தமிழ்மொழி மாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி, திருக்குறள் விழா 2017. வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 1ம் தேதி மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறும் இவ்விழா தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் முத்திரை விழா. இந்தாண்டு இவ்விழாவின் சிறப்பம்சம் மூன்று முத்தான சிங்கப்பூர் பேச்சாளர்களின் சிறப்புரை. அறத்துப்பால் குறித்து பேசவிருக்கும் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் ஒரு சிறந்த பேச்சாளர். ஐயா சாலமன் பாப்பையா, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உடையவர். சிங்கையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவரது பேச்சு கருத்தாழமுடையதாக இருக்கும். தெரிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கும். தொழிலதிபராகவும், சிங்கையின் பல தமிழ் அமைப்புகளின் நிரந்திர புரவலராகவும் இருக்கும் ஐயா ஜோதி மாணிக்கவாசகம் பொருட்பால் குறித்தும் பேசுவது பொருத்தமே. கலகலப்பான பேச்சில் நம்மை கட்டிபோடும் இவர் நகைச்சுவையோடு வாழ்க்கையின் யதார்த்தங்களையும் புட்டுவைப்பார். மிகவும் எளிமையாக தன் கருத்துகளை முன் வைப்பதில் வல்லவர். நகைச்சுவை நங்கூரம் என்று எங்களால் அன்பாக அழைக்கப்படும் முனைவர் மன்னை ஐயா அவர்கள் இன்பத்துப்பால் குறித்து சிறப்புரையாற்றயிருக்கிறார். இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மேடைப்பேச்சாளராக வலம் வருபவர். சிங்கையில் ஆசிரியராக பணிபுரியும் இவரின் பேச்சுக்கு பல இரசிகர்கள் உண்டு. நகைச்சுவையுடன் கூடிய இலக்கிய பேச்சுக்கு நான் உத்தரவாதம். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். என்ற குறளுக்கேற்ப மழலைகளின் பேச்சும், உயர்நிலைப்பள்ளி மாணவரின் சிறப்பு பேச்சும் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சமூகத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கும் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் இந்த ஆண்டும் சில முக்கிய வேண்டுகோளையும் அறிவுரைகளையும் முன் வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் விழா என்றாலே நேரக் கட்டுப்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சின்ன சின்ன விஷயங்களும் நுட்பமாக கவனித்து செயல்படுத்தப்படும். அதற்கான அவர்களின் உழைப்பு கொஞ்சமல்ல. நிறைய தொண்டூழியர்களின் ஈடுபாடும் ஆர்வமும் அதன் பின்னனியில் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு திருக்குறள் போட்டிகள் மீண்டும் நடைபெற்றது. அதற்கான பரிசுகள் விழாவில் வழங்கப்படும். இந்த ஆண்டு திருக்குறள் விழாவுக்கு கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதனால் இவ்விழாவிற்கும் இருக்கை கிடைக்க முந்துங்கள். கூடுதல் நாற்காலி ஏற்பாடு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
நிகழ்ச்சி
இந்த ஆண்டு தமிழ்மொழி விழா வரும் வார இறுதியில் தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி, சனிக்கிழமை காலை மணி 10க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை வழங்கும் “யுத்தம் 2017” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இது முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி. எட்டு தொடக்கக் கல்லூரி, எட்டு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் முற்றிலும் மாறுபட்ட சொல்வளம் பெருக்கும் விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் புழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பல சுற்றுகளாக தொழில்நுட்ப உதவியுடன் புதிர் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பம்சமாக நகைச்சுவை சுற்றும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே மாணவர்களிடம் பேச்சுத்தமிழை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரம் போவதே தெரியமால் விறுவிறுப்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த ஆண்டு வேறு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் இருந்தனர். இந்த ஆண்டு அதே நேரத்தில் வேறு நிகழ்ச்சி இல்லை, இதுவே முதல் நிகழ்ச்சி, அதோடு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறுவதால் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே வந்து இருக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/NUSTLS/posts/813465038809483:0
தமிழ் மொழி விழா 2017
Sorpor 2017 – National Tamil Debate Contest for Primary School Students. Today’s Quarter Finals was fabulous. Students displayed their oratory and debating skills very well during both Prepared Speech and Impromptu rounds. Way to go. Very well prepared and supported by both Teachers and Parents. In the semi-finals St. Anthony’s Primary School will meet Concord Primary School and Canberra Primary School will meet Marymount Convent School. Waiting for Semi-Finals on 8th of April at 2 PM in MDIS Auditorium.
இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது
#தமிழ்மொழி_விழா_2016
ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல நட்பு, ஒரு நல்ல கற்றல், ஒரு நல்ல முயற்சி, ஒரு நல்ல சிந்தனை, ஒரு நல்ல கவிதை இப்படி நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அந்த ஒரு நல்ல நிகழ்வு எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்ய வேண்டியது திறந்த மனத்துடன் அதை வரவேற்பதே. அப்படி நடந்த அந்த மாற்றம் இன்று எனக்கு இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் ‘மகுடம்’ என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியது, இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று இளங்கவிஞர் விருது பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான கவிஞர் கருணாகரசுக்கும், மரபு குறித்து சந்தேகங்களை அவ்வப்போது விளக்கம் தந்து உதவி புரிந்த கவிஞர் கி கோவிந்தராசுக்கும், மரபை ஆரம்பித்து வைத்த கவிஞர் பனசை நடராஜனுக்கும், எந்த பிழையையும் உடனே திருத்தி எனக்கு உதவி புரியும் கவிஞர் ராஜு ரமேஷுக்கும், என் கவிதைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த கவிஞர் இன்பாவுக்கும் மற்றும் மரபுக் கவிதை குழுவின் நண்பர்கள் கவிஞர் மதிகுமார், கவிஞர் ஹாஜா மொய்தீன், கவிஞர் கோ கண்ணன், கவிஞர் லலிதா சுந்தர், கவிமாலை நண்பர்கள் குழுவிற்கும், கவிமாலைக்கும் என் மனமார்ந்த நன்றி என் கவிதையை இரசித்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றி தங்கமுத்திரை விருதை வழங்குபவர் மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம் சரவணன்.
#தமிழ்மொழி_விழா_2016 சொற்களம் 2016 —————— மாணவர்களின் கற்றல் பயணம்: ——————————- “புரிந்துணர்வு இருப்பதால் தான் பண்டிகை தினங்களில் அண்டை வீட்டிலுள்ள மற்ற இனத்தாரிடமும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று ஒட்டிப் பேசிய அணியின் மாணவர் கூறியபோது “அரசாங்கம் போட்ட சட்டத்தினால்தான் மற்ற இனத்தவர்கள் நம் அண்டை வீட்டில் வாழும் சூழுல் ஏற்பட்டது” என்று அழகாக தங்களின் எதிர்வாதத்தை வைத்தார் வெட்டிப் பேசிய அணியிலுள்ள மாணவர். பல இன மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ சட்டங்களைவிடப் புரிந்துணர்வே அவசியமாகும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9ம் தேதி , சனிக்கிழமை மீடியாகார்ப் அரங்கத்தில் சொற்களம் 2016 இறுதிச்சுற்றில் நடந்த சுவாரசியமான அங்கமிது. இப்படி முதல் சுற்றிலிருந்து இறுதிச்சுற்று வரை கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்த சொற்களம் விவாதப் போட்டியில் சிங்கையின் அடுத்த தலைமுறையினர் தங்களது கருத்துகளை, வாதத் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெகு சிறப்பாக வெளிக்காட்டினர். இந்தப் போட்டிகள் மாணவர்களிடத்தில் வெறும் பேச்சுத் திறனையும், கவனிக்கும் ஆற்றலையும் மட்டும் வளர்க்கவில்லை, தமிழ் மீதான ஒரு பற்றுதலையும் உலக நடப்புகளை படித்து அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பினையும் வழங்குகிறது. மேலும், குழுவாக போட்டியிடுவதால் கூட்டு முயற்சியையும், விட்டுக் கொடுக்கும் பண்பையும் வளர்க்கிறது. