறப்பான கவிதைகளை அவர் எடுத்துச்சொன்ன விதம் அதை மற்ற கவிதைகளோட ஒப்பிட்ட விதம் அதையெல்லாம் விட அந்தக் கவிதைகளை நினைவில் வைத்து பேசியது என எந்த ஒரு ஆர்ப்பாட்டாமோ அலட்டலோயில்லாமல் சிறப்பாக பேசினார்.

கண்ணின் ‘காந்தள்சூடி’யில் என்னை கவர்ந்த பல சிறப்பான கவிதைகள்/வரிகள் இருந்தாலும் இந்தக் கவிதை கண்ணனின் அடையாளமாக மாறும் வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

தன்னம்பிக்கை
———————
உதிர்ந்தால்
ஒன்றுமற்றுப் போகும்
சிறகுகளால் தான்
தேசங்களைக் கடக்கிறது
பறவை

     

சரி இந்திய அரசியல், அமெரிக்க அரசியல் எல்லாம் பார்த்தாச்சு, இப்ப சிங்கை இலக்கிய அரசியலுக்கு வருவோம். என்னடா வில்லங்கமா ஏதோ சொல்றானேனு நினைக்கிறவங்க முழுசா உணர்ச்சி வசப்படாம கருத்தை மட்டும் படியுங்கள்.

ஜெமோ விமர்சனம் குறித்த சர்ச்சை
———————————–
சிங்கை இலக்கிய உலகில் இலைமறை காய்மறையா இருந்த விஷயங்கள் ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வந்தது ஜெமோ விமர்சன சர்ச்சையில் தான். அவரோட விமர்சனம் குறித்து நான் ஏற்கனவே கருத்து சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதை வைத்துக்கொள்ளலாம்.

முதலில் ஜெமோ ஒரு எழுத்து ஜாம்பவான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் வைத்த விமர்சன பார்வையில்தான் சில கோளாறுகள். அது முழுக்க முழுக்க அரசியல் என்பது அவரை ஆதரித்த நிறைய பேருக்கு இப்ப புரிந்திருக்கும். அவருடைய கருத்துக்களில் எனக்கு நிறைய உடன்பாடு இருந்தாலும்கூட அவர் அதை வைத்த விதம், தனி மனித தாக்குதல்கள், ஒருவரின் அறிவை, படைப்பு திறமையை ஏளனமாக பேசியது, குறிப்பிட்ட சிலரின் படைப்புகளை, படைப்பாளிகளை மட்டும் பாராட்டுவது, மற்ற படைப்புகளை இகழ்வது, ஒரு படைப்பாளியின், நன்கு பேசப்பட்ட படைப்புகளை ஒதுக்கிவிட்டு மற்ற படைப்புகளை தேர்வு செய்து எதிர்மறை கருத்து வைத்தது, படைப்பாளி பற்றி எழுத்தில் இல்லாத விஷயங்களை, தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தகலவல்களில் அடிப்படையில் வைத்த கருத்துகள், பின்னர் சில கருத்துகளை திரும்ப பெற்றது இவையெல்லாம் அவர் தனிப்பட்ட முறையில் செய்த விஷயங்கள் அல்ல பின்னால் இருந்து ஊதி விட்டவர்கள் சிலர் என்பதும் வெட்ட வெளிச்சம்.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் சிங்கையின் ஒட்டுமொத்த தமிழ் படைப்பிலக்கியமே தரமற்றது என்ற அளவில் ஒரு பார்வையை ஜெமோ முன் வைக்கிறார் (அப்படி இல்லை என்று சிலர் வாதிட கூடும். அதற்கு அவர் மேல் உள்ள பற்று மட்டுமே காரணமாக இருக்கும்). அது பொதுவெளியில் சரி என்று அவரின் சீடர்களாலும் மற்றவர்களாலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒரு சில தமிழக சமூக ஊடகங்கள் இணையத்தில் செய்தி வெளியிடுகின்றன.
ஆனால் சிங்கையில் தமிழ் வளர்க்கும் அமைப்புகளோ, சிங்கையின் சக படைப்பாளர்களோ, எந்தவொரு கருத்தோ, விளக்கமோ கொடுக்கவில்லை. அதற்கு ஒன்று, ஜெமோவையோ அல்லது அவருடைய விமர்சன பார்வையையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற நிலை இருக்கலாம் இல்லை நமக்கேன் வம்பு, தனிப்பட்ட முறையில் நம்மை ஏதும் சொல்லவில்லை அதனால் விட்டுவிடலாம் என்ற சுயநலப்போக்கு காரணமாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அது சரியான அணுகுமுறையாக எனக்குப்படவில்லை.
ஒரு ஆரோக்கியமான விவாதமும் அவர் சொன்ன கருத்தில் நல்லவைகளை எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தவேண்டும் இருக்கும்.

