கத்திரிவெயில் மெய்யுருக்க
கனவுச்சாலை கருகியோட
தலைக்கவசத்தை கதிர்கள்கிழிக்க
வாகனங்கள் வனவிலங்குபோல்
உறுமிக்கொண்டு பயம்துரத்த
மான்குட்டியாய் ஈருருளியில்
திக்குத்தெரியா
பெருநகரக் கட்டிடக்காட்டில்
இடர்கடந்து
மயிரிழையில் மறுபிறவி சில கண்டு
வாடிக்கையாளர் பசி தீர்க்க
நிறுவனத்தின் பெயர் காக்க
புதிர்ப்போட்டியில் மறுமுனைதேடிய
குட்டிப்பையனாக
எல்லைக்கோட்டு முகவரியடைந்து
பெட்டிபெட்டியாய் அடுக்ககமாடியில்
முக்குவீட்டை வேர்க்கவிறுவிறுத்து
தாமதமாய் தேடிப்பிடித்து
தாகத்தோடு தயக்கம்சேர
அழைப்பு மணியழுத்தினான்
விரைவுஉணவு சேர்ப்பனையாளன்!
மூடிய கதவிடுக்கின்வழி தப்பிவந்த
செயற்கைக் குளிர்க்காற்று
வியர்வை துடைத்தது!
திறந்தகதவின் பின்னிருந்து
வாங்கியவன் வசவுபாட
உக்கிரமாய் உறைத்தது
வெயில்!
– தாம் சண்முகம்