திருக்குறள் விழா 2017

ஏப்ரல் 1ஆம் தேதி சரியாக மாலை மணி 6க்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் 31வது ‘திருக்குறள் விழா 2017’, “வாழ்க தமிழ்மொழி” என்ற தமிழ் வாழ்த்தோடு தொடங்கியது. பாரதியாரின் இப்பாடலை ஸ்வப்னா ஆனந்த் தனது இனிமையான குரலில் பாடினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த திருக்குறள் விழா போட்டிகள் குறித்த ஒரு காணொளி போட்டுக் காண்பிக்கப்பட்டது.
பாலர் பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியை நடத்திய விதம், பங்குபெற்றவர்கள், பொற்றோர்களின் கருத்து ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறையவே சொல்ல விரும்பினார். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் வேலை குறைப்பு, தண்ணீரின் அவசியம், தமிழர்களின் ஜனத்தொகை, பொருளாதாரம், அரசியல் ஈடுபாடு இப்படி நிறைய சொன்னார். ஆனால் அதை இன்னுமசிறப்பாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு மட்டும் தானோ? ஏனோ நான் எதிர்பார்த்த வழக்கமான பேச்சு அன்றில்லை.

சிறப்பு விருந்தினர், செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் அரசியல் பேச விரும்பவில்லை, திருக்குறள் பேசுகிறேன் என தொடங்கி

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
என்ற மூன்று குறள்களையும் அதற்கான விளக்கத்தையும் சொல்லி அதை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பிரச்சினையில்லை என்று சுருக்கமாகத் தன் உரையை முடித்தார்.

சிறப்பு விருந்தினர், புரவலர்கள், பேச்சாளர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். அன்றைய விழாவில் மாலை பொன்னாடைகள் உண்டு.

திருக்குறள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன.

பிசிஎஃப் ஸ்பார்கிள் டாட்ஸ் பாலர் பள்ளி மழலையர்கள் பிரியதர்ஷினி, யாழினி A/P சிவபுரகாஷ் இருவரும் ஒழுக்கம், கல்வி என்ற இரு அதிகாரத்திலும் இருக்கும் 20 திருக்குறளையும் அழகாகத் தங்களின் மழலை குரலில் கூறினர். அதிலும் அந்த யாழினி குட்டி பாப்பாவின் குரலில் ஒலித்த குறள் அழகு,தெளிவு, இனிமை.

ராஃபிலள்ஸ் கல்வி நிலையத்தில் உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர் மிக்கில் ஆனந்த் “தோன்றிற் புகழோடு தோன்றுக…” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி மறைந்த திரு எஸ்.ஆர்.நாதன் அவர்கள் குறித்து சிறப்பாகப் பேசினார்.

இந்தாண்டு ‘திருவள்ளுவர் விருது’ தமிழுக்காகச் சேவையாற்றிய முத்தழகு மெய்யப்பன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனக்கு தெரிந்து சிங்கையில் பல இடங்களில் பெயர் பலகையில் இல்லாத தமிழாக்கத்தை இடம்பெற வைத்த பெருமை இவருக்கு உண்டு. நானும் அவரிடம் சில தரவுகளைக் கொடுத்திருக்கிறேன். அதனால் அவருடைய முயற்சி குறித்து அறிந்தவன் என்ற முறையில் ஐயாவுக்கு என் வாழ்த்துகள்.

ஏற்பட்டுகுழுத் தலைவர் திரு பொற்செழியன் சங்கரன் நன்றியுரையில் விழாவுக்குப் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஜெயஶ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் பூவேந்தன் நடராஜன் நிகழ்ச்சியினை சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.

சிறப்புப் பேச்சாளர்களின் வரிசையில் முதலில் பேச வந்தவர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன்.

மனிதன் மனிதனுக்கே சொன்னது திருக்குறள் எனத் தொடங்கி மென்மையாகச் சொல்லும் வழக்கம் உள்ள திருவள்ளவர், எதையுமே வலிமையாக சொல்லாத திருவள்ளுவர் ஒன்றை வலியுறுத்தினார் அதுதான் அறன் வலியுறுத்தல் என்று விளக்குனார். அறத்துப்பால் குறித்துப் பேசிய முனைவர் அறம் சிறப்பு ஈனும், பொருள் ஈனும் அதனால் அந்த அறத்தை வலிமையாக கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும் அறத்தான் வருவதே இன்பம் அது செய்ய நினைக்கும்போது, செய்யும் போது, செய்து முடித்தபோதும் கிடைக்கும் இன்பம் என்றார். அப்ப அறம் என்றால் என்ன என்பதை

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

என்ற திருக்குறளையும் அதற்கு பல கிளைக் கதைகளையும் கவிதையும் எடுத்துரைத்து, மாசில்லாத மனமே அறத்தின் அடிப்படை என்று விளக்கினார். ஒப்புரவின் பெருமையை எடுத்துச் சொன்ன இவர் பல இடங்களில் கம்பனைத் துணைக்கு அழைத்தார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்று மாணிக்கங்கள், பொருட்பாலில் பொருளாக்கான அறமும், இன்பத்துபாலில் இன்பத்துக்கான அறமும் சொல்லப்படுவதால் திருக்குறள் ஒரு அறநூல் என்று சொல்லி முடித்தார். நல்ல கருத்தாழமிக்க பேச்சு. இன்னும் கொஞ்சம் கூட எதிர்பார்த்தேன்.