ஜெமோ சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட நன்மைகள்
———————————————
அந்த அடிப்படையில் அந்தச் சர்ச்சையில் நமக்கு என்ன நல்லது ஏற்பட்டது என்று பார்ப்போம்.

முதலில், கடந்த ஒரு சில ஆண்டுகளாக வெறும் வாழ்த்துகளும் நன்றிகளும் மட்டுமே நிறைந்திருந்த சிங்கை இலக்கிய உலகில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சில அமைப்புகள், படைப்பாளர்கள் விமர்சனங்களை பொதுவெளியிலும், இலக்கிய கூட்டங்களிலும் வைத்தாலும் அது குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை. மற்ற மொழிகளில் இருக்கும் அளவிற்கு விமர்சன பார்வை தமிழில் இல்லை. அதை ஏற்கும் பக்குவமும் பலரிடம் இல்லை.

இப்போது அது குறித்து பலர் பேச ஆரம்பித்திருக்கிறர்கள், விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன, படைப்பாளிகள் ஏற்க ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

குறிப்பாக தமிழ் முரசில் வெளிவரும் கவிதைகளின் தரம் குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அதில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது என நினைக்கிறேன். அதற்கு உழைப்பு தேவைப்பட்டது. தொடர்ந்து பார்ப்போம்.

எழுத்தாளர் விழா : விமர்சனம் குறித்த நிகழ்வு
——————————————-
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், தேசிய கலைகள் மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’வில் கடந்த வாரம் சனிக்கிழமை, நவம்பர் 5ம் தேதி காலை, ‘பெரும் விவாதம்: விமர்சனம் செய்வதா, வேண்டாமா?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வை அதன் தாக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை வழி நடத்தியவர் முனைவர்
சித்ரா சங்கரன். இதில் கலந்து கருத்துரைகள் வழங்கியவர்கள் திரு இராம கண்ணபிரான், திருமதி கனகலதா, திருமதி சித்ரா ரமேஷ். இவர்கள் அனைவருமே சிங்கை இலக்கிய உலகில் குறிப்பிடதக்கவர்கள், நல்ல படைப்பாளிகள், மதிக்கபட வேண்டியவர்கள். இந்த மேடைக்கு தகுதியானவர்கள்.
இவர்களாற்றிய உரைகளை நான் புரிந்துக்கொண்ட வகையில் என்னால் முடிந்த வரையில் சுருக்கமாக என்னுடைய ‘நோட்ஸ்’ பகுதியில் உங்களின் வாசிப்புக்காக பதிவு செய்துள்ளேன்.

அதில் பொதுவாக என்ன சொல்லப்பட்டது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

இதில் பங்கேற்ற மூவரில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சிங்கையில் படைப்பிலக்கிய விமர்சனம் எப்படி இருந்தது என்பது குறித்து தங்களின் பார்வையை வைக்க வேண்டும்.
ஆனால் முதல் பேச்சாளரை தவிர மற்ற இருவரும் அதிகம் படைப்பை பற்றி மட்டுமே பேசினார்கள், விமர்சனம் குறித்தோ, தலைப்பில் கொடுக்கப்பட்ட ஆண்டில் அதன் வளர்ச்சி குறித்தோ அதிகம் பேசவில்லை என்பது வந்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே.

