தமிழ்மொழி மாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி, திருக்குறள் விழா 2017. வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 1ம் தேதி மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறும் இவ்விழா தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் முத்திரை விழா. இந்தாண்டு இவ்விழாவின் சிறப்பம்சம் மூன்று முத்தான சிங்கப்பூர் பேச்சாளர்களின் சிறப்புரை. அறத்துப்பால் குறித்து பேசவிருக்கும் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் ஒரு சிறந்த பேச்சாளர். ஐயா சாலமன் பாப்பையா, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உடையவர். சிங்கையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவரது பேச்சு கருத்தாழமுடையதாக இருக்கும். தெரிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கும். தொழிலதிபராகவும், சிங்கையின் பல தமிழ் அமைப்புகளின் நிரந்திர புரவலராகவும் இருக்கும் ஐயா ஜோதி மாணிக்கவாசகம் பொருட்பால் குறித்தும் பேசுவது பொருத்தமே. கலகலப்பான பேச்சில் நம்மை கட்டிபோடும் இவர் நகைச்சுவையோடு வாழ்க்கையின் யதார்த்தங்களையும் புட்டுவைப்பார். மிகவும் எளிமையாக தன் கருத்துகளை முன் வைப்பதில் வல்லவர். நகைச்சுவை நங்கூரம் என்று எங்களால் அன்பாக அழைக்கப்படும் முனைவர் மன்னை ஐயா அவர்கள் இன்பத்துப்பால் குறித்து சிறப்புரையாற்றயிருக்கிறார். இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மேடைப்பேச்சாளராக வலம் வருபவர். சிங்கையில் ஆசிரியராக பணிபுரியும் இவரின் பேச்சுக்கு பல இரசிகர்கள் உண்டு. நகைச்சுவையுடன் கூடிய இலக்கிய பேச்சுக்கு நான் உத்தரவாதம். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். என்ற குறளுக்கேற்ப மழலைகளின் பேச்சும், உயர்நிலைப்பள்ளி மாணவரின் சிறப்பு பேச்சும் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சமூகத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கும் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் இந்த ஆண்டும் சில முக்கிய வேண்டுகோளையும் அறிவுரைகளையும் முன் வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் விழா என்றாலே நேரக் கட்டுப்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சின்ன சின்ன விஷயங்களும் நுட்பமாக கவனித்து செயல்படுத்தப்படும். அதற்கான அவர்களின் உழைப்பு கொஞ்சமல்ல. நிறைய தொண்டூழியர்களின் ஈடுபாடும் ஆர்வமும் அதன் பின்னனியில் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு திருக்குறள் போட்டிகள் மீண்டும் நடைபெற்றது. அதற்கான பரிசுகள் விழாவில் வழங்கப்படும். இந்த ஆண்டு திருக்குறள் விழாவுக்கு கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதனால் இவ்விழாவிற்கும் இருக்கை கிடைக்க முந்துங்கள். கூடுதல் நாற்காலி ஏற்பாடு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்