வாங்க பழகலாம் தமிழ்

பாலர் பள்ளி குழந்தைகளுக்கு சிண்டா(SINDA), லின் (LYNN – Literacy and Numeracy) என்ற வகுப்பு நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தையும், எண்களையும் ஒரு இனிய கற்றல் அனுபமாக சொல்லிக் கொடுத்து அவர்களை தொடக்கநிலை பள்ளிக்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை வசதி குறைந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தம் நோக்கத்துடன் இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் நடத்த
சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கூறினார். அதனுடன் குழந்தைகளுக்கு தமிழும் சொல்லி கொடுக்க வேண்டும் என என்னிடம் அதற்கான திட்டத்தை தயார் செய்ய சொன்னார். கடந்த ஆண்டு மத்தியில் இத்திட்டத்திற்காக முயற்சிகளை தொடங்கினோம். சிண்டாவின் ‘லின்’ வகுப்புகள் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் என்பதால் கடந்தாண்டு தொடங்க முடியாமல் போனது ஒரு காரணம். இந்தாண்டு கண்டிப்பாக தொடங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதன்படியே, இன்றிலிருந்து பாலர் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், இதில் சில குழந்தைகள் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. சிலர் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். சிலர் வீட்டில் ,ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராகவோ இல்லை வீட்டில் சுத்தமாக தமிழ் பேசாதவர்களாகவுள்ள குடும்பங்களிலருந்து வரும் குழந்தைகள். பாலர்பள்ளியில் தமிழ் படிக்காதவர்களும் உண்டு. இவர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லித்தரும் வகுப்பு நடத்துவதில் பேரானந்தம். தமிழ் படிக்காத, தெரியாத குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதை தீவு முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். அதன் மாதிரி வடிவம்தான் இந்த திட்டம்.

சரி, இது எப்படி சாத்தியமானது. நல்லவர்கள் நம்மை சுற்றி இருப்பின் நல்ல செயல்கள் செய்வது சுலபம். முதலில், “இருமொழியின் கற்றல் அவசியம், சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தால்தான் மொழியை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்” என தமிழ்சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்ன எங்கள் அடித்தள ஆலோசகர் குமாரி இந்திராணி ராஜாவுக்கு நன்றி. அதற்கான முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்த எங்கள் இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு கோபால், துணைத்தலைவர் திரு GanGanesan Kulandaiன் சமூகபணியில் வழிகாட்டியாக இருந்து இந்த திட்டத்திற்கு என் கூடவே பயணித்து ஆதரித்த RadRadhakrishnan Menon Sreelatha Menon்கிளுக்கு நன்றி. நான் இந்த திட்டம் தொடர்பாக என்ன உதவி கேட்டாலும் உடனிருந்து செய்த அனைத்து அடித்தள தலைவர்களுக்கும் நன்றி.

சரி, இப்படி ஒரு வகுப்பு நடத்த வேண்டுமே, எங்கே நடத்துவது என்று இடத்தை தேடியபோது குடியிருப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள இடத்தை தேடினோம். ஜங்ட தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். உடனே ஒத்துக்கொண்டார்கள். அதில் சில நிபந்தனைகளும் உண்டு. பள்ளிக்கூட பைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டும். காலணிகள் அணிந்து வர வேண்டும் என்பது சில. அவற்றை எப்படி வாங்குவது என யோசித்த போது, எங்கள் ஆலோசகர் அதற்கும் ஏற்பாடு செய்தார்.

யாரை வைத்து பாடம் எடுப்பது என தெரியவில்லை. எனக்கு தெரிந்த நண்பர்கள், ‘பாடம் எடுக்கிறேன்’ என ஒப்புதல் அளித்த நண்பர்கள்கூட நாள், நேரம், இடம் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக, மறுத்துவிட்டனர். உடனே ஒரு யோசனை தோன்றியது, நீ ஆன் பல்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதில் பட்டப்படிப்பு கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அதில் உள்ள மாணவர்களை வைத்து பாடம் எடுத்தால் என்ன? அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி களமாக இருக்கும் என அதில் முதலாண்டு முடித்திருக்கும் Naseemaவிடம் கேட்டேன். அவருக்கு இயலாத சூழ்நிலையை விளக்கிய அவர் உம்ராவிற்காக ஊருக்கு சென்ற இடத்திலும் அங்கிருந்தபடியே உடனடியாக தன்னுடன் பயிலும் நண்பர்களை அணுகி நான்கு பேரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் நால்வரும் உடனே தமிழ் சொல்லித்தர (தொண்டூழியராக) சம்மதித்தார்கள்.