கேள்வி பதில் அங்கத்திலும் பல கேள்விகளுக்கு தெளிவான, முடிவான ஒரு பதிலை முன் வைக்கவில்லை, சற்றே குழப்பமான கருத்துக்களே வெளிப்பட்டது. அதற்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், எல்லோருமே கீழ்கண்ட கருத்தில் ஒன்றுபட்டோம்
1.அது சிங்கையில் வாசிப்பு பெருக வேண்டும்
2.விமர்சனம் எழுத்துச் சார்ந்து இருக்க வேண்டும், நடுநிலையோடு பண்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். புண்படுத்தக் கூடாது
3.விமர்சனத்தை திறந்த மனத்துடன் ஏற்கும் பக்குவம் வேண்டும். ஆரோக்கியமான நல்ல விவாதம் வேண்டும்.

நூல் வெளியீட்டு விழா
———————-
நிகழ்வில் இன்னொரு விஷயம் அதிகமாக குறிப்பிடப்பட்டது. அது நூல் வெளியீடு குறித்தானது. பொதுவாக சிங்கையில் நூல் வெளியீட்டில் பாராட்டுரைகள் மட்டுமே உள்ளது என்று சொல்லப்பட்டது.

அது குறித்து என் கருத்து:
அது உண்மையே. யாராவது சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொள்வார்களா? மனித மனம் பாராட்டை எதிர்பார்ப்பது இயற்கை தானே. அதுவும் தான் உழைத்து வெளியிட்ட ஒரு படைப்பை வெளியிடும்போது கண்டிப்பாக அந்த எதிர்பார்பு இருக்கும். ஆனால் அதையும் தாண்டி குறைகளை ஏற்கும் முதிர்ச்சி வேண்டும். பாராட்டுகளை மேடையில் கேட்க விரும்பும் நாம் குறைகளை மேடையில் கேட்க விரும்பவில்லை. இதுவும் இயற்கைதான். அதற்கு தீர்வு, நூல் வெளியீட்டு விழா நடத்துபவர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து விமர்சனக் கூட்டங்களையும் நடத்துங்கள். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே வாழ்த்துரை, அறிமுக உரை கொடுப்பவர்கள் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளுங்கள். இது வாசிப்பையும் வளர்க்கும். தரமான எழுத்துகள் உருவாக வழி வகை செய்யும். பிற்காலத்தில் நான் தனிப்பட்ட முறையில் நூல் வெளியிட்டால் இதை கண்டிப்பாக செய்வேன்.

ஊடகத்துக்கு ஒரு வேண்டுகோள்
———————————–
தமிழ் முரசில் நூல் வெளியீட்டு விழா செய்தி வெளியிடுவது போல் நூல் விமர்சன கூட்டங்கள் குறித்தான செய்தியையும் வெளியிடுங்கள். தனியாக மாதம் ஒரு நூலை தேர்ந்தெடுத்து விமர்சன பகுதி ஒதுக்கி வெளியிடுங்கள். இது படைப்பாளனையும், வாசகர்களையும் ஊக்கப்படுத்தும்.
ஒலி 96.8லும், வசந்தத்திலும் இது போல ஒரு விமர்சன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.

அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்
————————————
இந்த கூட்டத்தில நான் பார்த்த இன்னொரு நல்ல விஷயம், சிங்கையின் பல அமைப்புகளிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். இதே கூட்டத்தை எந்தவொரு தமிழ் அமைப்பாவது நடத்தியிருந்தால் மற்றவர்கள் வந்திருக்க மாட்டார்கள். இது தான் கசப்பான உண்மை. அதனால் இந்த மாதிரியான கூட்டங்களை, விவாதங்களை தேசிய கலைகள் மன்றமோ அல்லது மற்ற பொதுவான அமைப்புகளோ தொடர்ந்து நடத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் சிங்கை தமிழுக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்.
எல்லோருமே அவரவர் பணிகளை சிறப்பாக செய்து படைப்பிலக்கியத்திற்கு பெரும்பங்காற்றுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு சில முறை ஒன்றுபட்டு விவாதங்களை முன் வைத்து, வளர்ச்சியை அலசிப்பார்த்து, நடவடிக்கை மேற் கொள்ளுதல் அவசியம்.

