கருத்து கருத்து கருத்து…..படம் முழுக்க ஒன்லி கருத்து.
சிவகார்த்திகேயனின் சிறந்த நடிப்பு, மக்களை ஈர்க்கும் நல்ல கதைக் கரு, மனதில் பதியும் நறுக்கென்ற வசனம், நயன்தாரா என்ற மந்திரச் சொல்(!) இருந்தும் படம் சோபிக்கவில்லை.
படத்தை பாதிக்கு மேல் ‘லாஜிக்’ தின்றுவிடுகிறது. ஒரு தொழிலாளி CEO ஆவது, குரு நண்பனாவது, 12 மணிக்கு ஊரே விளக்கு போடுவது, எல்லோரும் சிவகார்த்திகேயனின் வானொலி பேச்சை மட்டும் எப்போதும் கேட்டுகொண்டிருப்பது, முதலாளி தொழிலாளியாய் கடைசி வரை யாருக்கும் தெரியாமல் நடிப்பது, பல நிறுவன தொழிலாளர்கள் ஒன்றாக இணைவது, ஒரு நிறுவனத்தின் பொருளை சாப்பிடும் பலரில் ஒரு குழந்தை மட்டும் இறப்பது…..இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.
நல்ல வேளை நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காதல் மலர்வதை விலாவாரியாக காண்பிக்காமல் போனார்கள். நயன் காதல் காட்சிகளில் முடிந்தவரை சிவாவை தொடாமல் நடித்திருக்கிறார். ரோபோ சங்கருக்கு ஏதும் கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை, ஆள் திடீரென காணாமல் போய்விடுகிறார். பிரகாஷ்ராஜ் ‘டம்மி வில்லன்’னாக வருகிறார். நம்ம புன்னகை இளவரசி ஸ்னேகா சோகத்தை புழிந்து கொடுக்கிறார்.
சம்பந்தமில்லாமல் ஒரு டூயட் பாடல், போடணுமே என்று போட்டிருக்கிறார்கள். பாடலில் கீழே உள்ள ஆங்கில ‘சப் டைட்டில்’ பார்த்து பல வரிகளை புரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. ஒரு பாடலும் நம்மை ஈர்க்கவில்லை. எடிட்டிங்கும் சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை. இயக்கம் சுணக்கம்.
சிவகார்த்திகேயன், தன் நண்பனின் இறுதி ஊர்வலத்தில் ஆடும் நடனத்திற்கு நிறைய உழைத்திருக்கிறார். தன் வீட்டிற்கு ‘stabilizer’ விற்க வரும் விற்பனையாளரிடம் பேசும் வசனங்கள், யதார்த்தை விளக்கியது. அந்த சித்தாந்தம் நிர்வாக மேலாண்மை படிப்பில் வரும் பாடத்திலிருந்து எடுத்து எல்லாரும் புரியும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது. மருத்துவர் கு சிவராமன் ஒரு காட்சியில் வந்து கருத்து சொல்கிறார். இப்போது கதை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். படம் முதலிருந்து கடைசிவரை ஒரே மாதிரி ‘சீரியஸாக’வே இருப்பது திரைக்கதை ஓட்டத்தின் பெருங்குறை.
சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் சிறந்த நடிகர். இப்போதிருக்கும் இளம் கதைநாயகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். தன் உழைப்பால், திறமையால் நம் கண்முன்னே முன்னேறியவர். நல்ல கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு, ஆனால் அதை மக்களுக்கு, அவர்களுக்கு பிடித்த வகையில் கொண்டு சேர்ப்பது மிக அவசியம். அதை அறிந்து கொண்டால் வெற்றிபெறலாம். ஆனால் இந்த முறை வேலைக்காரன், ‘அப்ரென்டிஸ்’ஸாகவே (apprentice) இருக்கிறார்.