தமிழ் மொழி விழா 2017 – கருத்துகள்

இந்தாண்டு தமிழ் மொழி விழாவில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்
அடிப்படையில் விழா குறித்தான என்னோட கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். நாகரிகமான, ஆக்கப்பூர்வமான,
தனி நபர் தாக்குதல் இல்லாத எந்தக் கருத்தும் வரவேற்கப்படும். மற்றவை
கழிக்கப்படும்.

1. இந்த ஆண்டு தமிழ்மொழி விழா எப்படி இருந்தது?

இந்த ஆண்டு தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற 52 நிகழ்வில், மொத்தம் 23
நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு 43 நிகழ்வில் 15 நிகழ்வுகளில்
நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு நடந்த 4 நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு இல்லை.
இந்த ஆண்டு அவை தவிர 13 நிகழ்ச்சிகள் புதிதாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிறைய மாறுதல்கள். நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் ஏறக்குறைய அதே அமைப்பினர்கள்தான். ஆனால், புதிய
நிகழ்வுகள், புதிய முகங்கள், நிகழ்ச்சியின் தரம், அரங்கு நிறைந்த கூட்டம் இப்படிப் பல
நல்ல அம்சங்கள் இருந்தன.

2. சரி, இந்த நிகழ்ச்சிகள் யாரைச் சென்றடைந்தன?

கண்டிப்பாக நிறைய இளையர்களைச் சென்றடைந்தன. அதிலும் நன்யாங்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய பார்வை நிகழ்ச்சியில் முற்றிலும்
இளையர்களே அரங்கம் முழுதும் காணப்பட்டனர். கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட
நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக இல்லை மாணவர்களை மையப்படுத்தி நடந்த
நிகழ்ச்சிகள். இதில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள்/பள்ளிகள் ஏற்று நடத்திய
நிகழ்ச்சிகள். மற்ற நிகழ்ச்சிகளில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள் பெரும் அளவில்
பங்குபெற்ற நிகழ்ச்சிகளாகும். பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும்
மாணவர்கள் அதிக அளவில் இந்த ஆண்டு கலந்துகொண்டனர்.

3. சுமார் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டு களித்திருப்பார்கள்?

Tam Shanmugam’s FB Post TLF 2017
என்னுடைய கணிப்புப்படி, பொன்னியின் செல்வன் மட்டும் சுமார் 4000 பேருக்கு
மேல் பார்த்திருப்பர்கள்.

மற்ற நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்திருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கூட்டினால் சுமார் 10000 பேர் பார்த்திருக்கக்
கூடிய வாய்ப்புள்ளது. அதில் 'repeat audience' என்று சொல்லப்படுகின்ற அதே
பார்வையாளர்கள் 4000 எனக் கழித்தால்(14,000லிருந்து), என் கணிப்புப்படி மொத்தம்
10,000 பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிற வாய்ப்பு உண்டு. இதில் பெரிய
அரங்குகளான மீடியாகார்பில் நடந்த தொடக்க நிகழ்ச்சி, சொற்சிலம்பம், சொற்போர்,
பாக்யராஜ் பட்டிமன்றம், பல காட்சிகளாக அரங்கேறிய தெனாலி, கவிச்சாரல், மாகோ
கதை நிகழ்ச்சி மற்றும் உமறுப்புலவர் நிலையத்தில் நடந்த கு சிவராமன், நாசர், மற்றும்
மற்ற அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சி, பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சி என அனைத்துமே
அடங்கும்.

4. எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன?

இயல் இசை நாடகம் என எல்லாம் இருந்தன. இந்த ஆண்டு புதிதாய்த் தமிழ் இசை
நிகழ்வு ஒன்று அரங்கேறியது. பொன்னியின் செல்வன் நாடகம், சிவகாமி சபதம்
நாட்டிய நாடகம் புதிது. இளமைத்தமிழ்.காம் நடத்திய விக்கிபீடியா கட்டுரை போட்டி,
பழமொழி பேசலாம் என்ற காணொளி போட்டி, வாசகர் வட்டத்தின் குறும்படப்
போட்டி , சிட்ஃபியின் கலைமாலை எனும் குறும்பட நிகழ்வு, நன்யாங் தொழில்நுட்பக்
கல்லூரியின் 'பார்வை' எனும் மகாபாரத கதையொட்டிய நிகழ்ச்சி எனப் பல புதிய
நிகழ்ச்சிகள் நடந்தன.