சரி, இப்போ இடம் தயார், ஆசிரியர்கள் தயார். அடுத்து பாடத்திட்டம், பயிற்சிதிட்டம் இதை எப்படி தயார் செய்ய என நினைத்த போது, நமக்கு உதவியவர் திருமதி பத்மாவதி இராஜேந்திரன். சரஸ்வதி பாலர்பள்ளியில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் மூத்த தலைமையாசிரியராக இருந்தவர். அவரை சந்தித்து திட்டத்தை பற்றி கூறியவுடன் உடனே பாடத்திட்டம், குழந்தை பாடல்கள் என எல்லாம் தயார் செய்து எனக்கு அனுப்பி வைத்தார்.
கூடுதலாக ஒரு உதவி வேண்டும், வகுப்பு நடத்தவிருக்கும் மாணவ/ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை நடத்தவேண்டும் என கூறினேன். அதற்கும் ஒத்துக்கொண்டு, நான்கு ஆசிரிய-மாணவர்களுக்கும் எப்படி பாடம் எடுக்க வேண்டும், குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளலாம், அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என தன் அனுபவத்தை விடுமுறை நாளாக இருந்தும் நேற்று காலை, மிக அழகாக பட்டறையில் விளக்கினார். அதை கேட்ட எனக்கே குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என ஆசை வந்தது(இதை வீட்டில் வந்து என் மனைவியிடம் சொல்லி வாங்கிகட்டிக்கொண்டது என் பசங்களுக்கு தெரியவேண்டாம்:). அதோடு மட்டுமில்லாமல், இந்த தமிழ் வகுப்பு திட்டத்துக்கு திருமதி பத்மாவதி வழிக்காட்டியாகயிருந்து நடத்தித்தர சம்மதித்தார்.

அடுத்து புத்தகம். தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஊருக்கு போன ஆசிரியர் GanGanga Baskaranம், குழந்தைகளுக்கு புத்தகம் வேண்டும் என சொன்னவுடன், அங்கிருந்த குறுகிய காலத்திலும், அந்த சூழ்நிலையிலும் எங்களுக்காக குழந்தைகளுக்கு பல புத்தகங்களை வாங்கி வந்தார். அவருக்கு நன்றி.

இந்த தமிழ் நிகழ்ச்சியை குறித்து அறிவிக்க துண்டறிக்கை தேவை என சிலரிடம் சொன்னேன். அவர்களுக்கு முடியாத சூழலில், நண்பர் Sethuraman Srinivasanன்னேன். உடனடியாக அவரே அழகாக வடிவமைத்து கொடுத்தார். சேதுவிற்கு நன்றி.

சரி, இப்போ எல்லாம் தயார். படிக்க பசங்க வேணுமே. வழக்கம் போல் வீடு, சந்தை, கடைகள் என எல்லா இடங்களிலும் சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு உதவிய அடித்தள தலைவர்கள் Achi Kumar MnVenkatesan Karthikeyini Sivakolunthu VenkatesanrJeremy AruldossnKannappan Mohan அனைவருக்கும் நன்றி. மூன்று மணி நேரம் தொடர்ச்சியா குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டுமே அவர்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமே என்றபோது, அடித்தள தலைவர்கள் அனைவரும் நாமே இந்தாண்டு முழுவதும் அதை கொடுக்கலாம் என செலவை பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களோடு, நானும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு வயதான அடித்தளத் தலைவர் சொல்ல, சரி கற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படியே குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், சரியாக அவர்கள் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும், அதற்கு உதவ முடியுமா என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.

சரி, இதையெல்லாம் தாண்டி முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது சிண்டாவிற்கும்(SINDA), அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு, அதன் குடும்ப நலத்துறை அதிகாரி திருமதி ஜெயந்தி மற்றும் அவரது குழுவிற்கும்தான்.
இந்த திட்டம் குறித்து திரு அன்பரசுவை சந்தித்து பேசியபோது எனக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார். சிண்டாவும் இந்த மாதிரியான திட்டத்தை தயார் செய்து வருகிறது இருந்தாலும் முதலில் நீங்கள் தொடங்குங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார். திரு பரதனிடம் பேசியபோது தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிண்டா சம்பளம் வழங்க தயார் என தெரிவித்தார். இப்படி மாணவ-ஆசிரியர்களுக்கு ஊதியம், பட்டறை நடத்த மதிப்பூதியம், திட்டத்துக்கு ஆதரவு என திரு Anbarasu Rajendran தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி, உதவிகள் புரிந்து இந்த தமிழ்வகுப்பு நடத்துவதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறார் (தமிழில் சிண்டாவின் துண்டறிக்கை கொடுத்ததற்கும் நன்றி).

