08-ஏப்ரல்-2017, சனிக்கிழமை. தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் “சொல்லிச் செல்லும் சொல்லடைகள்” #வாழும்_மொழி_வாழும்_மரபு #நன்றி_தமிழ்முரசு #தமிழ்மொழி_விழா_2017 #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

சொல்லிச் செல்லும் சொல்லடைகள் ———————————— “டே, என்னடா இந்த Ikea Tableல கூட fix பண்ண தெரியல உனக்கு”னு கேட்டா, “அப்பா, வாட் இஸ் இன் சட்டி வில் ஒன்லி கம் இன் அகப்பை”னு சொல்லிட்டு போனான் என் பையன். அவன் சொன்னதுல பல பொருள் உண்டு. அதுல ஒன்னு ‘நான் உன் பையன் தானே’, என்பது:( சரி, இங்கதான் அப்படினு பார்த்தா பக்கத்துல மனைவியும் மகளும்…. “அம்மா, ஆசிரியர், என்னை ஒரு கட்டுரை எழுதிட்டு வரச்சொன்னாங்க. நீங்க எனக்கு உதவி செய்றீங்களா” “சரி, ஆனா ‘மொட்டை தாத்தா குட்டை விழுந்தார்’னு மாதிரி இல்லாம விவரமா என்ன கட்டுரை, என்றைக்கு கொடுக்கனும், கொஞ்சம் தெளிவா சொல்லு” இப்படி எங்க வீட்ல அடிக்கடி இந்த மாதரி சொலவடைகள் புழக்கத்துல இருக்கும். பொதுவா எனக்கு தெரிஞ்சு இந்த மாதரி அதிகமான சொலவடைகள், வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்திலுள்ள நெல்லை வட்டாரத்தில் தான்னு நினைக்குறேன். அதனால எங்க வீட்லேயும் நிறைய அந்த மாதிரி உரையாடல கேக்கலாம். அந்த வட்டாரத்தில் வளர்ந்தவர்கள் பேசவதை புரிந்து கொள்ள ஒரு தனி அகராதியே போடலாம். மற்ற வட்டாரத்திலும் சொல்லடைகள் அதிகமாக புழங்கவதுண்டு. ஆனால் வட்டாரதிற்கேற்ப சொலவடைகளின் சொற்கள் சற்றே மாறுபடும், பொருளும் வேறுபடும். பேச்சுமொழியின் அடிக் கூறுகளே இந்த பழமொழி, முதுமொழி, ஒலிக்குறிப்புச் சொற்கள் என பலவாறு அழைக்கப்படும் சொலவடைகள் தான். அது ஒரு சமூகத்தின் வாழ்க்கை பட்டறிவின் சான்றுகள். அது ஒரு பண்பாட்டின், நாகரீகத்தின் கலைக்களஞ்சியம். அவை பார்க்க எளிதாக இருந்தாலும் வெளிப்படுத்தும் கருத்துகள் ஆழமானவை. பேச்சுவழக்கில் மட்டுமே இருந்துவந்த இந்த நாட்டுப்புற இலக்கியத்தை பின்னர் ‘பழமொழி நானூறு’ என்ற பதிவு செய்யப்பட்டது. திருக்குறள், திருமறை, என்று இலக்கியத்தின் பழமொழி எங்கும் பரவலாக காணப்படுகிறது. ஆனால், இந்த பேச்சு வழக்கில் உள்ள ஒரு சில பழமொழிகளுக்கு இந்த மேடைப்பேச்சாளர்கள் ஒரு கதை சொல்வாங்க பாருங்க, அத கேட்ட உடனே இது தான் சரினு நம்ம கைதட்டிட்டு வருவோம். அதற்கு எந்த வித சான்றும் இருக்காது. ஆனா அது சரின்னு தோணும். அதே பழமொழக்கு இன்னொரு மேடையில வேற ஒருத்தரு வேற கதை சொல்வாரு. எடுத்தகாட்டாக, ‘பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’ என்பதற்கு இன்னொரு பொருள் உள்ளதாக சொல்கிறார்கள். அது என்னென்னா, பந்தியில் உண்ணும் போது வலது கை முந்திச் செல்கிறது. போர் தொடுக்கும் போது, வில்லில் இருந்து அம்பு எய்தும் கை பிந்திச் செல்கிறது என்பதாகும். அதாவது ‘பந்திக்கு முந்தும் கை; படைக்கு பிந்தும் கை’ என்று இருக்க வேண்டிய பழமொழி, உருமாறி விட்டது என சொல்பவர்களும் உண்டு. இப்படி பல பழமொழிகளை சொல்லலாம். சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரியான பழமொழிகள் சிலவற்றை தொகுத்து அதை அழகு புத்தகமாக அச்சடித்து நமக்கு இலவசமாக தருகிறார்கள். யாரு, எங்கேனு கேக்குறீங்களா? மேல படிங்க… தேசிய மரபுடைமை வாரியம் மற்றும் கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் ‘வாழும் மொழி, வாழும் மரபு’ என்ற திட்டத்தின் வழி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மொழி விழாவையொட்டி ஒரு புத்தகம் அறிமுகம் கண்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்ந வகையில், வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் “தமிழ்மொழி விழா 2017″ன் தொடக்க விழாவில் வெளியீடுகண்ட, “சொல்லிச் செல்லும் சொல்லடைகள்” என்ற புத்தகம் தான் அது. அது குறித்து ஒரு சின்ன அறிமுகம். ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு சொல்லடையும்(சொலவடையும்) ஒரு பொருளைக் கூறாது பல பொருள்களை உணர்த்தும் தன்மையுடையதால் இந்த புத்தகத்தில் பொருளுரை சொல்லாமல் ஆசிரியர்க் குழு அவர்கள் பார்வையில் விளக்கவுரை கொடுத்திருக்கிறார்கள். இதில் மூன்று சிறப்பம்சம் உண்டு, ஒன்று அந்த சொல்லடைகளை இன்னொரு சொற்றொடர் மூலம் கூறியிருப்பது. எளிதாக புரியும் வகையில் உள்ளது. எடுத்துகாட்டாக, “மொழி தப்பினவன் வழி தப்பினவன்” என்பதற்கு “மூத்தோர் மொழிகள்!-நம் வாழ்வின் முகவரிகள்!” என்று இன்னொரு சொல்லடையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது, சொல்லடைகளின் விளக்கத்தை ஆங்கிலத்தில் கொடுத்திருப்பது. இங்கே பதிவு செய்ய விரும்புவது, தமிழ் சொல்லடைகளின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் கொடுக்கவில்லை மாறாக அதை அழகாக ஆங்கில மொழியில் அதன் அழகு குறையாமல் சொல்லியிருக்கிறார்கள். எடுத்தகாட்டாக, “அகப்பை குறைந்தால் கொழுப்பு குறையும்” என்பதை “If the spoon is smaller, the belly will be smaller too!” என்று சொல்லி ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு புரியும் வகையில் மேலும் சில விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். Shakespeare, Abraham Lincoln, Hellen Keller போன்றோர்களின் மேற்கோள்களை சுட்டியிருக்கிறார்கள். மூன்றாவது, அழகிய கோட்டோவியம். ஒவ்வொரு சொல்லைடைக்கும் அதை பார்த்தவுடன் புரியும்வண்ணம் அழகிய ஓவியத்தை தீட்டியுள்ளார்கள். அதை வரைந்தவருக்கு எனது பாராட்டுகள். ஆனால், ஒன்றிரண்டு சொல்லடைகள் வேறு விளக்கத்தை தருகின்றன. குறிப்பாக, “விரலுக்கு தகுந்த வீக்கம்”, என்பதை “விரல் வீங்கியிருக்கின்றது என்று மகிழ்ச்சி அடை!-விரலே இல்லாதவரை பார்த்து” என்று வேறு ஒரு விளக்கம் சொல்கிறது. புத்தகத்தில் ஒரு அரைப்பக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது நன்றாக இருந்தாலும் அதில் சமகால எடுத்துக்காட்டு ஒன்றை சொல்லியிருந்தால் மாணவர்களுக்கு இன்னும் சுலபமாக புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்குமோ என தோன்றுகிறது. தமிழ்மொழி மாதம் முழுதும் வரும் வகையில் 30 சொல்லடைகள் இருக்கும் என நினைத்து புத்தகத்தை திறந்தால் 23 தான் இருந்தன. இன்னும் 7 சேர்த்திருக்கலாமோ என தோன்றியது. இந்த புத்தகம் தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இலவசமாக கிடைக்கும். 40,000 பிரதி போடப்பட்டிருப்பதாக தகவல் உள்ளது. இதை அறிந்தவுடன் எனக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வந்தது. தமிழ்மொழி மாதம் தொடக்கம் முதல் தினமும் தமிழ் முரசில் இந்த சொல்லடைகள் முதல் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு செய்து வருகிறது. அதை படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக தினமும் என்னுடைய முகநூல் பக்கத்தில் அதை பதிவு செய்து வருகிறேன். #வாழும்_மொழி_வாழும்_மரபு என்ற hashtagல் தேடினால் கிடைக்கும். தமிழ் முரசில் மட்டுமல்ல ஒலி 96.8லும் தினமும் ஐந்து முறை(காலை மணி 6:20, 9:05, 11:55, மாலை 6:55, இரவு 10:55)இந்த சொல்லாடல்களை மையக்கருத்தகாக