தமிழ் இலக்கியம் பேசிய நிகழ்ச்சிகள் 5க்கும் மேல். இப்படிப் பட்டிமன்றம், பேச்சு
மன்றம், உணவு குறித்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்புக் குறித்து, இணையம்
கருத்தரங்கம், மெய்நிகர் புத்தாக்கம் குறித்து எனப் பல வகையான நிகழ்ச்சிகள் இந்த
ஆண்டு இடம் பெற்றிருந்தன.

5. நடத்தபட்ட இடம், அரங்கங்கள் எப்படி இருந்தது?

நான், ஏற்கனவே சில பதிவுகளில் முன்பே கூறியதுபோல் இந்த ஆண்டு தமிழ்மொழி
விழாவில் மொத்தம் உள்ள 48 நிகழ்வுகளில் (4 பள்ளி நிகழ்வு இல்லாமல்) இரண்டே
இரண்டுதான் சமூக மன்றங்களில் நடந்தன. ஒன்று உலு பாண்டான் சமூக மன்றத்தில்
நடந்த தெனாலிராமன் நாடகம். இன்னொன்று கீட் ஹாங் சமூக மன்றத்தில் நடந்த
பட்டிமன்றம். பெரும்பாலும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தேசிய நூலகம்,
மரபுடைமை நிலையம் என மத்திய வட்டாரத்தில் (நான்கு நிகழ்ச்சிகள் வட்டார
நூலகங்களில் நடைபெற்றது) நடைபெற்ற தமிழ்மொழி விழாவைச் சிங்கையின்

Tam Shanmugam’s FB Post TLF 2017
வெளிவட்டார வீடமைப்பு பேட்டைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கடந்த
ஆண்டே சொல்லியிருந்தேன்.

அரங்கங்கள் அனைத்தும் சிறப்பான வசதிகளுடன் இருந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.

6. எதற்கு வீடமைப்பு பேட்டைகளுக்குத் தமிழ்மொழி விழாவை எடுத்துச் செல்ல
வேண்டும்?

அப்படி எடுத்துச் சென்றால் அந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் கண்டிப்பாக
நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தமிழ் ஆர்வலர்கள் பெரும்பாலானோர்
எங்கிருந்தாலும் நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால், வர இயலாமல் இருக்கும்
பெரும்பான்மையினரைச் சென்றடைய நாம் அவர்கள் இடத்துக்குப் போக வேண்டும்.

7. எப்படி வீடமைப்பு பேட்டைக்குப் போவது?
ரொம்ப சுலபம். நமக்கு ஏற்கனவே அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு
வட்டாரத்தில் உள்ள சமூக மன்றத்தின் இந்திய நடவடிக்கைக் செயற்குழுவைப்
பயன்படுத்தலாம். ஒவ்வொரு அமைப்பும் ஒரு சமூக மன்றத்தோடு/இந்திய
நடவடிக்கைகள் செயற்குழுவுடன் கூட்டு வைத்து நிகழ்ச்சி நடத்தலாம். இல்லை
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய வட்டாரம் எனக் குடியிருப்பு பேட்டைக்கு
மூன்றோ, நான்கோ நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

8. ஏன் மத்திய வட்டாரத்துக்கு எல்லோராலும் வர முடியாதா?

வாரத்தில் ஒரு நாள்தானே மத்திய வட்டாரத்திற்கு வரலாமே என்று கேட்கலாம்.
பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சி 3 மணி நேரம் நடக்கிறது. 30 நிமிடம் முன் கூட்டியே வர
வேண்டும். முடிந்து 30 நிமிடம் அங்கு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
போக வர 1+1, 2 மணி நேரம். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் ஆயத்தமாக வந்த
பின் உடனே அவர்கள் வேலையைத் தொடர முடியாத… இப்படிக் கிட்டதட்ட ஒரு
சராசரி மனிதனுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குறைந்தது 5லிருந்து 7 மணி
நேரம் பிடிக்கும்.
இதுவே அவர்கள் வசிக்குமிடத்தில் நடத்தினால் குறைந்தது 2லிருந்து 3 மணி நேரம்
வரை மிச்சம் பிடிக்கலாம். அது குழந்தைகளுடன் உள்ளவர்களுக்கு,
வயதானவர்களுக்கு மிக அவசியமான நேரம்.

