கவிமாலை விழா

கடந்த 30-ஏப்ரல்-2017, ஞாயிறன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கவிமாலையின் செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசர் புகழ் போற்றும் விழாவும், தமிழ் மொழி மாத நிறைவு விழாவும் ஒருங்கே நடந்தது.
தலைமை உரையாற்றிய கவிமாலையின் தலைவர் திரு இறை மதியழகன், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சான்றோர் ஒருவரை போற்றும் விழாவாக தமிழ் மொழி மாதத்தில் விழா எடுத்து வருவதாகவும், உள்ளூரில் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களின் பெருமையை போற்றும் வண்ணம் கடந்த ஆண்டு மூவருக்கு புகழாரம் சூட்டிய கவிமாலை இவ்வாண்டு உள்ளூர் படைப்பாளிகள் பலருக்கு தளம் அமைத்து கொடுத்த திரு வை. திருநாவுக்கரசு அவர்களுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறது என்றார்.

மாணவர்கள் கவிதை வாசித்தல்
—————————————————–

 பொங்கோல் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிக அழகாக முத்திரை கவிதைகளை பெரும்பாலும் பார்க்காமல் படித்தனர். நம்முடைய கவிதையே நாமே மறந்து போகும் நிலையில் மாணவர்கள் மற்றவர்களின் கவிதைகளை சிறப்பாக நினைவில் வைத்து ரசித்து படித்தனர். மூளையை துளைத்த கவிதை, சிறந்த கற்பனை  கவிதை, மனதுக்கு பிடித்த கவிதை என கடைசி நாள்களில் வெளியிடப்பட்ட ஒரு சிலரது கவிதைகள் தவிர, மற்ற அனைத்து ‘முத்திரை வரிகளும்’ மேடையில் பல சுற்றுகளாக படிக்கப்பட்டன. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று மாணவர்கள் பிரித்து பார்க்கவில்லை. நல்ல பயிற்சி. சிறந்த முயற்சி. அந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட நினைவு பரிசு பார்வைக்கு நன்றாக இருந்தது. என்ன பரிசு என்று அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கவிதைப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பயிலரங்கில் கலந்துகொண்டு கவிதை எழுதும் போட்டியில் பென்டமியர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துரை குமரனும், குழலி சரவணனும் முதல் பரிசைப் பெற்றனர். இவ்வாண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு கவிதை மனனப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிதை மனனப் போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோபிகா நரசா லட்சுமியும் போத்தோங் பாசிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்து சுவேதாவும் முதல் பரிசை வென்றனர்.
கவிதைப் பயிலரங்கு நடத்திய மன்னை ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்திற்கான ‘எதிர்மறை’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டிக்கான கவிதை எழுதி வென்றவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.

விருது
———–

சிங்கையில் கவிஞர்களை ஊக்குவித்து சிறப்பு செய்யும் வண்ணம் ஆண்டு தோறும் வழங்கும் சிறப்பு விருதுகள் இந்தாண்டும் வழங்கப்பட்டன.
இந்தாண்டு இளங் கவிஞருக்கான தங்கமுத்திரை விருது பெற்ற திருமதி காசிநாதன் சுதா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்கம் விருது பெற்ற திரு முத்துப்பேட்டை மாறன் அண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
ஐயா பாத்தறேல் இளமாறன் அவர்களுக்கு கணையாழி விருது காலம் கடந்து கிடைத்திருந்தாலும் இப்போது கிடைத்ததில் மகிழ்ச்சியே. அவர் சிறந்த கவிஞர் என்பதை தாண்டி பல கவிஞர்களை வளர்த்துவிட்டவர் என்பது கவனிக்கத்தக்கது, தன்னால் முடியாத காலக்கட்டத்திலும் கவிமாலையில் மாதந்தோறும் சிறந்த மரபு கவிதைகளுக்கு $50 வெள்ளி பரிசளித்து வந்தார். அது தவிர கவிதையில் வேற்றுமொழி இல்லாமல் தமிழ் சொற்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
விருதுகள் கொடுக்கப்படும் போது திரு தமிழருவி மணியனையும் மேடைக்கு அழைத்திருந்தால் விருது பெற்றவர்களுக்கும் அவருக்கும் பெருமை சேர்த்திருக்கும்.