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் தொடங்கிய இந்நாளில் தமிழ்மொழி கற்பிக்க அதுவும் தமிழ் தெரியாத சில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நீண்டநாள் திட்டத்தை தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்தியவர்களை திரும்பி பார்க்கையில் இதில் எத்தனை பேர் பங்கெடுத்திருக்கிறார்கள் என ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

என் மீது நம்பிக்கை வைத்து அன்போடு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

   

       

          

 

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் 2018

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் இந்த வார இறுதியில் தொடங்கவிருக்கிறது. முதலில் இதை ஒருங்கிணைக்கும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுக்கும் மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்,இந்திய மரபுடைமை மையம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலைக் கூடங்கள், அமைச்சு, தேசிய நூலகம், மீடியாகார்ப், ஒலி 96.8, தமிழ் முரசு மற்றும் சமூக ஊடகங்கள் என ஒரு மாதம் நிகழ்வை நடத்தவிருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்🙏🙏🙏

தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மீடியாகார்ப் வளாகத்திலுள்ள எம் ஈ எஸ் அரங்கில் மாலை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 58 நிகழ்ச்சிகள். கடந்தாண்டை காட்டிலும் 7 நிகழ்ச்சிகள் அதிகம். இந்தாண்டு இசை,நாடக,நாட்டிய நிகழ்ச்சிகள் கூடுதலாக உள்ளன. இவை இளையர்களை, மாணவர்களை மட்டுமில்லாமல் கலை ஆர்வமுள்ள பலரையும் ஈர்க்கும்.

புதிதாக பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் 2 நிகழ்ச்சி, 2 முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி, இசைப் பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி என பத்துக்கும் மேற்பட்ட புதிய நிகழ்ச்சிகள் இந்தாண்டு அட்டவணையில் இடம்பிடித்துள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சு & கல்வி அமைச்சு நடத்தும் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றும் உள்ளது. இவை பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். TED Talk என்ற பல்வேறு துறைகளிலிருந்து பல தலைப்புகளில் பேசப்பட்டு அது காணொளி மூலம் உலகமெங்கும் சென்றடைய நடத்தப்படும் நிகழ்வு போன்று தமிழில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழர் பேரவையின் ‘உரைக்களம்’ , என்டியு முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ‘இளவேனில்’. நிகழ்வை காணொளியாக்கி வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இதே போல் ‘டோஸ்மாஸ்ட்ர்ஸ் இண்டர்நேஷனல்’லின் தமிழ் பேச்சாளர் மன்ற போட்டிகள் என தமிழ் மேடை பேச்சை மேம்படுத்தும் நிகழ்வுகளும் உள்ளன. இது தவிர மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு கூடியுள்ளன. இலக்கிய விழாக்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கமாக தமிழ்மொழி விழா முடிந்த அடுத்த நாளான மே 1ஆம் தேதி நடைபெறும் பட்டுக்கோட்டையார் நிகழ்ச்சி இம்முறை தமிழ்மொழி விழாவுக்கு புதிய வரவு, மே 1ஆம் தேதியும் நடைபெறுமா என்று தெரியவில்லை. இணையத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ஆம் வரை தமிழ் கவிதைகள் எழுதும் நிகழ்வும் இளையரால் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சி அட்டவனையில் இந்த முறை நான் வழக்கமாக செல்லும் பல நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை.
திருக்குறள் விழாவும், என்டியு மாணவர்களின் ‘பார்வை 2018’ நிகழ்வும் ஒரே நாள், ஒரே நேரம்.
ஏப்ரல் 7ஆம் தேதி காலை 4 நிகழ்வு, அதில் என்யுஎஸ் மாணவர்களின் நிகழ்வும் ஒன்று. அன்று வேறு ஒரு முக்கிய நிகழ்வு இருப்பதால் எதற்கும் செல்ல முடியாது.
அன்றைய தினம் மாலை சொற்களம், முத்தமிழ் விழா இரண்டும் உள்ளன. எதை தேர்வு செய்ய எனத்தெரியவில்லை.
ஏப்ரல் 8ஆம் தேதி மாலை தமிழர் திருநாள், திரு எம் இராமசந்திரனின் பட்டிமன்றம். நண்பருக்காக நம் தேர்வு பட்டிமன்றம்தான்.
ஏப்ரல் 14ஆம் தேதி காலை ஒரே வளாகத்தில் இரண்டு நிகழ்ச்சி, அதனால தப்பிச்சோம். இரண்டையும் மாத்தி மாத்தி பார்க்கலாம் 🙂
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ச்சியில் அதிக நேர மோதல்கள் இல்லை என்பதால் எனக்கு தேர்ந்தெடுப்பது சுலபமே.

