ஏப்ரல் 9ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாதவி இலக்கிய
மன்றத்தின் 57வது ஆண்டு விழாவும் 37வது தமிழர் திருநாள் விழாவும் இருபெரும் விழாவாக
ஒன்றாக நடைப்பெற்றது. "வாழ்க தமிழ்மொழி" என்ற தமிழ் வாழ்த்து பாடப்பட்டது.
பாரதியாரின் இப்பாடலை டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் பாடினார்.
அடுத்தாக குழந்தைகளின் நாட்டியம், கும்மியாட்டம், பாடல்கள், பல்லினத்தை பிரதிபலிக்கும்
நடனம் என களைகட்டியது.
மலாய் குழுவினரின் நடனம் மிக நளினம், பாடலும் அருமை.
புரவலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. யாரும் மேடைக்கு
அழைக்கப்படவில்லை, பொன்னாடைகள் இல்லை. குரல் வழி இரு முறை, தொடக்கத்திலும்,
நிகழ்ச்சியின் மத்தியிலும் 'ஆடியோ' ஒலிக்கச் செய்து நன்றி தெரிவித்தது பாராட்டுக்குரியது.
மணிமாறன் குழுவினரின் நடனம் வழக்கம் போல் நேர்த்தியாக இருந்தது.
மேடையில் இருபது இசைக் கலைஞர்களுக்கு மேல் அமர்ந்து 'குறையொன்றுமில்லை',
'சங்கமம்' இரண்டு பாடல்களையும் இசை கருவிகள் மூலம் இசைத்தனர். மிக சிறப்பாக
இருந்தது. ஒலிவாங்கி(microphone) இருந்திருந்தால் 'effect' இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
(இக்குழு யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் இசைக்குழு என்று நினைக்கிறேன்)
குறிப்பிட்ட நேரத்தில் கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய
அவசரமோ என்னமோ தெரியவில்லை மேடையை விட்டு இசைக்குழுவினர்
விடைபெறுவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்த அறிவிப்பை செய்தார்.
அடுத்த குழுவும் மேடைக்கு வந்துவிட்டார்கள். அது நாம் கலைஞர்களுக்கு கொடுக்கும்
மரியாதை அல்ல, தவிர்த்திருக்கலாம்.
நிதானமாக, மிகவும் தெளிவான உச்சரிப்போடு அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
திருமதி அபிராமி அன்று கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார்.
டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் தன்னுடைய 'சிங்கப்பூரில் தமிழ்' என்ற ஒலிவட்டிலிருந்து
'தமிழ் எங்கள்…' என்ற பாடலை நன்றாக பாடினார்.
டாக்டர் பாக்யமூர்த்தி தன் மாணவிகளுடன் சேர்ந்து இரு பாடல்களை சிறப்பாக பாடினார்.
பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், "உங்களுக்குத் தெரியுமா" என்று தமிழின் பெருமையை
அழகாக எந்தவித குறிப்புமின்றி ஒவ்வொருவராக எடுத்துச்சொல்ல அதை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து சொன்னார் ஒரு மாணவி. ஆனால், அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள்
'WhatsApp Forward'களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டவைகள் போல தெரிந்தது.
அதற்கு சான்றுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. குழந்தைகள் நன்றாக பேசினர்
அவர்களுக்கு தயாரித்து கொடுத்தவர்கள் சரியான தகவல்களை கொடுத்தார்களா என்று
தெரியவில்லை. அமைச்சரின் முன்னால் நம் பெருமையை பேசும்போது கவனம் தேவை.
திருமதி சுந்தரி சாத்தப்பன் இரு குழந்தைகளுடன் சேர்ந்து இரண்டு பாடல்கள் பாடினார்.
'அமுதே தமிழே…' பாடல் அற்புதம். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரின் சில பாடல்களை நான்
கேட்டுள்ளேன். அமைதியானவர், ஆர்பாட்டம் இல்லாதவர். இவர் மேலும் உச்சம் தொட
வாழ்த்துகள்.
திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு அனு மோகன் சிறப்புரையாற்ற
அழைக்கப்பட்டார். அவர் பேச தொடங்கிய சில நிமிடங்களில் வெளியிலிருந்து மேளதாள
சத்தம் உள்ளே கேட்க, அவர் கொஞ்சம் யோசித்தார். ஆனால் நமக்கு தெரியும், வெளியே
சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறாரென்று. சில வினாடிகளில், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு அனு
மோகனிடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி அனைவரையும் எழுந்துநின்று சிறப்பு
விருந்தினரை வரவேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். என்ன நடக்கிறது என்று சற்றும்
பிடிபடாமல் அனு மோகன் மேடையில் ஒலி வாங்கி பக்கம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு டெஸ்மண்ட் லீ, மூத்த துணை
அமைச்சர், உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, அவைத் துணைத் தலைவர்,
அவர்களை அரங்கத்தின் நுழைவாயிலேயே சிறப்பு செய்து சீன, மலாய், தமிழ் என்று மூன்று
வித மேளதாளத்துடன் உள்ளே அழைத்துவந்தனர்.
அரங்கத்தின் இடதுபுறத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே வந்த நேராக வலதுபுறம் சென்று,
அந்த வழியாக மேடையில் ஏற வைத்து, நடுவில் வந்த அனைவருக்கும் கை அசைத்து
வணக்கம் சொல்லி, இடதுபுறம் வழியாக கீழே இறங்க வைத்து மீண்டும் வலதுபுறம் சென்று
அமரவைக்க, படையப்பாவில் சூப்பர் ஸ்டாரை வியந்து பார்ப்பதை போல அனு மோகன்
மேடையில் ஒலிவாங்கி பக்கம் நின்று கொண்டு இருந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் பேச்சை தொடரலாமா என்று அனுமதி பெற்று தொடர சிறுது நேரத்திலே 'ஐந்து
நிமிடத்தில் பேச்சை முடிக்கவும்' என ஒரு துண்டு சீட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.
அப்படியே, கடந்தாண்டு பார்த்த காட்சி திரும்ப 'Re-play' பண்ணது போல் கண்களில்
பளிச்சிட்டன. கடந்தாண்டு பாதிக்கப்பட்டவர், திரு கரு பழனியப்பன். என்ன, அப்ப
தொடர்ந்து பேசியதால் நாமும் பாதிக்கப்பட்டோம். இங்கே அனு மோகன் உடனே பேச்சை
முடித்து விட்டார், தப்பித்தோம்.
சிறப்பு விருந்தினர், அதுவும் ஒரு அமைச்சரை வரவேற்க செய்த ஏற்பாடு அருமை, அதில்
மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அமைச்சரை மேடையில் வலம் வர வைத்ததை
தவித்திருக்கலாம். மேடையில் ஒரு சிறப்பு பேச்சாளர் பேசும்பொழுது இந்த மாதிரியான
நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அவருடைய பேச்சை பிறகு வைத்திருக்கலாம் அல்லது
முன்னரே வைத்திருக்கலாம்.
மாதவி இலக்கிய மன்றத் தலைவர், டாக்டர் என்.ஆர். கோவிந்தன் தனது உரையில்
அமைச்சருக்கும் தனக்கும் உள்ள அறிமுகத்தை எடுத்துச் சொன்னார். மேலும், தமிழவேள் கோ
சாராங்கபாணி தொடங்கி வைத்த தமிழர் திருநாள் விழாவை தொடர்ந்து பல ஆண்டுகளாக
தான் நடத்தி வருவதை குறிப்பிட்டு எதிர்காலத்தில் இதை நடத்த மாதவி இலக்கிய மன்ற
இளையர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
73 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாதவி இலக்கிய மன்ற தலைவருக்கு எல்லோருக்கும்
வாய்ப்பு கொடுக்க வேண்டும், நிறைய மாணவர்களை மேடையேற்ற வேண்டும் என நல்ல
உள்ளம் கொண்டவர். சிறியதாய் ஏதும் முயற்சி எடுத்தாலும் அவர்களை முதலில் பாராட்டும்
பெரிய மனதுக்கு சொந்தக்காரர்.