9. அப்ப ஒரு வட்டாரத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இன்னொரு வட்டாரத்தில்
உள்ளவர்கள் எப்படி வருவது?

Tam Shanmugam’s FB Post TLF 2017

எல்லா நிகழ்ச்சிகளும் வெளி வட்டாரத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
கண்டிப்பாகச் சில நிகழ்ச்சிகள் உமறுப்புலவர் மற்றும் மரபுடைமை நிலையங்களில்
வைக்கலாம். குறிப்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை அங்கு நடத்தலாம். சில
பொது நிகழ்ச்சிகளையும் அங்கு நடத்தலாம். ஆனால், மற்ற நிகழ்ச்சிகளை வெளி
வட்டாரத்தில் வைக்கலாம். இப்போது மத்திய வட்டாரத்திற்கு வருபவர்கள் எங்கு
வைத்தாலும் போவார்கள். ஆனால், இப்போது தூரம் காரணமாக வராமல்
இருப்பவர்கள் பக்கத்தில் வைத்தால் வர வாய்ப்பிருக்கிறது. இதை நான் கீட் ஹாங்
சமூக மன்றத்தில் நடந்த பட்டிமன்றத்தில் கண்கூடாகப் பார்த்தேன். அது
பிரபலங்களுக்காக வந்த கூட்டம் என்றாலும் அங்கு வந்த அந்த வட்டாரத்தைச் சேர்ந்த
எனக்குத் தெரிந்த சிலர் மற்ற பிரபலங்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

10. அப்படிச் சமூக மன்றத்தில் நடத்தினால் எல்லோரையும் சென்றடையுமா?

இது ஒரு முயற்சிதான். தீவின் எல்லா திசையிலும் உள்ளவர்கள் ஒரு பொது இடத்திற்கு
வர முடியாது என்றே எல்லா வசதியையும் அவர்கள் வசிக்குமிடம் அருகில் செய்து
கொடுத்திருக்கிறது அரசு. அதோடு சமூக மன்ற ஆதரவோடு நடந்தால் அங்குள்ள
குடியிருப்பில் ஒவ்வொரு 'பிளோக்'கிலும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இருக்கும்.
நுழைவுச்சீட்டுகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் கலந்துகொள்ள
ஓர் ஊக்கமும் ஆர்வமும் ஏற்பட ஒரு வாய்ப்பாக இருக்கும்.

11. சமூக மன்றத்தில்தான் ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் தமிழ் மக்களுக்காக
நடக்கிறதே?

உண்மை. என்னோட பெரிய குறையே அதான். பெரும்பாலும் சமூக மன்றங்களுக்கு
மக்களுடன் தொடர்பு இருக்கும் அளவிற்குத் தமிழ் மீது தொடர்பு இல்லை. அதே
போல் தமிழ் அமைப்புகளுக்குத் தமிழ் மீது தொடர்பு இருக்கும் அளவிற்கு மக்கள் மீது
தொடர்பு இல்லை. இது இரண்டையும் இந்தத் தமிழ்மொழி விழா இணைக்கலாம்
என்பதே என் கருத்து. இதற்கு நிறைய விதிவிலக்குகள் இருக்கலாம். (தயவு செய்து
இந்த கருத்தை திரித்து வில்லங்கம் ஆக்காமல் இதிலுள்ள விஷயத்தை மட்டும்
பார்க்கவும்).

12. சமூகமன்றத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்த சரியான வசதிகள் இல்லை.
எப்படி நடத்துவது?

நம்முடைய நோக்கம் தமிழை மக்களிடம் கொண்டு செல்வதே, தற்போதுள்ள 'தமிழ்
நிகழ்ச்சிகளை' அல்ல. நம் சிங்கை மக்கள் விரும்பும் தமிழ் நிகழ்ச்சிகளை அதற்கேற்ப
வடிவமைக்கலாம்.