ஒரே மாதத்தில் அதுவும் வார இறுதியில் மட்டும் 58 நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது மிக கடினமே. என்னுடைய ஒரே வருத்தம் இந்த முறை என்டியு, என்யுஎஸ் நிகழ்வுகளுக்கு செல்ல முடியாமல் போனதே.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்மொழி விழா சூறாவளி சிங்கையின் மத்திய பகுதியில் குறிப்பாக உமறுப்புலவர் நிலையத்தில் மய்யம்(!) கொண்டுள்ளது. தமிழ்மொழி மாதத்தில் 21 முறை அங்கு பலத்த காற்றுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். அதை சுற்றி 3 மைல்களுக்குள்ள பகுதிகளான இந்திய மரபுடைமை நிலையத்தில் 8 முறையும், தேசிய நூலகத்தில் 6 முறையும், குட்டி இந்தியா வட்டாரத்தில் 4 முறையும் இடியுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். இரு முறை வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு கருணை மழை பொழிந்துவிட்டு பின்னர் கிழக்கிலும் ஒரு முறை பொழியும். ஆங்காங்கே தீவின் மற்ற பகுதியில் ஒரு சில முறை பெய்யும் தமிழ் மழை மற்ற ‘மேடான’ பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இருந்திடவிடாமல், மழை பெய்யும் மற்ற இடங்களுக்கு சென்று தமிழ் மழையில் நனையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். மாதக் கடைசியில் முடிந்துவிடும் இச்சூறாவளி நமக்கு அடுத்த ஓராண்டிற்கான தமிழ் தாகத்தை தீர்த்து வைக்குமா என்று பார்க்கலாம்:)

தமிழ்மொழி மாதத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் இந்த ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகள் தவிர்த்து வேறு தமிழ் நிகழ்வுகளை ‘தமிழ் மொழி விழா’ என்று தலைப்பிட்டு நடத்தி அங்கு செல்ல இருப்பவர்களை குழப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மற்ற தமிழ் நிகழ்வுகளை குறைத்து நாம் எல்லோரும் ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகளுக்கு சென்று ஆதரவு தெரிவிப்போம்.

வகைப்படுத்தப்பட்ட நிகழ்வு விவரம்
————————————————-
பல்கலைகழக மாணவர்கள்/ பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் நிகழ்ச்சி
1. பார்வை 2018(3)
2. களம் (11)
3. என்ன செய்யலாம் (30)
4. ஜிங்கிள் ஜிகிள் (33)

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பள்ளி நிகழ்ச்சிகள்
1. கிழக்குக் குழுமம் 5 நடத்தும் தமிழ்மொழி விழா 2018
2. இராஃபிள்ஸ் தமிழ் இலக்கியப் போட்டிகள்
3. 30ஆம் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு
4. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் – கற்றதும் பெற்றதும்

மாணவர்களுக்காக மட்டுமே நடத்தும் நிகழ்ச்சி/போட்டிகள்
1. பரமபதம் (1)
2. மாகோ – தேசிய தமிழ் கதைசொல்லும் போட்டி(6)
3. இயற்கையோடு பயணம்(7)
4. சித்திரம் பேசுதடி (9)
5. பாடல், ஆடல், விளையாடுதல் மூலம் தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை (10)
6. சொற்களம் 2018(12)
7. சொல், சொல்லாத சொல் (20)
8. வாங்க தமிழில் பேசலாம்(21)
9. வண்ணத்தமிழ் 2018(32)
10. உரைக்களம் (34)

