தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்🙏🙏🙏

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்…

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா!

மேலே உள்ள வரிகள் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசத்தில் உள்ளது.

நித்தி மற்றும் சிஷ்ய கோ(கே)டிகள்

நித்தி : சிஷ்ய கோ(கே)டிகளே நம்மளக்கு வசமா ஒரு ‘மேட்டர்’ சிக்கியிருக்கு….

கோ(கே)டிகள் : ‘மேட்டரா’…..? என்ன சுவாமி…புதுசா?

நித்தி : ச்சி அது இல்ல, கவிப்பேரரசு ஏதோ சொன்னாராம், அத வச்சு நம்ம ஏதாவது பரபரப்பா பண்ணலாம். என்ன பண்ணுங்க, முதல்ல நம்ம ‘இளவரசி’யை வச்சு அவர அசிங்கசிங்கமா திட்டி பேசச்சொல்லி ஒரு காணொளி வெளியிடுங்க.

கோ(கே)டிகள் : ஏன், ‘இளவரசி’ சுவாமி ?

நித்தி : அவ பேசுனாதான், மக்கள் ஏதோ அழகான பொண்ணு பேசுதேனு பாப்பாங்க, அது கெட்ட வார்த்தை பேசும்போது இன்னும் எஃப்க்ட் கூடும், அதான்.

கோ(கே)டிகள் : உள்ள பேசுறமாதிரியே வெளியேவும் பேசுனா, நம்மள தப்பா நினைக்க மாட்டாங்களா சிவாமி.

நித்தி : இப்ப மட்டும் என்ன நம்மள நல்லவங்கனா நினைக்குறாங்க, நம்ம லீலைதான் எல்லா ‘சேனல்’லையும் ஓட்டுனாங்களே..

கோ(கே)டிகள் : அது சரி சுவாமி, நம்ம மேல ஏற்கனவே பல கேஸ் இருக்கு இப்ப புதுசா ஏதாவது பிரச்சனை பண்ணி, திரும்ப உள்ள பிடிச்சு போட்றபோறாங்க.

நித்தி : வாய்ப்பே இல்லை, இப்ப கர்நாடகாவுல தேர்தல் வரப் போகுது. நம்மள பிடிச்சா, பிஜேபி அத வச்சு அரசியல் பண்ணி ஆட்சிய பிடிச்சடும்னு பயத்துல காங்கிரஸ் நம்ம மேல கைய வைக்காது, கவலப்படாதீங்க. தமிழ்நாட்டுல ஆட்சி நடக்குதானே பலருக்கு சந்தேகமா இருக்கு. அதனால் நம்மள தூக்கி நிறுத்திக்க இதுதான் சரியான சமயம்.

கோ(கே)டிகள் : சரி, இந்து மக்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வருமா சுவாமி?

நித்தி : ரொம்ப சிம்பிள், சம்பந்தமே இல்லாம இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் திட்டுங்க. பக்தாஸ் கூட்டம் நம்ம பக்கம் சாய்ஞ்சிடும். அப்புறம் நம்மளுக்காக அவங்க பேசுவாங்க.

கோ(கே)டிகள் : ஆனா, இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களுக்கும் நம்ம மேல கோபம் வந்தா என்ன பண்றது?

நித்தி : அது வரணும். அப்பத்தான் இந்து மதத்தின் ஒட்டு மொத்த குத்தகைகாரங்க நாமதான்னு ஒரு ‘பில்டப் டெவலப்’பாகும். வேற எந்த இந்து அமைப்பும் இது வரை தீவிரமா இறங்கல, அதனால நாம இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்து மதத்தின் காவலர்கள் நாமதான்னு சொல்லி தினமும் ஒரு நாலு காணொளி போடணும்.

கோ(கே)டிகள் : இதனால, நிறைய எதிர்வினைகள் வருமே சுவாமி?

நித்தி : வரட்டும், அது தானே நமக்கு வேணும். நம்மள எல்லாரும் திரும்பி பார்க்கணும். இலவசமா நமக்கு விளம்பரம் கிடைக்கணும். முக்கியமா, காணொளில திட்டும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கமா திட்டுங்க. எதாவது சந்தேகம்னா என்கிட்ட வாங்க, நா சொல்லித்தரேன்.

