தமிழ்மொழி விழாவினையொட்டி சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நடத்திய “கவிமணம்” நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை, 07-ஏப்ரல்-2017 மாலை 7:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. பாரதியாரின், “வாழ்க தமிழ்மொழி..” பாட்டுதான் இங்கேயும் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. இது குறித்து தனி பதிவு பிறகு எழுதுகிறேன்.
“கவிமணம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கவிதை போட்டி குறித்த அறிவிப்பு பரவலாக பகிரப்பட்டது. ஆனால், ஏனோ கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி அந்த போட்டியில் கலந்துகொள்ளவதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அதற்கு காரணம் அதே காலகட்டத்தில் பல கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன. எதற்காக இவர்களும் கவிதை போட்டி நடத்துகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. ஆனால் இவர்கள் நடத்திய கவிதை போட்டியில் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு. ஒன்று சிங்கப்பூரர்கள், நிரந்திரவாசிகள் ஒரு பிரிவாகவும். சிங்கப்பூரில் படிக்கும்/வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் இரண்டு போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட்டது. இது எனக்கு தெரிந்து வேறு யாரும் செய்யாத ஒரு விஷயம். அடுத்து ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுவாக மூன்று பரிசுகள் மட்டும் கொடுக்கும் போட்டிகள் போல் இல்லாமல் ஐந்து பரிசுகள் கொடுத்தது மற்றொரு சிறப்பு. அதுவும் பரிசுத்தொகை கவர்ச்சிகரமானது. முதல் பரிசு $1000 என தொடங்கி $700, $500, $300 என்ற வரிசையில் ஐந்தாவது பரிசு $200 வெள்ளி கொடுக்கப்பட்டது. போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரு பிரிவுகளும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக்கு வந்திருந்தன.
இந்தாண்டு ‘கவிமணம்’ கவிதைக்காக தலைப்பு ‘காதலென்றால்..’. இசையோடு கவிதை என்பது அவர்களின் பாணி. நிகழ்ச்சியின் தொடக்கமே “என்னவளே, என்னவளே…” என்ற மென்மையான காதல் பாடலுடன் அறையில் காதல்மனம் பரப்பியது. வசந்தம் ஒளிவழி தொலைக்காட்சி பாடகர் கௌசிக் தொடர்ந்து அருமையான மேலும் மூன்று பாடல்களை பாடினார். பின்னணியில் நிஷ்தா வீணையிலும், ராகவேந்திரன் புல்லாங்குழலும், கோபி மிருதங்கங்கத்திலும் இசை கோர்க்க காதலுடன் கவிமணமும் சேர்ந்தது.
சிங்கப்பூரர்/நிரந்திரவாசிகள் பிரிவில் 13 கவிதைகளும், வெளிநாட்டு ஊழியர்கள் பிரிவில் 7 கவிதைகளும் இறுதிப் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டன. அவர்கள் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பின்னர் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை இசைக்கலைஞர்களின் பின்னணி இசையோடு மிகத் தெளிவாக மீடியாகார்பின் சபா முத்து நடராசன் வாசித்தார். ஒருவரின் குரலிலேயே எல்லா கவிதைகளையும் கேட்கும் போது வரிகளை தெளிவாக வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. பல கவிதைகள் மனதை தொட்டது. சில தனித்து நின்றது.
இடையிடையே வைரமுத்துவின் காதல் வரிகள் அவரின் குரல்வழி செவிக்குள் புகுந்து இதயம் தொட்டது.
இறுதிச்சுற்றில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பார்வையாளர்களுக்கும் கவிதை போட்டி நடைப்பெற்றது. அதில் இரண்டு வெற்றியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். பரிசுத்தொகை $50 வெள்ளி. ஆனால் பரிசு அறிவிக்கும் போது ஒருவரே இருந்ததால் அவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
பேலியஸ்டர் சாலையிலுள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 60-70 வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலும் போட்டியில் பங்குபெற்றவர்களும் அவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் தான். பொதுமக்கள் குறைவே.
கவிதைக்காக மட்டுமே ஒரு நிகழ்வு, கவிதைகளை மையப்படுத்தி, முழுவதும் கவிஞர்களின் வரிகளை மட்டுமே பேசும் விழாவாக முதன் முதலில் ஒரு விழா பார்க்கிறேன். இதில் என்ன சிறப்பு என்றால், சிறப்பு பேச்சாளர்கள் இல்லை, தேவையற்ற எந்த சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை, வாழ்த்துரை, தலமையுரை, வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை இப்படி தனித்தனிதயே எந்த உரைகளும் இல்லை. இங்கு எல்லாம் ஒருவரே ஒருவர் தான். சபா தான் நிகழ்ச்சி தொகுப்பாளர், அவர்தான் நன்றியுரையும் வழங்கினார்.அதுவும் நல்லாதான் இருந்தது. கவிதைக்கான ஒரு விழா, காதல் கவிமணம் பரப்பியது தமிழ்மொழி விழாவில்.