தொழில்நுட்ப, தொழில்/நிதி, மொழி சார்ந்த கற்றல் நிகழ்ச்சிகள்
1. மின்னியல் தமிழ் – புத்தாக்க அணுகுமுறை (22)
2. தமிழ் மொழிபெயர்ப்பு முகாம் 2018 (43)
3. தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும்(44)
4. தமிழ் மின்னிலக்க கற்றல் பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 2)

இலக்கிய விழாக்கள்
1. திருக்குறள் விழா (4)
2. முத்தமிழ் விழா (13)
3. உலகம் உன்னுடையது (23)
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி 2018(26)
5. இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்(27)
6. இளம் பிறை (28)
7. பாவேந்தர் 128 – சுழலும் சொற்போர்(31)
8. உமறுப் புலவர் அரங்கம் (35)
9. தமிழர் அறிவியல் (36)
10. தமிழவேள் விழா(38)
11. பர்வீன் சுல்தானா வழங்கும் ‘வெற்றி கொடிக் கட்டு’(40)
12. கவிமணம் (41)
13. கவிதைத் திருவிழா (48)

தமிழ் நாடகங்கள்
1. ஆர்ட்டதோன் (நாடக போட்டி) (2)- $5
2. ஔவையார் (5) – $25 /$15(early bird)
3. சிங்கப்பூர் மாப்பிள்ளை (29)- $15
4. ஜிங் ஜக் நாடகம் (39)
5. பீடம்-(42) (இலவசம்)
6. தமிழும் கலையும் – இயல், இசை & நாடகம் 2018(46)

இசை/நாட்டியம்
1. மழலையும் பாரதியும் (8)
2. குறுந்தொகை -இசை நிகழ்ச்சி(18)
3. இசை வழி கல்வி (19)
4. தமிழும் இசையும் (24)
5. கண்ணதாசன் ஒரு சகாப்தம் (37)
6. மன்னும் மகளும் – கண்ணகி வாழ்வில் ஐந்தினை – நாட்டிய நாடகம் (45)
7. கவியும் நாட்டியமும் (49)

பொழுதுபோக்கு/மற்ற நிகழ்ச்சிகள்
1. பழங்களே மருந்து(14)
2. தமிழர் திருநாள் விழா (15)
3. பட்டிமன்றம் (16) – $10
4. தமிழும் சுவையும் (17)
5. இளவேனில் (25)
6. தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் (47)
7. பொறுப்பாளர் சுற்றுலா: சின்னங்களும் வரி வடிவங்களும் – கைவினையின் மொழி (மரபுடைமை நிகழ்ச்சிகள் 1)
8. நகைச்சுவை பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 3)
9. குறும்படம் திரையிடல் (மரபுடைமை நிகழ்ச்சிகள் 4)

முகநூலில் கவிதை எழுதும் நிகழ்வு
1. சிங்பொரிமோ – தமிழ்(50)

பங்கு பெறும் வெளியூர் பிரபலங்கள் (எனக்கு தெரிந்த வரை)
1. முனைவர் பர்வீன் சுல்தானா (இரு முறை)
2. திரு இறையன்பு ஐஏஎஸ்
3. இயக்குனர் விசு
4. திரு ஜி விஸ்வநாதன்
5. கவிஞர் சிற்பி
6. திரு பாரதி கிருஷ்ணகுமார்
7. திரு பாண்டித்துரை (இரு முறை)
8. பேராசிரியர் எம் இராமச்சந்திரன்
9. திரு கே சிவகுமார்
10. திரு மோகனசுந்தரம்
11. பாடகர் வீரமணி ராஜூ
12. திரு ஆளுர் ஷா நவாஸ்

பி.கு: தகவல்கள் சில முழுமை பெறாமல் இருக்கலாம்.

#TLF2018

www.tamil.org.sg

மகளிர் தினம் வாழ்த்துக்கள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு, கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு… அட போங்கப்பா…..இன்னைக்கு பெண்கள் தினமாம்….நம்ம பெண் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லி பதிவ போட்டு இன்றைய நாளை பயனுள்ளதாக்குவோம்….:)

Movie Screening at NLB

இளையர்களை, அவர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுதல் எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் 20 நிமிட காட்சி வடிவில் ‘கொலுசு’ என்ற தலைப்பில் குறும்படமாக அழகாக சொல்லியிருக்கிறார் இளையரான திரு Saleem Hadi . இப்படத்தின் கதாசிரியர் செல்வி Piriyadarisiniயின் உயிரோட்டமுள்ள எழுத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சுமார் இருபது நிமிடம் ஓடும் இந்த ‘கொலுசு’ குறும்படம் பல உலக திரைப்படவிழாக்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நியூயார்க்கில் நடந்த ‘வின்டர் திரைப்பட விழா’வில் 650 படங்களை பின்னுக்கு தள்ளி ‘கொலுசு’ திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சரி இப்ப எதுக்கு, ‘கொலுசு’ பத்தி சொல்றேனு கேக்குறீங்களா?

