சரி இந்திய அரசியல், அமெரிக்க அரசியல் எல்லாம் பார்த்தாச்சு, இப்ப சிங்கை இலக்கிய அரசியலுக்கு வருவோம். என்னடா வில்லங்கமா ஏதோ சொல்றானேனு நினைக்கிறவங்க முழுசா உணர்ச்சி வசப்படாம கருத்தை மட்டும் படியுங்கள்.
ஜெமோ விமர்சனம் குறித்த சர்ச்சை
———————————–
சிங்கை இலக்கிய உலகில் இலைமறை காய்மறையா இருந்த விஷயங்கள் ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வந்தது ஜெமோ விமர்சன சர்ச்சையில் தான். அவரோட விமர்சனம் குறித்து நான் ஏற்கனவே கருத்து சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதை வைத்துக்கொள்ளலாம்.
முதலில் ஜெமோ ஒரு எழுத்து ஜாம்பவான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் வைத்த விமர்சன பார்வையில்தான் சில கோளாறுகள். அது முழுக்க முழுக்க அரசியல் என்பது அவரை ஆதரித்த நிறைய பேருக்கு இப்ப புரிந்திருக்கும். அவருடைய கருத்துக்களில் எனக்கு நிறைய உடன்பாடு இருந்தாலும்கூட அவர் அதை வைத்த விதம், தனி மனித தாக்குதல்கள், ஒருவரின் அறிவை, படைப்பு திறமையை ஏளனமாக பேசியது, குறிப்பிட்ட சிலரின் படைப்புகளை, படைப்பாளிகளை மட்டும் பாராட்டுவது, மற்ற படைப்புகளை இகழ்வது, ஒரு படைப்பாளியின், நன்கு பேசப்பட்ட படைப்புகளை ஒதுக்கிவிட்டு மற்ற படைப்புகளை தேர்வு செய்து எதிர்மறை கருத்து வைத்தது, படைப்பாளி பற்றி எழுத்தில் இல்லாத விஷயங்களை, தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தகலவல்களில் அடிப்படையில் வைத்த கருத்துகள், பின்னர் சில கருத்துகளை திரும்ப பெற்றது இவையெல்லாம் அவர் தனிப்பட்ட முறையில் செய்த விஷயங்கள் அல்ல பின்னால் இருந்து ஊதி விட்டவர்கள் சிலர் என்பதும் வெட்ட வெளிச்சம்.
என்னுடைய வருத்தம் என்னவென்றால் சிங்கையின் ஒட்டுமொத்த தமிழ் படைப்பிலக்கியமே தரமற்றது என்ற அளவில் ஒரு பார்வையை ஜெமோ முன் வைக்கிறார் (அப்படி இல்லை என்று சிலர் வாதிட கூடும். அதற்கு அவர் மேல் உள்ள பற்று மட்டுமே காரணமாக இருக்கும்). அது பொதுவெளியில் சரி என்று அவரின் சீடர்களாலும் மற்றவர்களாலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒரு சில தமிழக சமூக ஊடகங்கள் இணையத்தில் செய்தி வெளியிடுகின்றன.
ஆனால் சிங்கையில் தமிழ் வளர்க்கும் அமைப்புகளோ, சிங்கையின் சக படைப்பாளர்களோ, எந்தவொரு கருத்தோ, விளக்கமோ கொடுக்கவில்லை. அதற்கு ஒன்று, ஜெமோவையோ அல்லது அவருடைய விமர்சன பார்வையையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற நிலை இருக்கலாம் இல்லை நமக்கேன் வம்பு, தனிப்பட்ட முறையில் நம்மை ஏதும் சொல்லவில்லை அதனால் விட்டுவிடலாம் என்ற சுயநலப்போக்கு காரணமாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அது சரியான அணுகுமுறையாக எனக்குப்படவில்லை.
ஒரு ஆரோக்கியமான விவாதமும் அவர் சொன்ன கருத்தில் நல்லவைகளை எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தவேண்டும் இருக்கும்.
ஜெமோ சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட நன்மைகள்
———————————————
அந்த அடிப்படையில் அந்தச் சர்ச்சையில் நமக்கு என்ன நல்லது ஏற்பட்டது என்று பார்ப்போம்.
