தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments) ‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References) சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள், அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும் சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள் பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர் மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல் சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான் ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை, பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை செய்துள்ளார். ‘விக்கிமூலம்’ பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’ கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

சரி, எதுக்கு தமிழ் விக்கிபீடியா குறித்து இவ்வளவு பெரிய விளக்கம் என கேட்குறீர்களா? சொல்கிறேன்…

சிங்கையின் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக ‘இளைமைத்தமிழ்.காம்’மும் (www.ilamaithamizh.com), உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் இணைந்து நடத்திய விக்கிபீடியா கட்டுரை பதிவேற்ற நிகழ்வு 15-ஏப்ரல்-2017, சனிக்கிழமை காலை சிறப்பாக நடந்து முடிந்தது.

ஒன்றல்ல, இரண்டல்ல, இருநூற்றம்மைபது கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதுவும் முற்றிலும் சிங்கப்பூர் தொடர்பான கட்டுரைகள். இந்த சாதனையை செய்து காட்டியவர்கள் நம் மாணவர்கள். அதற்கு துணை புரிந்த ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இப்படியொரு திட்டத்தை யோசித்து அதை செயல்படுத்திய இளமைத்தமிழ.காம் நிறுவனர் திரு பாலு மணிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு ஒப்புதல் தெரிவித்து தமிழ்மொழி விழாவில் இணைத்துக்கொண்ட வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ரா ராஜாராம், திட்டத்தை இணைந்து செயல்படுத்திய உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குனர் திரு அன்பரசு மற்றும் நிலைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழ்மொழி விழாவில் கூடதலாக தமிழில் எழுதுவோம் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது ஒரு பெரும் முயற்சி. குறுகிய காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறார்கள்.

இப்ப இருக்கிற காலகட்டத்தில, தமிழில் பேச வச்சிடலாம், படிக்க கூட வச்சிடலாம் ஆனா எழுத வைக்கிறது அவ்வளவு சுலபமல்ல. அதை பாலு கச்சிதமா ஆசிரியர்கள், பெற்றோர்கள் துணையோடு மாணவர்களை வைத்து செய்து காட்டியிருக்கிறார். பாலுவை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வருகிறேன். இன்று சிங்ககையில் பேர் குறிப்பிடும் அளவில் உள்ள நல்ல பல எழுத்தாளர்களை, கவிஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாலுவுக்கு உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது. இவரின் பட்டறையில் தீட்டப்பட்ட எழுத்தாணிகள் நிறைய. அதே போல் இவர் தமிழ்மொழி விழாவில் தனித்தன்மையா வாய்ந்த நிகழ்ச்சிகள் படைப்பவர். முதன் முதலில் எஸ்ரா அவர்களை கூட்டி வந்து வளரும் எழுத்தாளர்களுக்கு பட்டறை நடத்தியது முதல் கவிஞர் நா முத்துக்குமார் பாடல்களை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்தது வரை அனைத்தும் நீண்டகால நோக்கத்தை அடிப்படையாக வைத்து நிகழ்ச்சி செய்பவர்.

அந்த வகையில் இளமைத்தமிழ்.காம் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் கடந்த நான்காண்டுகளாக தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் ஆதரவில் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி போட்டி நடத்தி அதில் மாதம் 15 பேருக்கு $30 வெள்ளியென மொத்தம் $450 வெள்ளி பரிசாக அளித்து வருகிறார்.

அந்த இளமைத்தமிழ்.காம் மூலம் எடுத்த மற்றொரு முன்னெடுப்பு தான் இந்த விக்கிபீடியா கட்டுரை பதிவேற்றம். 15-ஏப்ரல் அன்று காலை 9:00 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இந்த சாதனை நிகழ்வு அரங்கேறியது. இதை சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்திருக்கலாம் என்று வளர்தமிழ் இயக்கத்த தலைவர் திரு ராஜாராம் கூறியதாக திரு அன்பரசு தன் நோக்கவுரையில் கூறினார்.

பின்னர் மணி 1:00க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் உமறுப்புலவர் அரங்கத்தில் விழா தொடங்கியது. இதுவரை நான் கலந்துகொண்ட அத்தனை விழாக்களிலும் ‘வாழ்க் தமிழ்மொழி..’ என்ற பாரதியார் பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை கேட்டேன். முதன்முறையாக ஷபீர் இந்தாண்டு தமிழ்மொழி விழாவுக்கு பாடிய ‘அழகியே..’ என்ற பாட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை இங்கு கேட்டேன்!!