கடந்தாண்டு இறுதியில ஏதாவது ஒரு நல்ல தமிழ்படம் போட்டு காண்பித்து அதிலுள்ள கருத்துகளை, அதன் தாக்கத்தை குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தி, அதன் மூலமாக குழந்தை வளர்ப்பு, கல்வி, குடும்பம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா எங்களிடம் கூறினார். சிண்டாவின் (SINDA) உதவியுடன் அப்படி ஒரு நிகழ்வை நடத்த நாங்களும் ‘அப்பா’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற படங்களை தேர்வு செய்யலாம் என்று எண்ணியிருந்தோம். அதற்கான உரிமம், திரையிட தேவையான ஒளிஒலி அமைப்பு போன்றவை குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

இதற்கிடையே, கடந்த மாதம் சிண்டாவின் புதிய துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, நண்பர் திரு அன்பரசு அவர்களை சந்தித்து இது குறித்து பேசிய போது உள்ளூர் இயக்குனரின் ‘கொலுசு’ படத்தை திரையிட யோசனை தெரிவித்தார். அதற்கான ஏற்பாட்டையும் சிண்டாவே முன்னெடுத்து செய்தது.

சரி, இந்த நிகழ்வை எங்கே நடத்தலாம் என்று சில இடங்களை பார்த்த போது, சட்டென்று என் நினைவுக்கு வந்தது சிங்கப்பூர் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் எடுப்பது குறைந்து வருகிறது என்று நூலகத்தின் தமிழ் பிரிவு தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நண்பர் திரு அழகியபாண்டியன் கூறியது. உடனே அவரை தொடர்பு கொண்டு தமிழ் புத்தகம் எடுக்க ஒரு யோசனை உள்ளது அதற்கு தேசிய நூலகத்ததின் இடத்தை ஒரு நிகழ்வுக்கு தர வேண்டும் என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.

படத்தோடு சேர்த்து குழந்தை வளர்ப்பு, பதின்ம வயதினரை புரிந்து கொள்வது எப்படி என திரு கணேஷ் அவர்களை கொண்டு நல்ல ஒரு உரையுடன் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்தது சிண்டா.

இப்படியாக, ஒரே நிகழ்வில் குறும்படம், அது குறித்து கலந்துரையாடல்,
பெற்றோர்கள் பதின்ம வயதினரை புரிந்து கொள்வது பற்றி உரை, நூலகத்தில் புத்தகம் இரவல் பெறுவது, தேசிய நூலகத்தின் ‘அரிய தொகுப்புகளை’ சுற்றி பார்ப்பது, குழந்தைகளுக்கு வினா விடை போட்டி, கைவினை பொருள் செய்வது என அனைத்தையும் தஞ்சோங் பகார், தியாங் பாரு இந்திய நற்பணி செயற்குழுக்கள், சிண்டா, தேசிய நூலகத்துடன் இணைந்து கடந்ந ஞாயிறு, 18 மார்ச் மதியம் 3 முதல் 6 வரை நடத்தியது.

இந்த நிகழ்வு வசதி குறைந்த குடும்பங்களுக்காக ஏற்பாடு செய்திருந்தாலும் மற்ற சிலரும் பங்கேற்றனர். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பார்களின் வீடுகளுக்கு சென்று
நிகழ்வு பற்றி எடுத்துச்சொல்லி, பதிவு செய்தோம். மூன்று இடங்களிலிருந்து பேருந்தும் ஏற்பாடு செய்திருந்தோம். பதிவு செய்தவர்களில் வரமுடியாமல் போன்றவர்களும் உண்டு.

