அவாண்ட் நாடகக் குழு இந்தாண்டு தமிழ்மொழி விழாவையொட்டி சே.வெ. சண்முகத்தின் நாடகத்தை மலாய் மரபுடைமை நிலையத்தில் இரண்டு நாள்களில் (21-ஏப்ரல்-2017,22-ஏப்ரல்-2017) மூன்று காட்சிகளாக(சனிக்கிழமை மதியம் -1, வெள்ளி, சனி மாலை-2) அரங்கேற்றினார்கள்.
சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் தொகுத்து வெளியிட்ட எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தின் கல்யாணமாம் கல்யாணம், ‘‘அதுதான் ரகசியம்’, ‘நாலு நம்பர்’, ‘மீன் குழம்பு’, ‘மாப்பிள்ளை வந்தார்’ என்ற ஐந்து மேடை நாடகங்களை ஒன்றாக இணைத்து ஒரே நாடகமாக மேடையேற்றினார்கள். எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தை பற்றிய குறிப்பு படத்தில் உள்ளது.
என்னுடைய இந்த பின்னூட்டம் சனிக்கிழமை மதியம் பார்த்த காட்சிக்கு தொடர்புடையது. வேறு காட்சிகள் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாமல் போகலாம். ஏனென்றால், நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒரு புதிய படைப்பு.
காட்சி – 1
———–
கதாபாத்திரங்கள் எல்லொரும் ஒன்றாக ‘டீபாய்’யை சுத்தி நின்னு ஏதோ செய்வார்கள். அவ்வளவு தான் காட்சி. சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல. ஆனா அந்த பழைய காலத்து பிண்ணனி இசை ஈர்த்தது.
காட்சி – 2
———–
நாயகன் வேலு, நாயகி தேவி வீட்டுக்கு வருவார். அப்போது தேவி அந்தகாலத்து வானொலி பெட்டில பாட்டு கேட்டுட்டு இருப்பார். ‘சிட்டுக்குருவி முத்தம்…’ என்ற பாட்டு வானொலியிலிருந்து பாடுவது மாதிரி ஒரு ‘எஃபெக்ட்’, நடுவுல வேற ‘கீகீங்’னு ஒரு சத்தம், அது ‘ஸ்பெஷல் எஃபெக்ட்’டா இல்ல உண்மையிலேயே ஏதாவது கோளாறானு தெரியல. ஆனா நல்லாயிருந்துச்சு. வானொலி பெட்டியும் அருமை. வானொலி பெட்டியில இருக்கிற பச்சை ‘லைட்’டுத்தான் மிஸ்ஸிங்.
தேவி அப்படியே அந்த காலத்து சரோஜா தேவி ‘ஸ்டைல்’ல தலையில பக்கவாட்டில ஒரு ஒத்த பூவு, உடை, ஒப்பனை, நடிப்பு பாணி எல்லாம் அதே மாதிரி தான். ஆனா ரொம்ப நல்ல நடிச்சாங்க. அருமையான வசன உச்சரிப்பு.
வேலுவோட சிகை அலங்காரம், உடை, வசன உச்சரிப்பு கொஞ்சம் விஜயகுமாரையும் ஜெய்கணேஷையும் கலந்து செஞ்ச மாதிரி இருந்தது. நல்ல சத்தமா அதே வேளையில் தெள்ளத்தெளிவா வசனங்களை பேசியது மிக அருமை.
இருவரும் காதலிக்கும் அந்த காட்சி பழைய தமிழ்பட பாணியில நகைச்சுவையாக இரசிக்கும்படி இருந்தது.