சிங்கை இலக்கியம் என்பது ஒரு குறிப்பட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கோ, தனி அமைப்புகளுக்கோ, தனி மனிதர்களுக்கோ சொந்தமானதல்ல. அது படைப்பாளிகளின் உலகம். அவர்களை வழி நடத்துவதும், ஊக்குவிப்பதும் தமிழ் ஆர்வமுள்ள அனைவரது கடமையாகும். இதில் சார்பற்று இயங்குவது மிக முக்கியம்.

அப்படி நடந்தால் அதன் மூலம் சிங்கை இலக்கிய உலகில் அடுத்த மூன்று ஆண்டில் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாக்க வாய்ப்பாக அமையும். நிறைய வாசிப்பு, சிறந்த படைப்புகள் உருவாக ஒரு நல்ல களம் அமையும். இதில் வெற்றி பெறப்போவது தமிழாக இருக்கும்.

இதில் அணில் போல் என்னால் முடிந்த சின்ன சின்ன விஷயங்களை பலர் ஆதரவுடன் நான் செய்து கொண்டிருக்கிறேன், தொடர்ந்து செய்வேன்.

பி.கு: இந்த பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.

ஜெமோவின் சிங்கை படைப்பு

ஜெமோவின் சிங்கை படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் குறித்து என் பார்வை —————————————— முதலில் ஜெமோவுக்கு ஒரு பாராட்டு. எதற்கு என்று யோசிக்கிறீர்களா ?மூன்று விஷயம். 1.தனது நேரத்தை சிங்கை எழுத்தாளர்களின் நூலைப் படிப்பதற்கு செலவழித்ததற்காக. 2.என்னைப் போன்றவர்களை சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆழமாக படிக்கத் தூண்டியதற்காக. 3.ஒரு விவாதத்தை ஏற்படுத்தியதற்காக ஜெமோவின் எழுத்துகள் பிடிக்கும் எனக்கு அவரின் கருத்துக்கள், வெளிப்படுத்தும் விதம் இதில் உடன்பாடில்லை. அவரின் விமர்சனம் குறித்தும் அதிலுள்ள சில குறைபாடுகள் என நான் நினைப்பதையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களின் நாகரீகமான, ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவிடலாம். 1.”சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புகளை நாம் மதிப்பிட முடியும்” என்று குறிப்பிட்ட ஜெமோ 80,81களில் வெளியான கதைத் தொகுப்பை அந்த எல்லைகளுக்கு அப்பால் நின்று கொண்டு 2016 காலக் கண்ணாடி போட்டு பார்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக: “தமிழ்நடை உருவாகி வர முடிவதில்லை” என்று சொல்லும் அவரே “பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ளது” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அந்தச் சூழலில் அந்த எல்லைக்குள் அப்படித்தான் எழுத முடியும், அதை சரியாக செய்திருக்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். அடுத்து, ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தாக்கம் இருக்கும். இந்த ஆசிரியர் மு.வ அவர்களை வாசித்து அவரின் பாதிப்பால் எழுத்துலகிற்கு வந்தவர். சுஜாதாவின் தாக்கத்தால் எழுதுபவர்கள் எப்படி சுஜாதாவை பின்பற்றி எழுதுவார்களோ அப்படித்தான். அதனால் இதில் குறையொன்றும் இல்லை என்பது என் கருத்து. வசனங்களால் நிறைந்தது பீம்சிங்கின் பழைய படங்கள். வசனங்கள் குறைந்து காணப்படுவது மணிரத்னத்தின் படங்கள். பீம்சிங் படங்களை பார்த்து ஏன் மணிரத்னம் படம் மாதிரியில்லை என்று கூறுவது போல்தான் உள்ளது அவரது குறைகூறல். 2.