அவனும் இவனும்

கடந்த வாரம், 8,9ம் தேதிகளில் மூன்று காட்சிகள் ‘அவனும் இவனும்’ என்ற நாடகம் அவாண்ட் நாடகக் குழுவினரால், மலாய் மரபுடைமை நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. 9ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7:30 மணி காட்சிக்குச் நான் சென்றேன்.

முதலில் நான் வியந்தது, நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களை பார்த்துதான். சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் இளையர்கள், அதாவது தமிழ் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் தமிழ் இளையர்கள் இருக்கிறார்களா என்று ஒரு வியப்பு ஏற்பட்டது. இவர்களை நான் பல்கலைக்கழக தமிழ் நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த தமிழ் நிகழ்ச்சியிலும் மொத்தமாக பார்த்ததில்லை. சொல்லப்போனா அங்கிருந்தவர்களில் நான், ஶ்ரீஜி இன்னும் ஓரிவரைத் தவிர எல்லோரும் முப்பது வயதிற்குள்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதுவும் இலவசம் இல்லை. ஒரு நுழைவுச்சீட்டின் விலை $25 வெள்ளி(மாணவர்களுக்கு தள்ளுபடி இருந்ததா தெரியாது). ஒரு தமிழ் நாடகத்திற்கு வரும் இவர்கள் ஏன் இலவசமாக நடத்தப்படும் மற்ற தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேங்கிறார்கள். சிங்கையில் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள் இது குறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதிலே அதற்கான விடையும் உள்ளது.

மற்றொரு செய்தி, இந்நாடகத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் 20-30 வயதுகுட்பட்டவர்கள்தான் என நினைக்கிறேன்(படத்தை பார்த்தால் தெரியலாம்).

நுழைவுச்சீட்டு வாங்கும்போது கூடவே ஒரு சின்ன சீட்டும், பென்சிலும் கொடுத்தாங்க, எதுக்குனு பிறகு சொல்றேன்.

சரி, இப்ப அரங்கத்திற்குள் செல்வோம்.

இந்த முறை, படங்கள், ஒலி, ஒளிப்பதிவு எடுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை முதலிலேயே தெரிவித்துவிட்டார்கள். கடந்த முறை சொல்லாததை பதிவு செய்திருந்தேன்.

நாடகத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் மறைந்த, நாடகத்திற்கு பெரும் பங்காற்றிய திரு அறிவழகன் திருஞானம் குறித்த ஒரு காணொளி அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது. அதில் அவர் நடித்த, இயக்கிய நாடகங்களின் சில காட்சிகள் பதியபட்டிருந்தது சிறப்பு. சின்ன வயதில் அவர் மறைந்தது, சிங்கை நாடகத்துறைக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவாண்ட் நாடக குழுவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சரி, இப்ப நாடகத்திற்குள் போவோம். இதன் கதைச் சுருக்கம் படத்தில் உள்ளது, முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள்(ஏன் என பின் குறிப்பு 1 படிக்கவும்).

