சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஓர் புத்தாக்க சிந்தனையாக கவிஞர்களின் சிறந்த கவிதையை, முத்திரை வரிகளை அதற்கேற்ப கருத்து படங்களுடன் சிறப்பான வடிவமைப்பில் இப்போது எல்லோரும் அதிகம் புழங்கும் ‘வாட்ஸப்’, முகநூலில் தமிழ்மொழி விழாவினையொட்டி தினந்தோறும் வெளியீடு செய்து வந்தது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தமிழறிஞர்கள் முதல் தமிழ் ஆர்வலர்கள் வரை, புலவர்கள் முதல் புரவலர்கள் வரை, மாணவர்கள் முதல் மந்திரிகள் வரை, சிங்கையில் மட்டுமன்றி பல வெளிநாட்டிலுள்ள தமிழர்களையும் சென்றைடைந்தது. இதற்காக உழைத்தவர்கள் பலர். இது கவிமாலை, கவிஞர்களுக்கு செய்த மிகப் பெரிய சிறப்பு. இதை தொடக்கத்திலிருந்தே மிகவும் ஊக்குவித்து ஆதரவு நல்கிய வளர்தமிழ் இயக்கித்தின் தலைவர் திரு இராஜாராம் அவர்களுக்கு நன்றி.
எதையும் வேகமாக கடந்து செல்லும் இந்த அவசர யுகத்தில் சின்னதாய், அழகாய் நான்கு வரிகளில் கவிதையை வெயீடு செய்யும் இந்த திட்டத்தை யோசித்து, வடிவமைத்து, சிறப்பாக செயல்படுத்திய கவிமாலை தலைவர் திரு இறை மதியழகன் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும், ‘முத்திரை வரிகள்’ தேர்வு குழுவிற்கும் மற்றும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.
இந்த திட்டத்தை அறிவித்தபோது நிறைய கவிஞரை இது ஈர்க்கவில்லை என்பதே உண்மை. விவரங்கள் தெரியாமல் விலகி நின்ற சிறந்த கவிஞர்களும் உண்டு. ஆனால் வெளியான பிறகு இதன் தாக்கத்தை உணர்ந்து இதில் கலந்துகொள்ள, படித்து இரசிக்க ஆர்வம் காட்டியவர்கள் பலர்.
கவிமாலையின் முகநூல் பக்கத்தில் வெளியான கவிதையை நானும் தினமும் என் பக்கத்தில் பகிர்ந்து வந்தேன். அதில் தவற விட்டவர்கள் இதில் படிக்கலாமே என்பதால். சிறந்த வரவேற்பு பெற்ற சிறப்பான முயற்சி.
புகழ்பெற்ற கவிஞர்கள் முதல் புதிதாய் எழுத தொடங்கிய கவிஞர்கள் வரை 40 கவிஞர்களின் வரிகளை கவிமாலை கடந்த 30 நாள்களாக வெளியிட்டு வந்தது. இதில் ஒன்றிரண்டு கவிஞர்கள் தவிர மற்ற அனைவரையும் நன்கு அறிந்தவன். அவர்களின் பல கவிதைகளை படித்திருக்கிறேன், இரசித்திருக்கிறேன். அதில் சில இங்கு வெளிவந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி. சில கவிஞர்கள் இதைவிட சிறந்த வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.
முத்திரை வரிகளில் 14 கவிதைகளுடன் விஞ்சி நிற்பது தத்துவக் கவிதைகளே. அதற்கு பிறகு காதல்/உறவு குறித்து 8 கவிதைகளும், சமூகச் சிந்தனைகளை தாங்கி 6 கவிதைகளும், குழந்தையை கருவாக வைத்து 4 கவிதைகளும், இயற்கைக்கு 4 கவிதைகளும், மொழி குறித்து 3 கவிதைகளும், சிங்கை குறித்து 1 கவிதையும் உள்ளன. இது என்னுடைய கணக்கெடுப்பு. பெண்களின் கவிதைகள் 7 உள்ள இத்தொகுப்பில் அடுத்தாண்டு இளையர்கள் மாணவர்கள் கவிதைகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.
