பேருந்து கவிமாலையின் போது மார்ச் மாத கவிதை போட்டிக்கான தலைப்பை ஆசான் Karuna Karasu ‘யாக்கை திரி’ என்று கொடுக்க, அந்த அருமையான தலைப்பில் பலரும் கவிதைகள் படைத்தனர்.
இன்று கவிமாலையில் இரண்டாம் பரிசு பெற்ற ‘யாக்கை’ தலைப்பிலான என் கவிதை..
யாக்கை
———
யாக்கை பேணி
காக்க மறந்து
கைப்பேசியுடனே
காலம் கழித்து
தூக்கம் துறந்து
வேலை புரிந்து
துரித உணவில்
உடம்பு வளர்த்து
அதையும் ஒழுங்காய்
அசைக்க மறுத்து
செரிக்கத் தவித்து
துருவும் பிடிக்க
மருந்தெனும் பேரில்
இரசாயனம் உண்டு
மேலும் சீக்கு
மெல்ல வளர்த்து
‘புற்று’ தின்னு
முற்றுப் பெறாமல்
வாழ்ந்த முறையை
பின்னோக்கிப் பார்த்தால்
புரிந்தது உண்மை…
மின்சாரம் மட்டும்
கண்டிராவிட்டால்
இந்தக் கட்டை
வாழும்போதும்
மட்டுமின்றி
நீட்டிய பின்னும்
நிதானமாய் வெந்திருக்கும்!