இடையில் தேவியின் தாத்தா அங்கு வர இருவரும் பயந்து தாத்தாவின் காலில் விழப்போக, தாத்தாவோ ஒரு நிபந்தனை விதிக்கிறார். தேவியின் அண்ணன் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தொலைந்த போனதாகவும் அவரை வேலு கண்டுபிடித்து கூட்டி வந்தால் மட்டுமே திருமணம் செஞ்சு வைப்பேன் என்று தாத்தா சொல்ல, வேலு சம்மதிக்கிறார். ஆனால் வேலு தொலைந்து போனவரின் பெயரை கேட்டாலும், அடையாளத்தை கேட்டாலும், புகைப்படத்தை கேட்டாலும், தாத்தா சிரித்துக்கொண்டே ‘அது தான் ரகசியம்’ என்று சொல்றார்.
காட்சி – 3
———–
குமரப்பா தன்னோட மனைவி திலகத்தோட சாப்பாடு வேணாம் என சொல்லி வெளியில் சாப்பாட்டு கடையில சாப்பிட போய் அங்கேயும் அதே ‘மெனு’வை பார்த்து திரும்பி வீட்டிற்கே ஓடி வந்ததை திலகத்திடம் விளக்குவது நல்ல நகைச்சுவையாக இருந்துச்சு. இருவருமே அருமையான நடிப்பு. ஆனால் குமரப்பாவாக நSrigகும் Srig சத்தியமா அவங்க வீட்ல கூட அவ்வளவு அடி வாங்கியிருக்க மாட்டாரு பாவம். அவ்வளவு பலமா, பல முறை முதுகுலேயே திலகம் போட்டு வெளுத்தாங்க. ஒத்திகைல எவ்வளவு வாங்கினாரோ தெரியல, மனுஷனுக்கு உடம்பே சரியில்லாம போச்சு. அதோடு தான் நடிச்சார் பாவம்.
வீட்ல சாப்பாடு இல்ல காலியாபோச்சு யாரு சாப்பிட்டானு விவாதம் நடக்க, பெரியப்பா, பெரியம்மா சாப்பாடு அருமைனு குமரப்பாவோட தம்பி பொண்ணு, கண்மணி சொல்லும்போது அந்த கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி கூட்டுக்குடும்பமாக வாழ்வதையும் சொல்லாமல் சொல்வது அருமை.
மனைவி திலகத்துகிட்ட அடி, திட்டு எல்லாம் வாங்கிட்டு, அவங்க சொன்னாங்கனு சமைக்க காய்கறி வாங்க போவார். காய்கறிகள் வாங்க, மச்ஞள் வண்ணத்தில மடிச்சிருந்த நெகிழி பையையும், பணத்தையும் திலகத்திடமிருந்து எடுத்துட்டு போனவர் வரும்போது வெள்ளை வண்ண நெகிழி பையில வாங்கிட்டு வந்தது பெருசா யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனா அந்த காலத்துல இந்த மாதிரி பைகள் சிங்கையில பயன்பாட்டுல இருந்தாச்சுனு எனக்கு தெரியல. ‘மீன் குழம்பு’ நாடகத்தில் வக்களை, மணி பர்ஸ் என்றிருக்கும்.
ஆனா அந்த பணம் பழைய ஐந்து வெள்ளிதான்(பக்கத்துல உட்காரந்திருந்த அனந்த கண்ணனிடம் உறுதி செய்து கொண்டேன்) முதல் காட்சியில அதை சுருட்டி உள்ளங்கையில வச்சிருந்தனால அது பார்வையாளர்களுக்கு தெரிஞ்சிருக்காது ஆனா நான் பார்த்துட்டேன்ல:) பிறகு இரண்டாவதாக மீன் வாங்க போகும் காட்சியில அது பார்வையாளர்களுக்கு தெரியும்படி காண்பிச்சு நடிப்பார். சிறப்பு.