அடுத்து ஒப்பீடு என்பது சிங்கைச்சூழலில் அதன் தேவையறிந்து இங்கு வாழ்ந்த சக எழுத்தாளர்களிடைய இருக்க வேண்டும். இங்கு புதுமைப்பித்தன் எப்படி வந்தார். இது எப்படி இருக்கிறது என்றால் சென்னையில் ஓடுற மின்சார ரயிலை மும்பையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பீடு செய்தால் சரி, அதை சிங்கையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பிட்டால் எப்படி? சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு சூழலில், அந்தக் குறிப்பிட்டக் காலத்தில், அதைக் கதைகள் மூலம் மக்களுக்கு சொல்வதில் தப்பில்லை. 3.”அரசும்,அமைப்புகளும் ‘பாரபட்சமில்லாமல்’ ஊக்கப்படுத்துகின்றன” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இதில் வெளிப்படையாக அரசையும், தமிழ் அமைப்புகளையும் குற்றம் சாட்டுகிறார் என நினைக்கிறேன். சிங்கையில் தமிழ்மொழிக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த ஒரு வெகுமதிதான் அரசு கொடுக்கும் விருதும் ஊக்கமும். அதை சந்தேகப்படுவது, கேள்விக்கேட்பது என்பது தமிழை, தமிழ் இலக்கியத்தை சிங்கையில் சீர்குலைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதே அரசும், அமைப்புகளும் தான் இவர்களை சிங்கைக்கு கூட்டி வந்து தமிழ் வளர்க்கின்றன. இது தான் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பதா? அவர் அந்தந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எந்த சூழலில் எந்த நோக்கத்தில் அந்தக் கதைகளை எழுதினார்கள் என்று தெரிந்துக்கொண்டு பொதுவெளியில் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைத்திருக்கலாம். 4. ஜெமோவின் விமர்சனம் குறித்து என்னை எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டார்கள். நான் முதலில் எழுதவில்லை.அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்து, அவர் விமர்சனங்கள் மூலம் தான் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர் என்று கேள்விப்பட்டேன். கூடுதலான வாசகர்களை தன் வலைப்பக்கத்துக்கு இழுத்து வர அவர் வீசி எறியும் வலை இதுவோ என விட்டுவிட்டேன். அவர் தினமும் ஒருவரை பற்றி எழுத, சரி எழுதி முடிக்கட்டும் என்றிருந்தேன். இந்தப்பதிவு போடுவதற்கு இன்னொரு காரணம். இங்கே இளையர்களை தமிழ் எழுத வைப்பது மிக கடினம். அவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்மொழி மீதும் இலக்கியம் மீதும் ஆர்வத்தை வர வைக்க இங்கே அரசும் அமைப்புகளும், ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். அவர்களிடைய இந்த மாதிரி விமர்சனம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான். அதனால் தான் அரசாங்கமும் அமைப்புகளும் அவர்களை தட்டிக்கொடுத்து அழைத்து செல்கின்றன். அவர்களுக்காகவும் இதை எழுதுகிறேன். எனக்கு ஒரு கேள்வி உண்டு. எழுத்தில் கரை கண்டு பல அங்கீகாரங்கள் பெற்றவர்களை, 70,80 வயதில் உள்ளவர்களை விமர்சிப்பதன் நோக்கம் என்ன? பயன் என்ன? உங்களால் சமகால எழுத்தாளர்களை, உங்களுடன் தோளுரசுபவர்களின் படைப்புகளை இந்த அளவு விமர்சிக்க முடியுமா? சரி இதை இன்னொரு விதமாக பார்ப்போம். நான் முதலில் கூறியது போல் அவர் நேரம் ஒதுக்கி வெளிப்படை விமர்சனமே இல்லாத நம் இலக்கியச் சூழலை ஒரு விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் எந்த ஒரு விமர்சனமும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது படைப்பை மேம்படுத்த வேண்டுமே தவிர படைப்பாளியை