‘ஒரு நம்பி அப்பூதி’ என்ற இசை நாடகம் இன்று அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆலயம் நிர்வாகமும், திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரும் இணைந்து நடத்தும் இந்நாடகம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகளின் கதையை கருவாக கொண்டது. திரு அ கி வரதராஜன் ஐயாவின் பெருமுயற்சியில் திருமுறை மாநாட்டு குழுவினருடன் இணைந்து அரங்கேறும் நான்காவது நாடகம். கடந்தாண்டு திலகவதியார்’ நாட்டிய நாடகம் அரங்கேறியது நமக்கு நினைவிருக்கலாம். குறைந்தபட்ச வசதியை வைத்து சிறந்த ஒரு நாடகத்தை படைத்த பெருமை திருமுறை குழுவினரை சாரும். இதில் நடித்தவர்களும் யாரும் தொழில்முறை நடிகரல்ல. அவர்கள் திருமுறை மாநாட்டுக் குழுவில் உள்ளவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தான். அதேபோல் இந்தாண்டும் சிறப்பானதொரு நாடகத்தை அரங்கேற்ற பல ஒத்திகைகள் முடித்து தயாராக இருக்கின்றனர் இக்குழுவினர். இந்த இசை நாடகத்துக்கான எல்லா பாடல்களையும் அறுசீர் விருத்தம் என்ற மரபில் எழுதியுள்ளார் ‘வெண்பா கவிஞர்’ அ கி வரதராஜன். வெண்பா எழுதுவதில் வித்தகரான அ கி வரதராஜன் ஐயா தன்னுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் வெண்பா எழுதி வரவேற்பார். கடந்தாண்டு சிங்கப்பூர் இலக்கிய விருது நிகழ்வில் தன்னுடைய இரண்டு நூல்களுக்கு பாராட்டுப் பரிசு பெற்றது குறிப்பிடதக்கது. இந்நாடகத்தில் அப்பூதி அடிகளாரின் சைவப்பற்று, திருநாவுக்கரசர் மேல் அவர் வைத்திருந்த அன்பு, மரியாதை, அதை அவர் வெளிப்படுத்திய விதம், தன் மகன் இறந்தது தெரிந்தும் விருந்து படைத்த பக்தி போன்ற காட்சிகள் இசையோடு நம்மை மெய்மறக்கச் செய்ய காத்திருக்கின்றன. உங்கள் குழுந்தைகளோடு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய நாடகம். அனைவரும் வருக! ஆதரவு தருக! நாள் : 22-07-2017(இன்று), சனிக்கிழமை நேரம் : மணி 6:00 இடம் : அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத் திருமண மண்டபம். 100 டிப்போ சாலை.