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியுடன் தோல்வி என்பதும் தவிர்க்க முடியாததாகிறது. தோல்வி அடைந்த குழுக்கள் அத்தோல்வியை எப்படி அணுக வேண்டும், சக போட்டியாளர்களை எப்படி மதிக்க வேண்டும், நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துகளை எப்படி கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு தளமாக இச் சொற்களம் போட்டி அமைகின்றது. இந்தக் கற்றல் பயணம், மாணவர்களைப் பக்குவப்படுத்தி போட்டித்தன்மை மிகுந்த இக்காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் அவர்களை எந்த ஒரு சவாலான சூழலையும் சந்திக்க பெரிதும் உதவும் என்பது திண்ணம். அடித்தளத் தலைவர்களின் பங்களிப்பு: ————————————- 12வது முறையாக நடைபெறும் இப்போட்டியின் பின்னணியில் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் மத்திய வட்டார இந்திய நற்பணிச் செயற்குழுக்களிலிருந்து 50 அடித்தளத் தலைவர்களின் தன்னலமற்ற உழைப்பு அடங்கியிருக்கிறது. சுமார் 50 நடுவர்கள், 15 அவைத் தலைவர்கள், 15க்கும் மேற்பட்ட தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விவாதப்போட்டி சரியாக 6 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. 30 இந்திய நற்பணிச் செயற்குழுவினர் தீவிரமாக பணி செய்து மாணவர்களிடத்தில் தமிழ் புழக்கத்தை வளர்ப்பதற்காக, தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சொற்களம் 2016 நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்வை இணைந்து நடத்திய மீடியாகார்ப் நிறுவனம், இறுதிச்சுற்றின் நேரடி ஒளிபரப்பினையும் அரையிறுதிச்சுற்றின் பதிவுக் காட்சியையும் வசந்தம் ஒளிவழியில் சிறப்பாக ஒளிபரப்பி தன்னுடைய பங்களிப்பை நல்கியது. போட்டியின் வெற்றியாளர்கள்: —————————- 32 பள்ளிகள் கலந்துக்கொண்ட இவ்விவாதப்போட்டியின் முதல் சுற்றில் 16 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் 8 பள்ளிகள் கால்யிறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பேச்சுத்திறனை மேம்படுத்த பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது. காலிறுதிச்சுற்றிலிருந்து தயாரித்துப் பேசும் அங்கத்துடன், தலைப்பை போட்டியின் போதே கொடுத்து 3 நிமிடத்தில் முன் தயாரிப்பின்றி உடனடியாக பேசும் அங்கமும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் காலிறுதிச் சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளிகள் அரையிறுதி சுற்றில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பெண்டமீர் உயர்நிலைப்பள்ளி விக்டோரியா உயர்நிலைப் பள்ளியை எதிர் கொண்டு வெற்றி பெற்றது. ராஃபில்ஸ் கல்வி நிலையம் மெக்ஃபெர்ஸன் உயர்நிலைப் பள்ளியை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. முடிவில் ராஃபில்ஸ் கல்வி நிலையம் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. இருந்தும் போட்டியில் பங்குகொண்டு தங்கள் திறைமைகளை வெளிப்படுத்திய அனைவரும் வெற்றியாளர்களே. இளையர்களுக்கே முக்கியத்துவம்: ——————————– சிங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரவலாக அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்நிகழ்வில் சிறப்புரைகள் இல்லை, மாலைகள் இல்லை, பொன்னாடைகள் இல்லை, எந்தவித சம்பிரதாய சடங்குகளும் இல்லை. மாணவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அடித்தளத் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்விது. நேரடியாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியை முதன்முறையாக செய்தாலும் எந்தவித சிரமமுமின்றி மிக சிறப்பாக வழிநடத்திய அவைத் தலைவர் இலக்கியா செல்வராஜியும் ஒரு இளையரே. 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொற்களம் போட்டியாளரான இவர் அரையிறுதி போட்டியிலும் அவைத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இதுபோல மாணவர்களை முன்னிலைப்படுத்தும் விழாக்களும், இளையர்கள் ஏற்று நடத்தும் விழாக்களும் மேலும் அதிகமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் நிகழ்ச்சிகளின் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.