முதல்வருக்கு அஞ்சலி

#My_heartfelt_condolences மறைந்த தமிழகத்தின் முதல்வருக்கு அஞ்சலி! நடிகையானது முதல் முதல்வராய் இருந்த வரை துணிவாய் தடைகள் பல தாண்டி வந்தவர். சொந்த பந்தங்கள் துணை எதுவுமே இல்லையென்றாலும் பல உறவுகளை உருவாக்கித் துணயாக கொண்டவர். தானெடுத்த முடிவுகளில் தீர்க்கமான நம்பிக்கை உடையவர். பலத்த மன உறுதி உடையவர். ஒரு பெரிய இயக்கத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்தவர். தலைவர்கள் பலரின் நன்மதிப்பையும் பெற்றவர். இவரது வாழ்க்கை தனி மனிதருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஒரு அரசியல் தலைவராக இவர் சாதித்து பல. இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர். இறப்பிலும் இன்னல்களை எதிர் கொண்டவர். இவரின் மறைவு துயரமானது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

 

பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம்

“……..காயும் ஒரு நாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி
….”

என்று சொன்ன பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம் இன்று சிங்கையில் கொண்டாடப்பட்டது.

ஓரிரு வாரங்கள் மனைவி மக்களை பிரிந்திருந்தாலே சிரமப்படும் பலருக்கிடையே தங்களின் மனைவி மக்கள் ஊரில் இருக்க தனியொருவனாய் தினமும் பல மணி நேர உழைப்பிற்கு பிறகு கிடைக்கும் ஒரு நாள் வார இறுதி ஓய்வைக்கூட தமிழுக்காக ஒதுக்குகிறார்கள் நம் வெளிநாட்டு தொழிலாள நண்பர்கள்.

ஒரு சில காரணங்களுக்காக, பொதுவாகச் சிங்கப்பூரர்களுக்கும், நிரந்திரவாசிகளுக்கும் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடக்கும் தமிழ் இலக்கிய போட்டிகளுக்கிடையே நம் வெளிநாட்டு நண்பர்களுக்குத் தனித்துவமாகத் தமிழில் கட்டுரை போட்டி நடத்திய மக்கள் கவிஞர் மன்றத்துக்கும் இணைந்து நடத்திய தமிழ் முரசு நாளிதழுக்கும் எனது பாராட்டுகள். இந்தப் போட்டியில் பங்கு பெற்ற 238 பேரில் வெற்றி பெற்ற 50 பேருக்கு மடிக்கணினி பரிசாகக் கொடுக்கப்பட்டது. அதை கொடுக்க உதவிய புரவலர்களுக்கு நன்றி.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அதன் தொடர்பிலேயே இந்த போட்டிக்கான தலைப்பு ‘சிங்கையில் வேலையிடப் பாதுகாப்பு இன்னும் மேம்பட எனக்குத் தோன்றும் வழிகள்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது சிறப்பு. அந்தப் போட்டியில் நம் நண்பர்கள் Karuna Karasuசும் யாழிசை மணிவண்ணன்னும் சிறப்பாக கட்டுரை எழுதி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நண்பர்களுக்கு வாழ்த்துகள் 💐💐

அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்

“….ஹார்பர் போர்டு தன் இந்தியத் தொழிலாளர்களுக்காக நடத்திய உணவுக் கூடத்திற்குச் சென்று உணவு கேட்டுக் கெஞ்சினேன்………”தொழிலாளர்கள் மட்டும்தான் சாப்பிடலாம்,நீ இங்கே சாப்பிட முடியாது,” ஒரு வாய்ச் சோறு கூடக் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். நடந்ததை எல்லாம் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்து என்னிடம் வந்து கேட்டார், “ஏன் சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கிறாய்?” நான் வீட்டிலிருந்து ஓடி வந்துவிட்டேன் என்பதையோ எதற்காக ஓடிவந்தேன் என்பதையோ சொல்லவில்லை. இருந்தாலும்,”எனக்கு பசிக்கிறது. சாப்பிடுவதற்கு எனக்கு ஏதாவது வேணும்” என்றேன். அவர் தனக்கென வாங்கின உணவை என்னிடம் தந்தார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார். அந்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தேன். அதன் பிறகு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு தற்காலிக அறை. தஞ்சோங் பகாரில் 34 செங் சியோக் ஸ்ட்ரீட்டின் பின்புறம் அது அமைந்திருந்தது. அவர் அங்கு உள்வாடகைக்குக் குடியிருந்தார். அவர் என்னிடம் ஒரு கைலியையும் சோப்பையும் கொடுத்துக் குளித்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடையைத் துவைக்கச் சொன்னார். நான் ஒரு நாள் ஓர் இரவு முழுவதும் தூங்கியிருப்பேன். நான் எழுந்து புத்துணர்வு பெற்றவுடன், அவரிடம் என் கதையைச் சொல்லி, நான் அவரோடு இருக்கலாமா என்று கேட்டேன். நான் வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அவரிடம் சொன்னதுடன் அப்படியே அவர் என்னை வீட்டுக்கு அனுப்பினால் மீண்டும் ஓடிவிடுவேன் என்று கூறினேன். இறுதியில் அவர், “சரி, நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்றார். அவரின் பெயர் பாவாடை. ….ஆர்பென்ஸ் கம்பெனி என்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றில் எனக்கு அவர் அலுவலகப் பையனாக வேலை வாங்கித் தந்தார்….. காலை நேரத்தில் முதலில் நான் அலுவலகத்திற்குள் சென்று அறையில் உள்ள தூசியைத் தட்டுவேன். தரையைக் கூட்டுவேன், குப்பையை வெளியில் கொண்டு போய்ப் போடுவேன்……..என்னிடம் பணம் இல்லாததால், என் மதிய உணவிற்காக பாவாடை ஒவ்வொரு நாளும் எனக்கு 20 காசு கொடுப்பார்….என் முதல் மாதச் சம்பளத்தைப், பத்து வெள்ளி என்று நினைக்கிறேன், பெற்றுக் கொண்டேன். நான் அதை அப்படியே பாவாடையிடம் கொடுத்து விட்டேன். அதைப் பயன்படுத்தி வேலைக்கு அணிந்து செல்ல அவர் எனக்கு இரண்டு முழுக்கால் சட்டைகளையும் இரண்டு சட்டைகளையும் வாங்கிக்கொடுத்தார்….” —–மேல உள்ள வரிகள் 2014ல் திரு ஆ பழனியப்பன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட “உழைப்பின் உயர்வு” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் திரு எஸ் ஆர் நாதனின் “An Unexpected Journey- Path to the Presidency” என்ற ஆங்கில புத்தகத்தில் திரு எஸ் ஆர் நாதன் தன் ஆரம்பக்கால வாழ்க்கை பயணத்தை பற்றி #உழைப்பின்_உயர்வு #அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்

எஸ்.ஆர்.நாதன் மறைவு

ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்தது. தன்னுடைய நிர்வாகத் திறமையால் சிங்கையின் முன்னேற்றத்தில் பெரிய பங்கு வகித்த முன்னாள் அதிபர் திரு எஸ்.ஆர்.நாதன் மறைவு சிங்கைக்கும், இந்திய சமூகத்துக்கும் பேரிழப்பு.