காட்சி-4
———-
நாடக ஒத்திகை காட்சி. ஆமாம் நாடகத்துக்குள்ளே நாடகம். ஒத்திகையில், வசனகர்த்தாவிடம் நடிகர் சேகர் கதை சொன்னது காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலையாவிடம் கதை சொன்ன மாதிரியே இருந்தது. நாடகம் முடிஞ்சு வெளியே வந்தவுடன் ‘எங்க அந்த ‘நாகேஷ்’ என்று SriGயிடம் கேட்டு அவரை கட்டிபிடிச்சு பாராட்டினேன். ஒரு காட்சியில தரையில உட்கார்ந்திருப்பவர் அப்படியே கைய கீழ வைக்காம, யாரையும் பிடிக்காம எழுந்திருப்பார். மிக அற்புதமான நடிப்பு. நான் வியந்து, இரசித்து, மகிழ்ந்த நடிப்பு, அவரோடது.
நாடக இயக்குனராக வரும் குமரப்பா, “இந்த கோடீஸ்வர குமரப்பாவோட பேரு கொடிகட்டி பறக்கனும்” என்று முதல் தடவை சொல்லும் போதே, இதை ஏன் அடிக்கடி சொல்றீங்கனு நம்ம ‘நாகேஷ்’ கேள்விகேட்க, அந்த வசனத்துல இன்னும் கொஞ்சம் ‘பஞ்ச்’ இருந்திருக்கலாம். அடுத்து கண்மணிக்கு தமிழ் வராது டாமில் தான் வரும்னு சொல்ல அதே பொன்னிதான முந்தின காட்சியில கவிதை சொல்றமாதிரி காண்பிச்சாங்கனு கொஞ்சம் குழப்பமாச்சு.
இந்த காட்சியில் வேலு ஊதுபத்தி விற்பவராக தேவியின் வீட்டிற்கு வர, குமரப்பா வேலுவை யாரென்று தெரியாமல் தன் நாடக குழுவில் பாடகராக சேர்த்துகொள்கிறார். குமரப்பா, கண்மணிக்கு நடனம் சொல்லித்தரும் காட்சி, வங்கிபுத்தகம் எடுத்துட்டுவானு சொல்ற இடம்,அடுத்த ஒத்திகைக்கு நாளான்னைக்கு வா, வியாழக்கிழமை வானு சொல்லற இடங்கள் கொஞ்சம் தடுமாற்றம் தெரிஞ்சது.
காட்சி – 5
————
நாடகத்தின் பாதி முடியும்போது கண்மணியின் அம்மா அப்பா அறிமுகமாகிறார்கள். அதாங்க நம்ம குமரப்போவோட தம்பியும், தம்பி மனைவியும். கண்மணி தன் காதலை அப்பா அம்மாவிடம் சொல்றாங்க. நகைச்சுவையோடு நகர்ந்தது அந்த காட்சி. இங்கே கண்மணியின் அம்மா சிவகாமி தேர்ந்த நடிப்பு. அவங்க ஏற்கனவே வசந்தத்திலும், பல நாடகத்திலும் நடித்தவங்க. கண்மணியின் அப்பாவும் மிக சிறப்பாக நடித்தார். பல்லு போன மாதிரி பேசி நடிப்பது அருமை. ஒரு டோப்பா போட்டிருக்கலாம், அவரோட முடி முன்னாடி கண்ணுல வந்து அடிக்கடி விழ ,கொஞ்சம் கஷ்டப்பட்டார்.
இந்த காட்சியில் தேவியின் காதலன் வேலு, மாறுவேடத்தில் ஜோசியகாரனாக, அவர்களிடம் தேவியின் அண்ணனை கண்டுபிடிப்பதற்காக தகவல் சேகரிக்க வர இவர்களும் சிரித்துக்கொண்டே ‘அதுதான் ரகசியம்’ என்று சொல்கின்றனர்.
காட்சி – 6
————
மீண்டும் நாடக ஒத்திகை காட்சி. இதில் சேகர் பாட்டு பாடும் இடம், குமரப்பாவை நையாண்டி செய்யும் இடம் அந்த ‘ஃபிளவர் வேஸ்’ பின்னாடி ஒளிந்து கொள்ளும் இடம், வசனகர்த்தாவின் இடுப்பில் ஏறி உட்காரும் இடம் என நடிப்பில் வெளுத்து வாங்குவார். வசனகர்த்தாவும் சேகரின் கூட நின்னு அவரைப்போலவே செய்வது, வானொலி பின்னாடி ஒளிந்து கொள்வது, சேகரை இடுப்பில் ஏந்தி நடிப்பது என அமைதியாக கலக்குவார்.