வைத்து நல்லதொரு குறுநாடகத்தை ஒலிபரப்பு செய்கிறார்கள். திரு Nara Snv யும் Karthik Ramasamyயும் இணைந்து நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்தாக்கத்தை மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரங்கேற்றிவருகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஒரு தடவை அல்லை ஐந்து முறை ஒலியில் வருவதால் தவறாமல் கேளுங்கள். இந்த மாதிரியான ஒரு படைப்புக்கு நிறைய உழைப்பு தேவை. அதுவும் பல வேலைப்பளுவின் நடுவே அதை செய்வது கடினமானது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமை திட்டத்தின் தலைவர் திரு Anbarasu Rajendran மற்றும் ஆசிரியர்க் குழுவிலுள்ள செல்வி Veera Vijayabharathy மற்றும் முனைவர் ராமன் விமலன் ஆகியோரையும் அவர்களுக்கு துணை நின்றோரையுமே சேரும். ‘சொல்லிச் செல்லும் சொல்லடைகள்’, சொற்கள் துள்ளிக்குதித்தோடும் நீரோடைகள். #வாழும்_மொழி_வாழும் #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம் #தமிழ்மொழி_விழா_2017 #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

07-ஏப்ரல்-2017, வெள்ளிக்கிழமை. தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் “சொல்லிச் செல்லும் சொல்லடைகள்” #வாழும்_மொழி_வாழும்_மரபு #நன்றி_தமிழ்முரசு #தமிழ்மொழி_விழா_2017 #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

பார்வை 2017 – ஓர் பார்வை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் “பார்வை 2017” கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை உட்லான்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்தாவது முறையாக “பார்வை” நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவானலும் அருமையான வரவு. தொடக்கம் ——————- நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு இராஜாராம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை தலைவர் திரு முத்தையா அருணாச்சலம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ‘யுத்தம்’ நிகழ்ச்சி தொடக்கம் போலேயே இங்கேயும் மற்ற பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டியது. பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடினார்கள் மாணவி கபிலாவும், பிரியன்னாவும். ஆனால் அதில் ‘சுடர்க தமிழ்நாடே’ என்பதற்கு பதிலாக ‘சுடர்க சிங்கை நாடே’ என்று மாற்றியிருந்தனர், சிறப்பு. சிறப்பு விருந்தினருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். வரவேற்புரை ——————— வரவேற்புரை வழங்கிய மாணவர் தலைவர் அருண் வாசுதேவ், தமிழ்மொழி விழாவில் தங்களை இணைத்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவத்தார். அனைவரையும் வரவேற்ற அவர், நிகழ்ச்சியின் மையக் கருத்தான பாஞ்சாலியின் சபதம் குறித்தும் பேசினார். சிறப்பு விருந்தினருக்கு மாலை பொன்னாடை அணிவித்தது குறித்து “சிலர் கேள்வி கேக்கலாம்..” என கூறி ஒரு விளக்கத்தையும் அளித்தார். அந்நிகழ்வு அரசியல் நிகழ்வு இல்லை என்றும் தங்களது மனபூர்வமான அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டது என்றும் கூறினார். பொன்னாடைகள் – ஓர் விளக்கம் —————————————————— இங்கே ஒரு செய்தியை நான் பதிவ செய்ய விரும்புகிறேன். விழாக்களில் நடக்கும் மாலை, பொன்னாடை வைபங்களை குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டவன், அதை தொடர்ந்து சொல்லியும் வருகிறேன். அவர் விளக்கம் கொடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் நான் ஒட்டு