ஆனால் குழந்தைகள், பதின்ம வயதினர், பெற்றோர்கள் என வந்திருந்த அனைவரும் ‘கொலுசு’ குறும்படத்தை கண்டு மகிழ்ந்தனர். தத்தம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் சில கேள்விகள் கேட்டனர். அதிலும் இளையர்கள் தங்கள் பார்வையை, தங்கள் பிரச்சினையை கலந்துரையாடலில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். பின்னர் அவர்களுக்காக அந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை தேர்வு செய்து எடுத்துக்கொண்டனர். சுமார் 155 தமிழ் புத்தகங்கள் ஒரே நாளில் இரவல் பெற்றது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. திரு அழகியபாண்டியனுக்கும் தேசிய நூலகத்திற்கும் இதில் மகிழ்ச்சி, எனக்கும்தான்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு வந்திருவர்களுக்கு புரியும்படி பிள்ளை வளர்ப்பின் யதார்த்த நிலையை எடுத்துக்கூறினார்.

செல்வி நிர்மலா, எப்படி நூலகத்தின் நூல்களை நம் கைப்பேசி வழி நூலக செயலி (NLB Mobile) மூலம் நாமே பதிவு செய்து எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கினார். சிறுவர்களை, குழந்தைகள் பிரிவுக்கு கூட்டிச் சென்று பயனுள்ள தகவல்கள் வழங்கினார்.

அடுத்து 11,13 தளங்களில் உள்ள ‘அரிய தொகுப்புகள்’ அடங்கிய ‘ரேர் கேலரி’ என்ற இடங்களை குடியிருப்பாளர்கள் பார்த்தனர். இது சாதாரணமாக பொதுமக்கள் செல்ல முடியாது. இதில் ‘சிங்கையிலிருந்து விமானம் மூலம் 8 நாளில் லண்டன் செல்லலாம்’ என விளம்பரம் அடங்கிய அந்தகால புத்தகம் உட்பட அரிய தகவல்கள் அடங்கிய பல புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.

அனைவருக்கும் ருசியான பல உணவு வகைகள் அடங்கிய அருமையான ஒரு ‘ஹை டீ’ மாடி தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அத்தனை அடித்தளத் தலைவர்களுக்கும், சிண்டாவுக்கும், அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதனுக்கும், நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு Anbarasu, இந் நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவிய, ஒருங்கிணைத்த சிண்டாவின் அதிகாரி திருமதி ஜெயந்தி, செல்வி ஜூனைடாவுக்கும், இடம் கொடுத்து நல்ல ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த தேசிய நூலகத்துக்கும், அதன் தமிழ் பிரிவுத் தலைவர் திரு Azhagiya Pandiyan , நூலகத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குடியிருப்பாளர்களுக்காக வந்திருந்து உதவிய நூலக அதிகாரி செல்வி Nirmala, திருமதி மகேஸிற்கும் மிக்க நன்றி.

இப்படி சிறப்பாக, முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சிண்டாவுக்கும், தேசிய நூலகத்துக்கும் மாதிரி நிகழ்வு, எங்களுக்கும்தான்.

இந்நிகழ்வில் சிலர் முதன்முறையாக தேசிய நூலகம் வந்திருந்தனர். பலர் பல ஆண்டுகளுக்கு பிறகு அன்று புத்தகம் இரவல் பெற்றிருந்தனர். தமிழ் பேசவோ, எழுதவோ தயங்கும் பலர் அங்கு வந்திருந்து ஒரு நல்ல அனுபவத்தை பெற்றனர். வந்திருந்த பெற்றோர்களுக்கு குறும்படமும், கலந்துரையாடலும் ஒரு மாற்றுச் சிந்தனையை தூண்டியது. குறிப்பாக சில குழந்தைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது. அவர்கள் வாசிப்பு பதக்கத்தையும், அனுபவத்தையும் மேம்படுத்தும்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், நிகழ்ச்சி முழுக்க தமிழில் நடந்தது. பேச்சாளர்கள் அனைவரும் தமிழலேயே உரையாடினார்(இது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்). ஒரு நல்ல பயனுள்ள தமிழ் நிகழ்வை நடத்தி முடித்த மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

முகநூல் ஜோடி

முகநூலில் தங்களின் அடுத்த ஜோடி முதல் அடுத்த ஜென்மம் வரை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு ஜோசியம் சொல்லும் ஆப்(பு)களை திறந்து பார்த்து தங்கள் ஜாதகத்தை தாரை வார்த்தவர்களே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்ற ‘டேட்டா’ கொள்ளையர்களின் வாடிக்கையாளர்கள்