‘மண் புழுக்கள்…’ என்று தொடங்கும் வசனம் பேசி தரையில் தவழ்ந்து நடிக்கும் காட்சி மிக அருமை. இந்த இடத்தில் குமரப்பாவின் நடிப்பு அற்புதம், அனைவரும் கைதட்டி இரசித்த காட்சி. குறிப்பாக மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இதில் சேகரும் கூடவே தரையில் குமரப்பாவின் மேலே தவழ்ந்து அவருக்கு இணையாக நடித்தது அருமை.
இந்த இடத்தில் வேலு, தான் தேவியை காதலிப்பதாக தேவியின் அப்பா அம்மாவிடமே சொல்லி கூடவே தாத்தாவின் நிபந்தனையையும் கூறி தகவல் பெற முயற்சிக்கிறார். தொலைந்து போனவரின் பெயரை கேட்டாலும், அடையாளத்தை கேட்டாலும், புகைப்படத்தை கேட்டாலும், குமரப்பாவும் திலகமும் சிரித்துக்கொண்டே ‘அதுதான் ரகசியம்’ என்று சொல்கின்றனர்.
ஒரு காட்சியில ‘கார்’ ஜன்னல ஏத்திவிட்டத சொல்லும்போது கையை சுத்தி ஏத்துற மாதிரி காண்பிப்பது அந்தகால வாகனத்துல ‘ பட்டன்’ கிடையாது என்பதை நினைவூட்டியது.
காட்சி – 7
————
திலகம் பூ கட்டுவதும் சிவகாமி மாவு பிசைவதும் மிக யதார்த்த காட்சி. இருவரும் தரையில் உட்கார்ந்து கொண்டு தங்கள் வேலைகளை செய்து கொண்டே வசனம் பேசி நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருவரும் பிரமாதமாக நடித்த காட்சியது. பாராட்டுகள்.
அந்த காட்சியில் மீன் வாங்கி கொண்டு உள்ளே நுழையும் குமரப்பா 5 வெள்ளி மீனை 1 வெள்ளிக்கு வாங்கியதாக சொல்லி, தான் எப்படி பேரம் பேசினேன் என்று சொல்லிக்காட்டும் பொழுது மலாய் மொழியில் வசனம் பேசுவார். அது சும்மா ஒன்று இரண்டு வாக்கியங்கள் என்றால் பரவாயில்லை, தொடர்ந்து சில நிமிடம் வரும். குமரப்பாவின் தம்பி மனைவி சிவகாமியும் கூடவே மலாய் மொழியில் பேசுவார். யாராவது ஒருவர் தமிழில் அதை பேசி கூடவே நடித்திருந்தால் புரியாத பலருக்கும் எளிதில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ‘மீன் குழம்பு’ நாடகத்தில் வரும் இந்த காட்சியில் மலாய் மொழி இல்லை. ஒரு வேளை மலாய் மரபுடைமை நிலையத்தில் இந்நிகழ்ச்சியை நடத்துவதால் சேர்க்கப்பட்டிருக்குமோ? (ச்சே என்னமா யோசிக்கிறடா, தாம்) கடைசியில் 5 வெள்ளி காசு அடுத்து 5 மீன் வாங்கிட்டு வரச்சொல்லும் திலகத்திடம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிப்பார். காரணம், அவர் அந்த ஒரு மீனை 5 வெள்ளிக்குத்தான் வாங்கியிருப்பார். இந்த இடத்தில் உண்மையான மீனை கொண்டுவந்தது சிறப்பு. SriG எப்படி சமாளித்தாரோ:)
காட்சி – 8
————
தேவியை சந்தித்து, அவர் வீட்டிலே யாருமே தகவல்கள் தந்துதவ மறுக்கிறார்கள் அதனால் அண்ணனை கண்டு பிடிக்க முடியவில்லை என்று புலம்புகிறார் வேலு. இந்த காட்சியில் தேவி ‘வேலு,வேலு’னு கூப்பிடறது சரோஜாதேவி ,’கோபால், கோபால்’னு கூப்பிடற மாதிரி இருந்தது. அதுமட்டுமல்ல, வேலு தற்கொலை பண்ணிக்கலாம்னு சொல்லும்போது, ‘எனக்கு பயம்ம்ம்மா இருக்கு’னு சொல்றதுலேயும் அவரை ‘இமிடேட்’ செய்வார். இந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து வேலுவும், தேவியும் பேசிக்கொள்வது மிக இயல்பான, அருமையான நடிப்பு, இவர்கள் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி:).