வரவேற்புரையாற்றிய முனைவர் சந்தன்ராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். குறிப்பாக உதவிபுரிந்த ஆசிரயர்களை கூட்டத்தினருக்கு அடையாளம் காட்டினார்.

இந்த முயற்சியில் பங்கெடுத்தவர்கள் சார்பாக ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் பேசினார்கள்.
தஞ்சோங் கட்டோங் பள்ளியின் ஆசிரியர் திருமதி மீனாட்சி சபாபதி பேசும்போது பெற்றோர்களின் பங்கு குறித்து பாராட்டி பேசினார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும் மாணவி பூர்வா இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நிறைய கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

நோக்கவுரையாற்றிய, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குனர் திரு அன்பரசு, சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் பேசியதை குறிப்பிட்டு தமிழ்மொழி விழா தொடங்கிய நோக்கத்தை தாண்டி தொழில்நுட்ப உதவியுடன் அடுத்த தலைமுறையை சென்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ஆர். இராஜாராம்
இத்தகைய நிகழ்வுகள் இளையர்களை மொழியின்பால் ஈர்த்து அவர்களை தொடர்ந்து செயல்பட வைக்கும் என்றார். மேலும் தான் காலையிலிருந்து நிகழ்வை பார்த்ததாகவும், ஊடகங்களும் நேரடியாக ஒலிபரப்பு செய்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள் ஒருவர் வானொளியில் இதுகுறித்து பேட்டி கொடுக்கும்போது தாங்கள் அடுத்த முயற்சியாக 1000 கட்டுரைகள் பதிவேற்றம் செய்ய மாணவர்களுக்கு உதவுவோம் என்று சொன்னதாக கூறினார். இதில் பெற்றோர்களும் மறைமுகமாக பங்கெடுத்திருப்பது நல்லதே என்றும் தெரிவித்தார்.

நன்றியுரையாற்றிய இளைமைத்தமிழ்.காம் நிறுவனர் திரு பாலு மணிமாறன் இந்த முயற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர் சந்தன்ராஜ் மற்றும் சுபா செந்தில்குமார் இருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். போட்டியில் வெற்றியாளர்களை தேர்தெடுத்த (இரகசிய)நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்காக உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கும், தொண்டீழியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மொத்தம் 28 பள்ளியில் இருந்து வந்த 250 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 20 கட்டுரைகளுக்கு $50 வெள்ளி பரிசு கொடுக்கப்பட்டது.

சிறந்த மூன்று கட்டுரைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது.
முதல் பரிசு பெற்றவர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும் ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி மாணவி செல்வி விஷ்ணு வர்தினி. இரண்டாம் பரிசை பெற்றவர்கள் செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளியை சேர்ந்த சிராப்திக் மற்றும் மாணவர்கள் குழு.
மூன்றாம் பரிசை வென்றவர் தெமாசாக் தொடக்கக் கல்லூரியை சேர்ந்த மாணவி சமிக்‌ஷா அஷோக் குமார்.

சிறந்த மூன்று பள்ளிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை தெமாசாக் தொடக்கக் கல்லூரி தட்டிச்செல்ல இரண்டாம் பரிசு டாங்களின் உயர்நிலைப்பள்ளிக்கும், மூன்றாம் பரிசு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளர்கள் செல்வி அஷ்வினி செல்வராஜ்ஜும், திருமதி சுபா செந்தில்குமாரும் மிக நேர்த்தியாக, எளிமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

சரி இந்த கட்டுரைகளை எப்படி படிப்பது என கேட்குறீர்களா? பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள் விக்கிபீடியா ஒருங்கிணைப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டு பொதுவெளிக்கு விரைவில் வரும்.

இது ஒரு பெரிய முயற்சி. தொலைநோக்கு பார்வையுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிங்கப்பூரையும், மாணவர்களையும் முன்னிறுத்தி நீண்டகாலம் நிலைத்திருக்க ஆவணப்படுத்தப்படுத்தபட்ட ஒரு கூட்டு முயற்சி. இந்த நிகழ்வு இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மகுடம் என்றால் மிகையல்ல.

Leave a Comment