Tam Shanmugam’s FB Post TLF 2017

முந்தைய காலங்களில் தமிழர் திருநாள் போன்ற நிகழ்வுகளுக்கு மக்கள் தீவின் எல்லா
பகுதியிலிருந்தும் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால், நிலைமை அதே மாதிரி
இல்லை. இப்போது நாம்தான் அவர்களிடம் செல்ல வேண்டும் என்பது என் கருத்து.

13. தமிம்மொழி விழா யிஷுன், பெடோக், பொங்கோல், டெலோக் பிளாங்கா, தொ
பொயோ, ஜூரோங் என பரவலாகத் தீவெங்கும் உள்ள தமிழர்களைச்
சென்றடைந்ததா?

இதற்கு என்னிடம் நேரடியான பதில் இந்த ஆண்டு கிடையாது. அடுத்த ஆண்டு
கிடைக்கலாம். ஆனால், தீவெங்கும் இருந்து பல வட்டாரத்திலுள்ள பள்ளிகள்
கலந்துகொண்டன.

ஆனால், இன்னும் செய்ய வேண்டியது பல உள்ளன. இளைய பெற்றோர்களைச்
சென்றடைய வேண்டும். தமிழ் பேச வாய்ப்பில்லாத பலரைக் கைப்பிடித்து அழைத்து
வர வேண்டும். அதற்கு நிறைய ஆள் பலம் வேண்டும். தமிழ் அமைப்புகள் இதில்
ஈடுபட வேண்டும்.

14. ஏப்ரல் மாதத்தில் தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்களுக்கு நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள முடியவில்லை என்பது சரியா?

நிச்சயமாக. அதை மாணவர்கள் சிலர் என்னிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அது
பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கிறது. உயர்நிலைப்
பள்ளியிலும் மாணவர்களை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்திற்குப் பிறகு அழைத்து
வருவது சிரமம். காரணம் அவர்களுடைய ஆண்டிடைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் இறுதி
வாரத்தில் நடைபெறுவதால் தமிழ் மாணவர்களை அழைத்து வருவது சற்றுச்
சிரமம்தான். இது குறித்து நான் கடந்த ஆண்டே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினேன்.
அது பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்கள். ஆனால், மாற்றுவதில் நிறைய சிரமம்
உள்ளதாக அறிகிறேன், பார்ப்போம்.

15. தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதா?

கண்டிப்பாக. ஆனால் நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மாறுபட்டவர்கள்
என்பதால் அது பெரிதளவில் பாதிக்காது. ஆனால், ஒரேவிதமான
பார்வையாளர்களைக் கொண்ட சில நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. அது
தவிர்க்கப்பட வேண்டும்.

Tam Shanmugam’s FB Post TLF 2017
அதேவேளையில் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் மொழி விழா பட்டியலில்
இல்லாத சிலர் நாங்களும் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம் எனத் 'தமிழ்மொழி விழா'
என்று விளம்பரப்படுத்திச் சில நிகழ்ச்சிகளை நடத்தியது போட்டிக்கு நடத்தியது மாதிரி
இருந்தது. இதைத் தவிர்க்கலாம். வளர்தமிழ் இயக்கம் நிகழ்ச்சி நடத்தும்போது அதற்கு
ஒத்துழைப்புக் கொடுத்து மற்ற நிகழ்ச்சிகளைப் பிறகு வைக்கலாம்.

தமிழ்மொழி விழா முடிந்து ஓரிருவாரம் சில தமிழ் நிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம்.

16. தமிழ்மொழி விழா ஆண்டு முழுதும் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து
உள்ளதே?

கூடாது. ஒரு விழா என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடப்பதே. ஆண்டு
முழுதும் நடத்தினால் அது விழா அல்ல.
ஆனால், ஒன்று செய்யலாம். வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாவில் சில
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்துவிட்டு மற்ற நிகழ்ச்சிகளை அதே
ஆதரவோடு 'வளர்தமிழ் இயக்கத்தின்' பெயரோடு, விளம்பர, பொருளாதார ஆதரவில்
மாதம் ஒரு அமைப்பின் நிகழ்ச்சியை நடத்த ஆவன செய்யலாம்.

