லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘பழங்களே மருந்து’ என்ற ஒரு மறுபட்ட நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை, 8-ஏப்ரல் அன்று தேசிய நூலக வாரியத்தின் பதினாறாவது தளத்திலுள்ள ‘தி போட்’ மண்டபத்தில் நடத்தினார்கள்.
தமிழர் உணவின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கப்பூர்) கடந்தாண்டு நடத்திய விழாவில் “தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்” என சிறப்புரையாற்றினார், மருத்துவர் கு சிவராமன்.
ஆனால் லிஷா பெண்கள் பிரிவிவன் நிகழ்வில், பழங்களை அதுவும் குறிப்பிட்ட தமிழ் பாரம்பரிய பழங்களை எடுத்துக்கொண்டு, அது நம் உடல்நலத்திற்கு எப்படி உதவும் என சொல்லப்போகிறார்கள் அதுவும் சரவணன் அய்யாவு என்ன சொல்ல போகிறார், அவருக்கு பழங்கள் குறித்த பரீட்சையம் இருக்குமா என யோசித்தேன். சரி நிகழ்வில் சென்று பார்க்கலாம் என முதன் முறையாக இவர்கள் நடத்தும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிக்கு சென்றேன்.
வரவேற்புரையாற்றிய லிஷா பெண்கள் பிரிவின் தலைவி திருமதி Joyce Kingsly இந்நிகழ்ச்சியை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது வடிவமைத்து, வளர்தமிழ் இயக்கத்துக்கு விண்ணப்பித்தாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை நடத்த ஊரிலிருந்து கலைஞர்களை கூப்பிடலாமா என்ற யோசித்து, பிறகு உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதற்காக ஒரு பாட்டியை வரவழைத்திருப்பதாகவும் கூறினார்.
அந்தப் பாட்டி அரங்கத்தினுள் ‘என்ட்ரி’யானதே சிறப்பாக இருந்தது. அவர் உட்கார மேடையின் மேல் ஒரு குட்டி மேடையமைத்து அதில் சொம்பு, வெத்தலை பெட்டி, வெத்தலை பாக்கு இடிக்கும் உரல் என எல்லாம் வைத்து தூணில்லாத ஒரு சின்ன கிராமத்துத் தின்னையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
லண்டனிலிருந்துவிட்டு சிங்கை வந்த பேரனும் பாட்டியுடன் இணைந்து கொண்டார்.
இருவரும் உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த கதைகளை பேசுவதுபோல பழங்களின் பெருமையை எடுத்துச் சொன்னது சிறப்பு. பேரனாக நடித்த சரவணன் அய்யாவு உட்கார்ந்து கொண்டே மிக இயல்பாக, சரளமாக பேசி, நகைச்சுவையுடன் படைத்தார். நிகழ்ச்சி நெறியாளரும் அவரே.
இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் அந்த பாட்டியாக நடித்த திருமதி வஜிதா ஹமீதுதான். மிக சிறப்பாக கிராமத்துப் பாட்டிக்கே உரிய மெய்ப்பாடுடன் அந்த கதாபாத்திரத்துக்குள்ளேயே சென்று வெளுத்து வாங்கினார்.
பழங்களையும் அதன் பயன்களையும் அழகாக தங்கள் ‘ஸ்கிரிப்ட்’டில் இணைந்து அதற்கேற்ப உரையாடல்களை அமைத்து மிக நேர்த்தியாக கொண்டு சென்றனர்.
அதுவும் பேசும்போதே அந்த வெத்தலையை எடுத்து மடித்து இடிப்பது போன்று செய்தது யதார்த்தமாக, கதைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது.
ஒவ்வொரு பழத்தை பற்றியும் கூறுகையில் சிங்கை பாடகர்கள் Nirmala Nimmi , Parasu கல்யாணும் அந்த பழங்கள் குறித்து ஒரு பாடல் பாடினார்கள். அந்த பாடலுக்கான வரிகளை நண்பர்கள் யாழிசை மணிவண்ணனும், கணேஷ் நாராயணனும் (நதிநேசன்) எழுதியுள்ளனர். ஆனால் ஏற்கனவே உள்ள பிரபல திரையிசைப் பாடல்களை ஒட்டி அதன் வரிகளை மாற்றி அதே மெட்டில் உட்காரும் வகையில் எழுதியிருந்தனர்.