காட்சி – 9
————
கடைத்தெருவுக்கு போய் 5 மீனுடன் திரும்பிய குமரப்பாவிடம் “அந்த அலமாரில வச்ச 25 வெள்ளி எங்கே?” என்று கேட்கும் திலகத்திடம் சமாளிக்கும் வேளையில், வேலு மீண்டும் தபால்காரர் வேடத்தில் உள்ளே வருகிறார். அவர்களுக்கு ‘சொசைட்டி’யிலிருந்து வீடு ஒதுக்கப்பட்டதாக தபால் வர, சிவகாமியை விட்டு பிரிய வேண்டுமே என் திலகம் ஒப்பாரி வைக்கிறாள். இது “மீன் கொழம்பு’ நாடகத்தில் வரும் கடைசி காட்சி. நன்றாக இணைத்திருக்கிறார்கள்.
வேலு அவர்களிடம் தேவியின் அண்ணனை கண்டுபிடிப்பதற்காக தகவல்கள் கேட்க இவர்களும் வழக்கம் போல் சிரித்துக்கொண்டே ‘அதுதான் ரகசியம்’ என்று சொல்லி உள்ளே செல்கின்றனர். ஆனால் இந்த காட்சியின் ‘ஹைலைட்’ சிரித்துக்கொண்டே உள்ளே போகும் திலகம், ஞாபகமாக மீண்டும் “அந்த அலமாரில வச்ச 25 வெள்ளி எங்கே?” என்று கேட்பது அதுக்கு குமரப்பா சிரித்துக்கொண்டே சமாளிப்பதுதான். இந்த இடத்தில் கிரேசி மோகனை நினைவு படுத்துகிறார் நாடகத்தின் காட்சியை எழுதியவர்.
காட்சி – 10
————
கண்மணியை பார்க்க வருகிற மாப்பிளை வீட்டாரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கும் காட்சி.
கண்மணியை பொண்ணு பார்க்க மாப்பிளை வீட்டார் வருவதற்குள் ‘வசனகர்த்தா’ என்ற வடிவேலு அங்கே சென்று தனக்கும் கண்மணிக்கும் உள்ள காதலை கண்மணியின் பெற்றோரிடம் சொல்ல, முதலில் அதிர்ச்சியான அவர்கள் பின்னர் ஒத்துக்கொள்கின்றனர். இந்த காட்சியில் ‘வசனகர்த்தா’, கண்மணி மற்றும் அவர்கள் பெற்றோர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
மாப்பிளை வீட்டாருக்கு வைத்திருக்கும் குளிர்பானம் அந்தகாலத்தில் ‘புட்டியில்'(போத்தல்) வரும் பானம். ‘ஃபான்டா’வா ட்ரூ ஸ்பாட்’டா எந்த ‘பிரான்ட்’ என்று தெரியவில்லை. நல்ல காட்சியமைப்பு. ஆனா அந்த புட்டிய கொஞ்சம் நன்றாக காண்பிச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.