கவிதையில் சில மிதமிஞ்சிய கற்பனையுடன் உள்ளன, சில படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனையை தூண்டுகின்றன, ஒரு சில மெல்லிய புன்னகையை தவழச் செய்கின்றன, சில நவீனத்தை தொட்டுச் செல்கின்றன, வெகு சில மரபில் மயக்க வைக்கின்றன, ஒரு சில செய்திகளாய் கடந்து செல்கின்றன.
Beauty Lies in the Eye of the Beholder’…அதாவது அழகு என்பது காண்பவர்களின் கண்களில் உள்ளது.
என்னை பொறுத்தவரை கவிதை என்பதே ஒரு அழகியல்தான். ஒரு சமூக சிந்தைனையாளனுக்கு அவன் சார்ந்த சமூகத்தின் அநீதிகளை சாடும் கவிதைகள் பிடிக்கும். காதல் வயப்பட்டு பிரிவில் உள்ள காதலனுக்கு அந்த சூழ்நிலையில் ஒரு சோகமான காதல் கவிதை பிடிக்கும். ஒரு பெருங்கவிஞனுக்கு சில கவிதைகள் வெறும் செய்தியாக இருக்கும். ஒரு பாமரனுக்கு ஓர் அரிய செய்தி கவிதையாக இருக்கும். இப்படி
கவிதை இரசனை என்பது அவரவர் வாழ்க்கை அனுபவங்களை சார்ந்து மனதுக்கு நெருக்கமாகவும் விருப்பமாகவும் இருப்பதுண்டு. என்னை கவர்ந்த ஒரு கவிதை மற்றவரை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். உங்களை கவர்ந்த கவிதை எனக்கு பிடிபடாமல் போகலாம்.
எந்தவித விருப்பு வெறுப்புமின்றி, எதிர்பார்ப்பும் இல்லாமல், நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், இல்லாதவர்கள், புகழ் பெற்றவர்கள், பதவியில் உள்ளவர்கள், வேண்டியவர்கள் என ‘முத்திரை வரிகள்’ எழுதியவரை பார்க்காமல் ‘முத்திரை வரிகள்’ மட்டுமே பார்த்து எனக்கு பிடித்த 10 கவிதைகளை முதல் கமன்னட்டில் கொடுத்துள்ளேன்(என் கவிதையை பட்டியலில் சேர்க்கவில்லை).
விருப்பம் இருந்தால் நீங்களும் பாரபட்சமின்றி உங்கள் மனதுக்கு பிடித்த கவிதையை (கீழே தலைப்பை பட்டியலிட்டு உள்ளேன்) பின்னூட்டத்தில் கொடுக்கலாம். இது கவிதை இரசிக்கும் அனைவருக்குமான ஒரு வாய்ப்பு:)
தமிழ்மொழி மாதம் முடிஞ்சிருஞ்சுனு அப்படி எல்லாம் சும்மா விட்டுட மாட்டோம்…
கவிதைப் பட்டியல்(வெளியான தேதியின் வரிசையில்)
—————————–
1.மழை
2.மிரட்டல்
3.சாங்கி விமானம் நிலையம்
4.நட்சத்திரம்
5.எழுதுகோல்
6.மௌனம்
7.காதலியின் மௌனம்
8.உறவு
9.நிழல்
10.மனித மனம்
11.புகழ்(உன்னை…)
12.சல்லடை
13.காற்றைப் பிடி
14.மண்
15.குழந்தை(தாத்தா…)
16.பகை
17.இரவிலும் பகலை எதிர்பார்
18.அசல் நகல்
19.இடப்பெயர்ச்சி
20.கண்கள்
21.தீக்குச்சி
22.நீயா? நானா?
23.புன்னகை
24.சுமை
25.காதலை எப்படிச் சொல்ல
26.தண்ணீர்
27.விடியல்
28.சுடர்
29.வணக்கம்
30.பள்ளிக் குழந்தை
31.தாஜ்மகால்
32.புகழ்(வெளிச்சப்…)
33.குழந்தை(நான்…)
34.ரசித்து எழுது
35. விழிப்பு
36.அன்பிருந்தும்
37.கிளை தேடும் சிறகு
38.பாதங்கள்
39.பேரன் பெயர் தமிழா?
40.மொழியும் வழியும்