கதையை பத்தி பேசும் முன், நடிகர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் நடித்த அனைத்து நடிகர்களின் உழைப்பும் ஆர்வமும் அவர்களின் நடிப்பில் தெரிந்தது. இதுதான் செல்வாவின் நாடகத்தின் சிறப்பு. அப்படி ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயல்பான நடிப்பின் மூலம் என்னை கவர்ந்தவர்கள் ராம், தயா மற்றும் பிரியா. ராம் நகைச்சுவையில் கலக்கினார். பிக்பாஸ் ‘ஸ்நேகனை’ விட ஒரு படி மேலபோய் தாவி சென்று கட்டிப்பிடித்தார். அதையும் கீழே விழாமல் சரியாக …. இடுப்பில் ஏறிக் கொண்டார். நல்ல நேர்த்தியான நடிப்பு.
அடுத்து, ஜெய் வேடத்தில் வந்த ஜெய்டன் சரவணன் நாடகம் முடிந்த பிறகும் கூட அதே கோபத்தில் இருந்தது அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்குள் ஐக்கியமாகிவிட்டார் என்பது தெரிந்தது. அவர் ‘பிகே’வை எத்தி உதைக்கும் போது சரி, சும்மா நின்று கொண்டு மற்றவர்கள் வசனம் பேசும்போதும் சரி, அவர் முகத்தில் அந்த கோபம் நாடகம் முழுக்க இருந்தது. அவருக்கு முதல் மேடை நாடகம் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிரியாதான் அன்று எல்லோருடைய “ஃபேவரைட்” என நினைக்கிறேன். அப்படி ஒரு இயல்பான நடிப்பு. அதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய ஒன்று, மற்றவர்கள் வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் முகபாவனைகள், மெய்ப்பாடு என நாடகம் முழுதும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த உயரமான ‘ஹீல்ஸ்’ செருப்பை போட்டுக் கொண்டு அவர் ஓடும்போது நமக்குதான் ‘ஹார்ட் பீட்’ வேகமாக அடித்தது, ஆனால் அவர் விழாமல் ஓடினார்:) இதுக்கே பல ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். இவருக்கும் முதல் மேடை நாடகமாம். போங்க பாஸூ, ஏமாத்தாதீங்க, நாங்க நம்ப மாட்டோம்.
‘பிகே’வாக நடித்த பொன்குமரன் செல்வம் தொடக்கம் முதல் முடிவு வரை பயங்கர உணர்ச்சி பிழம்பாக கை, கால், முகம் என நரம்பு புடைக்க நடித்தார். உண்மையிலேயே தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் ஒரே மாதிரி உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதற்கு நிறைய ‘எனர்ஜி’ வேண்டும். மிக அருமையாக அதை செய்தார்.
ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றாலும் ஷரன் நன்றாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை செய்தார். அந்த ‘கேக்’ மாவு பாத்திரத்தை பிடித்திருந்தது, அடுத்தவர்கள் மேல் இடித்தது, மாவை சிந்தியது, அங்க அசைவுகள் என நன்றாகவே செய்தார்.
மனோவாக நடித்த மனோ விக்னேஷ்வரன், ஒரு காவல்துறை அதிகாரியா அந்த சீருடை போடமாலேயே நம் மனதில் அந்த பாத்திரத்தை பதிய வைத்தார். என்ன, நம்ம தமிழ்படத்தில வர ‘காமடி போலீஸ்’ மாதிரி கொஞ்சம் தொப்பையோட இருந்தாலும் மிக ‘சீரியஸான’ நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு காட்சியில், “ஆம்பளைங்கனா தொப்பை இருக்கத்தான செய்யும்?” என முதல் வரிசைல உட்கார்ந்திட்டிருந்த என்னை பார்த்து கேட்டார். எனக்கு ஒரு ‘டவுட்டு’ அதை ஏன் அவர் என்னை பார்த்து கேட்டார்? பக்கத்தில் உட்கார்ந்துட்டிருந்த. Srigய பார்த்து கேட்டிருக்கலாமே:(.. சில இடங்களில் கொஞ்சம் ‘stiff’ஆக இருந்தாலும் பல இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து பணிப்பெண்ணாக நடித்தவர் மலையாளத்தில் பேசி நடித்தாலும் பெரும்பாலும் புரியும்படியாகவே இருந்தது. ஒரு வித பயம் கலந்த நடிப்பு, சில இடங்களில் அழுகை என அந்த கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வழங்கினார். இன்னும் சற்று மேம்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக முதல் நாடக மேடை மாதிரி தெரியவில்லை. கடைசியாக, ஆனால் நாடகத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ‘அனிதா’தான். என்னங்க எல்லோரும் அவ்வளவு கஷ்டப்பட்டு கைய கால ஆட்டி நடிச்சாங்க, அதுவும் அவர் கணவரா நடித்த பிகே அப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிச்சாரு, ஆனா இந்தம்மா கைய கால கொஞ்சம் கூட அசைக்கல, மூச்சு கூட உடாம நடிச்சாங்க. எப்படினு கேக்கறீங்களா? ஒன்னுமில்லைங்க, அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அந்த மாதிரி. அதாங்க கொலை செய்யப்பட்ட மனைவியா நடிச்சாங்க. கைய கால ஆட்டிகிட்டே, வசனம் பேசி கூட நடிச்சிடலாம். ஆனா உயிரற்ற உடலாக நடிப்பது அதுவும் ஒன்றரை மணி நேரம் நடிப்பது கொஞ்சம் கடினமானதுதான். அதை சிறப்பாக செய்தார் ‘அனிதா’ என்ற லத்திகா.

சரி, கதைக்குள் போவோம். வீட்டினுள் கொலையுண்ட கிடக்கிறாள் ஒரு பெண்மணி. இரவு மது அருந்தியதால் அதே மயக்கத்தில் எழுந்து வந்த கணவன், மனைவி பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் இறந்துவிட்டதை காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் தன் மேல் பழி வரும் என பயந்து, தன் நண்பனை வரவழைக்கிறான். காவலதிகாரியான அந்த நண்பன் தன் பெண்தோழியுடன் வருகிறான். அங்கு வந்து பிறகுதான் விஷயம் அறிந்து காவலர்களுக்கு தெரியப்படுத்தச் சொல்கிறான். ஆனால் பிகே முடியாது என சொல்ல, அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது. இடையில் அனிதாவின் தம்பி, பிட்சா கொண்டு வருபவர்(காலையில பிட்சா ஆர்டர் பண்ணலாம் என்பது இதுவரை எனக்கு தெரியாது), அண்டை வீட்டுக்காரர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் என பலர் வந்து போகிறார்கள். இவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிப்பதே கதை.