காட்சி – 11
————
யாரும் அந்த குடும்ப இரகசியத்தை சொல்லாததால், தன்னால் தேவியின் அண்ணனை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற வேலு, தேவியிடம் தன் காதலை மறந்துவிடச் சொல்ல, தேவி உடனே ‘நீங்க இல்லையென்றால் நான் இல்லை’ என அழ, அப்ப தாத்தாவிடம் அந்த நிபந்தனையை ரத்து செய்ய சொல்ல, தாத்தாவா யாரு என்று கேட்க, ‘நான்தான் தாத்தாவாக நடித்தேன்’ என்று தேவியின் சித்தப்பா கூற, ஆமா நாங்கள் அனைவரும் சும்மா ஒரு நாடகம் போட்டோம் என ஒத்துக்கொள்ள சுபமாய் முடிகிறது உண்மையான நாடகம்.
இந்த நாடகத்தின் சிறப்பே யாரு நன்றாக நடித்தார்கள் என சொல்ல முடியாத அளவிற்கு ஒன்பது பேரும் ஒருத்தருகொருத்தர் போட்டி போட்டு நடித்ததுதான். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் இரண்டு மூன்று நாடகங்களில் மட்டுமே நடித்த அனுபவம் பெற்றவர்கள். ஒரு காட்சியில் ஒருத்தர் வசனம் பேசி நடிக்க கூடயிருக்கிற மற்றவர்கள் வசனமே பேசாமல் நடிப்பார்கள். நாம் யாரை பார்த்து இரசிப்பது என்று குழப்பமாக இருக்கும். நான் ஞாயிறன்று(23-ஏப்ரல்-17, கீழே சுட்டி உள்ளது) பதிவேற்றம் செய்திருக்கிற காணொளியே அதற்கு சான்று. எல்லா காட்சிகளுமே அவசியமான காட்சி என்றாலும் ஒரு சில இடத்தில காட்சியின் நீளம் அதிகமோ என தோன்றியது. என்னோட பதிவு போல நீண்டு இருந்த மாதிரி தெரிந்தது. கிட்டதட்ட இரண்டு மணி நேர நடக்கும் நாடகத்தில் ஒரு 10,15 நிமிடத்தை குறைந்திருக்கலாமோ என தோன்றியது.
எல்லா காட்சிகளும் ஒரே வீட்ல நடக்கிற மாதிரி இருந்ததனால அந்த ‘செட்’டை மாத்த வேண்டிய அவசியமில்லை. அதே 5 ‘சோஃபா’, 1 ‘டீபாய்’, 2 ‘சைட் டேபிள்’ ஒன்னுல ‘ஃபிளவர் வேஸ்’ இன்னொன்னுல அந்த காலத்து ‘ரேடியோ’. பின்னாடி மின்திரையில சில ‘டிசைன்’ வரும். அதற்கு பதிலா ஒரு பெரிய ‘ஜன்னல்’, விலக்கிய திரையோடு இருப்பது மாதிரி ஒரு படம் போட்டிருந்தால் ஒரு வரவேற்பு அறை மாதிரி அழகாக இருந்திருக்கலாம். பகல் நேரத்தில் அந்த ஜன்னலிருந்து வெளிச்சம் வருவது மாதிரி கொஞ்சம் பளிச்சென்றும் மாலை நேரத்தில் கொஞ்சம் இருட்டாகவும் படத்தை மாற்றி ஒரு ‘எஃபெக்ட்’ கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய சிறிய கற்பனை. இங்கே அரங்கமைப்பு சற்றே வித்யாசமானது.
மேடையென்று உயரமாக எதுவும் கிடையாது. தரைத்தளத்தில் நாடகம் நடக்கும். எதிரில் படிபடியாக கீழிருந்து மேல்நோக்கி அமைக்கப்பட்ட பலகைகளில் பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும். 100 பேர் அமரலாம் என நினைக்கிறேன். அதனால் நடிகர்களுக்கு ஒலிவாங்கி தேவையில்லை ஆனால் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டும்.
