தமிழ்மொழி விழா கொண்டாட்டம் இந்த வார இறுதியில் தொடங்கவிருக்கிறது. முதலில் இதை ஒருங்கிணைக்கும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுக்கும் மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்,இந்திய மரபுடைமை மையம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலைக் கூடங்கள், அமைச்சு, தேசிய நூலகம், மீடியாகார்ப், ஒலி 96.8, தமிழ் முரசு மற்றும் சமூக ஊடகங்கள் என ஒரு மாதம் நிகழ்வை நடத்தவிருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்🙏
🙏
🙏
தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மீடியாகார்ப் வளாகத்திலுள்ள எம் ஈ எஸ் அரங்கில் மாலை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 58 நிகழ்ச்சிகள். கடந்தாண்டை காட்டிலும் 7 நிகழ்ச்சிகள் அதிகம். இந்தாண்டு இசை,நாடக,நாட்டிய நிகழ்ச்சிகள் கூடுதலாக உள்ளன. இவை இளையர்களை, மாணவர்களை மட்டுமில்லாமல் கலை ஆர்வமுள்ள பலரையும் ஈர்க்கும்.
புதிதாக பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் 2 நிகழ்ச்சி, 2 முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி, இசைப் பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி என பத்துக்கும் மேற்பட்ட புதிய நிகழ்ச்சிகள் இந்தாண்டு அட்டவணையில் இடம்பிடித்துள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சு & கல்வி அமைச்சு நடத்தும் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றும் உள்ளது. இவை பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். TED Talk என்ற பல்வேறு துறைகளிலிருந்து பல தலைப்புகளில் பேசப்பட்டு அது காணொளி மூலம் உலகமெங்கும் சென்றடைய நடத்தப்படும் நிகழ்வு போன்று தமிழில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழர் பேரவையின் ‘உரைக்களம்’ , என்டியு முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ‘இளவேனில்’. நிகழ்வை காணொளியாக்கி வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இதே போல் ‘டோஸ்மாஸ்ட்ர்ஸ் இண்டர்நேஷனல்’லின் தமிழ் பேச்சாளர் மன்ற போட்டிகள் என தமிழ் மேடை பேச்சை மேம்படுத்தும் நிகழ்வுகளும் உள்ளன. இது தவிர மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு கூடியுள்ளன. இலக்கிய விழாக்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கமாக தமிழ்மொழி விழா முடிந்த அடுத்த நாளான மே 1ஆம் தேதி நடைபெறும் பட்டுக்கோட்டையார் நிகழ்ச்சி இம்முறை தமிழ்மொழி விழாவுக்கு புதிய வரவு, மே 1ஆம் தேதியும் நடைபெறுமா என்று தெரியவில்லை. இணையத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ஆம் வரை தமிழ் கவிதைகள் எழுதும் நிகழ்வும் இளையரால் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சி அட்டவனையில் இந்த முறை நான் வழக்கமாக செல்லும் பல நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை.
திருக்குறள் விழாவும், என்டியு மாணவர்களின் ‘பார்வை 2018’ நிகழ்வும் ஒரே நாள், ஒரே நேரம்.
ஏப்ரல் 7ஆம் தேதி காலை 4 நிகழ்வு, அதில் என்யுஎஸ் மாணவர்களின் நிகழ்வும் ஒன்று. அன்று வேறு ஒரு முக்கிய நிகழ்வு இருப்பதால் எதற்கும் செல்ல முடியாது.
அன்றைய தினம் மாலை சொற்களம், முத்தமிழ் விழா இரண்டும் உள்ளன. எதை தேர்வு செய்ய எனத்தெரியவில்லை.
ஏப்ரல் 8ஆம் தேதி மாலை தமிழர் திருநாள், திரு எம் இராமசந்திரனின் பட்டிமன்றம். நண்பருக்காக நம் தேர்வு பட்டிமன்றம்தான்.
ஏப்ரல் 14ஆம் தேதி காலை ஒரே வளாகத்தில் இரண்டு நிகழ்ச்சி, அதனால தப்பிச்சோம். இரண்டையும் மாத்தி மாத்தி பார்க்கலாம் 🙂
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ச்சியில் அதிக நேர மோதல்கள் இல்லை என்பதால் எனக்கு தேர்ந்தெடுப்பது சுலபமே.
ஒரே மாதத்தில் அதுவும் வார இறுதியில் மட்டும் 58 நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது மிக கடினமே. என்னுடைய ஒரே வருத்தம் இந்த முறை என்டியு, என்யுஎஸ் நிகழ்வுகளுக்கு செல்ல முடியாமல் போனதே.
வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்மொழி விழா சூறாவளி சிங்கையின் மத்திய பகுதியில் குறிப்பாக உமறுப்புலவர் நிலையத்தில் மய்யம்(!) கொண்டுள்ளது. தமிழ்மொழி மாதத்தில் 21 முறை அங்கு பலத்த காற்றுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். அதை சுற்றி 3 மைல்களுக்குள்ள பகுதிகளான இந்திய மரபுடைமை நிலையத்தில் 8 முறையும், தேசிய நூலகத்தில் 6 முறையும், குட்டி இந்தியா வட்டாரத்தில் 4 முறையும் இடியுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். இரு முறை வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு கருணை மழை பொழிந்துவிட்டு பின்னர் கிழக்கிலும் ஒரு முறை பொழியும். ஆங்காங்கே தீவின் மற்ற பகுதியில் ஒரு சில முறை பெய்யும் தமிழ் மழை மற்ற ‘மேடான’ பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இருந்திடவிடாமல், மழை பெய்யும் மற்ற இடங்களுக்கு சென்று தமிழ் மழையில் நனையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். மாதக் கடைசியில் முடிந்துவிடும் இச்சூறாவளி நமக்கு அடுத்த ஓராண்டிற்கான தமிழ் தாகத்தை தீர்த்து வைக்குமா என்று பார்க்கலாம்:)
தமிழ்மொழி மாதத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் இந்த ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகள் தவிர்த்து வேறு தமிழ் நிகழ்வுகளை ‘தமிழ் மொழி விழா’ என்று தலைப்பிட்டு நடத்தி அங்கு செல்ல இருப்பவர்களை குழப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மற்ற தமிழ் நிகழ்வுகளை குறைத்து நாம் எல்லோரும் ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகளுக்கு சென்று ஆதரவு தெரிவிப்போம்.