இவருடைய நிகழ்ச்சிக்கு எல்லா அமைப்பு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து
விடுவார்கள்.
அமைச்சர் தன்னுடைய உரையில், பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் பிரச்சனைகளே
பெரிதாக இருக்கும் ஆனால் சிங்கையின் பலமே பல்லின சமுதாயம்தான் என்று குறிப்பிட்டார்.
தனது ஒரு பகுதியின் உரையை தமிழில் எழுதிவைத்து பேசினார். அந்த முயற்சி
பாராட்டுக்குரியது.
திரு பாண்டி துரைக்கு இந்தாண்டுக்கான களம் மாதவி இலக்கிய மன்றம். ஆனால்
கொடுக்கப்பட்ட நேரமோ 45 நிமிடம் தான். அதிலும் பலர் அரங்கத்தை விட்டு
சென்றிருந்ததால் அவர் கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனால் பிறகு சிறிது நேரத்தில்
அப்பப்ப சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர். திரு
பாண்டி துரைக்கு இடையிடையே அரங்கத்தில் நடந்து கொண்டிருந்திருப்பது பிடிக்காது. ஒரு
இலக்கிய பேச்சுக்கு அந்த இடையூறுகள் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இதற்கிடையே ஒரு
சில நகைச்சுவைகள், கம்பன், கண்ணதாசன் என்று முடிந்தவரை இருக்கிறவர்களை தன்
வசப்படுத்த முயற்சி செய்தார்.
கீழே உள்ள மூன்று விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.
1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
சிலப்பதிகாரத்தை, மூவேந்தர்கள் குறித்தும் பேசும், முத்தமிழையும் கொண்டிருக்கும் மக்கள்
காவியம் என்றார். மாதவியின் பெருமைகளை கூறும் போது தன் குலத்தொழிலை தானும்
செய்யாமல் மணிமேகலையும் செய்ய விடாமல் புரட்சி செய்தார் என்றும் மணிமேகலையை
கண்ணகியின் மகள் என்று சொல்லும் பெருந்தன்மையோடு இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், மாதவியின் அன்னை தான் கோவலனின் கனையாழி காண்பித்து சொத்தை
அபகரித்தார் பின்னர் அதை மாதவி திரும்ப கொடுத்தார் என பல செய்திகளை சுவாரஸ்யமாக
சொன்னார்.
இறுதியில் சிலப்பதிகாரம் என்னும் சிறப்பான காவியத்தை பேச 45 நிமிடம் போதாது
என்பதை தெரியப்படுத்தினார், திரு பாண்டி துரையின் சங்கடங்களை புரிந்து கொண்டு
மீண்டும் அடுத்த ஆண்டு அவரையே சிறப்பு பேச்சாளராக அழைக்க முடிவெடுத்திருப்பதாக
மேடையில் அறிவிக்கப்பட்டது.
திரு அனுமோகன் அவர்களுக்கும், திரு பாண்டித்துரை அவர்களுக்கும் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.
பின்னர், மாணவர்களை நினைவு பரிசு பெற்றுக்கொள்ள வரச் சொன்னார்கள். ஆனால்,
மாணவர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை. அப்போது அரங்கத்தை விட்டு எல்லாரும்
கிளம்பிச்செல்ல ஆரம்பித்து விட்டனர். நான் மட்டும் பின்னால் உட்கார்ந்து கைதட்டி
கொண்டிருந்தேன். அதுவும் வேண்டாமென பார்வையாளர்கள் பக்கம் உள்ள விளக்கை
அணைத்து விட்டார்கள். இதற்கிடையே திடீரென்று பெங்களூரில் கேபிள் நெட்வர்க்
நிறுவனம் நடத்தும் திரு மூர்த்தி என்பவரை அழைத்து அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்'
விருது கொடுத்தது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்….
என் உரையை முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்
முகநூல் மக்களே. முன்னர் சுத்திக்கொண்டே இருக்கும் 4G நெட்வொர்க் இப்போதெல்லாம்
உமறுப்புலவர் அரங்கத்தில் சிறப்பாக வேலை செய்கிறது என்பதை சொல்லிக்கொண்டு…..
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்