தமிழ்மொழி விழாவின் முதல் நிகழ்ச்சி “யுத்தம் 2017” இன்று காலை சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு வெ பாண்டியன்(தமிழர் பேரவைத் தலைவர்), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவை தலைவர் முத்தையா அருணாச்சலம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தன் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மற்ற பல்கலைக்கழக மாணவத் தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டுகிறது.
பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. வரவேற்புரை வழங்கிய மாணவர்த் தலைவர் அருண், வாழ்த்துரை வழங்கிய திரு வெ பாண்டியன் சுருக்கமாக ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட்டனர். பொன்னாடை, மாலைகள் இல்லை.
அடுத்து, உயர்நிலைப் பள்ளிகளுக்கான ‘யுத்தம்’ அரையிறுதிச் சுற்று ஆரம்பமானது. இரண்டு போட்டி அங்கங்கள் நடந்தது. ஒன்று படத்தைப் பார்த்து, சொற்கள்/சொற்றொடரை கண்டுபிடிப்பது. இன்னொன்று தொடர்புடைய சொல்லை வைத்து சரியான சொல்லை கண்டுபிடிப்பது. இறுதிச்சுற்றில் கூடுதலாக, படத்தை சரியாக வரிசைபடுத்தும் போட்டி அங்கமும் சேர்க்கப்பட்டிருந்தது.
பிறகு மேல்நிலைப்பள்ளிகளுக்கான அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச்சுற்று நடைபெற்றது.
தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி மாணவர்களிடையே பேச்சுத்ததமிழை, சொல்வளத்தை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான முயற்சி. மாணவர்கள் சில கடினமான சொற்களையும் சுலபமாக கண்டுபிடித்து நன்றாக விளையாடினர்.
குறிப்பாக என்னைக் கவர்ந்தது ‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கண்டுபிடிக்க ‘திருக்குறள்’ என்ற சொல்லை தொடர்புடைய சொல்லாக பயன்படுத்தியது. அதை வைத்து சரியான சொல்லை அந்த மாணவர் கண்டுபிடித்தது அருமை. அது தவிர நிறைய அரசாங்க அமைப்புகளின் தமிழ் பெயர்களை எளிதாக சொல்லி மலைக்க வைத்தனர்.
ஆனால், போட்டியில் ஒரு சில வடமொழி சொற்கள் தலை காட்டின அவை தவிர்க்கப்படலாம். வார்த்தை என்று சொல் நிறைய வந்தது. அதையும் தவிர்க்கலாம்.
போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளின் விவரம்:
உயர்நிலைப் பள்ளி போட்டிகளுக்கான வெற்றியாளர்கள்
—————————————
முதல் பரிசு- யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி
இரண்டாம் பரிசு – பெண்டமீர் உயர்நிலைப் பள்ளி
மூன்றாம் பரிசு – ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி(குழு 2)
ஊக்கப் பரிசு – ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி(குழு 1)
மேல்நிலைப் பள்ளி போட்டிகளுக்கான வெற்றியாளர்கள்
——————————————
முதல் பரிசு – ராஃபில்ஸ் கல்வி நிலையம் (குழு 2)
இரண்டாவது பரிசு – விக்டோரியா தொடக்கக்கல்லூரி
மூன்றாவது பரிசு – மெரிடியன் தொடக்க கல்லூரி
ஊக்கப்பரிசு – ராஃபில்ஸ் கல்வி நிலையம் (குழு 1)
இடையே பார்வையாளர்களுக்கான போட்டி அங்கமும் நடத்தினார்கள். இதில் போன ஆண்டு ‘யுத்தம்’ வெற்றியாளரான அஸ்வினி செல்வராஜ், அழகுநிலாவுடன் இணைந்து விளையாடி இருவரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
அவ்வப்போது ஒலிபெருக்கி தகராறு செய்தது மாணவர்களிடையே விறுவிறுப்பை குறைத்தது. உமறுப்பலவர் அரங்கம் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவில்லை. அடுத்த முறை அதற்கு சில சிறப்பு ஏற்பாடு செய்யலாம். தொழில்நுட்பம் கோளாறு செய்தாலும் விரைவில் சரி செய்யப்பட்டு தொடர்ந்து நடத்தபட்டது பாராட்டுக்குரியது.
மாணவர்கள் நிறைய வந்திருந்தாலும் அரங்கம் நிறையவில்லை. எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், திரு வைரவன், நற்பனி தலைவர் திரு இராமமூர்த்தி, திரு இராஜாராம், திரு அன்பரசு, திரு திண்ணப்பன், திரு அருண் மகிழ்நன் ஆகியோர் வந்திருந்தனர். அமைப்புகளின் விழாக்களுக்கு வருகை தரும் மற்ற ‘பொது மக்கள்’ காணவில்லை. மேலும் பல மாணவர்கள் பயனுறும் வகையில் பார்வையாளர்களாக மற்ற சில பள்ளி மாணவர்களையும் வரவழைக்கலாம்.
போட்டியை நடத்திய சரவணன் சண்முகம் இடையிடையே ஏற்பட்ட தடங்கல்களையும் சமாளித்து நல்ல எடுத்துச்சென்றார்.
சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் சிறிது தாமதமாக முடிந்தது.
மாணவர்களுக்காக மாணவர்களே நடத்திய நல்ல பயனுள்ள நிகழ்ச்சி. தேர்வு நெருங்கும் வேளையில் இவ்வளவு முயற்சி எடுத்து நிகழ்ச்சியை நடத்தியது பெரும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரியது. வருங்காலத்தில் ஆர்வத்துடனும் திறமையுடனும் தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த நல்ல இளைய தலைவர்கள் தயாராக உள்ளனர்.