கோ(கே)டிகள் : பரவாயில்லை சுவாமி. அதெல்லாம் இந்த ஆசிரமத்தில நல்ல பழகிடுச்சி சாமி. ஆனா இந்த முகநூல் போராளிகள் நினைச்சா பயமாயிருக்கு சுவாமி.

நித்தி : அத பத்தி கவலப்படாநீங்க. அதுக்குதான் பெண்கள பேச சொல்றேன். அவங்க கவனம் வேற மாதிரி போய்டும். அடுத்து, சில படிச்ச கூட்டம், ”இதுல என்ன தப்பு இருக்கு, இப்ப யாரு கெட்டவார்த்தை பேசல? இரண்டாம் வகுப்பு பொண்ணு ‘F’ world use பண்ணுது” அப்படினு கிளம்பும். இன்னொரு கூட்டம், பெண்ணியம் பேசும். முக்கியமா இந்த நாத்திகர்கள எதிர்க்கிற கூட்டம் நம்மள நிறையவே ‘சப்போர்ட்’ பண்ணும். இன்னொரு கூட்டம் நம்மள வச்சு மீம்ஸ் போடும். அடுத்த ஒரு கூட்டம் நம்ம எத போட்டாலும் ‘share’ பண்ணும்.இப்படியே அவங்கள தொடர்ந்து ‘எங்கேஜ்’ பண்ணலாம்.

கோ(கே)டிகள் : சுவாமி, சரி பத்திரிக்கை, நியூஸ் சேனல் நம்மள கிழிகிழினு கிழிக்குமே சுவாமி.

நித்தி : அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் பண்ணாது. கவிஞர் சொன்ன விஷயத்தை இரண்டு நாள் போடுவாங்க, அப்புறம் வேற பிரச்சனைக்கு போய்டுவாங்க. ஆனால் நம்ம இந்த பிரச்சனைய வச்சதான் கல்லா கட்ட முடியும். அதனால அடுத்த ஒரு மாசத்துக்கு நமக்கு இதுதான் வேலை. ‘சேனல்ஸ்’ ரேட்டிங்க கூட்ட நம்மள போட்டி போட்டு காண்பிக்கும். அதனால், எல்லோரும் நம்ம சீருடைய போட்டுக்கோங்க. இரவு எத்தனை மணி ஆனாலும், சீருடையுடன், நல்ல ‘make up’ பண்ணி, நெத்தில பட்டை, கழுத்தல ருத்திராட்சை கொட்டை கண்டிப்பாக இருக்கணும். இதெல்லாம் விட மிக முக்கியம் உங்களுக்கு பின்னாடி என்னோட முழு உருவச் சிலை இல்லனா என்னோட முழு உருவக் கட்டவுட் இல்லை படம் இருக்கணும். நம்ம ஆசிரம ‘காமிரமேன்’, மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரையும் போர்க்கால அடிப்படையில வேலை பார்க்கச் சொல்லியிருக்கேன்.

கோ(கே)டிகள் : சரி சுவாமி, பணம் நிறைய செலவாகுமே…

நித்தி : அதுக்குத்தான், நம்ம வெளிநாட்டு பக்த கோ(கே)டிகள் இருக்காங்களே, அவங்க சரியான ஏமாந்தவனுங்க. நம்ம நாலு சமஸ்கிருத மந்திரித்ததை சொல்லி, ‘stress relief’, ‘inner awakening’, yoga, meditation அப்படி ஏதாவது சொன்னா போதும் பணத்தை வாரி இறைப்பாணுங்க…சொல்ல மறந்துட்டேன். அவன்களுக்கும் அந்த தமிழ் கெட்ட வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில எழுதி கொடுங்க….அப்படியே அந்த கெட்டவார்த்தைக்கு நடுவுல அங்கங்க மந்திரம், பாரதியார் பாட்டு, இந்து, சனாதன தர்மம் இப்படி மானே தேனேனு போட்டுகோங்க…அப்பத்தான் நம்மள பாமர மக்கள் நாலும் தெரிஞ்சவங்கனு நம்புவாங்க…

கோ(கே)டிகள் : இந்த ஆண்டாள் பத்தி ஏதாவது சொல்லனுமா சுவாமி?