வகைப்படுத்தப்பட்ட நிகழ்வு விவரம்
————————————————-
பல்கலைகழக மாணவர்கள்/ பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் நிகழ்ச்சி
1. பார்வை 2018(3)
2. களம் (11)
3. என்ன செய்யலாம் (30)
4. ஜிங்கிள் ஜிகிள் (33)
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பள்ளி நிகழ்ச்சிகள்
1. கிழக்குக் குழுமம் 5 நடத்தும் தமிழ்மொழி விழா 2018
2. இராஃபிள்ஸ் தமிழ் இலக்கியப் போட்டிகள்
3. 30ஆம் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு
4. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் – கற்றதும் பெற்றதும்
மாணவர்களுக்காக மட்டுமே நடத்தும் நிகழ்ச்சி/போட்டிகள்
1. பரமபதம் (1)
2. மாகோ – தேசிய தமிழ் கதைசொல்லும் போட்டி(6)
3. இயற்கையோடு பயணம்(7)
4. சித்திரம் பேசுதடி (9)
5. பாடல், ஆடல், விளையாடுதல் மூலம் தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை (10)
6. சொற்களம் 2018(12)
7. சொல், சொல்லாத சொல் (20)
8. வாங்க தமிழில் பேசலாம்(21)
9. வண்ணத்தமிழ் 2018(32)
10. உரைக்களம் (34)
தொழில்நுட்ப, தொழில்/நிதி, மொழி சார்ந்த கற்றல் நிகழ்ச்சிகள்
1. மின்னியல் தமிழ் – புத்தாக்க அணுகுமுறை (22)
2. தமிழ் மொழிபெயர்ப்பு முகாம் 2018 (43)
3. தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும்(44)
4. தமிழ் மின்னிலக்க கற்றல் பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 2)
இலக்கிய விழாக்கள்
1. திருக்குறள் விழா (4)
2. முத்தமிழ் விழா (13)
3. உலகம் உன்னுடையது (23)
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி 2018(26)
5. இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்(27)
6. இளம் பிறை (28)
7. பாவேந்தர் 128 – சுழலும் சொற்போர்(31)
8. உமறுப் புலவர் அரங்கம் (35)
9. தமிழர் அறிவியல் (36)
10. தமிழவேள் விழா(38)
11. பர்வீன் சுல்தானா வழங்கும் ‘வெற்றி கொடிக் கட்டு’(40)
12. கவிமணம் (41)
13. கவிதைத் திருவிழா (48)
தமிழ் நாடகங்கள்
1. ஆர்ட்டதோன் (நாடக போட்டி) (2)- $5
2. ஔவையார் (5) – $25 /$15(early bird)
3. சிங்கப்பூர் மாப்பிள்ளை (29)- $15
4. ஜிங் ஜக் நாடகம் (39)
5. பீடம்-(42) (இலவசம்)
6. தமிழும் கலையும் – இயல், இசை & நாடகம் 2018(46)
இசை/நாட்டியம்
1. மழலையும் பாரதியும் (8)
2. குறுந்தொகை -இசை நிகழ்ச்சி(18)
3. இசை வழி கல்வி (19)
4. தமிழும் இசையும் (24)
5. கண்ணதாசன் ஒரு சகாப்தம் (37)
6. மன்னும் மகளும் – கண்ணகி வாழ்வில் ஐந்தினை – நாட்டிய நாடகம் (45)
7. கவியும் நாட்டியமும் (49)
பொழுதுபோக்கு/மற்ற நிகழ்ச்சிகள்
1. பழங்களே மருந்து(14)
2. தமிழர் திருநாள் விழா (15)
3. பட்டிமன்றம் (16) – $10
4. தமிழும் சுவையும் (17)
5. இளவேனில் (25)
6. தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் (47)
7. பொறுப்பாளர் சுற்றுலா: சின்னங்களும் வரி வடிவங்களும் – கைவினையின் மொழி (மரபுடைமை நிகழ்ச்சிகள் 1)
8. நகைச்சுவை பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 3)
9. குறும்படம் திரையிடல் (மரபுடைமை நிகழ்ச்சிகள் 4)
முகநூலில் கவிதை எழுதும் நிகழ்வு
1. சிங்பொரிமோ – தமிழ்(50)
பங்கு பெறும் வெளியூர் பிரபலங்கள் (எனக்கு தெரிந்த வரை)
1. முனைவர் பர்வீன் சுல்தானா (இரு முறை)
2. திரு இறையன்பு ஐஏஎஸ்
3. இயக்குனர் விசு
4. திரு ஜி விஸ்வநாதன்
5. கவிஞர் சிற்பி
6. திரு பாரதி கிருஷ்ணகுமார்
7. திரு பாண்டித்துரை (இரு முறை)
8. பேராசிரியர் எம் இராமச்சந்திரன்
9. திரு கே சிவகுமார்
10. திரு மோகனசுந்தரம்
11. பாடகர் வீரமணி ராஜூ
12. திரு ஆளுர் ஷா நவாஸ்
பி.கு: தகவல்கள் சில முழுமை பெறாமல் இருக்கலாம்.