புண்படுத்தக்கூடாது. நம் நோக்கம் படைப்பாளியை பழிப்பது எனில் அதை தனி மனித தாக்குதலாக தொடுக்க தைரியம் வேண்டும். அதற்கு பதிலாக படைப்பை விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் அதைச் செய்யக்கூடாது. எந்தவொரு படைப்பும் அந்த படைப்பாளியின் அறிவு, பட்டறிவு, திறமை,கற்பனை மற்றும் உழைப்பின் வெளிப்பாடு. படைப்பை விமர்சிப்பதன் மூலம் படைப்பாளியை உள்ளூடாக விமர்சிப்பது தவிர்க்க முடியாது. ஆனால் அதை வெளிப்படையாக விமர்சிப்பது என்பது நாகரீகமற்றது. நம்முடைய இன்றைய சூழல் ————————— சரி நம்ம இலக்கியச்சூழல் என்பது எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். இது வாழ்த்துகளும் நன்றிகளும் மட்டுமே நிறைந்த விந்தை உலகம் என்பதில் ஐயமில்லை. காரணம், பொதுவாக விமர்சகர்கள், தாங்கள் நேரில் காணாதவர்களை தைரியமாக விமர்சிப்பார்கள். தான் நேரில் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்களின் படைப்பை விமர்சிக்க யோசிப்பார்கள். இன்னும் சிலர் வாய்ப்புக்காகவும் வசதிக்காகவும் வாயாற புகழ்வார்கள். சிலர் அது கிடைக்காதோ என்ற கவலையில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் இங்கிருந்துக் கொண்டு ஒபாமா என்ன செய்தார்?புடின் என்ன கிழித்தார்? என்று அறைகூவல் விடுவார்கள். ஆனால், பக்கத்திலுள்ளவர்களை பற்றி ஆக்கப்பூர்வமாக விமர்சனத்தை வைக்க நடுங்குவார்கள். இவர்கள் விசைப்பலகை வீரர்கள் என்று சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். இப்படி பல காரணங்களால் விமர்சனம் என்பது ஒரு வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கப்படுகின்றது. இன்னொரு வகை, ஜெமோ சொன்னது சரிதான் என்று வாதிடுபவர்கள் ஆனா வெளியே சொல்லவ் கூச்சப்படுவர்கள். அடுத்து, சிங்கை இலக்கியவட்டம் மிகச் சிறிய வட்டம் அதில் ஒவ்வொருவரும் அடிக்கடி சந்திக்க கூடியவர்கள், நண்பர்கள். இங்கே விமர்சனத்தை வைப்பதும், எதிர்கொள்வதும் சற்று சிரமமானது. இங்கேயும் சில குறைபாடுகள் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இங்கே இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களை விட வேறு பல சார்புநிலைகளை பற்றிக்கொண்டு இயங்கும் இலக்கிய வட்டம் சில உள்ளது. பண்டமாற்று முறையில் பாராட்டிக்கொள்பவர்களும் உண்டு. நாம் என்ன செய்ய வேண்டும் ————————— 1.அமைப்பு ரீதியாகவோ அல்லது அரசு ரீதியாகவோ ஒவ்வொரு படைப்பையும் அங்கீகரிக்க ஒரு விருப்புவெறுப்பிலாத குழு அமைத்து படைப்பை அங்கீகரிக்கலாம். இதில் எந்தவித வேறுபாடுமின்றி படைப்புகள் ஆராயப்பட வேண்டும். அந்த படைப்புகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைக்கப்பட வேண்டும். அதை வரவேற்க்கும் பக்குவம் படைப்பாளிக்கு வர வேண்டும். 2.அமைப்புகள் படைப்பாளிக்கு விருது வழங்கும் போது எந்த படைப்புக்கு விருது வழங்கப்படுகின்றது அதிலுள்ள பெருமைகள் என்ன என்பதை விளக்கி வெளியிட வேண்டும். தெரிந்தவர்களுக்கும், தனக்கு தேவைப்படுபவர்களுக்கும் விருது வழங்கக்கூடாது. விருதுக்கும், படைப்புக்கும்,படைப்பாளிக்கும் அந்த விருது பெருமை சேர்க்க வேண்டும். தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு குழு அமைத்து, பரிசீலித்து விருதாளரை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பு.