எல்லோரும் ‘ரூம்’ போட்டு யோசித்துதான கவிதை எழுதுவாங்க இல்லை ஏதோ ஒரு மலைப்பகுதியில், கடலோரத்தில்்இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே எழுதுவார்கள் இல்லை அமைதியான சூழ்நிலையில் கவிதை எழுதுவார்கள். அட ஒன்றுமே இல்லைனா ஒரு அழகான காதலியை நினைச்சு எழுதவாங்க. இது ஏதுமே இல்லாமல் எப்படிப்பபா தினமும் கவிதை எழுதறது?
அதுவும் ஒரு தலைப்போ கருப்பொருளோ கொடுத்து எழுதணுமாம், எப்படி கடிவாளம் கட்டின குதிரை மாதிரி ஒரே கருப்பொருள்ல யோசிக்கிறது? இப்படி பல கேள்விகள் பலருக்கும் எழுந்திருக்கலாம்.
ஆனால் அத்தனை கேள்வியையும் உடைத்து நாள்தோறும் கவிதை எழுதும் சவாலில் கடந்த 30 நாளில் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 1000 கவிதைகளை தொட்டிருக்கும் ‘சிங்பொரிமா’ முகநூல் பக்கம். இப்படி ஒரு வெற்றி இந்த தளத்திற்கு எப்படி சாத்தியமானது என்ற கேள்வி நான் உட்பட பலருக்கும் எழுகிறது.
என்னை எடுத்துக்கொண்டால், கடந்த சில ஆண்டுகளாக கவிதை எழுதி பல பரிசுகளையும், தங்க முத்திரை விருதும் பெற்றிருந்தாலும் இந்த தளம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். எப்ப தலைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. அதற்காக இரவு 12 மணிக்கு பிறகு, தூக்கம் கண்ணை சொக்கியும் தேர்வுக்கு படிக்கும் மாணவர் போல தூங்காமல் முழித்திருந்திருக்கின்றேன். பொதுவாக தமிழ் விழா மாதத்தில் நான் போடும் நீண்ட பதிவுகள் குறைந்துவிட்டது. கவிதை பற்றிய சிந்தனை, மற்றவர்கள் எழுதிய கவிதையை படிப்பது, அவர்களுக்கு ‘லைக்’, ‘கமன்ட்’ போடுவது என நாள் ஓடிவிட்டது.
சரி இது என்ன புதிய விஷயமா? என கேட்டால், இல்லை என்றே சொல்வேன். எங்கள் நண்பர் ஆசான் Karuna Karasu கொடுத்த யோசனையின் பேரில் எங்கள் ‘குயில் தோப்பு’(!) நண்பர்கள் அனைவரும் SG50யை முன்னிட்டு 2015இல் ஆகஸ்ட்டு 1 முதல் 10 வரை சிங்கப்பூரை மையமாக வைத்து தினமும் ஒரு மரபு கவிதை எழுதினோம். அதில் பலரும் அப்போதுதான் மரபு கற்றுக்கொண்டோம். குறிப்பாக அன்றிரவு ஒரு பா வகை கற்றுக்கொண்டு அடுத்த நாள் அந்தப் பா வகையில் ஒரு கவிதை எழுதுவதுண்டு. கிட்டத்தட்ட 10 பேருக்குமேல் எழுதி நூறை தொட்டுவிட முயற்சித்தோம். ஆனால் அதை அவரவர் முகநூல் பக்கத்தில் SG50 ‘ஹாஷ்டேக்கோடு’ எழுதினோம்.
இன்னொரு முயற்சியாக திரு முத்துப்பேட்டை மாறன் நிலாமுற்றம் என்று கவிதைகளுக்கான முகநூல் பக்கத்தை மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். இன்று உலகெங்கிலும் இருந்து 45,000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக உருவாகியிருக்கிறது இப்பக்கம். இதில் தினமும் கவிதை என்பதை தாண்டி கவியரங்கம் கூட நடத்தியிருக்கிறார்கள். அதோடு ஆண்டு விழாக்களையும் நடத்தி பல பரிசுகள் கொடுக்கிறார்கள். அதில் குறிப்பிடதக்கத்கது நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு படத்தோடு முகநூல் பக்கத்திலேயே சான்றிதழ் தருவார்கள். அதில் உள்ள சில நல்ல மரபு கவிதைகள் எழுதும் கவிஞர்களை நான் சென்னை சென்றபோது நேரில் சந்தித்திருக்கிறேன். அதில் சிலர் மிகச் சாதரனமாக துவங்கி இன்று நல்ல இலக்கணத்தோடு மரபுக் கவிதைகள் எழுதுகிறார்கள்.