திரு தினகரனின் உரை
————————————-

செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசு குறித்து அறிமுகம் செய்தார் நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினர் திரு தினகரன்.
1926ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த வி டி அரசு என்ற வை திருநாவுக்கரசு 1951ஆம் ஆண்டு தமிழவேள் கோ சாராங்கபாணி அவர்களால் அடையாளம் காணப்பட்டு தமிழ்முரசில் பணி செய்ய சிங்கை வந்தார் என்றும் இந்தியாவில் ஆதித்தனார் அவர்களின் தினத்தூது, பெரியார் அவர்களின் விடுதலை ஆகிய பத்ததிரிகைகளில் முக்கியமான பொறுப்பு வகித்த இவர் தமிழ் முரசில் 1951 முதல் 1958 வரை துணை ஆசிரியராக பொறுப்பேற்று தமிழ் முரசின் வளர்ச்சியில் கோ ச அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் திரு தினகரன் அவர்கள் கூறினார். இந்த சமயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு நல்ல ஒரு தளத்தையும் அமைந்து கொடுத்ததாகச் சொன்னார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி வி டி அரசு அவர்கள் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். மறைந்த தேசத்தந்தை திரு லீ குவான் யூ அவர்களின் பெரும்பாலான உரைகளை அதே பொருளுடனும் உணர்வுடனும் வி டி அரசு மொழி பெயர்த்ததாக கூறினார்.
பிறகு 1959 முதல் அரசாங்கச் சேவையிலே சேர்ந்தார். அரசாங்க செய்திகளை வெளியிடும் அமைப்புக்கு தலைமை பொறுப்பேற்றிருந்தார். அரசாங்கம் வெளியிடும் பல இதழ்களில் முக்கியமான பொறுப்புகளையேற்று சிறப்பாக செயலாற்றியிருக்கிறார் என அவரது அரசாங்கச் சேவை குறித்த எடுத்துக் கூறினார், திரு தினகரன்.
பின்னர் 1962ல் தமிழ் முரசு சற்று இக்கட்டான காலகட்டத்திலிருந்தபோது மீண்டும் தமிழ் முரசில் சேர்ந்து அதன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று கணினி மயமாக்கல், விற்பனையை கூட்டுதல் என சிறப்பாக செயல்பட்டதாக கூறினார். பின்னர் 1974-76ல் இந்து ஆலோசனை மன்றத்தில் தலைவராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் இந்துகளின் உடல் தகனத்தை விறகு இல்லாமல் எரிவாயு தகன முறைக்கு மாற்றியதில் முக்கியமான பங்காற்றினார்.
பின்னர் 1984 முதல் 1998 வரை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் முதல் தலைவராக பதவியேற்று பல தமிழ் அறிஞர்களை அழைத் வந்து திருக்குறள் விழா நடத்திய பெருமை இவருக்குண்டு. சிண்டா அறங்காவலர் குழுவிலும் சில காலம் பொறுப்பு வகித்தார்.
நாடாளுமன்றக் குழு தொகுதியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கருத்தை ‘தேர்வுக் குழு’விற்கு முன் வைத்த பெருமையும் இவருக்குண்டு.
பின்னர் 2000 முதல் 2006 வரை வளர்தமிழ் இயக்கத்தின் முதல் தலைவராக இன்று நாம் கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ்மொழி விழாவுக்கு வித்திட்டவராக இருந்தார் என திரு வை திருநாவுக்கரசு அவர்களின் சீரிய பணிகள் குறித்து திரு தினகரன் அவர்கள் அழகாக விளக்கினார்.