ஒரே மாதத்தில் இத்தனை நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பதிலாக மாணவர்களை
மையப்படுத்தும் அல்லது மாணவர்களுக்கான நிகழ்வுகளைத் தனியாகவும்
மாணவர்களை மையப்படுத்தாத பொது நிகழ்வுகளைத் தனியாகவும் நடத்தினால்
மாணவர்கள் பயனடைய வாய்ப்புண்டு. போட்டியில் பங்குபெறும் அல்லது வெற்றி
பெறும் மாணவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இதைத் தவிர்க்க
என்ன செய்யலாம் என்று சற்றே யோசிக்கலாம்.

17. நிகழ்ச்சியின் கால அளவு சரியா? தரம் எப்படி?

ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு நிகழ்ச்சி நடத்தும்
ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும் அதற்காக எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சி
பாராட்டுக்குரியது.
வெகுசிலரைத் தவிர பெரும்பாலானோர் அவர்களின் வேலை அல்லது தொழில்
சுமைகளுக்கிடையில் குடும்பங்களையும் கவனித்துத் தங்களுக்குக் கிடைக்கும் சிறிது
ஓய்வு நேரத்தில் நிகழ்ச்சிப் படைக்கப் பாடுபடுகிறார்கள். ஒரு தொண்டூழியராக
அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. ஒரு நிகழ்ச்சி நடத்துவது அவ்வளவு
சுலபமல்ல, அதற்கான உழைப்பு மிகக் கடுமையானது.

Tam Shanmugam’s FB Post TLF 2017
சில பேச்சாளர்கள் காரணமாக அல்லது வேறு சில குழப்பங்களால் சில நேரங்களில்
சில நிகழ்ச்சிகள் நாம் எதிர்பார்க்கும் வகையில் இருப்பதில்லை என்பது உண்மையே.
அது தவிர்க்கப்படலாம்.

பொதுவாக ஒரு நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் இருந்தால் சிறப்பு. அப்படி நடத்தினால்
இன்னும் நிறைய பேரை ஈர்க்க வாய்ப்புண்டு. சில சடங்கு சம்பிரதாயங்களைத்
தவிர்க்கலாம். தேவையில்லா உரைகளை அல்லது அதன் நேரத்தைக்
கட்டுப்படுத்தலாம்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் போனால் சலிப்புத் தட்டும் வாய்ப்புண்டு.

18. நிகழ்ச்சிகளில் மாலை, பொன்னாடை குறித்து ஏதாவது கருத்துண்டா?

இது குறித்து கடந்தாண்டே பதிவு செய்திருக்கிறேன். இந்தாண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி
"பார்வை 2017 – ஓர் பார்வை" என்ற தலைப்பில் என் முகநூல் பதிவில்
எழுதியிருந்தேன். மீண்டும் இதோ உங்களுக்காக:)

விழாக்களில் நடக்கும் மாலை, பொன்னாடை வைபவங்களைக் குறித்து நான் மாற்றுக்
கருத்துக் கொண்டவன். ஆனால், நான் ஒட்டு மொத்தமாக அதை எதிர்க்கவில்லை.
பொன்னாடை அளிப்பதையோ, பெறுவதையோ கொச்சைப்படுத்துவதோ, குற்றம்
சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால், அதேவேளையில் ஒரு மாற்றுக்
கருத்தை முன் வைக்கிறேன். சிறப்பு விருந்தினர்கள், விருதாளர், வேற்று இனத்தைச்
சேர்ந்தவர்கள் இப்படிக் குறிப்பட்ட சிலருக்கு அணிவிப்பதில் நான் உடன்படுகிறேன்.
நம் பண்பாட்டை, பழக்கத்தைக் கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால், இரண்டு
விஷயத்துக்காக நான் அதை ஆதரிப்பதில்லை.
1. புரவலர்களுக்கு அணிவிப்பதை. அவர்களிடமே காசு வாங்கி அவர்களுக்கே
திருப்பிக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களைக் கூட்டத்தினருக்கு
அறிமுகப்படுத்த, அவர்கள் படத்தைக் கணொளியில் காண்பிக்கலாம். அவர்களை
மேடைக்கு அழைத்து வேறு ஏதாவது கொடுக்கலாம்.
2.குறிப்பிட்ட சிலருக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு
ஆண்டும் பொன்னாடை கொடுத்தால் ஒரு கட்டத்தில் அவரிடம் எத்தனை
பொன்னாடைகள் இருக்கும்? அவர்கள் பாவம் இல்லையா?
எங்க வீட்ல என்னோட பாண்ட், சட்டையை வைக்கவே ஒரே ஒரு அலமாரியில ஒரு
ஓரத்தில அதுவும் 33% சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க:)
இந்த பொன்னாடைகளை இவர்களில் சிலர் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.
யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப் போவதில்லை. வேறு வழியில்லாமல்
வாங்கிக் கொள்கிறார்கள்.
இது என்னோட தனிப்பட்ட கருத்து. இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை. இது
ஒரு சின்ன விஷயம்தான், ஆனால், இதில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், முடிந்தவரைத்
தவிர்க்கலாம், அவ்வளவு தான். இதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க:)