மொத்தமாக அதை எதிர்க்கவில்லை. பொன்னாடை அளிப்பதையோ, பெறுவதையோ கொச்சைப் படுத்துவதோ, குற்றம் சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால் அதே வேளையில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைக்கிறேன். சிறப்பு விருந்தினர்கள், விருதாளர், வேற்று இனத்தை சேர்ந்தவர்கள் இப்படி குறிப்பட்ட சிலருக்கு அணிவிப்பதில் நான் உடன்படுகிறேன். நம் பண்பாட்டை, பழக்கத்தை கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால் இரண்டு விஷயத்துக்காக நான் அதை ஆதரிப்பதில்லை. 1. புரவலர்களுக்கு அணிவிப்பதை. அவர்களிடமே காசு வாங்கி அவர்களுக்கே திருப்பி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் படத்தை கணொளியில் காண்பிக்கலாம். அவர்களை மேடைக்கு அழைத்து வேறு ஏதாவது கொடுக்கலாம். 2.குறிப்பிட்ட சிலருக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு ஆண்டும் பொன்னாடை கொடுத்தால் ஒரு கட்டத்தில் அவரிடம் எத்தனை பொன்னாடைகள் இருக்கும்? அவர்கள் பாவம் இல்லையா? எங்க வீட்ல என்னோட பான்ட், சட்டையை வைக்கவே ஒரே ஒரு அலமாரியில ஒரு ஓரத்தில அதுவும் 33% சதவிகிதம் தான் இட ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க:) இந்த பொன்னாடைகளை இவர்களில் சிலர் விரும்பவதில்லை என்பது தான் உண்மை. யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப்போவதில்லை. வேறு வழியில்லாமல் வாங்கி கொள்கிறார்கள். இது என்னோட தனிப்பட்ட கருத்து. இது தான் சரி என்று நான் சொல்லவில்லை. இது ஒரு சின்ன விஷயம் தான், ஆனால் இதில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், முடிந்தவரை தவிர்க்கலாம், அவ்வளவு தான். இதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க:) சரி, நிகழ்ச்சிக்குள்ள போவோம். வாழ்த்துரை —————— அடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு இராஜாராம் பேசுகையில் தமிழ்மொழி விழாவின் முக்கிய நோக்கம் மாணவர்களை சென்றடைவது என்றும் அந்த வகையில் முதன் முறையாக ‘பார்வை’ நிகழ்ச்சியை தமிழ்மொழி விழாவில் இணைத்துக் கொள்வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். மேலும், நன்யாங் மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிய நிகழ்ச்சியுடன் வந்தாலும் உடனே ஏத்துக்கொள்வோம் அதற்கு காரணம் அவர்கள் நல்ல நிகழ்ச்சியே படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, மாணவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார். இதன் மூலம் நாளை தமிழை முன்னெடுத்துச் செல்ல, நிகழ்ச்சி படைக்க, அமைப்புகளுக்கு ஏற்ற நல்ல தலைவர்களை உருவாக்க முடியும் என்றும் சொன்னார். பாஞ்சாலி சபதம் ஏற்பது —————————————- அடுத்து மேடையில் ‘பாஞ்சாலி’ தோன்றினார். துகிலுரியும் காட்சி அரங்கேற்றப்பட்டது. உணர்ச்சி பொங்க பாஞ்சாலி சபதம் ஏற்றார். பாஞ்சாலியாக நடித்த ஐஸ்வர்யாலஷ்மி நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தினார். காணொளிப் போட்டி ———————————– அடுத்தாக, காணொளிப் போட்டி நடைப்பெற்றது. எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன்,சிங்கப்பூர் விகே ஆர்ட்ஸின் விக்னேஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். மூன்று மாணவர் குழுக்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன் ஐயா எழுதிய நாடக ஆக்கமான ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அந்த காணொளியை தயாரித்திருந்தனர். அந்த