நித்தி : நோ, நமக்கு ஆண்டாள பத்தி ஒன்னும் தெரியாது. அதனால் அந்த ‘சப்ஜக்ட்’குள்ள போக வேண்டாம். முதல்ல இரண்டு காணோளியில ஆண்டாள் பேர மட்டும் சொல்லுங்கள். அப்புறம் ஃபோகஸ் முழுக்க திட்றதுலதான் இருக்கணும். அந்த இராசாவே மிரண்டு போயிடணும். அப்புறம் இந்த கவியுக ஆண்டாளும் நானே, பெருமாளும் நானே என்பதை மறந்துடாதீங்க.

கோ(கே)டிகள் : நன்றி சுவாமி.
கேடியானந்தம்….

படம் : நித்தி செட்டு, சந்யாசி கதாபாத்திரங்கள் கடவுள் அரிதாரம் பூசிய போது எடுக்கப்பட்டது. இளவரசி பகத்திலிருந்து ஆட்டைய போட்டது.

 

ஆண்டாள்

ஆண்டாள் : பக்தா, ஆமாம் பூலோகத்தில் யாரோ ஒரு கவிஞர் என்னை பத்தி தவறாக பேசினாராமே.

பக்தன் : ஆமாம், தாயே. யாரோ ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி அவர் சொன்னதாக தகாத சொற்களை பயன்படுத்தி பேசிவிட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தில் பலர் இந்த மாதிரி உளறிக்கொட்டியிருக்கிறார்கள்.

ஆண்டாள் : அதானே, அந்தக் காலத்தில் என் பெருமானை அவர்கள் தூற்றாத மேடையில்லை. ஆனால், அதனால் எனக்கோ எம்பெருமானுக்கோ ஒரு இழுக்கும் இல்லையே பக்தா. நம்பிக்கையில்லாதவர்கள்தானே பேசினார்கள். சரி, பூலோகத்தில் என்னை வைத்து இதனால் ஏதும் சண்டை நடக்கிறதா?

பக்தன் : ஆமாம், தாயே. இதுதான் வாய்ப்பு என்று பத்தாஸ் கூட்டம் ஒரு பக்கம் தரமற்று அந்த கவிஞரை கழுவி ஊத்துகிறது. இன்னொரு பக்கம் கடவுள் மறுப்பாளர்கள் கருத்து சுதந்திரம் இல்லையா? அவர் ஆய்வாளரைதானே மேற்கோள் காட்டினார் என்று வக்காளத்து வாங்குகிறது. இதில் அரசியல்வாதிகள் வேற வாக்கு வங்கிக்காக உள்ளே இறங்கியுள்ளனர்.

ஆண்டாள் : சரி, முகநூல்ல போராளிகள் என்ன சொல்கிறார்கள்?

பக்தன் : அத ஏன் கேட்கிறீர்கள் தாயே…நம்ம ராசாவ மிஞ்சும் வைகையில சில பக்தாஸ் தரமற்று தூற்றுகிறார்கள். அவர்களின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. பதிவு போட தைரியமில்லாதவர்கள் அந்த கேவலமான பதிவுகளில் ‘கமன்ட்’ போட்டு திருப்தியடைகிறார்கள். “இதுவே வேறு கடவுளா இருந்தா சும்மா இருப்பாங்காளா”னு வழக்கம் போல் தூண்டி விடுகிறார்கள். இந்த பக்கம் ஆதரவு கூட்டம் ‘இதிலென்ன தப்பு’ என ஒரு சொம்பை தூக்கி கொண்டு பஞ்சாயத்து கூட்டுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கவிஞரையும் பிடிக்காமல் காவியையும் பிடிக்காமல் போனவர்கள் சொம்பை எந்தப் பக்கம் வைக்க என தடுமாறுகிறார்கள்.