இடைவேளையில் அந்தக் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்கள் சீட்டில் எழுதிக்கொடுப்பதற்கே அந்த சீட்டும், பென்சிலும். எல்லோரும் எழுதி கொடுத்தோம். நாடகம் முடிந்த பிறகு கதாபாத்திரங்களின் பெயரும், அவர்களை கொலையாளிகள் என எத்தனை பேர் யூகித்தார்கள் எனவும் சொல்லப்பட்டது. நாடகத்தை கூர்ந்து கவனிக்க இது ஒரு நல்ல யுக்தியாக இருந்தது.

கடைசியில், “நான் தான் கொன்றேன்” என ஒருவர் வாக்குமூலம் கொடுத்து முடிக்க, பின்னாடி, நாடகத் தலைப்பை சொன்னவுடன், “நாடகம் முடிந்துவிட்டது போல” என நான் சொல்ல, பக்கத்திலிருந்த ஶ்ரீஜி “இல்லை, இப்படி முடிக்க மாட்டார்கள்” என சொல்ல, அதே போல், அடுத்த கதாபாத்திரம் உள்ளே வந்து “நான்தான் கொன்றேன்’ என சொல்லி, எப்படி, எதற்காக கொன்றார் என்று விளக்குகிறார்.

நான் யூகித்த ‘கொலையாளி’ தவறாய் போனது:(

ஒரு நல்ல கதை அமைத்து அதை நல்ல நடிகர்கள் கொண்டு அரங்கேற்றிய நாடகம். ஆனால், நாடகம் விறுவிறுப்பாக இருந்ததா என்றால் இல்லை. இடைவேளை வரை ஒரே அலைவரிசையில் ஓடிய மாதிரி இருந்தது. கொஞ்சம் கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைத்திருக்கலாம்.

எனக்கு, ‘திரில்லர்’ கதைனா, வீணை எஸ் பாலசந்தரின் ‘நடு இரவில்’ படம்தான் நினைவில் வரும். காலத்தால் அழியாத ஒரு அருமையான ‘கிரைம் திரில்லர்’. அதில், நடித்த எல்லோர் மேலும் சந்தேகம் வரும். கடைசியில் நாம் சந்தேகப்படாத ஒருத்தர் கொலை செய்திருப்பார்.

சரி, நாடகத்திற்கு வருவோம். வில்லனாக இருப்பவர்கள் அரவிந்த்சாமி போல இருந்து அமைதியாக நடிப்பதை ஏற்றுக்கொண்ட இரசிகர்கள் உள்ள இக்காலக்கட்டத்தில், நம்பியார், அசோகன் மாதிரியான பழைய நடிப்பு பாணியை(சில இடங்களில்) தவிர்த்திருக்கலாம் என தோன்றியது.

இளையர்கள் நாடகம் என்பதால் அவர்களுக்குள் பே(ஏ)சிக்கொள்ளும் ‘வழக்குச் சொற்கள்’ பல இருந்தன. அது யதார்த்தமாகவும் இருந்தது.

நிறைய நுணுக்கங்களில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. நாடக அரங்கின் கதவையே, வீட்டின் வாசற்கதவாய் வைத்தது, பிகே அரங்கத்திற்கு பின்னால் சென்றவுடன், வாய்க்கொப்பளிப்பது போன்ற சத்தம் மட்டும் வருவது போன்றவை ஒரு உண்மையான வீட்டிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிட்சா கொண்டு வருபவர், ‘பிட்சா ஹட்’ டீ சர்ட் போட்டு வந்தது, ‘காலிங் பெல்’ அடித்தது இப்படி பல விஷயங்கள் நம்மை ஒரு நல்ல நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால், நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என்பதை குறைத்தால் இன்னும் நிறைய பேர் பார்க்க விரும்புவார்கள்.

செல்வாவின் நாடகம் என்றால் நடிப்பு இருக்கும், உழைப்பு இருக்கும், கதை இருக்கும், மொத்ததில் நல்ல நாடகம் பார்த்த மன நிறைவு இருக்கும்.

பி.கு 1 : இந்த நாடகத்தை பற்றியும், அவாண்ட் நாடக குழு பற்றியும் கையேட்டில் பண்ணிரெண்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இரண்டு பக்கங்கள் தமிழில் இருந்தது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த இரண்டு பக்கத்தையும் கருஞ்சிவப்பில் போட்டு அதில் தமிழ் எழுத்துகளை கருப்பில் அச்சிட்டதுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை:) ஃபோனில் படம் பிடிச்சு அதை ‘ஜும்’ பண்ணிதான் பார்த்தேன்.

பி. கு. 2: முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததால் , மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ‘ஃபோனை’ தொடவில்லை. அதனால் குறிப்பும் எடுக்கவில்லை. எதாவது தவறாக இருந்தால் குறிப்பிடவும்.

Leave a Comment