சொல்லிச் செல்லும் சொல்லடைகள்

 
“டே, என்னடா இந்த Ikea Tableல கூட fix பண்ண தெரியல உனக்கு”னு கேட்டா,
“அப்பா, வாட் இஸ் இன் சட்டி வில் ஒன்லி கம் இன் அகப்பை”னு சொல்லிட்டு போனான் என் பையன்.
அவன் சொன்னதுல பல பொருள் உண்டு. அதுல ஒன்னு ‘நான் உன் பையன் தானே’, என்பது:(

சரி, இங்கதான் அப்படினு பார்த்தா பக்கத்துல மனைவியும் மகளும்….

“அம்மா, ஆசிரியர், என்னை ஒரு கட்டுரை எழுதிட்டு வரச்சொன்னாங்க. நீங்க எனக்கு உதவி செய்றீங்களா”
“சரி, ஆனா ‘மொட்டை தாத்தா குட்டை விழுந்தார்’னு மாதிரி இல்லாம விவரமா என்ன கட்டுரை, என்றைக்கு கொடுக்கனும், கொஞ்சம் தெளிவா சொல்லு”

இப்படி எங்க வீட்ல அடிக்கடி இந்த மாதரி சொலவடைகள் புழக்கத்துல இருக்கும். பொதுவா எனக்கு தெரிஞ்சு இந்த மாதரி அதிகமான சொலவடைகள், வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்திலுள்ள நெல்லை வட்டாரத்தில் தான்னு நினைக்குறேன். அதனால எங்க வீட்லேயும் நிறைய அந்த மாதிரி உரையாடல கேக்கலாம். அந்த வட்டாரத்தில் வளர்ந்தவர்கள் பேசவதை புரிந்து கொள்ள ஒரு தனி அகராதியே போடலாம். மற்ற வட்டாரத்திலும் சொல்லடைகள் அதிகமாக புழங்கவதுண்டு. ஆனால் வட்டாரதிற்கேற்ப சொலவடைகளின் சொற்கள் சற்றே மாறுபடும், பொருளும் வேறுபடும்.

பேச்சுமொழியின் அடிக் கூறுகளே இந்த பழமொழி, முதுமொழி, ஒலிக்குறிப்புச் சொற்கள் என பலவாறு அழைக்கப்படும் சொலவடைகள் தான். அது ஒரு சமூகத்தின் வாழ்க்கை பட்டறிவின் சான்றுகள். அது ஒரு பண்பாட்டின், நாகரீகத்தின் கலைக்களஞ்சியம். அவை பார்க்க எளிதாக இருந்தாலும் வெளிப்படுத்தும் கருத்துகள் ஆழமானவை.

பேச்சுவழக்கில் மட்டுமே இருந்துவந்த இந்த நாட்டுப்புற இலக்கியத்தை பின்னர் ‘பழமொழி நானூறு’ என்ற பதிவு செய்யப்பட்டது. திருக்குறள், திருமறை, என்று இலக்கியத்தின் பழமொழி எங்கும் பரவலாக காணப்படுகிறது.

ஆனால், இந்த பேச்சு வழக்கில் உள்ள ஒரு சில பழமொழிகளுக்கு இந்த மேடைப்பேச்சாளர்கள் ஒரு கதை சொல்வாங்க பாருங்க, அத கேட்ட உடனே இது தான் சரினு நம்ம கைதட்டிட்டு வருவோம். அதற்கு எந்த வித சான்றும் இருக்காது. ஆனா அது சரின்னு தோணும். அதே பழமொழக்கு இன்னொரு மேடையில வேற ஒருத்தரு வேற கதை சொல்வாரு. எடுத்தகாட்டாக, ‘பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’ என்பதற்கு இன்னொரு பொருள் உள்ளதாக சொல்கிறார்கள். அது என்னென்னா, பந்தியில் உண்ணும் போது வலது கை முந்திச் செல்கிறது. போர் தொடுக்கும் போது, வில்லில் இருந்து அம்பு எய்தும் கை பிந்திச் செல்கிறது என்பதாகும். அதாவது ‘பந்திக்கு முந்தும் கை; படைக்கு பிந்தும் கை’ என்று இருக்க வேண்டிய பழமொழி, உருமாறி விட்டது என சொல்பவர்களும் உண்டு. இப்படி பல பழமொழிகளை சொல்லலாம்.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரியான பழமொழிகள் சிலவற்றை தொகுத்து அதை அழகு புத்தகமாக அச்சடித்து நமக்கு இலவசமாக தருகிறார்கள். யாரு, எங்கேனு கேக்குறீங்களா? மேல படிங்க…

தேசிய மரபுடைமை வாரியம் மற்றும் கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் ‘வாழும் மொழி, வாழும் மரபு’ என்ற திட்டத்தின் வழி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மொழி விழாவையொட்டி ஒரு புத்தகம் அறிமுகம் கண்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்ந வகையில், வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் “தமிழ்மொழி விழா 2017″ன் தொடக்க விழாவில் வெளியீடுகண்ட, “சொல்லிச் செல்லும் சொல்லடைகள்” என்ற புத்தகம் தான் அது.
அது குறித்து ஒரு சின்ன அறிமுகம்.

ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு சொல்லடையும்(சொலவடையும்) ஒரு பொருளைக் கூறாது பல பொருள்களை உணர்த்தும் தன்மையுடையதால் இந்த புத்தகத்தில் பொருளுரை சொல்லாமல் ஆசிரியர்க் குழு அவர்கள் பார்வையில் விளக்கவுரை கொடுத்திருக்கிறார்கள்.

இதில் மூன்று சிறப்பம்சம் உண்டு,
ஒன்று அந்த சொல்லடைகளை இன்னொரு சொற்றொடர் மூலம் கூறியிருப்பது. எளிதாக புரியும் வகையில் உள்ளது. எடுத்துகாட்டாக, “மொழி தப்பினவன் வழி தப்பினவன்” என்பதற்கு “மூத்தோர் மொழிகள்!-நம் வாழ்வின் முகவரிகள்!” என்று இன்னொரு சொல்லடையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாவது, சொல்லடைகளின் விளக்கத்தை ஆங்கிலத்தில் கொடுத்திருப்பது. இங்கே பதிவு செய்ய விரும்புவது, தமிழ் சொல்லடைகளின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் கொடுக்கவில்லை மாறாக அதை அழகாக ஆங்கில மொழியில் அதன் அழகு குறையாமல் சொல்லியிருக்கிறார்கள். எடுத்தகாட்டாக, “அகப்பை குறைந்தால் கொழுப்பு குறையும்” என்பதை “If the spoon is smaller, the belly will be smaller too!” என்று சொல்லி ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு புரியும் வகையில் மேலும் சில விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். Shakespeare, Abraham Lincoln, Hellen Keller போன்றோர்களின் மேற்கோள்களை சுட்டியிருக்கிறார்கள்.

மூன்றாவது, அழகிய கோட்டோவியம். ஒவ்வொரு சொல்லைடைக்கும் அதை பார்த்தவுடன் புரியும்வண்ணம் அழகிய ஓவியத்தை தீட்டியுள்ளார்கள். அதை வரைந்தவருக்கு எனது பாராட்டுகள்.

ஆனால், ஒன்றிரண்டு சொல்லடைகள் வேறு விளக்கத்தை தருகின்றன. குறிப்பாக, “விரலுக்கு தகுந்த வீக்கம்”, என்பதை “விரல் வீங்கியிருக்கின்றது என்று மகிழ்ச்சி அடை!-விரலே இல்லாதவரை பார்த்து” என்று வேறு ஒரு விளக்கம் சொல்கிறது.
புத்தகத்தில் ஒரு அரைப்பக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது நன்றாக இருந்தாலும் அதில் சமகால எடுத்துக்காட்டு ஒன்றை சொல்லியிருந்தால் மாணவர்களுக்கு இன்னும் சுலபமாக புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்குமோ என தோன்றுகிறது.
தமிழ்மொழி மாதம் முழுதும் வரும் வகையில் 30 சொல்லடைகள் இருக்கும் என நினைத்து புத்தகத்தை திறந்தால் 23 தான் இருந்தன. இன்னும் 7 சேர்த்திருக்கலாமோ என தோன்றியது.

இந்த புத்தகம் தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இலவசமாக கிடைக்கும். 40,000 பிரதி போடப்பட்டிருப்பதாக தகவல் உள்ளது. இதை அறிந்தவுடன் எனக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வந்தது.

தமிழ்மொழி மாதம் தொடக்கம் முதல் தினமும் தமிழ் முரசில் இந்த சொல்லடைகள் முதல் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு செய்து வருகிறது. அதை படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக தினமும் என்னுடைய முகநூல் பக்கத்தில் அதை பதிவு செய்து வருகிறேன். #வாழும்_மொழி_வாழும்_மரபு என்ற hashtagல் தேடினால் கிடைக்கும்.

தமிழ் முரசில் மட்டுமல்ல ஒலி 96.8லும் தினமும் ஐந்து முறை(காலை மணி 6:20, 9:05, 11:55, மாலை 6:55, இரவு 10:55)இந்த சொல்லாடல்களை மையக்கருத்தகாக வைத்து நல்லதொரு குறுநாடகத்தை ஒலிபரப்பு செய்கிறார்கள். திரு Nara Snv யும் Karthik Ramasamyயும் இணைந்து நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்தாக்கத்தை மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரங்கேற்றிவருகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஒரு தடவை அல்லை ஐந்து முறை ஒலியில் வருவதால் தவறாமல் கேளுங்கள்.

இந்த மாதிரியான ஒரு படைப்புக்கு நிறைய உழைப்பு தேவை. அதுவும் பல வேலைப்பளுவின் நடுவே அதை செய்வது கடினமானது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமை திட்டத்தின் தலைவர் திரு Anbarasu Rajendran மற்றும் ஆசிரியர்க் குழுவிலுள்ள செல்வி Veera Vijayabharathy மற்றும் முனைவர் ராமன் விமலன் ஆகியோரையும் அவர்களுக்கு துணை நின்றோரையுமே சேரும்.

‘சொல்லிச் செல்லும் சொல்லடைகள்’, சொற்கள் துள்ளிக்குதித்தோடும் நீரோடைகள்.

Leave a Comment