காணொளிகள் திரையிடப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது படைப்பை வித்தியாசாமாக படைத்திருந்தனர். முதல் பரிசை ‘பத்தினி தீ பாஞ்சாலி’ காணொளியை படைத்த தெம்பனீஸ் தொடக்கக் கல்லூரியும், இரண்டாம் பரிசை ‘தர்மத் தலைவன்’ என்ற காணொளியை தயாரித்த தெமாசக் தொடக்கக் கல்லூரியும், மூன்றாம் பரிசை ‘சகுனியின சூழ்ச்சி’ என்ற காணொளி படைத்த நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியும் வென்றது. பார்வையாளர்கள் அங்கம் ——————————————– அடுத்து வந்த அங்கம், ஓர் விறுவிறுப்பான அங்கம். ஆம், பார்வையாளர்கள் பங்குப்பெற்ற விளையாட்டு அங்கம். அதை ‘Kahoot’ என்ற இணைய/செயலி மூலம் விளையாட வேண்டும். இதில் மகாபாரதம் தொடர்பான 12 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட நான்கு பதிலில் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். விரைவாக சரியாக விடையளித்தவர்களுக்கு அதுவே புள்ளிகள் கொடுத்துவிடும். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். முதலில் இருந்தே முன்னிலையில் இருந்து கடைசியில் முதலிடத்தை பிடித்தவர் நம்ம எழுத்தாளர் கழக இராம வைரவன்:) சிறப்பாக கேள்விகளை தொகுத்து அதை அழகாக விளையாட வைத்து பார்வையாளர்களை பரவசபடுத்தினார்கள். இதில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் இருந்தது சிறப்பு. சகுனியின் சூழ்ச்சி, தர்மரின் வீழ்ச்சி ———————————————————— அடுத்து சகுனி அரங்கத்தினுள் நுழைய ஒரே ஆரவாரம். சகுனி சூழ்ச்சி செய்த காரணத்தை விளக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது. பின்னர் தர்மர் வந்தார். மீண்டும் ஆரவாரம். அவர் சூதாட்டத்தில் தோற்றதை நினைத்து வருந்தும் நிலையை காட்சி படுத்தியிருந்தார்கள். சகுனியாக நடித்த ரூபணேஷ்வரன் வசன உச்சரிப்பிலும், நடை, உடை, பாவனை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார். அருண் ராமசாமி தர்மராக சிறப்பாக நடித்தார். ஒப்பனைகளும் அருமையாக இருந்தது. அவ்வளவு தானா என்று கேட்குறீர்களா, இல்லை. இனிமே தான் முக்கிய அங்கம் வருகிறது. அது தான் ‘துரித’ பட்டிமன்றம். ஆமாம் ஒரு மணி நேரம் தான் இந்த பட்டிமன்றத்துக்கு. பட்டிமன்றம் ——————— பட்டிமன்ற தலைப்பு, “வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!, சூழ்ச்சியே!”. ‘தர்மமே’ என்ற அணியில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் அருள் ஓஸ்வின், ஹஃபிஸா மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி ஐஸ்வர்யா தேவி பேசினார்கள். ‘சூழ்ச்சியே’ என்ற அணியில் முனைவர் ஜி இராஜகோபாலன், கவிஞர் மு சேவகன், திருமதி கிருத்திகா பேசினார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா. முதலில் பேசவந்த ஹஃபிஸா, ‘தர்மம் தலை காக்கும்’ என்ற எம்ஜிஆர் படத்தை குறிப்பிட்டு அதனால் வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி தர்மமே என்று தன் வாத்தத்தை முன் வைத்தார். அடுத்த வந்த மன்னையார், முள்ளை முள்ளால் எடுப்பது போல இளையர்கள் சூட்சமமான சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்ததால் தான் வெற்றி பெறலாம் என்ற தன் வாதத்தை முன் வைத்தார். அடுத்த தர்மமே என்று பேச வந்த ஐஸ்வர்யா இந்த நிலையற்ற மனித வாழ்க்கையில் நாமும் தர்மம் செய்து நம்மை சுற்றியுள்ளவர்களும் தர்மம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார். சூழ்ச்சியே என்று பேச வந்த கிருத்திகா மகாபாரதத்தில் தர்மம் வெல்லவே சூழ்ச்சி தான் காரணமாக அமைந்தது என்று