தூரம்

தூரம்
______

அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
செய்தி கேட்டு கிளம்பியவரை
கட்டிப்பிடித்த மகளிடம்
சாமி பார்க்க போவதாகச்
சொன்னார் அப்பா.

கோயில் பூக்கடையின் அந்த
ரோசாப் பூமாலை
துக்கவீட்டு திருவாளருக்கு
சாத்தப்படுவது பாதி
மொய்த்த வண்டுகளுக்கு தெரியாது.

அசையாத சிலைக்கு
அபிஷேகமும் அலங்காரமும்
சுற்றம் சூழ
கனத்த மௌனத்துடன்
நடந்தேறியது.

மாலையிட்டு
கட்டிய பாதம் தொட்டு
கையெடுத்து கும்பிட்டு
அழுகையுடன் பார்த்தார்
புன்னகைத்தது.

தார தப்பட்டை முழங்க
பூப்பல்லக்கில் அசைந்தாடி
மலர்களின் பாதையில்
கடைசி பயணம்
முடிந்தது.

வீட்டிற்கு திரும்பியவரை
கட்டிப்பிடிக்க வந்த மகளிடம்
குளிக்க வேண்டும்
தொடாதே ‘தூரம்’ போ என்றதும்
மகளுக்கு சந்தேகம்
சாமி பார்த்தால் தீட்டாகுமா?

பி.கு: தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்காக முதன் முதலாக நான் எழுதிய இந்த கவிதைக்கு திரு எம்ஜி சுரேஷிடமிருந்து டிசம்பர் 11ம் தேதி புத்தகப் பரிசு பெற்ற போது எடுத்த படம். இந்த கவிதையை எழுத ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்திய பாலுவுக்கு நன்றி.

அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து வடிவான மன்னவனை வாவென் றழைத்து பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த அடியோ(டு) அவள்மறந்தா ளே! *புடிகை = ஏலம் #தீபாவளி_சிறப்பு_கவிதை

விஐபி ஜோடி

ஐஃபோன் அலார்ம் அடித்து எழுந்தாலும்
தினமும் இந்த கொண்டைச் சேவல் கூவும் ஓசை கேக்கும் பொழுது தான் ஒரு உற்சாகம் பிறக்கும். இன்று காலை அதன் ஜோடியுடன் படம் பிடிக்க முயன்ற போது வெட்கப்பட்டு ஓடி ஒளிய எத்தனித்து இந்த விஐபி ஜோடி.