ஆனால், அப்படி என்னதான் இந்த தளத்தின் சிறப்பு? ஏன் இதில் நாம் எல்லோரும் எழுதுகிறோம்? மாதம் ஒரு கவிதை எழுத நேரமில்லை என்ற காரணம் சொல்லும் என்னை போன்றோர் நாளும் ஒரு கவிதை எப்படி எழுதினோம்? என்ற கேள்வி எழுந்தது. இளையர்களை எழுத வைக்க வேண்டும் என்பதே எங்களை போன்றோர்(நண்பர்கள்) எழுதுவதற்கு முக்கியமான காரணம். சிங்கையில் தமிழில் பேசும் வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் இந்த தளத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் எழுத வேண்டும். அந்த அடிப்படையில் புதியவர்கள், இளையவர்கள் பலர் இதில் எழுதினார்கள். அதற்கு காரணம், தொடக்கத்தில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், கவிதையா இல்லையா என்று யோசிக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தும் விதமாக அமைப்பாளர் கூறியது. அதோடு, எல்லோரும் எழுதும் போது ஒரு குழு மனப்பான்மையுடன் பலர் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் எழுதினார்கள்.
இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்ய வேண்டும். இந்தக் குழுவில் முதல் கவிதையை எழுதியது நான்தான்:) தலைப்புக் கொடுத்து 6 மணி நேரமாக யாருமே எழுதவில்லலையே என்று விளையாட்டாக தொடங்கியது என் 30நாள் பயணம். மரபு, புதுக்கவிதை, நவீனம் என பல வடிவில் பல முயற்சிகள் செய்திருப்பேன். சில நிமிடத்தில் எழுதிய கவிதைகளும் உண்டு, சில மணி நேரம் யோசித்து எழுதிய கவிதைகளும் உண்டு. வாரநாட்களை விட வாரயிறுதி கடினமாக இருந்தது. காலியிலிருந்து இரவு வரை நாள் முழுதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இருப்பதால், 11:50க்கு எழுதிய நாள்களும் உண்டு.
இந்தக்குழுவில் தற்போது 750 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கையில் இல்லை. எல்லோரும் கவிஞர்களா? கவிதை எழுதபவர்களா? என்றால், இல்லை. அவர்கள் ஏன் இதில் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. எல்லோரும் எழுதினால் யார் படிப்பது? படித்து பாராட்ட, கருத்துச் சொல்ல சிலர் வேண்டுமே. இத்தனை பேர் இருந்தும் மொத்தமாக ஓரிரு கவிதை தவிர வேறு எதற்கும் 50 ‘லைக்’கு மேல் வரவில்லலை என்பதே யதார்த்தம். எத்தனை பேர் கவிதை எழுதினார்கள் என்று பார்த்தால் மொத்தமாக நூறுக்கும் குறைவானவர்களே இருந்திருப்பார்கள். அதிலும் தொடந்து எழுதியவர்கள் இருபதுக்குள்தான் இருக்கும். அதற்கு மாணவர்களுக்கு தேர்வு, மற்றவர்களுக்கு பணிச்சுமை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாய் எழுதியவர்கள் பலர். அதுதான் இந்த தளத்தின் தோக்கம்.
தொடக்கத்தில் சிங்கை சார்ந்த கவிதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் முன் வைக்கப்பட்டது. அதுவும் ஓரளவு நிறைவேறியது.
இந்த போட்டிக்காக தலைப்பு கொடுத்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் அதற்காக எடுத்த முயற்சி, உழைப்பு அதிலும் தனித்துவமாக தலைப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்படி பல காரணங்களுக்காக அவர்கள் பாராட்டபட வேண்டியவர்கள். அவர்கள் கொடுத்த தலைப்பில் பெரும்பாலான தலைப்பு எழுத தூண்டியது என்பதே உண்மை. எனக்கு ஓரிரு தலைப்பு தவிர மற்றவை சிந்திக்கத் தூண்டியது. இதில் தலைப்பு கொடுத்தவர்கள் யார் என்பதை விட என்ன தலைப்பு என்பதே ஆவலைத் தூண்டியது. தலைப்பிற்காக எழுதியவர்கள் பலர், கொடுத்தவர்களுக்காக எழுதியவர்கள் சிலர். கவிதைக்காக பாராட்டியவர்கள் பலர், எழுதியவர்களுக்காக பாராட்டியவர்கள் சிலர். சில அரட்டைகள், சில கருத்துகள், சில எதிர் வினைகள், சில நகைகச்சுவைகள் இப்படி பல இனிமையான அனுபவங்கள். இதில் பாராட்டபட வேண்டியது தளத்தின் நிர்வாகிகளே. எந்த இடத்திலும் தலையிடாமல் அதன் போக்கில் விட்டு விட்டார்கள்.