வாதிட்டார். சூழ்ச்சி செய்து நாட்டை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்தது காந்தியின் தர்மமே என்று வாதிட்டார் அருள் ஓஸ்வின். ஆனால் அந்த காந்தியையே கடைசியில் சூழ்ச்சியால் சுட்டுக்கொன்றனர் என்று சொல்லி வாழ்க்கையில் வெற்றிபெற சிறந்த வழி சூழ்ச்சியே என்று முடித்தார் திரு சேவகன். இறுதியில் நடுவர், சூழ்ச்சியில் நிலையான வெற்றி பெற்ற முடியாது என்றும் வாழ்கையில் வெற்றிபெற தர்மமே சிறந்த வழி என்றும் தீர்ப்பளித்தார். இந்த பட்டிமன்றம் குறைந்த நேரமே நடந்ததால் நிறைய கருத்துகள் வைக்கப்படவில்லை. நடுவரும் பேச்சாளர்களும் நேரம் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டினர். ஆனால் இதே நேரத்தில் நானும் மன்னையாரும் சேர்ந்து பொங்கோலில் நண்பர் நிஜாம் ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பேசினோம். ஆனால் இந்நிகழ்ச்சியில் நிறைய அங்கங்கள் இருந்ததால் பட்டிமன்றம் தனித்து தெரியவில்லை. ஆனால் அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக பேசினர். மாணவர்கள் எதிரணியில் இருந்த பெரியவர்களுக்கு இணையாக தங்கு தடையின்றி பொரிந்து தள்ளினர். பாஞ்சாலி சபதம் முடிப்பது ——————————————— நிகழ்ந்சியின் முடிவில் பாஞ்சாலி மீண்டும் அரங்கத்தினுள் வந்த தன் சபதத்தை முடித்து செங்குழுலை முடித்து செல்வதாக காட்சி அமைக்கப்பட்டது. இந்த அங்கத்தில், முதலில் பாஞ்சாலி சபதம் ஏற்பது எதற்காக, பின் சகுனியின் சூழ்ச்சி என்ன, தர்மர் தோற்றது எப்படி, எதை இழந்தார், பின் பாஞ்சாலி சபத்ததை முடித்தது என ஒரு சின்ன தனி நடிப்பு அங்கத்தின் மூலம் பாஞ்சாலி சபதத்தை சுருக்கமாக அழகாக சொல்லியது அனைவரையும் கவர்ந்தது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருத்தாக்கம். நன்றியுரை ——————- போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. அரங்கம் நிறைந்த கூட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களே இருந்தனர். ‘பார்வை 2017’ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வனிதா மணியரசு நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். முற்றிலும் மாணவர்களே திட்டம் போட்டு திறம்பட நடத்திய நிகழ்ச்சி இது. சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்று நடத்திய தலைவருக்கும் அவருடைய குழுவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். ‘பார்வை’ பிறந்தநாள் கொண்டாட்டம் ————————————————————– ‘பார்வை’க்கு இது ஐந்தாவது ஆண்டு என்பதால், ஐந்தாவது பிறந்தநாளை ஐந்து பதிப்பாசிரியர்களும்/நிர்வாகிகளும் மேடைக்கு வந்து கொண்டாடினார்கள். ‘கேக்’ வெட்டி அல்ல, கேசரி வெட்டி:). அதுவும் ‘மெழுகுவர்த்தி’ ஊதி அனைத்து அல்ல, மெழுகுவர்த்தியை வைத்து அகல் விளக்கை ஏற்றி கொண்டாடினார்கள். ஏன் தெரியுமா? நம் பண்பாட்டு படி கொண்டாட்டங்களின் போது எதுக்கு அமங்கலமா விளக்க ஊதி அணைக்கனும் என்று விளக்கை ஏற்றி வைத்தனர் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியை மாணவர்கள் ஜெரமாய, கலைவாணி இருவரும் சிறப்பாக தொகுத்து வழங்கினர். மிகவும் இயல்பாக, தங்களுக்குள் ஒரு உரையாடலுடன், நகைச்சுவையோடு அருமையாக செய்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மொத்ததில் நன்யாங் மாணவர்கள் ‘செங்குழல் சீவிய பத்தினி தீ’ என்னும் கவித்துவமான தலைப்பில் அழகிய கதம்பக் காவியம் படைத்தனர். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/ShanmugamTam/posts/1505692626109575