Tam Shanmugam’s FB Post TLF 2017

19. இத்தனை விருதுகள் தேவையா?

இது குறித்தும் ஏற்கனவே 06-மே- 17 அன்று முகநூலில் பதிவு செய்தேன். மீண்டும்
உங்களுக்காக.

தமிழ் மொழி மாதம் என்றில்லை, ஆண்டு முழுவதும் சிங்கையில் எதற்காவது ஒரு விழா
அதில் யாருக்காவது ஒரு விருது…. இல்லை இல்லை ஒரே மேடையில் பல பேருக்கு
விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

இது வரை விருது பெற்றவர்களையோ, கொடுத்தவர்களையோ குறைத்து
மதிப்பிடவில்லை. அவர்கள் அனைவரது மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
ஆனால் அந்த விருதின் மேல் உண்டா என்றால் அது கேள்விக்குறியே. நான் எல்லா
விருதுகளையும் கூறவில்லை. சில விருதுகள் மதிப்புமிக்கவை. நான் விருது
கொடுப்பதை எதிர்க்கவில்லை. அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விதம் அதிலுள்ள வெளிப்படை தன்மை
இதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும். எடுத்துகாட்டாக எழுத்தாளர் கழகம்
வழங்கும் கண்ணதாசன் விருது, புத்தக பரிசு மற்றும் கவிமாலை வழங்கும் சிறந்த
கவிதை புத்தகத்துக்கான தங்கப்பதக்க விருது, இளங்கவிகளுக்கான தங்க முத்திரை
விருது இப்படி இந்த விருதுகள் எல்லாம் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது, யார்
தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மேடையிலோ அல்லது ஊடகத்திலோ தெளிவாகச்
சொல்லப்படுகின்றது. இது எனக்கு தெரிந்த சில விருதுகள். இதே மாதிரி
வெளிப்படையாகச் சொல்லப்படுகிற அனைத்து விருதுகளும் சிறப்பே. அதேசமயம்
துறை சார்ந்து கொடுக்கப்படும் விருதும் சரியே. ஆனால், சில விருதுகள் ஏன், எதற்கு
என்றே தெரியாது. ஒரே மேடையில் பல பேருக்குக் கொடுக்கப்படும். ஒருவருக்கே
அடுத்தடுத்த நாள்களில் இல்லை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு
அமைப்பினரால் கொடுக்கப்படும்.

