#ஐரோப்பிய_அட்டகாசங்கள் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு ———————— என்னடா இவ்வளவு நாளா ஷேக்ஸ்பியரின் வீட்டிற்குள்ள கூட்டிட்டு போகலையேனு கேக்குறீங்களா? புரியுது. அது ஒன்னுமில்லைங்க ஆடி மாசம் முத முதல்லா ஒரு வீட்டிற்கு போகக்கூடாதுனு சொல்வாங்க அதான்:) இப்ப ஆவணி வந்தாச்சு, உங்க வலது கால எடுத்து வச்சு வாங்க, உள்ளே போவோம். முதல்ல ஒரு பெரிய அழகிய தோட்டம். வாசலுக்கு போனவுடனே அந்த தோட்டத்து ரோஜாக்கள் நல்ல மணம் வீசுகின்றன. அங்க பக்கத்தில ஒரு பெண்மணி “பெயர் என்னவாயிருந்தா என்ன, நாம் எந்த பெயரில் அழைத்தாலும், அந்த ரோஜா இனிமையான மணம் வீசும் தானே” என்று ஒரு வாலிபனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதோடு,”பிரிவென்பது இனிய துன்பம்” என்று சொல்ல, சுத்தி என்னை மாதிரி கொஞ்ச பேரு பார்த்துகிட்டு இருக்க பிறகு தான் புரிந்தது அவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்” நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களென்று. அங்கே சின்ன உயர்த்தப்பட்ட தளம், அதில அவங்க நின்னு நடிக்க, சுத்தி எல்லாரும் உட்கார்ந்து பார்க்க ஒரு குட்டி திறந்த வெளி நாடக அரங்கு அங்கே உள்ளது. அந்த ஜூலியட்டுடன் தான் நான் நின்று கொண்டிருந்தேன் முதன் முதலில் போட்ட படத்தில்(அப்பா ஒரு வழியா ஒரு படம் பத்திய உண்மைய சொல்லியாச்சு). அங்கு வேறு சில நடிகர்களும் அந்தக்கால உடையில், ஒப்பனைகளுடன் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்தனர். நீங்கள் உங்கள் விருப்ப நாடகத்திலுள்ள காட்சியை சொன்னால் அதை நடித்துக் காண்பிப்பார்கள். சரி அவங்கள ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம்னு(என்ன கேக்கறதுன்னு தெரியல, அத தான் இப்படி நாகரீகமா சொல்லறேன்) அங்குள்ள ரோஜா தோட்டத்தை வலம் வந்தோம். ஒவ்வொரு ரோஜாவும் அவ்வளவு பெருசா இருக்கு. அந்த ஊர்ல ரோஜோவெல்லாம் காட்டுச் செடி மாதிரி தான் அங்கங்க வளர்ந்திருக்கு அதை யாரும் தலையிலையும் வச்சிக்கிறதல்ல சாமிக்கும் போடறதில்லை, ஆனா பார்க்க அழகழகா இருக்கு. அதனால்நான் பல ஆங்கில கவிதைகளில் இடம் பிடித்திருக்கு போல. ‘A rose is a rose is a rose’னு சும்மாவா சொன்னாங்க. அப்படியே சுத்திட்டு வெளியேயிருந்து ரோஜாவையும் வீட்டையும் படம் பிடிச்சிட்டு வீட்டு வாசல நோக்கி வந்தா தாடியோட நம்மூர்காரர் ஒருத்தர் சிலையாக இருந்தார். யாருடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சா, நம்ம ரபீந்தரநாத் தாகூர்ங்க. அவ்வளவு பெரிய வீட்டின் தோட்டத்தில் ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் மார்பளவுச் சிலை மட்டும் உள்ளதே வேறு எந்த ஒரு படைப்பாளியின் சிலையாவது அங்கு இருக்கானு பார்த்தா, இல்லைங்க. நம்ம குமாரு வேறு பக்கத்தில் இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா இந்த கேள்வியைக் கேட்டிருப்பார். அந்த வேலையை இன்னைக்கு நான் செஞ்சேன். அங்கிருந்தவரிடம் “ஏங்க, உலகத்தில எவ்வளவோ படைப்பாளிகள் இருக்காங்க, ஆனா ஷேக்ஸ்பியரின் வீட்டில், ஒரு இந்தியக் கவிஞரின் சிலை மட்டும் உள்ளது, வேறு யாரோட சிலையும் இல்லையே, என்ன காரணம்”னு கேக்க, அதற்கு அங்கிருந்தவர், “அதற்கு காரணம், தாகூர் அவர்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். லண்டனில் படிக்கும் போது இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போனார்”னு கூறினார். அதுமட்டுமில்ல ஷேக்ஸ்பியர் இறந்து 300வது ஆண்டு(1916) அவரை பத்தி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் 400வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கொல்கத்தா கலைக் கழகம் அதை இந்த வீட்டில் ஒப்படைத்திருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து இங்கு அந்த கவிதையைப் பார்த்த பிரிட்டனுக்கான இந்திய ஹைகமிஷனர், மேற்கு வங்க அரசாங்கத்திடம் சொல்லி சிலை வைக்கும் எண்ணத்தை எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து பிறகு அப்போதைய முதல்வர் திரு ஜோதிபாசு அவர்களால் 1996ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தாகூர் அவர்களின் பிறந்தநாளன்று இங்கே பாட்டுக் கச்சேரியும் விருந்தும் நடக்குமாம். கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதிலும், மதிப்பிலும், அங்கீகரிப்பதிலும் மேற்குவங்க மக்களுக்கு இணை அவர்களே. உடனே ஏன் ஒரு திருவள்ளவர் சிலையோ, பாரதியார் சிலையோ அங்கு இல்லையென சிலருக்குத் தோன்றலாம். அது முக்கியமல்ல, அதை விட சிறப்பு நாம் பாரதியாருக்கோ திருவள்ளுவருக்கோ உலகம் போற்றும் நினைவு இல்லம்(தற்பொழுது இருப்பதை விட) அமைத்து, நன்கு பராமரித்து அதில் ஷேக்ஸ்பியரரின் உருவச்சிலையை வைக்கலாம். அது தான் நமக்கு பெருமை. சரி, ஷேக்ஸ்பியரின் வீட்டு அறைக்குள் வரும் வாரத்தில் செல்லலாம். அது வரை நான் ஏற்கனவே போட்ட மத்த இரண்டு படங்களை பத்தி யோசிங்க. எங்களுக்கு வேற வேலையில்லையானு கேக்கறது புரியது. சொல்றது என் கடமைல, அதான்:)
பயண கட்டுரைகள்
ரசம் விட்ட சாபம்
“ஐயோ ரசமா!!!இதெல்லாம் தமிழன் கண்டுபிடிச்ச சூப். இதை ஒரு குழம்பா கன்சிடர் கூட பண்ண முடியாது”னு சொன்னான் என் பையன். “அவளுக்கு ஈஸியா வேலை முடியுனுன்றதுக்காக இந்த ர(வி)சத்தை வச்சு நம்மள கொல்லுறாடா. ஒரு சாம்பார், மோர்கொழம்பு இப்படி எதையாவது வைக்க வேண்டியதுதானே”னு நானும் ஒத்தூதினேன். உடனே சீதா, “உங்களையெல்லாம் ஆஃபிஸுல, எங்கேயாவது சீனா, ஜப்பான், கொரியானு இந்த ரசம் கூட கிடைக்காத இடத்துக்கு ஒரு ஆறு மாசம் வேலைக்கு அனுப்பனும், அப்பத்தான் தெரியும் என் சாப்பாடோட அருமை”னு சாபம் விட்டாள்.
அந்த சாபம் இவ்வளவு சீக்கிரம் பலிக்கும்னு நினைக்கல. அதுவும் இந்தியாவுல பலிக்கும்னு சத்தியமா கனவிலகூட நினைச்சு பாக்கல. வெளிநாட்டுக்கு பல முறை போயிருந்தாலும் இந்த தடவை பத்து நாள் புனேல இருந்தப்ப ஒரு முழு ‘கோமள விலாஸ்’ சாப்போடோ இல்ல குறைந்தபட்சம் ஒரு ‘சீதா விலாஸ்’ சாப்பாடோ கிடைக்காம கொஞ்சம் நாக்கு வறண்டு தான் போச்சு. ஆஹா, சாபம் பலிச்சிடுச்சோனு பயந்த சமயத்தில தங்கியிருந்த ஹோட்டல்ல நம்ம செஃப் நண்பர், “நான் ரசம் வச்சு தரேனு” சொன்னவுடன் மனசுக்குள்ள ‘போடி உன் சாபம் எல்லாம் ஒன்னும்
பலிக்காதுனு’ சொல்லிக்கிட்டேன். ஞாயிறு மதியம் உணவு, அறைக்கே வந்தது. ஒரு பீங்கான் குவளையோட மூடிய திறந்தா ஒரு திரவம் பல்லிளச்சது. அதுவும் என்ன மாதிரியே கலர்ஃபுல்லா இருந்துச்சு. அப்படியே மனச தேத்திக்கிட்டு சாதத்தில ஊத்தி வாயில வச்சா அறுசுவையும் ஒன்னா கலந்து வச்ச மாதிரி ஒரு ரசாபாசமான ரசக் கார கொழம்பு.
