அறுசீர் விருத்தம்

அறுசீர் விருத்தம்!

வீடமைப்பு பேட்டை! (நேற்றைய தொடர்ச்சி)

அறைகளிங்கு வசதி சேர்க்க
அழகழகாய்க் குடிய மர்ந்தோம்
குறைகளின்றி நிதமும் வாழ
குறைவில்லா நீரும் கொண்டோம்
தரைமுதலாய் தளம்வ ரையில்
தடையிலாமின் சாரம் கண்டோம்
இறைவனைப்போல் கண்ணில் காணா
இழையிலிணை யம்;இ ணைந்தோம். (2)

பலவண்ண ஆடை கட்டி
பளிச்சென்று காட்சி தந்தாள்
சலவைசெய்த துணிகள் அங்கே
சன்னலிலே காயும் போது
மலைபோல உயர்ந்த வீடும்
மனங்கவரும் பசுஞ்சோ லையும்
பளபளக்கும் வண்ணத் தோடு
பாங்காக மிளிரும் பேட்டை (3)

நேரிசை ஆசிரியப்பா

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

நேரிசை ஆசிரியப்பா!

நாடு உயர நைந்தே நம்மவர்
பாடு பட்டு பாங்காய் உழைத்தனர்
ஆட்சி கட்டிலில் அமர்ந்தது தமிழும்
மாட்சி பொருந்திய மகனார் முடிவால்
உற்ற மொழியை ஓதிட தயங்கோம்
மற்ற மொழிகளை மதித்து நடப்போம்
நல்வழி காட்டும் நம்மொழி தானே
சொல்லி கொடுக்கும் சுவையுடன் நெறியை
மொழியுடன் உறவு முறியா வண்ணம்
தொழிலுடன் அதனை தொடர்ந்து பயில்வோம்
செம்மொழி காக்கும் சிங்கை
நம்மவர் வாழ்வில் நாளும் உயர்வே!

சாலைக் காவல்

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

எண்சீர் விருத்தம்!

சாலைக் காவல்!

விரிந்திருக்கும் சாலைகளின் அகலம் கண்டால்
விமானங்கள் கூட;இங்கு தரையி றங்கும்
வரிசையாகச் செல்லுகின்ற வாக னங்கள்
வடிவத்தில் தண்டவாள ரயிலை ஒக்கும்
வரிபிடிக்கும் வசூல்காரன் சாலை மேலே
வழித்தடத்தில் தவறிழைத்தால் அறிக்கை ஈயும்
சரியாக விதிமுறைகள் கடைப்பி டிக்க
சாலைகளில் படக்கருவி காவல் செய்யும்

பாபநாசம் அட்டகாசம்

த்ருஷ்யம் படமோ, விமர்சனமோ, கதையோ பார்க்காததால், முழுவதுமாக இரசிக்க முடிந்தது! நெல்லை மண் சொந்தம் என்பதால் கூடுதலாக இரசிக்க முடிந்தது.
எனக்கு பிடித்த நடிகைகளில் கௌவுதமியும் ஒருவர் ஆனால் முதலில் சில காட்சிகளில் கொஞ்சம் சொதப்பல்ஸ்.
த்ருஷ்யம் மாதிரி இல்லையே என்று சொல்பவர்களுக்கு: ஐபோன் பிடித்தவர்களுக்கு சாம்சங் பிடிப்பதில்லை, அப்படித்தான்! ஆனால் கமல், கமல் தான்👍! கமல் அண்ணாச்சி அசத்தி புட்டீயளே!

பி.கு: சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ், இலங்கை தமிழ், இதனுடன் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றுடன் கலந்த தமிழ் இப்படி பல தமிழை பேசி நடித்த கமல், தான் விட்டு வைத்த நெல்லை தமிழையும் இப்போது பேசி முத்திரை பதித்து தன் நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

பாராட்டு விழா

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் உண்னமயான பாராட்டும் அங்கீகாரமும் அவன் படைப்பை முகம் தெரியாத ஒரு மனிதர் காசு கொடுத்து வாங்கி, படித்து, இரசித்து, எழுதும் ஒரு ஆக்கப்பூர்வமான பின்னூட்டமே ஆகும். அதுவும் ஒரு முனைவர் அதை செய்தால் அதை விட ஒரு சிறந்த பாராட்டு வேறு என்னவாக இருக்கு முடியும்! அதோடு நின்றுவிடாமல் அந்த படைப்பை முன்னிறுத்தி ஒரு திறனாய்வு கூட்டம் நடத்துவதும் அதில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பல தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொள்வதும் அதுவும் அந்த படைப்பாளனுக்கே தெரியாமல் இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் ஒரு படைப்பாளனுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். தன் படைப்பை வெளிச்சம் போட பல்வேறு வியாபார உத்திகளை கையாள வேண்டிய நிலையில் உள்ள இந்த காலக்கட்டத்தில் இப்படி எந்த ஒரு மெனகெடலும் இல்லாமல் ஒரு நிகழ்வு தமிழகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நடந்தாலும் இது பாராட்டுக்குரியதுதான்! இந்த மருதாணி கடைத்தெருவில் காசு கொடுத்து வாங்கி பூசிக்கொள்ளும் இரசாயன சாயம் அல்ல, நம்மை விரும்பும் உள்ளங்கள் ஆசையாய் நமக்குக் வைத்துவிடும் இயற்கை மூலிகை! இந்த மருதாணி மணக்கும் என்பது உறுதி! அந்த படைப்பாளன் சி கருணாகரசு க்கு எனது வாழ்த்துகள்! விழா அழைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி Thiyaga Ramesh , திரு Rathina Pugazhendi! Panasai Natarajan கோபால் கண்ணன் கடலூரான் ஹாஜா மொய்தீன் Raju Ramesh Govinda Raj Mathikumar Thayumanavan திரு முருகன் Thamizh Thendral Athiyan Arumugam Erode Kathir