“மலிந்துவிட்ட விருதுகள் ”( ‘தமிழ் முரசு’த் தலைப்பு)
——————————————


விருது குறித்து திரு தினகரன் மேலோட்டமாக சொன்னதை சற்றே விரிவாய் கட்டமிட்டுருக்கிறது தமிழ் முரசு. திரு தினகரன் அவர்கள் மறைந்த வை திருநாவுக்கரசர் அவர்கள் விருதுகள் நிறையே கொடுக்கப்படாத காலகட்டத்தில் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் என்பதை வலியுறுத்தவே அப்படிச் சொன்னார்.
சரி அப்படி அவர் என்ன சொன்னார். தமிழ் முரசில் உள்ளபடி (படத்திலும் உள்ளது).
” ’அதே நேரத்தில், இப்போது சிங்கப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லோருக்கும் ஒரு விருது கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
விருது கொடுப்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. இந்தியாவின் எதற்கெடுத்தாலும் விருது கொடுக்கும் பழக்கம் இங்கும் ஊடுருவிட்டது’. என்றார்.
விருது கொடுப்பதில் கொஞ்சம் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். எதற்கு விருது கொடுப்பது என்பதைக் கருத்தில் கொள்வது ரொம்ப முக்கியமான விஷயம் என்று திரு தினகரன் குறிப்பிட்டார்.”
சரி இது குறித்து என்னோட கருத்து என்னனு சொல்றேன்.
திரு தினகரன் சொன்னது 100/200 விழுக்காடு சரியே. நான் பல முறை இதை பதிவு செய்து வந்திருக்கிறேன். தமிழ் மொழி மாதம் என்றில்லை ஆண்டு முழுவதும் சிங்கையில் எதற்காவது ஒரு விழா அதில் யாருக்காவது ஒரு விருது…. இல்லை இல்லை ஒரே மேடையில் பல பேருக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது.
இது வரை விருது பெற்றவர்களையோ, கொடுத்தவர்களையோ குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் அனைவரது மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அந்த விருதின் மேல் உண்டா என்றால் அது கேள்விக்குறியே. நான் எல்லா விருதுகளையும் கூறவில்லை. சில விருதுகள் மதிப்புமிக்கவை. நான் விருது கொடுப்பதை எதிர்க்கவில்லை. அதன் நோக்கம் என்ன என்பதை பார்க்கவேண்டும். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விதம் அதிலுள்ள வெளிப்படை தன்மை இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்து காட்டாக எழுத்தாளர் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருது, புத்தக பரிசு மற்றும் கவிமாலை வழங்கும் சிறந்த கவிதை புத்தகத்துக்கான தங்கப்பதக்க விருது, இளங்கவிகருக்கான தங்க முத்திரை விருது இப்படி இந்த விருதுகள் எல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது, யார் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மேடையிலோ அல்லது ஊடகத்திலோ தெளிவாக சொல்லப்படுகின்றது. இது எனக்கு தெரிந்த சில விருதுகள். இதே மாதிரி வெளிப்படையாக சொல்லப்படுகிற அனைத்து விருதுகளும் சிறப்பே. அதே சமயம் துறை சார்ந்து கொடுக்கப்படும் விருதும் சரியே. ஆனால் சில விருதுகள் ஏன், எதற்கு என்றே தெரியாது. ஒரே மேடையில் பல பேருக்கு கொடுக்கப்படும். ஒருவருக்கே அடுத்தடுத்த நாள்களில் இல்லை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு அமைப்பினரால் கொடுக்கப்படும்.
ஒரு விருதுக்கோ, விருத்தாளருக்கோ நாம் கொடுக்கும் மரியாதை அந்த விருதை பெற்றவரை மேடையில் இல்லாத போதும் அவர் போற்றப்பட வேண்டும். பதவியில் இல்லாத போதும் அவர் மதிக்கப்படவேண்டும். முதல் நாள் விருது வாங்கிய ஒருவர் அடுத்த நாள் ஒரு நிகழ்வில் உட்கார இடம் கிடைக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார். அவருக்கு எல்லா நிகழ்விலும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா என்பது கேவிக்குறியே.
கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட விருதை யார் வாங்கினார்கள் என்று பலருக்கும் தெரியாது. ஒரு விருதுக்கு பெருமை அது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு எல்லாம் அமைப்பினரும் சேர்ந்து ஒரு “விருது தேர்வாளர்கள் குழு” அமைக்கப்பட்டு , ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை ஈராண்டிற்கு ஒரு முறை தேர்ந்தெடுத்து, அவர்கள் விழாவில் ஒரு அங்கமாக இல்லாமல் அதை தனியாக ஒரு விழா எடுத்துக் கொடுக்கலாம். விழாவுக்கு ஒரு விருது என்றில்லாமல் விருதுக்கு ஒரு விழா எடுக்கலாம். தற்போது அமைப்புகள் கொடுக்கும் விருதுகளையே அங்கு கொடுக்கலாம். விருதுகளை ஒருமுகப்படுத்தலாம். அது விருதுக்கும் விருத்தாளர்க்கும் மதிப்பானதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இது தான் சரி என்று நான் சொல்லவில்லை. வேறு மாற்று கருத்து இருந்தாலும் சொல்லலாம்.