சரி இந்த சாபத்த வேலை செய்யவிடக்கூடாதுன்னு எப்படியும் அந்த ரசத்தை சாப்பிட்டே ஆகனும்னு ஒரு தென்னிந்திய உணவகத்தை தேடுனேன்.
‘சவுத் இண்டீஸ்’, அடடே!! பேரே நல்லாயிருக்கேனு மேற்கிந்திய நண்பரோட உள்ள போய் உட்கார்ந்தேன்.
“என்ன இருக்கு?”
“எல்லாம் இருக்கு!”
“ரசம் இருக்கா?”
“அது தான் முதல்ல கொடுப்போம்”
அப்பாடா, சாபம் புஸ்ஸ்ஸ்
“யாரங்கே!! முதல்ல கொண்டுவா அந்த ரசத்தை”னு கேட்டேன்.
ஒரு தட்டுல ‘பாணி பூரி’ வந்துச்சு. என்னடா ரசம் கேட்டா இத கொண்டு வரானே பார்த்தா, கூடவே நாலு ‘டெஸ்ட் டியூப்’ல கலர்கலரா தண்ணி வந்துச்சு.
ஆஹா நாமதான் எலியானு நினச்சுகிட்டே,
“என்னப்பா எங்கள வச்சு எதுவும் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலையே”னு கன்பர்ம் பண்ணிட்டு,
தக்காளி ரசம், மிளகு ரசம், புதினா ரசம், பைனாப்பிள் ரசம்னு நாலு வகையான ரசத்தையும் பூரில ஒரு ஓட்டை போட்டு ரசத்தை ஊத்தி அப்படியே சாப்பிட்டோம். நமக்கு சோறு இல்லாம ரசம் உள்ள போகல. எதுத்தாப்புல கவலையில்லாம உட்கார்ந்திருந்த பிரம்மச்சாரி வாங்கி வாங்கி பல லிட்டர் ரசம் குடிச்சிருப்பான்.
நமக்குத்தான் வாய்க்கு எட்டினது நாக்குக்கு எட்டல.
ரசக் கனவோடு ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்தேன்.
சீதாகிட்ட “இத்தனை நாளா வெளியே சாப்பிட்டது வயித்துக்கு ஒத்துக்கல இன்னைக்கு ரசம் வச்சு கொடேன்னு” கேட்டேன். மீசையில் மண் ஒட்டல. ரசத்தை பாசத்தோட போட்டா. அப்பா சாபவிமோசனம் கிடைச்ச மகிழ்ச்சில ஒரு வெட்டு வெட்டிட்டு படுக்க போனப்ப புரிஞ்சுது, இது சாபம் அல்ல சூழ்ச்சினு.
கல்யாண ஆனதிலிருந்து பல ஆண்டா நம்ம நாக்க ஒரு குறிப்பிட்ட டேஸ்டுக்கு ட்யூன் பண்ணி வுட்றாங்க. அதற்கு பிறகு நளபாகம் கூட இவங்க சமையல் மாதிரி இல்லேனு சொல்ல வச்சுராங்கன்னு முனுமுனுத்தேன். பக்கத்தில பையன் “என்னப்பா சொன்ன” என்றேன். “அது ஒன்னுமிட்லேடா இந்த ரசம் இருக்கே …” என்று ஆரம்பித்தவுடனே அங்க வந்த சீதா ” உங்களையெல்லாம் சீனா, ஜப்பான் ….” மறுபடியுமா!!?!!
ஆகாகான் அரண்மனை
ஆகாகான் அரண்மனை, புனே!
புனேயில், ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடப்போகலாம்னு கல்யாணி நகர் நோக்கி போய்கிட்டுருந்தேன், சாலையிலிருந்து கொஞ்சம் உள்ளே ஒரு பெரிய நிலப்பரப்புல ஒரு பங்களா மாதிரி தெரிஞ்சது. ஓட்டுனரிடம் ‘இது யாரு வீடு? நல்ல பெரிசா இருக்கே’ என்று கேட்டேன். ‘இது வீடில்ல. ஆகாகான் அரண்மனை, சார்’ என்று சொன்னார். ஏதோ மைசூர் மகாராஜா அரண்மனை மாதிரி முகலாய மன்னரின் அரண்மனையா இருக்குமோ என்று நினைத்தேன். ஒரு ஆரவாரமும் இல்லாம இருக்கே ஒரு வேளை ஏதாவது சுதந்திர போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடமா இருக்குமோ என்று தோன்ற, ‘உள்ள போய்ப் பார்க்கலாமா’ என்று கேட்டேன். ‘ஓ பார்க்கலாமே’, என்பவரிடம் வண்டியத் திருப்பச் சொன்னேன்.
