பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும்
கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் கடந்த சனிக்கிழமை, 08-ஏப்ரல்-2017, அன்று மாலை கீட் ஹாங் சமூக மன்றத்தில் சிறப்பாக நடந்தது.

“வாழ்க தமிழ்மொழி” என்ற பாரதியார் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது.

அடுத்ததாக, செல்வி கயல்விழி மதிவாணன் சிறப்பாக பரதம் ஆடினார். இதை நன்கு கவனித்து அவரையும் அவரின் பெற்றோர்களின் பாராட்டிய பிறகே பட்டுமன்றத்தை தொடங்கினார் திரு பாக்கியராஜ்.

பட்டிமன்ற கலைக்கழகத்தின் தலைவர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் வரவேற்புரை வழங்கினார்.

பேச்சாளர்களுக்கும், புரவலர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இந்த பட்டிமன்றத்துக்கு நான் முதல்ல போற மாதிரி திட்டம் ஏதும் இல்லை. அதே நேரம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில நடக்கவிருந்த “சிவகாமியின் சபதம்” நாடகத்துக்கு வருவதாக அவர்களுடைய முகநூல் ‘நிகழ்வு பக்கத்தில்’ சொல்லியிருந்தேன். ஒரு வாரம் முன்னதாகத்தான் அதை மாத்தி பட்டிமன்றத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அதற்கு ஒரு காரணம் திருமதி அகிலாவும், திரு மன்னை ஐயாவும். மற்றொரு காரணம், கடந்த சில ஆண்டுகளாக பட்டிமன்ற கலைக்கழகத்தின் பட்டிமன்றங்களை முடிந்த வரை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 90க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மேடை ஏற்றிய பெருமை இவர்களுக்குண்டு.

கடந்தாண்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தி அதிலிருந்து சிறந்த இரண்டு மாணவர்களை தேர்வு செய்து பட்டிமன்றத்திலும் பேச வைத்தார்கள். நிறைய மாணவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். அப்படி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தை அப்போது என்னுடைய முகநூல் பதிவில் பாராட்டியிருந்தேன். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

அது மட்டுமல்ல இந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மொத்தம் உள்ள 48 நிகழ்வுகளில் (4 பள்ளி நிகழ்வு இல்லாமல்) இரண்டே இரண்டுதான் சமூக மன்றங்களில் நடக்கின்றன. ஒன்று உலு பாண்டான் சமூக மன்றத்தில் நடக்கவிருக்கும் அதிபதியின் தெனாலிராமன் – விகடகவி நாடகம். இன்னொன்று கீட் ஹாங் சமூக மன்றத்தில் நடந்த முடிந்த இந்த பட்டிமன்றம். பெரும்பாலும் உமறுப்புலவர், தேசிய நூலகம், மரபுடைமை நிலையம் என மத்திய வட்டாரத்தில்(நான்கு நிகழ்ச்சிகள் வட்டார நூலகங்களில் நடைபெறுகிறது) நடைபெற்று வருகிற தமிழ்மொழி விழாவை சிங்கையின் வெளிவட்டார வீடமைப்பு பேட்டைகளுக்கு எடுத்துச் செல்வது சிறப்பாகும். இதையும் கடந்தாண்டு பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவிற்கும், திரு அருமை சந்திரன் அவர்களுக்கும், பட்டிமன்ற கலைக் கழகத்திற்கும் மீண்டும் எனது பாராட்டுகள்.
இதை மேலும் தமிழ்மொழி விழாவில் விரிவுபடுத்தினால் சிறப்பாகயிருக்கும்.

இந்த பட்டிமன்றத்துக்கு நுழைவுச்சீட்டு $5 வெள்ளி. இருந்தும் கிட்டதட்ட 700 பேர் கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள். நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே தமிழ்மொழி விழா தொடங்குவதற்கு முன்னரே முடிந்துவிட்டது. அதனால் அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை. நானும் எந்த முன்னோட்டப் பதிவும் போடவில்லை.

பட்டிமன்றத்தலைப்பு என்ன தெரியுமா, “கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? இல்லை சம்பாத்தியம் உறுதியான பின் நடப்பது நல்லதா?”. ப்பா தலைப்பே இவ்வளவு பெருசானு கேட்காதீங்க, தலைப்பை சொல்லவே பத்து நிமிஷம் வேணும்னு நினைக்கிறேன்:) அதனால் தான் இந்த தலைப்பை எந்த பேச்சாளரும் முழுசா மேடையில சொல்லல போல:)
இந்த தலைப்பு சிங்கை சூழலுக்கு மிக முக்கியமான தலைப்பு. ஏனென்றால், கடந்தாண்டு வெளியான ஒரு செய்தியின்படி 25-29 வயதில் இருக்கும் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் திருமணம் செய்யாமல் நல்ல வேலைக்காக காத்திருக்கின்றனர்(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). ஆகவே இதில் பேச நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், யாரும் அதை தொட்டு பேசவில்லை.