திரு ராஜாராமின் உரை
————————————–

இந்தாண்டு நடைபெற்ற தமிழ்மொழி விழாவின் நிறைவுரையாற்றிய வளர்தமிழ் இயக்கத்தின் தலைவரான திரு ராஜாராம், கவிமாலை வெளியிட்ட “முத்திரை வரிகள்” எப்படி சமூக வலைத்தளங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்கினார். அதில் அமைச்சரும் ஆர்வம் காட்டியதை பகிர்ந்தார். நாம் நடத்தும் நிகழ்ச்சிகள் இளையர்களை சென்றடைய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதாகவும். அதற்கு இளையர்கள் நிகழிச்சிகளை ஏற்று நடத்த வேண்டும், அவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என கூறினார். இந்தாண்டு போன ஆண்டை விட நிறைய இளையர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நடத்தவும் உதவி செய்தார்கள் என சொல்லி அவர்களில் ஒரு சிலரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். முதலில் கார்ல் கார்த்திகேயன் என்ற இளையர், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் துணை செயலாளராக உள்ள இவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்தும் பணியில் உள்ளார் என்று கூறினார். அடுத்து இலங்கையில் உள்ள தனது ஆசிரியருடன் சேர்ந்து சிங்கை கலைஞர்களுடன் சிறப்பான ஒரு நாட்டிய நாடகத்தை நடத்திக் காட்டிய அமிர்தினி என்ற இளையரின் பங்கு வரும் ஆண்டுகளில் தமிழ் மொழி விழாவில் பெரிய அளவில் இருக்கும் என கூறினார். தொடக்கக்கல்லூரி முடித்து பல்கலைக்கழகம் சேருவதற்கு 8 மாதங்கள் ஆகும். அந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு பிடித்த துறைச்சார்ந்த பணியில் இளையர்கள் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அஷ்வினி செல்வராஜ் என்ற அந்த இளையர் தேர்ந்தெடுத்த இடம் தமிழ் முரசு என்று கூறினார். அஷ்வினியை தான் பார்க்காத நிகழ்ச்சி இல்லை. கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளிலும் அவர் இருந்தார். அதோடு நிறைய நிகழ்வுகளில் பங்கேற்று பரிசும் வென்றார். அவருடன் இன்னும் இரண்டு இளையர்கள் சேர்ந்து தமிழ் முரசுக்காக செய்தி சேகரித்தனர். இந்த முறை தமிழ் முரசில் தமிழ் விழா குறித்தான செய்திகள் சாற்றி இளமை துள்ளலாக இருக்க இதுதான் காரணம் என்றார். மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாய் பெற்றோர்களிடம் இருந்துதான் வரும், அந்த வகையில் அஷ்வினியின் பெற்றோர்கள் திரு செல்வராஜ் , திருமதி இந்திரா செல்வராஜ் முக்கியமானவர்கள் என்று அவர்களையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் மொழி விழாவில் தனக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என தமிழ் வரி வடிவங்களை ஓவியமாக தீட்டி அதை ஒரு கலைப்பொருளாகவும், பயிற்சி கருவிகளாக அலங்கார பைகளாகவும், புதிதாய் வெளியான பாலர் முரசு இதழுக்கு தலைப்பு ஓவியமும் வரைந்த பிருந்தா மேனன் என்ற இளையரையும் அறிமுகப்படுத்தினார். நிறைவாக, “தமிழ் மொழி மாதம் தான் முடிந்ததே தவிர, விழா முடியவில்லை அது அடுத்த ஆண்டும் தொடரும் என்றார்.

திரு தமிழருவி மணியனின் உரை
——————————————————

நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர் திரு தமிழருவி மணியன் பு’றநானூற்றுச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பொதுவாகவே இன்று மேடைகளில் சங்க இலக்கியம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்படுவது குறைந்து கொண்டே வருகிறது. சங்க இலக்கியத்தினால்தான் இன்று தமிழ், செம்மொழி என்ற அங்கீகாரத்தை அடைந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் மூதாதையர்கள் எப்படி எல்லாம் சிந்தித்து சிந்தித்து ஒவ்வொரு கருத்துகளையும் வடித்து செதுக்கி சிற்பம் போல் நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நம் இளையத் தலைமுறை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் இன்று 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் 6தான் செம்மொழி. அதில் இரண்டு இந்தியாவில் உள்ளன. வடக்கே சமஸ்கிருதம் தெற்கே தமிழ். அப்படிப்பட்ட மொழியை நாம் பேசுவதற்கு தமிழராய் பிறந்ததற்கு நாம் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியை தோள் மாற்றி தோள் மாற்றி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள் அதை நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்றார்.
“சங்க இலக்கியம் பக்கம் உங்கள் பார்வையை திருப்புவதற்காக நான் புறநானூற்றை எடுத்திருக்கிறேன்” என்றார்.
உலகப் பொதுமையையும், மனித நேயத்தையும், அறம் தழுவிய வாழ்வையும் தான் சங்கக்காலம் தொட்டு நம் படைப்பாளிகள் இலக்கியத்தின் நோக்கமாக கொண்டு இயங்கியிருக்கிறார்கள் என்றார்.
புறநானூற்றில் உள்ள பாடல்களில் நாலு பாடல்கள் குறித்து மட்டும் தான் விளக்க போவதாக சொன்னார் முதல் பாடலை கூறினார்.
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!