இந்த பாடல்கள் அணைத்தையும் நல்ல பின்னணி இசைக் கலைஞர்களுடன் நேரடி இசையில் பாடியது சிறப்பு.
ஆனால், எனக்கு பெரிய வருத்தம் பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஏற்பாட்டாளர்கள் அவ்வளவு பேரின் உழைப்பும் அந்த அளவுக்கு அதிகமான இசை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டதே என்பதுதான்.
கடைசி வரிசையில் இருந்த எனக்கு பாடல் வரிகளும் புரியவில்லை, அதனால் பழங்களின் பயன்களும் பிடிபடவில்லை, பாடகர்களின் இனிய குரல்களும் எடுபடவில்லை.
அடுத்த முறை இம்மாதிரியான நிகழ்ச்சியில் இசையை குறைத்து வரிகளை உயர்த்தி விஷயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கவனம் செலுத்தினால் சிறப்பு. அடுத்து சினிமா பாட்டு மெட்டுகளில் பாடல்கள் இருந்ததால் அசல் வரிகளே மனதில் ரீங்காரமிட்டன.
நிகழ்வின் தொடக்கத்தில், நண்பர் Mathialaganனின் மகள் செல்வி இலக்கியா மதியழகன் மிக நேர்த்தியாக கிடார் இசைத்துக் கொண்டே கவிஞர் நெப்போலியனின் அழகான வரிகளை கொஞ்சம் உஷா உதுப், கொஞ்சம் அனுராதா ஶ்ரீராம் என கலந்து பாடியது சிறப்பு.
பழங்களை கொண்டு கண்ணுக்கு விருந்தாக அழகிய சிறிய மாதிரி பழக்காட்சி செய்யப்பட்டிருந்தது சிறப்பு.
பழங்களே நிகழ்ச்சியின் கருப்பொருளானதால், அன்றைய உணவும் பழங்கள் மட்டுமே. நாவல்பழம், அத்திபழம், சப்போட்டா பழம், இலந்தம்பழம் (கொட்டையுடன் இடித்து பக்குவப்படுத்தி சின்ன பாக்கெட்டில் கொடுத்தார்கள்), நெல்லிக்கனி, முள் சீத்தாபழம், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகளுடன் மேலும் ஆறை சேர்த்து நவரச பழங்களை விருந்தினர்களுக்கு பரிமாறினார்கள். அதனுடன் குடிப்பதற்கு நார்த்தை சாறும் கொடுத்தார்கள். அனைத்தும் அருமை, இலந்தம்பழம் மிக அருமை.
அதில் முக்கியமான ஒன்று நல்ல பழங்களாக தேர்ந்தெடுத்து அதை அழகாக வெட்டி சாப்பிடுவதற்கு ஏதுவாக பரிமாறப்பட்டது பெண்கள் பிரிவு என்பதை எடுத்துக்காட்டியது:)
தமிழ் இலக்கியத்திற்கும் இந்தப் பழங்களுக்கும் உள்ள தொடர்பை சரியாக எடுத்துச்சொல்லவில்லை என நினைக்கிறேன் அல்லது சொன்னதை நான் கவனிக்கவில்லையா எனத் தெரியவில்லை. ஆனால் பழங்களுக்கான நிகழ்ச்சியில் பழங்காலத்தில் தமிழ்சமுதாயத்தில் இரண்டு மனைவிகள் உண்டு, திருக்குறளில் கூடா ஒழுக்கம், பிறன்மனை….குறித்து கூறப்பட்டுள்ளது, குறுந்தொகையில் கள்ளக்காதல் பற்றி கூறப்பட்டுள்ளது போன்ற நிகழ்ச்சிக்கு தொடர்பில்லா செய்திகளை தவிர்த்திருக்கலாம்.
சிறப்பு விருந்தினராக, செம்பாவாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். திரு விக்ரம் நாயருக்கும், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ராஜாராம் அவர்களுக்கும் பொன்னாடை, மாலை எதுவும் போடாமல் பழக்கூடைகள் கொடுத்து கௌரவித்தது மிகச் சிறப்பு. மற்ற அமைப்புகளும் மாலை, பொன்னாடைகள் தவிர்த்துவிட்டு பழக்கூடைகள் கொடுத்தால், சிறப்பு விருந்தினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தத்தில் இந்நிகழ்ச்சி ஒரு மாறுப்பட்ட சிந்தனையில் உதித்த நல்ல முயற்சி.
#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018