ஆண்டாள் : சரி, உன்னோட கருத்து என்ன?

பக்தன் : இதல்லாம் அப்பாவி இந்துக்களை கிளப்பிவிட்டு அவர்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்த இல்லுமினாட்டிஸ் பண்ற சதி வேலைனு புதுசா ஒன்ன கிளிப்பி விடலாம்னு இருக்கேன் தாயே….

ஆண்டாள் : அட பக்தி பழமே, இதெல்லாம் விட்டுவிட்டு, கடவுளை நம்பும் நீ, மனதை ஒரு நிலைப்படுத்தி உன்னால் முடிந்த வரை முடியாதவர்களுக்கு உதவி செய்.

பக்தன் : சரி தாயே, இன்றைக்கு கூடாரவள்ளி. உனக்கு பொங்கல் படைச்சிருக்கேன், சிறப்பு பூசை செய்திருக்கிறேன், என்னுடைய பக்தியை ஏற்று இந்த கூட்டத்திடமிருந்து என்னை காப்பாற்று தாயே….

அஞ்சலி

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சின்ன உடல்நலக் கோளாறு வந்தபோது மிகவும் சோர்வடைந்து விட்டேன். அப்போது வீட்டுற்கு வந்தவர் “நானெல்லாம் எவ்வளவு மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் தைரியமாக எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்கிறேன், மன உறுதி இருந்தால் போதும் அதுவே நாம் நலம்பெற பெரிதும் உதவும்” என எனக்கு தைரியம் சொன்னார். அது இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கை வந்தபோது, “ஏதாவது தமிழ் நிகழ்வு நடக்குதா” என்று கேட்டார். பாரதியார் விழா நடப்பதாக நான் சொன்னவுடன், சக்கர நாற்காலியில் இருந்த போதும் அன்று பாரதியார் விழாவில் கலந்துகொண்டார். இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரான இவர் சிறந்த தமிழ் பேச்சாளர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவர். நல்ல பல பேச்சாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்தவர். தமிழில் நூல்கள் எழுதியுள்ள இவர் தமிழ்மொழி மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர், சிறந்த பேச்சாளர்.

இலங்கைக்கான மொரிஷியஸ் நாட்டின் சிறப்பு தூதராக பணியாற்றினார். இலங்கையின் சிறந்த தொழிலதிபரான இவருக்கு இலங்கை அரசாங்கம் கடந்தாண்டு ‘தேசபந்து’ விருது கொடுத்து கௌரவித்தது. ஆன்மீகம், மொழி, சமூகப் பணி என கடைசிவரை ஓய்வின்றி பணியாற்றியவர். யாருக்கு உதவி தேவைப்படுகிறது என அறிந்து அவர்களுக்கு கொடுத்துதவிய பெரும்புரவலர்.

சிறியவர், பெரியவர் என அனைவரிடத்திலும் மிக கனிவாக பேசுவார், அன்பானவர், எளிமையானவர், நேர்மறை சிந்தனைக்கு சொந்தக்காரர்.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்திருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

Seethaவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர். சீதாவின் மாமாவின் இழப்பு எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய உயிர் சிங்கையில் பிரிந்து, கடைசி பயணம் எங்கள் கண்முன் நடந்தது துயரமானது. தனது அன்னையை இழந்த சில நாட்களிலேயே தானும் மறைந்துவிட்டார். ஒரே வாரத்தில் இருவரும் மறைந்தது எங்களுக்கு மிக பெரிய இழப்பு.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

என்ன_கொள்கைனு_கேக்காதீங்க

தமிழ்நாட்ல கட்சிகள் பெருகனமாதிரி சிங்கப்பூர்ல தமிழ் அமைப்புகளும், விழாக்களும் பெருகிடுச்சு. இப்படியே போச்சுனா ஒவ்வொரு விழாவுக்கும் நாலு வரிசைதான் நிறையும்….கொஞ்சம் பார்த்து செய்யுங்க😢😢😢

#என்ன_கொள்கைனு_கேக்காதீங்க
#தலை_சுத்திருச்சு