அடுத்து, பொருட்பால் என்னும் தலைப்பில் பேச வந்த ஐயா ஜோதி மாணிக்கவாசகம், இதில் தான் திருவள்ளுவர் அதிகமாக 70 அதிகாரத்தை வைத்திருக்கிறார். காரணம், ஒருவர் அறவழியில் பயனப்படும் போது படும் ஏற்படும் தடங்கல்களை, இன்னல்களை எப்படி களைய வேண்டும் என அறிந்து கொள்ளத்தான் என கூறினார். அதோடு பொருளை எப்படி ஈட்ட வேண்டும் என்பதை மொத்தமாகப் பொருட்பாலை ஒரு குறளில் மிக அழுத்தமாக சொல்வதாக

அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

என்ற குறளை சொல்லி நேர்மையாக வந்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் விளைவிக்கும் என்று விளக்கினார்.
தன்னம்பிக்கைதான் வெற்றியின் அடிப்படை, ஒருவன் என்று அதை இழக்கிறானோ அப்போதுதான் அவன் தோற்றுப்போவான்,

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்.

என்ற குறள்களை எடுத்துச்சொல்லி விளக்கினார்.
கல்வி, ஆலோசனை,சிந்தனை, நட்பு எனப் பலவற்றையும் தொட்டுப் பேசினார். நிறைய தயாரிப்பு, தங்கு தடையின்றி ஓட்டம், நகைச்சுவை என சிறப்பாகப் பேசினாலும் இடையிடையே சற்று தலைப்பை விட்டு வெளியே சென்ற மாதிரி தெரிந்தது. கருத்துக்களைச் சுருக்கி, அழுத்தி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.

அடுத்து பேச வந்த முனைவர் மன்னை ஐயா காமத்துப்பாலை ஒரு வித உணர்ச்சியோடு…அட அப்படி இல்லங்க நல்ல மெய்ப்பாடு, குரல் ஏற்ற இறக்கம், இனிமையான குரலில் குறளுக்குத் தொடர்புடைய பாடல்கள் எனத் தன் கருத்தைத் தெளிவாக நகைச்சுவையுடன் பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.

இன்பத்துபால் என்று சொல்வதே தவறு, அதை காமத்துப்பால் என்றுதான் அழைக்க வேண்டும் எனவும் இல்லறம் என்பதை நல்லறத்தோடு வாழ்வதன் அடிப்படை என்று சொல்வதுதான் காமத்துப்பால் என்பதை வள்ளுவரின் வரிகளில் விளக்கினார்.

நிலவில்லா காதல் கவிதைகள் குறைவே என்று சொல்லும் வகையில் பெரும்பாலும் காதலியை நிலவுடன் ஒப்பிட்டு எழுதுவதுண்டு.

ஆனால் மன்னையார் தன் பேச்சில், வள்ளுவர்

மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி .

என்ற குறளில் நிலவில் களங்கமுண்டு அதனால் என் காதலியை நிலவுடன் ஒப்பிட மாட்டேன் என்று சொல்வதாக விளக்கினார்.

காமத்துப்பாலில் உள்ள காதல், ஊடல், பிரிவு, அழகு, மதுபாவனை என்று பல விஷயங்களைத் தொட்டு பேசினார். பல இடங்களில் கண்ணதாசன், மேத்தா, வைரமுத்து எனப் பல கவிஞர்களை நினைவுகூர்ந்து தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அருமை, அருமை. என்ன, என்றும் கோர்வையாக இருக்கும் அவரது பேச்சு இன்று காமத்துப்பால் என்றதாலோ என்னவோ கொஞ்சம் தாவி தாவிச் சென்றது.

மொத்ததில் மூன்று சிங்கை பேச்சாளர்களும் அரங்கில் பொங்கி வழிந்த கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர். மூவருமே தேர்ந்த பேச்சாளர்கள் என்பதை நிரூபித்தனர்.
அடுத்த முறை பேச்சாளர் மன்றத்தில் இருந்து சில புதிய பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினால் மேலும் பல நல்ல பேச்சாளர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
நிகழ்ச்சி சரியாக இரவு மணி 9:00க்கு முடிந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் அயராது உழைப்பால் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் தலைமையில் மற்றுமொரு விழா சிறப்பாக முடிந்தது.

Leave a Comment