தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா

ஏழு நாட்கள், ஏழு நூல்கள், ஏழு நண்பர்களை இணைத்தல் என்ற தொடரில் Rengaprasath Gopalakrishnan, Malarvizhi Elangovan ஆகியோர்கள் என்னை கோர்த்துவிட்டார்கள். இதில் விளக்கமோ, விமர்சனமோ வேண்டோம் ஆனால் அட்டைப்படம் மட்டும் முகநூலில் போட்டால் போதுமானது என கடைசியில ஒரு கடலைமிட்டாய் வேற கொடுத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பேர் சொந்தக்கதை, முன்னுரை, பின்னுரை என பல விளக்கங்களோடுதான் பதிவு போட்டார்கள். அந்த வரிசையில் நாமும்…. புத்தகத்திலுள்ள விஷயங்களை ’அடிஷனல் பேப்பருடன்’……….ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் முடியாது. எனக்கு புத்தகப் பதிவு போட நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போடுவேன்…

இன்றைய புத்தகம் ‘தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா’. இந்தப் புத்தகத்தை 3 மாதங்களுக்கு முன்னர் என் மகளுக்காக வாங்கினேன். அவர்கள் பள்ளியில் செட்டி மலாக்கா பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியதால், தகவல்கள் பெற நண்பரிடம் சொல்லி வாங்கினேன். ஆனால் புத்தகம் வருவதற்குள் கட்டுரைக்கான தேதி முடிந்துவிட்டது:(
சரி, புத்தகத்துக்குள்ள போவோமா…

இந்தப் புத்தகத்தை மலேசிய அருங்காட்சியகத் துறை கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் நாளை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இதன் ஆசிரியர்கள் கேரன் லோ & ஜெகதீசன் வேலுபிள்ளை புத்தகத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

“‘சிட்டி மெலாக்கா’ அல்லது ‘செட்டி மலாக்கா’ என்றும் அழைக்கப்படும் இந்த இனக்குழு மலேசியாவின் முதல் பெரனாக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ‘கிளிங்’ என தொடக்கத்தில் அழைத்துள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து வணிகத்துக்காக மலாக்கா சுல்தான் ஆளுகைக்குட்பட்ட காலத்துல வந்த இவர்கள் அங்கேயே திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தக் கலப்புத் திருமணத்தால் இவர்கள் மொழி, உணவு, உடை,வழிபாடு, பண்பாடு எல்லாமே இருசாராருடைய பாதிப்பும் கலந்து தனித்து விளங்குகிறது. இவர்கள் மலாக்காவில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும் மலேசியாவின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை” என் இப்புத்தகம் சொல்கிறது.

மலேசியாவின் அப்போதைய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இந்த புத்தகம் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கும் ‘சிட்டி மலாக்கா’ பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என பாராட்டி அனுப்பிய செய்தி இதில் உள்ளது. அது உண்மை என தோன்றும் அளவிற்கு 240+ பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் பல அரிய படங்களுடன் இச்சமூகத்தின் தற்கால வாழ்வியல், பண்டிகைகள்,விழாக்கள், திருமணங்கள், குழந்தை பிறப்பு, நீத்தார் நினைவு என அவர்களின் சமகால பழக்கவழகங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ‘கம்போங் ச்சிட்டி’ என 25 வீடுகளை கொண்ட 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இன்றும் உள்ளது. இங்கு சில கோயில்களும், ‘சிட்டி அருங்காட்சியகமும்’ உள்ளது.

இச்சமூகத்தினரின் மூதாதையர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டிலுருந்து மெதுவாக வழக்கொழிந்து ‘மலாய்’ மொழியே வழக்கு மொழியானது. பின்னர் தற்போது மலாய், தமிழ், ஆங்கிலம் கலந்தே குடும்பங்களில் பேசுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் 84 மொழிகள் பேசிய 190,000 பேர் அந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களே தங்கள் அடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என புத்தகம் சொல்கிறது.

இவர்கள் ‘இந்து’ மதத்தை பின்பற்றி இங்குள்ள கோயில்களில் பூசை வழிபாடு செய்கின்றனர், விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு நடத்துவது குறைந்து வரும் காலக்கட்டத்தில் இவர்கள் சடங்கு விழா நடத்துவது மாறுபட்டிருக்கிறது. தாலி கட்டி திருமணம், நலுங்கு, பாலும் பழம் என பல சடங்குகள் தமிழ்த் இந்துத் திருமணங்களை ஒத்திருக்கிறது. இவர்களுடைய உணவு முறை மலாய் உணவு முறையை ஒத்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது அதற்கு தேவையான சான்றுகளும், சரியான தரவுகளும் மிக முக்கியம். அப்படி இல்லாமல் கதை சொல்லும் போக்கில் தனக்கு வேண்டியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களை வரலாற்று நாயகர்களாக சித்திரிப்பது அபாயகரமானது. அது ஒரு புனைவு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த புத்தகத்தில் அந்த மாதிரியான எந்த இடைச்செருகலும் இல்லாமல் வரலாற்றாசிரியர் திரு சாமுவேல் துரைசிங்கம் உட்பட பல வரலாற்று ஆவணங்களை புரட்டிப்பார்த்து நிகழ்கால வாழ்வியலை அவர்களிடையே வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைக்கலாம் ஆனால் வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, நாளை கேட்டுச் சொல்கிறேன்:)

         

 

Leave a Comment