ஆண்டாள் : பக்தா, ஆமாம் பூலோகத்தில் யாரோ ஒரு கவிஞர் என்னை பத்தி தவறாக பேசினாராமே.
பக்தன் : ஆமாம், தாயே. யாரோ ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி அவர் சொன்னதாக தகாத சொற்களை பயன்படுத்தி பேசிவிட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தில் பலர் இந்த மாதிரி உளறிக்கொட்டியிருக்கிறார்கள்.
ஆண்டாள் : அதானே, அந்தக் காலத்தில் என் பெருமானை அவர்கள் தூற்றாத மேடையில்லை. ஆனால், அதனால் எனக்கோ எம்பெருமானுக்கோ ஒரு இழுக்கும் இல்லையே பக்தா. நம்பிக்கையில்லாதவர்கள்தானே பேசினார்கள். சரி, பூலோகத்தில் என்னை வைத்து இதனால் ஏதும் சண்டை நடக்கிறதா?
பக்தன் : ஆமாம், தாயே. இதுதான் வாய்ப்பு என்று பத்தாஸ் கூட்டம் ஒரு பக்கம் தரமற்று அந்த கவிஞரை கழுவி ஊத்துகிறது. இன்னொரு பக்கம் கடவுள் மறுப்பாளர்கள் கருத்து சுதந்திரம் இல்லையா? அவர் ஆய்வாளரைதானே மேற்கோள் காட்டினார் என்று வக்காளத்து வாங்குகிறது. இதில் அரசியல்வாதிகள் வேற வாக்கு வங்கிக்காக உள்ளே இறங்கியுள்ளனர்.
ஆண்டாள் : சரி, முகநூல்ல போராளிகள் என்ன சொல்கிறார்கள்?
பக்தன் : அத ஏன் கேட்கிறீர்கள் தாயே…நம்ம ராசாவ மிஞ்சும் வைகையில சில பக்தாஸ் தரமற்று தூற்றுகிறார்கள். அவர்களின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. பதிவு போட தைரியமில்லாதவர்கள் அந்த கேவலமான பதிவுகளில் ‘கமன்ட்’ போட்டு திருப்தியடைகிறார்கள். “இதுவே வேறு கடவுளா இருந்தா சும்மா இருப்பாங்காளா”னு வழக்கம் போல் தூண்டி விடுகிறார்கள். இந்த பக்கம் ஆதரவு கூட்டம் ‘இதிலென்ன தப்பு’ என ஒரு சொம்பை தூக்கி கொண்டு பஞ்சாயத்து கூட்டுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கவிஞரையும் பிடிக்காமல் காவியையும் பிடிக்காமல் போனவர்கள் சொம்பை எந்தப் பக்கம் வைக்க என தடுமாறுகிறார்கள்.
ஆண்டாள் : சரி, உன்னோட கருத்து என்ன?
பக்தன் : இதல்லாம் அப்பாவி இந்துக்களை கிளப்பிவிட்டு அவர்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்த இல்லுமினாட்டிஸ் பண்ற சதி வேலைனு புதுசா ஒன்ன கிளிப்பி விடலாம்னு இருக்கேன் தாயே….
ஆண்டாள் : அட பக்தி பழமே, இதெல்லாம் விட்டுவிட்டு, கடவுளை நம்பும் நீ, மனதை ஒரு நிலைப்படுத்தி உன்னால் முடிந்த வரை முடியாதவர்களுக்கு உதவி செய்.
பக்தன் : சரி தாயே, இன்றைக்கு கூடாரவள்ளி. உனக்கு பொங்கல் படைச்சிருக்கேன், சிறப்பு பூசை செய்திருக்கிறேன், என்னுடைய பக்தியை ஏற்று இந்த கூட்டத்திடமிருந்து என்னை காப்பாற்று தாயே….