சிங்கப்பூர், ஏப்ரல் 6: அடுத்த தலைமுறைக்கும் தமிழ்மொழியின் மாண்பைக் கொண்டு செல்லவேண்டும் என எண்ணத்தோடு ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா இந்த ஆண்டும் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது.
அடுத்த தலைமுறையினர் இனிய தமிழில் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு, ‘தமிழ் மொழி விழா’ சிங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. அதைப்போல் இவ்வாண்டிற்கான ‘தமிழ் மொழி விழா’ மீடியாகார்ப் வளாகத்தின் எம்ஈஎஸ் அரங்கில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.
இம்மாதம் முழுவதும் தமிழ் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து தமிழ் மொழி விழாவைச் சிறப்பிக்குமாறு, தமிழ்மொழி ஆணையத்தின் தலைவர் ஆர்.இராஜாராம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழி, ஒலி 96.8 வானொலி ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழாவில், சிங்கையைச் சேர்ந்த சுமார் 45 அமைப்புகளும், 4 உயர்கல்வி நிலையங்களும் இணைந்திருக்கின்றன.
“தமிழோடு இணைவோம்” என்ற தொடக்க விழா ஆடல், பாடலுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவரும் செம்பாவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில், இவ்விழாவில் அரங்கேறவுள்ளன.