பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக தமிழ் பேச்சுப் போட்டியில் சிங்கை பல்கலைகழக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது.

வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான ‘பேசு தமிழா பேசு’ என்ற பேச்சுப்போட்டி ஒன்றை SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மேடைத்தமிழை வளர்ப்பதும், உலகத்தமிழர்களிடையே உறவுகளை வளர்ப்பதுமே மூலநோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல்கலைகழக மாணவர்களுக்காக நடத்துவது இதுவே முதல் முறை.

நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த இப்போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் தேர்வு காலத்தையொட்டி இருந்ததால் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. ஆனால் வேறு சில காரணங்களால் போட்டி டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இந்த முறை மாணவர்கள் பங்குபெற பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. தேர்வு முடித்த கையோடு போட்டியில் கலந்து கொள்ள விமானம் நிலையம் சென்ற மாணவர்கள் ‘வர்தா’ புயல் காரணமாக விமானமின்றி திரும்பி விட்டனர். மீண்டும் அடுத்தநாள் சென்னை சென்று, பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்ற திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன், திரு செம்பியன் சோமசுந்தரம், திரு ஜெரமி ஜோயல் பீட்டர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

“மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார் என்று பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கின்றனர், ஆனால் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கின்றது” என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் என்னைத் தொடர்புக் கொண்டார். அதற்கான முயற்சியில் எனக்கு உதவிய மாணவர்கள் அருள் ஓஸ்வின், அருண் வாசுதேவ் அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து தகவல்கள் கொடுத்து ஊக்கப்படுத்தி சிங்கையிலிருந்து மாணவர்கள் பங்கு பெற விரும்பிய பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கும் என் நன்றி.

இப்போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுச் செலவை எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஏற்றுக் கொண்ட தமிழர் பேரவை அதன் தலைவர் திரு பாண்டியன், வணக்கம் மலேசியா திரு தியாகா, ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன், புரவலர் திரு ஜோதி மாணிக்கம், சமூக தலைவர் திரு நிஜாம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

தொடர்ந்து அனைத்துலக அரங்கில் சிங்கை மாணவர்கள் தடம் பதிக்க வாழ்த்துகள்💐💐

பி.கு: வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ‘மாணவர் முழக்கம்’ என்ற பெயரில் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் துபாயில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிங்கை தொடக்கக்கல்வி மாணவி ஹர்ஷிகா மூன்றாம் பரிசு பெற்றார்.

Leave a Comment