ஒரே தெருவில் ஒரு வீட்டில் மங்கள வாழ்த்து, ஒரு வீட்டில் ஒப்பாரி ஒலிக்கிறது. இது தான் வாழ்க்கை, இது தான் உலகம், இது தான் இறைவனின் படைப்பு. அதனால் இறைவனை பண்பு கேட்ட பாவி என அவசரத்தில் சபித்து விடுகிறான் கவிஞன்.
ஆனால் அடுத்த இரண்டு வரி தான் இந்த கவிதையை இரண்டாயிரம் ஆண்டு கழித்தும் பேச வைக்கிறது. இந்த உலகம் துன்ப மயமானது. ஆனால் அதற்காக நாம் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கலாமா?
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

இந்த துன்பம் நிறைந்த வாழ்விலும் எப்படி இன்புற்று வாழ்வது என்பதை கண்டெடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. துன்பத்தில் துவளவும் கூடாது இன்பத்தில் ஆடவும் கூடாது, மனச் சமநிலை வேண்டும், என்றார். இதை எழுதியவர் பக்குடுக்கை கணியனார். பக்குடுக்கை என்றால் நைந்து போன ஆடை அணிந்திருப்பவன் என்று பொருள் என்று கூறினார். வறுமையில் வாடிய அவரால் தான் இந்த மாதிரி வாழ்க்கையை பார்க்க முடியும் என்றார்.

அடுத்து இரண்டாவது பாடல், “யாதும் ஊரே யாவரும்…” என்று தொடங்கும் கணியன் பூங்குன்றனார் பாடலை விளக்கினார்.
தமிழ் இனத்தின் பண்பாடு வாழ்க்கை முறை அனைத்தையுமே அப்படியே ஒரு கோப்பைக்குள் கொண்டு வந்து சேர்த்து விட்ட சாறு அது.
பன்னிரண்டாயிரம் பாடல் மூலம் கம்பனுக்கு கிடைக்காத பெருமை, இந்த ஓற்றை பாடல் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து பெருமை பெற்று விட்டான் கணியன் பூங்குன்றன், என்றார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியில் உலக சகோரத்துவம் குறித்து சொல்கிறார். உலக உயிர்கள் அனைத்தையும் உறவுகளாகவே பாவிக்க தெரிந்த பண்பட்ட மனம் வேண்டும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவன் இப்படி சிந்தித்திருக்கிறான் என்றார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல. இது தான் ஞானத்தின் உச்சம் என்றார்.
அடுத்து வரியை பற்றி சொல்கையில், இது வரை அவர் தேடித் தேடி படித்தவரையில், மேலை நாட்டு தத்துவ கதவுகளைத் அகலமாக திறந்த வைத்த தத்துவஞானியான பிளாட்டோ தொடங்கி அவர் வாழ்நாளில் சந்தித்த மிகப் பெரிய தத்துவமேதையான திரு ஜெ கிருஷ்ணமூர்த்தி வரை யாரும் சொல்லாத, ஆயிரம் பக்கங்களில் சொல்ல முயன்று தோற்று போன தத்துவத்தை ஒன்றை ஒற்றை வரியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று சொல்லியிருக்கிறார் என்றார். கடைசியில் முடிக்கும் போது
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
என்று கூறுகிறார்.
சிறியவர்கள் என்பதிற்காக அவர்களை சிறுமை படுத்தாமல் இருப்பது என் பண்பாடு. ஆனால் பெருமைக்குரியவர்களை போற்றுதல் தவறு என்று சொல்கிறானே அது தான் பொருளா? இல்லை, இவன் நல்லவன் என்று எப்ப நாம் முடிவெடுக்கிறோமோ அப்போதே இவன் கெட்டவன் என்று இன்னொருவரை சிந்திப்போம். ஒன்றை போற்றுவதும் ஒன்றை தூற்றுவதுமாக இருந்தால் மனதில் சம நிலை இல்லை என்று பொருள் என்றார்.
அடுத்து மூன்றாவது பாடல்,

‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் குறவர் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள’ என,
‘நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!