பட்டிமன்றம் போவதற்கு முன்னால் நான் நண்பர்களிடம் சொன்னேன், “நான் போறது பொழுதுபோக்கான நகைச்சுவையை காணத்தான்” என்று. அதனால் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. ஏனென்றால் நடுவர் உட்பட யாருமே பட்டிமன்ற பேச்சாளர்கள் இல்லை, நம் இரு சிங்கை பேச்சாளர்கள் தவிர. ஆனால் அந்த பொழுதுபோக்கு அம்சத்தை சிறப்பாகவே கொடுத்தனர் அனைவரும். குறிப்பாக திருமதி அறந்தாங்கி நிஷா அருமையாக பேசினார். வந்திருந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பப்ப பட்டிமன்ற தலைப்புக்குள்ளும் சென்றார். அதற்கடுத்து நல்ல பேசியவர் திரு ஜெயச்சந்திரன். இருவரும் நல்ல ‘டைமிங் ஜோக்ஸ்’ அடித்தார். கடைசியில் மணியடித்த பிறகும் கொஞ்சம் இழுத்தார். திரு மதுரை முத்து எதிர்பார்த்த அளவு பேசவில்லை. கடைசியாக பேசியதாலோ என்னவோ தெரியல. திருமதி அன்னபாரதி சோபிக்கவில்லை. எல்லோருமே ஏற்கனவே பல இடங்களில் கேட்ட நகைச்சுவையையே சொன்னாலும் அவர்கள் சொல்லியவிதம் பார்வையாளர்களை ஈர்த்தது, நல்ல இரசித்தார்கள்.

திரு பாக்யராஜ், வந்திருந்த அவரது இரசிகர்களை ஏமாற்றவில்லை. அவர்கள் எதிர்பார்த்த நகைச்சுவையை அளவாக ஆபாசமில்லாமல் கொடுத்தார். ஆனால் பேச்சாளர்கள் பேசிய பல விஷயங்கள் அவருக்கு கேக்கவில்லை. மேடையின் மேல வைக்கப்பட்டிருந்த ‘மானிடர்’ சரியாக வேலை செய்யவில்லை போல. பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சிங்கப்பூர் பேச்சாளர்கள் இருவரையுமே பட்டிமன்ற நடுவர் திரு பாக்யராஜ் அறிமுகப்படுத்தவில்லை. சரி அதாவது பரவாயில்லைனு விட்டுடலாம். அவர்கள் இருவர் பெயரும் கூட என்னவென்று தெரியவில்லை. அதிலும் மன்னை ஐயா பெயர் தெரியாம அதை தவறா வேற சொன்னார். ஒரு பட்டிமன்ற நடுவராக வருபவர், பல கதைகளை நினைவு வைத்திருப்பவர், சக பேச்சாளர்கள் பெயரை குறித்து வைத்திருந்திருக்கலாம். அதுவும் இருவரும் பக்கத்திலேயே உட்காரந்திருக்கிறார்கள். அது அவர் தெரிந்தே செய்திருக்க மாட்டார் இருந்தாலும் அது எனக்கு சரியாக படவில்லை.

இப்போது நம் சிங்கை பேச்சாளர்களுக்கு வருவோம். முதலில் பேசிய மன்னை ஐயா, திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படவில்லை, திருமணம்தான் சொர்க்கத்தையே நிச்சியிக்கின்றன என தொடங்கி பருவத்தே பயிர் செய்ய வேண்டும் எனவும் காலாகாலத்தில் திருமணம் செய்வதே நல்லது என தனக்கே உரித்தான பாணியில் பாடல்கள், நகைச்சுவை என சிறப்பாக பேசினார். ஒரு சில நகைச்சுவை ஏற்கனவே கேட்டது, இருந்தாலும் பரவாயில்லை இரசித்தேன்.
அடுத்து பேச வந்த திருமதி அகிலா ஹரிஹரன், திருமணங்கள் சொர்கத்திலல்ல, ரொக்கத்தில் தான் நிச்சியக்கப்படுகின்றன என பதிலடியோடு சிறப்பாக தொடங்கி சம்பாத்தியம் உறுதியான பின் திருமணம் நடந்தால் தான் அறுசுவை உணவு போல் வாழ்க்கை சுவைக்கும் என தன் வாதத்தை வைத்தார்.
இவரிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். நகைச்சுவை எதிர்பார்த்து வந்த கூட்டத்தினருக்காக இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். இந்த முறையும் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. மற்றபடி பட்டிமன்ற தலைப்பையொட்டி தன் கருத்துகளை அழகாக வைத்தார்.

கடைசியில் காலாகாலத்தில் திருமணம் செய்வதே சரி என்று நடுவர் தீர்ப்பளித்தார்.

நிகழ்ச்சியை திருச்செல்வி தன் அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அருமையான ‘stand-up comedy’யை ஊரிலிருந்து வந்த பேச்சாளர்கள் கொடுக்க வந்திருந்த அனைவரும் தொடர்ந்து சிரித்து மகிழ, மொத்தத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவினருக்கு வாழ்த்துகள்.

 

Leave a Comment