சரி இது போட்டியா? யாருக்கு பரிசு கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்தக் குழுவை பொறுத்தவரை இங்கு நடப்பதை நான் போட்டியாக பார்க்கவில்லை. போட்டி என்றால் சம பலம் உடையவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருக்க வேண்டும். முதல் முறையாக கவிதை எழுதுபவர்களும் முயற்சி செய்யலாம், பல்லாண்டுகளாக கவிதை எழுதி பல நூல்கள் வெளியிட்டவர்களும் எழுதலாம் அவர்களில் சிறந்த கவிதை பரிசுக்கு தேர்வாகும் என்பது சரியல்ல. சம தளத்தில் நடக்கும் போட்டியே சரி. ஆகவே இந்த தளத்தை பொறுத்தவரை புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் பரிசு கொடுப்பதே சிறப்பு. இது என் தனிப்பட்ட கருத்து. நான் இதில் தொடர்ந்து எழுதியற்கு இரண்டே காரணங்கள். ஒன்று இந்த புதிய முயற்சியை ஊக்கப்படுத்துவது. இதில் புதியவர்களை, இளையர்களை எழுத ஊக்குவிப்பது. இரண்டு எனக்கு கிடைக்கும் ஊக்கம் காரணமாக தொடர்ந்து இந்த சவாலில் பயணிப்பது. அதற்கு ஆசான் கருணாகரசும் ஒரு காரணம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்துட்டோம் அவங்களா வெளியாக்குறவரை இங்கே தொடர்வோம் என்பார்:) தினமும் காலை முதல் கவிதை அவரோடதாகதான் இருக்கும். இதில் பரிசைவிட பெரிய ஊக்கம் நாம் போடும் ‘லைக்’தான். இங்கு நம் மூளையை கசக்கி இது நல்ல கவிதையா இல்லையா என ஆராய்ச்சி செய்யாமல், முயற்சியை பாராட்டி ஒரு லைக்கை தட்டிவிட்டு போவோம். இந்த தளம் என் திறமையை காண்பிக்க அல்ல மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருந்தால் அதுவே என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதலில் இருந்தே நான் தெளிவாக இருந்தேன். பரிசுக்குரியவர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே என் பார்வை. இதை ஏற்கனவே நான் நண்பர் நிஜாமின் பதிவில் தெளிவு படுத்தியிருந்தேன். பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். விவரம் கீழே :
முதல் பரிசு: Nizam
இரண்டாம் பரிசு : Geetha Presenna
வளரும் கவிஞர் பரிசு: Abirami Suresh
வளரும் இளம் கவிஞர் பரிசு : Arun Vasudev Krishnan
இனி பரிசு பெறவிருப்பவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பரிசு பெறாவிட்டாலும் தங்கள் பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி எழுதிய ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே.
இந்த தளத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் பலரும் ஆர்வத்தோடு பங்கெடுத்ததே. எந்தவித வேறுபாடுமின்றி நாள்தோறும் கவிதையை பகிர்ந்தார்கள். பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அன்பு சூழ் உலகு.
இளையராக இருந்தாலும் இப்படி ஒரு சிந்தனை உதித்து, நல்ல கருத்தாக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்ற Harini Vee என் மனமார்ந்த வாழ்த்துகள். அதற்கு உறுதுணையாக இருந்து தொழில்நுட்ப உதவி முதல் விளம்பர உதவிவரை பல உதவிகள் செய்து பக்கபலமாக விளங்கிய Vijay Sangarramuக்கு நம் பாராட்டுகள். இதில் பின்புலமாக இருந்து ஆதரவு கொடுத்த பலருக்கும் நன்றி.
#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018
#சிங்பொரிமொ2018tlf
#தமிழ்மொழிமாதம்_2018