பாலை பொழிகின்ற பசுவின் காம்பை அறுத்து எரிகின்ற அரக்கனுக்கு மன்னிப்பு உண்டு, நிறை மாத கர்ப்பிணி வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைத்தவனுக்கு கூட பாவ மன்னிப்பு உண்டு, அறியாமையில் இருக்கிறவனுக்கு அறிவு கொடுத்த ஆசிரியனுக்கு துன்பம் விளைவித்தாலும் மன்னிப்பு உண்டு, ஆனால் ஒரு பாவத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது அது தான் இந்த உலகமே தலைகீழாக புரண்டாலும் நன்றியை கொன்று விட்டால் அவனுக்கு பாவ மன்னிப்பே வாழ்வில் கிடையாது என்றார். உலகத்தில் உள்ளவர் அனைவர்க்கும் நன்றி சொல்ல பழகி விட்டால் நெஞ்சில் பகை வராது என்றார்.
கடைசியாக ஒரு பாடலை விளக்கினார். தமிழன் வாழ்வை எப்படி எல்லாம் பார்த்திருக்கிறான் என்பதை தனக்கு பாடமாக நடத்தும் ஞான பாடல் அது என்றார்.
தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே
உலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் ஆளுகின்ற அரசனானாலும் ஆண்டி ஆனாலும் இருவருக்கும் தேவை படுவது உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே. இருவருக்கும் எல்லா உணர்வும் பொதுவே என்றார். செல்வத்து பயனே ஈதல் ஆதலால் எல்லோருக்கும் கொடு என்கிறது அந்தப் பாடல் என்றார்.

ஐங்குறுநூறு, அகநாநூறு, ராமானுஜர், மாத்தியூ ஆர்னோல்ட், டி கே சி ரசிகமணி, ரெனே டேக்கார்ட்ஸ் என எல்லோரையும் பேசிவிட்டு கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு பிறகு புறநானுற்று பாடல்கள் குறித்து பேச தொடங்கினார்.
மனைவிடத்தில் கூட ஆங்கிலத்தில் பேசுறான். ஆங்கில மொழி பேசினால் தான் அறிவு ஜீவி என்பது போன்ற ஒரு கற்பனையில் மிதக்கிறான் என்ற அவர் பல ஆங்கில மேற்கோள்களை எடுத்துச் சொன்னார்.
புத்தர், ஓஷோ, அக்பர், சூஃபி ஃபரீது, ஜூலியஸ் சீசர், சாக்ரடீஸ், பாரதியார், விவேகானந்தர் , ராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளுவர் என்று பலரரையும் மேற்கோள் காட்டி பேசினார்.
ஐந்து மணிக்கு வந்த என்னை எட்டு மணிக்கு பேச வைத்திருக்கிறீர்கள். நான் எந்த இடத்திலும் மூன்று மணி நேரம் காத்திருந்து பிறகு பேசிய வரலாறு கிடையாது. அனால் தமிழுக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டேன் என்றார். ஆனால் சிங்கையில் நடத்தும் விழாக்களில் அப்படி உடனே பேச்சாளரை பேச வைப்பது சிரமம் என்பது என் கருத்து.
எல்லோரையும் கட்டிப்போட்ட அருமையான பேச்சு. இதுவரை இந்தாண்டு தமிழ்மொழி விழாவில் நான் கேட்ட உரையில் மிகச் சிறந்த இலக்கிய உரை, நேரம் போனதே தெரியாமல் திரு தமிழருவி மணியன் அவர்கள் அருவியாய் பாய்ந்த இந்த உரை தான்.
முன்னதாக கவிமாலையின் இந்தாண்டு வெளீயீடான கவிதைத் தொகுப்பு “அழகு மகுடம்” நிகழ்ச்சியில் வெளியீடு கண்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரும், தமிழ் முரசின் தலைவருமான திரு எஸ்.சந்திரதாஸ் கலந்துகொண்டு சிறப்புத்தார்.
கவிஞர் கி கோவிந்தராசு மற்றும் கவிஞர் இன்பா இருவரும் மிக அழகாக கவிநயத்தோடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கவிமாலைக்கு தலைமையேற்று மிக குறுகிய காலத்தில் சிறப்பாக இந்த விழா மட்டுமில்லாமல் கவிமாலை 200, வாணொலியில் மாணவர்கள் கவிதை வாசித்தல், முத்திரை வரிகள் என பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய திரு இறை மதியழகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

Leave a Comment