ஒரு விருதுக்கோ, விருத்தாளருக்கோ நாம் கொடுக்கும் மரியாதை அந்த விருதைப்
பெற்றவரை மேடையில் இல்லாதபோதும் அவர் போற்றப்பட வேண்டும். பதவியில்
இல்லாத போதும் அவர் மதிக்கப்படவேண்டும். முதல் நாள் விருது வாங்கிய ஒருவர்
அடுத்த நாள் ஒரு நிகழ்வில் உட்கார இடம் கிடைக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக
நின்று கொண்டிருந்தார். அவருக்கு எல்லா நிகழ்விலும் உரிய அங்கீகாரம்
கொடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட விருதை யார் வாங்கினார்கள் என்று பலருக்கும்
தெரியாது. ஒரு விருதுக்குப் பெருமை அது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட
வேண்டும். அதற்கு எல்லா அமைப்பினரும் சேர்ந்து ஒரு “விருது தேர்வாளர்கள் குழு”
அமைக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை ஈராண்டிற்கு ஒரு முறை

Tam Shanmugam’s FB Post TLF 2017
தேர்ந்தெடுத்து, அவர்கள் விழாவில் ஓர் அங்கமாக இல்லாமல் அதை தனியாக ஒரு
விழா எடுத்துக் கொடுக்கலாம். விழாவுக்கு ஒரு விருது என்றில்லாமல் விருதுக்கு ஒரு
விழா எடுக்கலாம். தற்போது அமைப்புகள் கொடுக்கும் விருதுகளையே அங்குக்
கொடுக்கலாம். விருதுகளை ஒருமுகப்படுத்தலாம். அது விருதுக்கும் விருத்தாளர்க்கும்
மதிப்பானதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படிச் செய்தால்
சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை.
வேறு மாற்று கருத்து இருந்தாலும் சொல்லலாம்

20. இந்தாண்டு அனைத்து நிகழ்விலும் ஒரே தமிழ்தாய் வாழ்த்துப் பாடினார்களே?

ஆமாம், கடந்தாண்டு தமிழ்மொழி விழாவில் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு தமிழ்த்தாய்
வாழ்த்து பாடினார்கள். அதை ஏன் அனைவரும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து சிங்கையில்
ஒரே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடக்கூடாது என்ற கேள்வியை 2016 ஏப்ரல் 3ஆம்
தேதி "யுத்தம்" என்ற தலைப்பில் என் முகநூல் பதிவில் கேட்டிருந்தேன். 2016 ஏப்ரல்
9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தமிழ் முரசிலும் என்னுடைய அந்தக் கேள்வி
வெளிவந்தது. சம்பந்தப்பட்ட தலைவர்களிடமும் பேசினேன். இந்தாண்டு ஓரிரண்டு
நிகழ்வைத் தவிர நான் கலந்துகொண்ட எல்லா நிகழ்விலும் பாரதியின் 'வாழ்க
தமிழ்மொழி…' என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. அதோடு தமிழ்மொழி
விழா முடிந்து நேற்று ஒரு நிகழ்ச்சியிலும் இதே பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக
ஒலித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இது என்னால் நடந்தது என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய ஒரு வருத்தம்
நீங்கியதில் மகிழ்ச்சி.

21. ஊடகம்/சமூக ஊடகம் செயல்பாடு எப்படி?

இந்த ஆண்டு ஊடகத்துறையும் அருமையாகத் தங்கள் ஆதரவை நல்கினர். தமிழ்
முரசில் தினமும் முதல் பக்கத்தில் வரும் 'சொல்லிச் செல்லும் சொல்லடைகள்',
தமிழ்மொழி விழா குறித்த விளம்பரங்கள், அதோடு மாணவ நிருபர்கள் பறந்து பறந்து
சேகரித்த செய்திகள் பெரும்பாலும் உடனுக்குடன் தமிழ்முரசில் வந்தன.

வசந்தம் செய்தியில் நிகழ்ச்சி குறித்தான விரிவான செய்திகள், காட்சிகள், தாளம்
நிகழ்ச்சியில் அதன் தொகுப்பு, நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு எனச் சிறப்பாகச் செய்தனர்.

ஒலி 96.8ல் நாரா மற்றும் கார்த்திக்கின் 'சொல்லிச் செல்லும் சொல்லடைகள்'
குறுநாடகம், தினமும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, செய்தி, நேரலை என தங்களின்
பங்கைச் சிறப்பாகச் செய்தனர்.

Tam Shanmugam’s FB Post TLF 2017
அதோடு சமூக ஊடகங்களிலும் ஒலி 96.8, வசந்தம் செய்தி, தமிழ் முரசு அனைவரும்
உடனுக்குடன் செய்திகளைப் பகிர்ந்து வந்தனர். தனி நபர்களும் தங்களால் முடிந்த
அளவு முகநூல், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகத்தில் தமிழ்மொழி விழா குறித்துச்
செய்திகளைப் பகிர்ந்து வந்தனர்.

