மாணவர்களுக்காகவே இயங்கும் “இளமைத்தமிழ்.காம்” கடந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி 250 கட்டுரைகளுக்கு மேல் மாணவர்களை எழுத வைத்தது.
இந்தாண்டும் மாணவர்களுக்காக ஒரு போட்டியை நடத்துகிறது. வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தெடர்பு, தகவல் அமைச்சின்கீழ் செயல்படும் தேசிய மொழிபெயர்ப்புக் குழு வெளியிட்ட சொல்வளக் கையேட்டை மையமாக வைத்து “சொல், சொல்லாத சொல்” என்ற மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் புதிர்ப் போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியின் இறுதிச் சுற்று வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, சனிக்கிழமை, காலை மணி 9க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் நடைபெறும். பிரபல, தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு. ஜிடி மணி இறுதிச் சுற்றை வழிநடத்தவிருக்கிறார்.
இப்போட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 16 உயர்நிலைப்பள்ளிகள் பங்கெடுத்தன. அதில் முதல் சுற்றில் 8 பள்ளிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதிலிருந்து NUS High School of Maths and Science, Bukit Timah Methodist Girls School, Temasek Junior College, Woodlands Secondary School ஆகிய 4 பள்ளிகள் வெற்றிபெற்று இப்போது இறுதிச்சுற்றில் மோதவிருக்கின்றன. இதில் முதலிடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 500 வெள்ளியும், இரண்டாம் இடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 400 வெள்ளியும், மூன்றாம் நான்காம் இடத்திலோ வரும் பள்ளிகளுக்கு முறையே 300, 200 வெள்ளி பரிசுத்தொகை அளிக்கப்படவிருக்கின்றன. வெற்றிபெற்ற குழுக்கு கோப்பையும் உண்டு. இது தவிர பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசும்,
மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் வழங்குகிறார்கள்.
இறுதிப்போட்டியில் ஆங்கிலச்சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் சொல்வது, தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை கண்டுபடிப்பது, படத்தை பார்த்து பதத்தை சொல்வது என ஆறு மாறுபட்ட சுற்றுகள் உள்ளன. இதில் ‘ராபிட் ஃபையர்’ எனப்படும் பரப்பரப்பான விரைவிச்சுற்றும் உண்டு. ‘பஸ்ஸர்’ எனப்படும் ஒலிப்பானின் துணைக்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் இப்போட்டி மாணவர்களை ஆர்வத்துடன் விளையாட தூண்டும். அதே நேரம் பல புதிய ஆங்கிலச்சொல்லிக்கு சரியான தமிழாக்கத்தை தெரிந்துகொள்ள உதவும்.
பார்வையாளர்களுக்கும் போட்டி உண்டு, பரிசுகள் உண்டு. அதனால் நிறைய தமிழ்ச்சொற்கள் தெரிந்துகொண்டு வரவும்:)
முதல் சுற்றில் ஒன்றில் இப்புதிர்ப் போட்டியை ஏற்று நடத்தியபோது மாணவர்களின் திறமையை பார்த்து வியந்து போனேன். கேள்வியை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் பதிலை சொல்லிவிடுவார்கள். தப்பே விடாமல் முழு மதிப்பெண்களையும் பெற்றவர்களும் உண்டு. சிலர் புதிய சொற்களை சொல்லி நம்மை அசத்துவார்கள். இப்படிப்பட்ட நல்ல ஒரு நிகழ்ச்சியை காண, உங்கள் பிள்ளைகளுடன் கண்டிப்பாக வந்து கலந்துகொள்ளுங்கள். மாணவர்களுக்கு உற்காசமூட்டுங்கள். அனுமதி இலவசம்.
#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018