பச்சை பசேல் என்றிருந்த பரந்த புல்வெளி, மணம் வீசும் பூச்செடிகள், உயர்ந்த மரங்கள், நடுவே மூன்றடுக்கு மாளிகை, தெய்வீகம் நிறைந்த அமைதியான சூழல் மனதை பற்றியிழுத்தது.
வரவேற்பறையில், எங்கும் தனியாகக் கால் கடுக்க ஒரு குச்சியுடன் நிற்கும் காந்திஜி, இங்கே, தன் மனைவியின் தோளைபற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். என்னடா கான் அரண்மனையில், மகாத்மா மனைவியுடன் நிற்கிறாரே, ஒரு வேளை அந்தக்காலத்தில இது அவருக்குக் ‘கொடநாடா’ இருந்திருக்குமோ என்று தோன்றியது. எதற்கும் இருக்கட்டுமே என்று பக்கத்தில் நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.
அடுத்து ஒரு அறைக்குச் சென்றால், அங்கு ஶ்ரீமதி சரோஜினி நாயுடு இருந்த அறை என்றிருந்தது.
அடுத்த அறைக்குச் சென்றால், அங்கு மகாத்மாவின் மடியில் அவர் மனைவியார், நோய்வாய்ப்பட்டுப் படுத்திருப்பது போல் ஒரு படம் இருந்தது.
அப்ப இது என்ன இடம்……
‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றிய பிறகு காந்திஜி, அவர் மனைவியார் திருமதி கஸ்தூரிபா, அவருடைய உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாய், மீராபென், பியாரிலால் நய்யார், டாக்டர் சுசீலா நய்யார் மற்றும் ஶ்ரீமதி சரோஜினி நாயுடு அனைவரும் ஆகஸ்ட் 10, 1942ல் மும்பையிலிருந்து புனேவில் உள்ள இந்த ஆகாகான் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டனர்.
ஐந்தே நாட்களில், ஆகஸ்ட் 15, 1942ல் இந்த அரண்மனையில் தான், காந்திஜியின் உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாய் மாரடைப்பால் காலமானார். திடீரென்று தன் உதவியாளர் மறைந்ததைக் காந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த உடலை தானே குளிப்பாட்டி, சந்தனமிட்டு, ‘இதெல்லாம் நீ எனக்குச் செய்வாய் என்றிருந்தேனே, என்னை உனக்குச் செய்ய வைத்து விட்டாயே மகாதேவ்’ என்று கதறி அழுதார். அந்த உடலை அப்புறப்படுத்த வந்த ஆங்கிலேய அதிகாரிகளிடம் ‘எந்தத் தகப்பனும் தன் மகனின் உடலை வெளியாட்களிடம் ஒப்படைக்க மாட்டார். அவர் என் மகன் ஸ்தானத்தை விட மேலானவர், என்னை வெளிய சென்று அவரின் ஈமச்சடங்கினை செய்ய அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை, என் நண்பர்களிடம் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்கு ஆங்கிலேய அதிகாரிகள் சம்மத்திக்கவில்லை. ஆதலால் தானே தீச்சட்டி சுமந்து சென்று அரண்மனையின் பின்னால் உள்ள வனத்தில் சிதைக்கு எரியூட்டினார். ‘செய் அல்லது செத்துமடி, என்ற மந்திரத்திற்கேற்ப வாழ்ந்து மறைந்த மகாதேவ்வின் இந்த மறைவு, விடுதலை வேட்கையைத் தீவிரப்படுத்தும்’ என்று மகாத்மா முழங்கினார். இங்கு தேசதந்தை ஓர் பாசத் தந்தையாக மிளிர்ந்தார்.
பிறகு மார்ச் 19, 1943ல் ஶ்ரீமதி சரோஜினி நாயுடு அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் இங்கிருந்து விடுவிக்கப்பட்டார்.
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், பிப்ரவரி 24, 1944ல், மகா சிவராத்திரி அன்று, மகாத்மாவின் துணை நின்ற அவரது மனைவியார் திருமதி கஸ்தூரிபாவும் காலமானார்.
காந்திஜியின் உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாயின் உடல் தகனம் செய்த இதே அரண்மனையில், திருமதி கஸ்தூரிபாவின் உடலும் தகனம் செய்யட்டது. ஆம் இங்குதான் காந்திஜி மனைவியின் சமாதி உள்ளது.