உடையலங்காரம் பொறுத்தவரை பெண் நடிகர்கள் யாருமே தங்கள் உடைகளை மாற்றவில்லை. குமரப்பா கடைசியில் ஒரு முறையும், வேலு 5 முறையும் மாற்றினார். மற்றவர்களுக்கு நாடகம் முழுக்க ஒரே ஆடை அலங்காரம்தான். ஆனால் எந்தவித சலிப்பும் தட்டவில்லை. ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்குமிடையே அதே நடிகர்கள் வந்தாலும் நேரம் எடுப்பதில்லை. காட்சி மாற்றம் நன்றாக இருந்தது. காட்சிகளுக்கிடையே போடப்பட்ட பிண்ணனி இசை 1980களை ஞாபகப்படுத்தியது. எல்லோருடைய உடையும் அலங்காரம் அந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியும் இருந்தது அவர்களுக்கும் மிக பொருத்தமாய் இருந்தது.
காட்சி 2,8,11, ‘அதுதான் ரகசியம்’ என்ற நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை. வேலு, தேவி கதாபாத்திரங்கள், அவர்களின் காதல் கதை, தேவியின் தாத்தாவின் நிபந்தனை, தேவியின் அண்ணன் தொலைந்து போன கதை, கடைசியில் தாத்தா போட்ட வேஷம் எல்லாம் இந்த கதைதான்.
காட்சி 4,6, கோடீஸ்வர குமரப்பா, வசனகர்த்தா, நாடகத்துக்குள்ளே வர நாடக காட்சிகள் இதெல்லாம் ‘கல்யாணமாம் கல்யாணம்’ நாடகத்துல இருந்து எடுத்த கதை.
காட்சி 3, 7, 9, மீன் குழம்பு நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை. வீடு சாப்பாடு நல்லா இல்லேனு சொல்வது, காய்கறி வாங்குவது, திலகத்திடம் திட்டு வாங்குவது, 5 வெள்ளி மீனை 1 வெள்ளிக்கு வாங்கினேன்னு சொல்றது, அந்த திலகம் கதாபாத்திரம், நிறைய வசனம் எல்லாம் இங்கிருந்து வந்தது.
காட்சி 5,10, “மாப்பிள்ளை வந்தார்” என்ற நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை. அங்கே பொண்ணு, கண்மணி செஞ்ச பலகரத்தை சாப்பிட்டா பல்லு போகும்னு சொல்றதை இங்கே அம்மா சிவகாமி செஞ்ச பலகாரத்தை சாப்பிட்டா பல்லு போயிடுனும்னு மாத்தியிருக்காங்க. “எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கணும்” சொல்ற வசனமும் இந்த கதைல வர்றதுதான். அங்க மாப்பிள்ளை பேரு கிருஷ்ணமூர்த்தி, இங்க வடிவேலு. அப்பா பேரு சபாபதி, அம்மா பேரு சிவகாமி.
‘நாலு நம்பர்’ கதையிலேயிருந்து எந்த கதாபாத்திரமோ, வசனமோ, சம்பவமோ நேரடியா இந்த நாடகத்துல வந்த மாதிரி எனக்கு தெரியல. ஒரு வேளை நாடக கதாநாயகன் ‘சேகர்’ கதாபாத்திரம் இந்த கதையிலிருந்து வந்ததா? இல்ல நான் எதையாவது தவற விட்டுட்டேனா? காட்சி 4ல ‘நாகேஷ்’ மாதிரி கதை சொல்வது ‘நாலு நம்பர்’ கதையில இருந்து எடுத்ததோ?