22. தமிழ்மொழி விழா அவசியமா?

கண்டிப்பாக. சிங்கையில் தமிழர்களுக்குத் தமிழ்மொழி இரண்டாம் மொழி.
தேர்விற்காகவும், மதிப்பெண்களுக்காகவும் படிக்க வேண்டிய சூழல்.
பாடத்தைத் தாண்டி மாணவர்களிடையே, மக்களிடையே மொழி உணர்வை
வளர்ப்பதில் இது போன்ற விழா நடப்பது மிக மிக அவசியம். அதைச் சரியாக
செய்துகொண்டிருக்கிறது வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ்மொழி விழா.

23. தமிழ்மொழி விழா ஏற்பாடு எப்படி இருந்தது?

மிகச் சிறப்பாக இருந்தது. அதன் அட்டவணை வெளியான நாள் முதல் கவனித்து
வருகிறேன். ஒரே பக்கத்தில் ஒரு மாதத்திற்கான 52 நிகழ்ச்சி, அதன் நேரம், இடம்,
ஏற்பாட்டாளர்கள் என அவ்வளவு செய்தியும் கையடக்க தொலைபேசியில். இதில்
சிறப்பு என்னவென்றால் அதில் ஒரு இம்மி அளவும் எனக்குத்தெரிந்த வரையில்
மாற்றமில்லை. நிகழ்ச்சி நடக்கும் நாளன்று நான் தொடர்ந்து முகநூலில் பகிர்ந்து
வந்தேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் சென்றனர். இது வரை யாரும் எதுவும்
சொல்லவில்லை.

அதற்கான உழைப்பு சுமார் பத்து மாதங்கள், ஆனால், பிறந்த முதல் நாளன்றே
தொடக்க நிகழ்ச்சியில் அசத்தினார்கள். இதுவரை நான் பார்த்த நான்கு தொடக்க
நிகழ்ச்சியில் அதுதான் சிறந்தது. அது குறித்து பதிவு போட நினைத்தேன் ஆனால்
அப்போது நேரமில்லை.

அடுத்தாக 'வாழும் மொழி வாழும் மரபு' புத்தகம். அது குறித்து ஒரு பதிவு
எழுதியிருக்கிறேன். நல்ல புத்தகம். ஆனால், நிகழ்வுகளில் கொடுக்கப்படும்போது
அதைப் பலர் ஆங்காங்கே விட்டுச் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது.

அடுத்து, தலைவர் திரு இராஜாராம் மற்றும் செயலாளர் திரு அன்பரசு இருவரையும்
பார்க்காத நிகழ்ச்சி கிடையாது. இருவரும் சுழற்சி முறையில் அனைத்து
நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தனர். கண்டிப்பாகச் சரியாகத் தூக்கம் இருந்திருக்காது,
சரியான நேரத்தில் தேவையான அளவு சாப்பிட்டிருக்க மாட்டார்கள். நான் அதைப்
பார்த்திருக்கிறேன். இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி. இவர்கள் மட்டுமா,
இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பைக் கவனித்து கொள்கிற தேசிய மரபுடைமை

Tam Shanmugam’s FB Post TLF 2017
நிலையத்தின் அதிகாரி செல்வி தஷ்ஷினி வளர்தமிழ் இயக்கத்தின் திருமதி விஜி
ஜகதீஷ், திரு ஜோதி மாணிக்கம் எனப் பலரும் இரவு பகல் என உழைத்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்மொழி விழாவில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. பங்குகொண்ட அனைத்து
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அனைவரும் சிறப்பாகச் செயலாற்றினர். நன்றி, வணக்கம்.

எச்சரிக்கை : மீண்டும் பெரிய பதிவு. அவசியம் கருதி ஒரே பகுதியாக பதிவேற்றப்பட்டுள்ளது.இந்தாண்டு தமிழ் மொழி விழாவில் நான்…

Posted by Tam Shanmugam on Sunday, May 7, 2017

Leave a Comment