நேராக அரண்மனையின் பின்னால் உள்ள ஒரு சிறிய வனத்தின் சமாதி இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். அங்கே உதவியாளர் சமாதி மற்றும் காந்திஜி மனைவியாரின் சமாதியும் உள்ளது. அதைச் சுற்றி வந்த நான் அவரது மனைவியார் சமாதி அருகே இருந்த காந்திஜியின் அஸ்தியின் ஒரு பகுதியை பார்த்து மனம் கலங்கினேன்.
நேராக வரவேற்பறைக்கு மீண்டும் சென்று, தன் மனைவியாரின் தோளைபற்றிக்கொண்டு காந்திஜி நிற்பதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்…..இங்கு தேசத்தந்தை தெரியவில்லை. அன்னை கஸ்தூரிபாயின் கணவர் தெரிந்தார். இப்போது செல்ஃபி எடுக்கத் தோன்றவில்லை. பக்கத்தில் கைகட்டி நிற்க, வேறொருவர் படம் பிடித்துக்கொடுத்தார்.
காந்திஜியின் மனைவி, குஜராத்துல இறந்திருப்பாங்கனு இவ்வளவு நாளா நினைச்சுகிட்டிருந்த எனக்கு, கணவருடன் சேர்ந்து அவரோட கொள்கைக்கும், போராட்டதிற்கும் துணை நின்று புனேயில் உயிர் நீத்தார் என்பதோ, அவருடைய சமாதி அங்கிருப்பதோ இவ்வளவு நாளாகத் தெரியாது.
சின்ன வயசில், அம்மா, மண்டையில குட்டிக்குட்டி வரலாறு சொல்லிக் கொடுத்தபோது, வேண்டா வெறுப்பாக, மதிப்பெண் பெறுவதற்காகப் படித்த வரலாற்றின் மதிப்பு அப்போதுதான் புரிந்தது!
குறிப்பு: சிறந்த ஆன்மீக தலைவரும், வள்ளலும், இராஜ பரம்பரையில் வந்தவருமான நான்காம் ஆகாகான், இமாம் சுல்தான் ஷா கரிம் ஆகாகான், 1969ல் இந்த அரண்மனையை நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த அரண்மனை ‘காந்தி தேசிய நினைவகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
செய்தி ஆதாரம் : ஆகாகான் அரண்மனை கல்வெட்டுக்கள், காட்சிப் பொருள்கள், இணையம்!
தஹி ஹண்டி
புனேயில் ‘தஹி ஹண்டி’!
கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் ‘தஹி ஹண்டி’ (உரி அடித்தல்) இங்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே பந்தல் போட்டு நவீன ஒலி பெருக்கி அமைப்புடன், விளம்பரங்கள் பரபரக்க இளைஞர்கள் வரிந்துகட்டி ஒருவர் மேல் ஒருவராக வட்ட வட்டமாக மனிதசங்கிலியை உயரே கட்டுகின்றனர்.
பல குழுக்களாக இதற்கென்று பல மாதங்கள் தயார் செய்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து பங்கெடுக்கின்றனர்.
இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய், தமன்னா, ரவீனா டாண்டன் என இந்தி, மராத்தி திரை நட்சத்திரங்கள் பளபளக்க, மனித மலைகள் உருவெடுக்க, மக்கள்கடல் ஆர்ப்பரிக்க, பின்னணி இசை பெருக்கெடுக்க, வாணவேடிக்கைகள் மினுமினுக்க, தயிர் பானையை உரி அடிக்க வெண்ணையுடன் வெள்ளிக்காசுகளும் கொட்டுகின்றன. பிரம்மாண்ட பரிசுத்தொகை நடத்துபவர்களின் வசதிக்கேற்ப ஒரு லட்சம், ஐந்து லட்சம், பத்து லட்சம், பன்னிரெண்டு லட்சம் என்று நீள்கிறது.
இளைஞர்கள் ஒன்றிணைந்து நகரம் முழுதும் விளையாடும் இந்த விளையாட்டு பாரம்பரியம் இன்னும் கட்டிக்காக்கப்படுவதை பறைசாற்றுகிறது.
பி.கு: இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க அரசாங்கம், பங்குபெறுபவர்களின் வயது வரம்பை 15க்கு குறையாமலும்.. உரியின் உயர வரம்பை 20 அடிக்கு மிகாமலும் இருக்குமாறும் செய்ய விதிமுறை வகுத்திருப்பதாக அறிகிறேன்.