இப்படி ஐந்து நாடகத்தில் இருந்தும் கதை எடுத்து ஒரே தொடர்புள்ள கதையாக பின்னி கொஞ்சம் கூட சலிப்பு தட்டாம ஒரு முழு நீள நகைச்சுவை நாடகமாக கொடுத்த செல்வா மற்றும் அவர் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
நாடகம் தொடங்கும் முன் புகைப்படம், காணொலி எடுக்கலாமா கூடாதா என்று அறிவிக்கவில்லை.இருந்தாலும் சிலர் படம் எடுத்தார்கள், உடனே நானும் எடுத்தேன்:) கடைசிக்காட்சி மட்டும் ஒரு 46 வினாடி பதிவு செய்தேன் ஆனால் எங்கும் பகிரவில்லை. அனுமதி வாங்கி அடுத்தநாள் முகநூலில் போட்டேன். நாடகத்தின் கதைச்சுருக்கம், நடிகர்கள் பெயர்கள் மற்றும் சில தகவல்கள் அடங்கிய கையேடு ஏதும் கொடுக்கப்படவில்லை. நாடகத்துக்கு தலைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. கவிச்சாரல் என்பது நிகழ்ச்சியின் தலைப்பு. அமரர் எஸ் உதுமான் கணி, திரு பி கிருஷ்ணன், திரு க து மு இக்பால் ஆகியோரின் கதை, கவிதைகளை தேர்ந்தெடுத்து கடந்தாண்டுகளில் நாடகமாக்கினார்கள்.
இந்தாண்டு நான் பார்த்தது சனிக்கிழமை மதியம் மாணவர்களுக்கான சிறப்பு காட்சி. ஆனால் நாடகத்தின் இயக்குனர் திரு செல்வா பெரிய மனது செய்து எனக்கு ஒரு நுழைவுச்சீட்டு கொடுத்தார். இந்த நாடகம் அனைவருக்கும் இலவசமாக அரங்கேறியது. ஆனால் விருப்பட்டவர்கள் விருப்பப்பட்ட தொகையை நன்கொடையாக கொடுக்கலாம். நான் என் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
சின்ன வயதில் விசு, எஸ்வி சேகர்,ஒய்ஜி மகேந்திரன், ஆர் எஸ், மனோகர் நாடகத்தை நேரில் பார்த்திருந்தாலும் பல முறை இவர்களின் நாடகங்களை ‘காசெட்’களில் கேட்டிருந்தாலும், பின்னர் தொலைக்காட்சியில் கண்டு இரசித்திருந்தாலும் இடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த நான்காண்டுகளாக நிறைய முழு நீள நாடகம் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவான்ட் குழுவினர் சிறப்பாக சமூக நாடகங்களை நடத்துகின்றனர். சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை இவர்கள் நாடகமாக தமிழ்மொழி விழாவில் அரங்கேற்றுவது மிகச் சிறப்பு. மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த நாடகத்தில் மேடையிலும், அதற்கு பின்னும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடித்த வர்களுக்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள்.
அங்கே அறிவிக்கப்பட்ட கலைஞர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் இயக்குனர் – ஜி செல்வா
வசன ஒருங்கிணைப்பு – ராஜ்குமார் தியாகராஜ் மற்றும் ஜெயா
நாடகத்தில் நடித்தவர்கள் :
1.வேலு(விஜயகுமார் ஜெய்கணேஷ மிக்ஸ்) -ஷேக் யாசின்
2.தேவி(சரோஜா தேவி) – திவ்யா கணேசன்
3.கோடீஸ்வர குமரப்பா – ஶ்ரீ கணேஷ்
4.கல்பனா- திலகம்
5.சித்தப்பா(கண்மணியின் அப்பா) – அருள் குமரன் (இவர நாடகத்தில பேரு சொல்லி யாரும் கூப்பிடல)
6.சிவகாமி – வனிதா
7.கண்மணி – ஏஞ்சலின் தேவி
8.வடிவேல்(வசனகர்த்தா) – சுரேந்திரன் ஆனந்தன்
9.சேகர்(நாகேஷ்)- தினேஷ் செல்வராஜ்