முதலில், கடந்த ஒரு சில ஆண்டுகளாக வெறும் வாழ்த்துகளும் நன்றிகளும் மட்டுமே நிறைந்திருந்த சிங்கை இலக்கிய உலகில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சில அமைப்புகள், படைப்பாளர்கள் விமர்சனங்களை பொதுவெளியிலும், இலக்கிய கூட்டங்களிலும் வைத்தாலும் அது குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை. மற்ற மொழிகளில் இருக்கும் அளவிற்கு விமர்சன பார்வை தமிழில் இல்லை. அதை ஏற்கும் பக்குவமும் பலரிடம் இல்லை.
இப்போது அது குறித்து பலர் பேச ஆரம்பித்திருக்கிறர்கள், விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன, படைப்பாளிகள் ஏற்க ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
குறிப்பாக தமிழ் முரசில் வெளிவரும் கவிதைகளின் தரம் குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அதில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது என நினைக்கிறேன். அதற்கு உழைப்பு தேவைப்பட்டது. தொடர்ந்து பார்ப்போம்.
எழுத்தாளர் விழா : விமர்சனம் குறித்த நிகழ்வு
——————————————-
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், தேசிய கலைகள் மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’வில் கடந்த வாரம் சனிக்கிழமை, நவம்பர் 5ம் தேதி காலை, ‘பெரும் விவாதம்: விமர்சனம் செய்வதா, வேண்டாமா?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வை அதன் தாக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை வழி நடத்தியவர் முனைவர்
சித்ரா சங்கரன். இதில் கலந்து கருத்துரைகள் வழங்கியவர்கள் திரு இராம கண்ணபிரான், திருமதி கனகலதா, திருமதி சித்ரா ரமேஷ். இவர்கள் அனைவருமே சிங்கை இலக்கிய உலகில் குறிப்பிடதக்கவர்கள், நல்ல படைப்பாளிகள், மதிக்கபட வேண்டியவர்கள். இந்த மேடைக்கு தகுதியானவர்கள்.
இவர்களாற்றிய உரைகளை நான் புரிந்துக்கொண்ட வகையில் என்னால் முடிந்த வரையில் சுருக்கமாக என்னுடைய ‘நோட்ஸ்’ பகுதியில் உங்களின் வாசிப்புக்காக பதிவு செய்துள்ளேன்.
அதில் பொதுவாக என்ன சொல்லப்பட்டது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
இதில் பங்கேற்ற மூவரில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சிங்கையில் படைப்பிலக்கிய விமர்சனம் எப்படி இருந்தது என்பது குறித்து தங்களின் பார்வையை வைக்க வேண்டும்.
ஆனால் முதல் பேச்சாளரை தவிர மற்ற இருவரும் அதிகம் படைப்பை பற்றி மட்டுமே பேசினார்கள், விமர்சனம் குறித்தோ, தலைப்பில் கொடுக்கப்பட்ட ஆண்டில் அதன் வளர்ச்சி குறித்தோ அதிகம் பேசவில்லை என்பது வந்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே.
கேள்வி பதில் அங்கத்திலும் பல கேள்விகளுக்கு தெளிவான, முடிவான ஒரு பதிலை முன் வைக்கவில்லை, சற்றே குழப்பமான கருத்துக்களே வெளிப்பட்டது. அதற்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால், எல்லோருமே கீழ்கண்ட கருத்தில் ஒன்றுபட்டோம்
1.அது சிங்கையில் வாசிப்பு பெருக வேண்டும்
2.விமர்சனம் எழுத்துச் சார்ந்து இருக்க வேண்டும், நடுநிலையோடு பண்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். புண்படுத்தக் கூடாது
3.விமர்சனத்தை திறந்த மனத்துடன் ஏற்கும் பக்குவம் வேண்டும். ஆரோக்கியமான நல்ல விவாதம் வேண்டும்.
நூல் வெளியீட்டு விழா
———————-
நிகழ்வில் இன்னொரு விஷயம் அதிகமாக குறிப்பிடப்பட்டது. அது நூல் வெளியீடு குறித்தானது. பொதுவாக சிங்கையில் நூல் வெளியீட்டில் பாராட்டுரைகள் மட்டுமே உள்ளது என்று சொல்லப்பட்டது.
அது குறித்து என் கருத்து:
அது உண்மையே. யாராவது சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொள்வார்களா? மனித மனம் பாராட்டை எதிர்பார்ப்பது இயற்கை தானே. அதுவும் தான் உழைத்து வெளியிட்ட ஒரு படைப்பை வெளியிடும்போது கண்டிப்பாக அந்த எதிர்பார்பு இருக்கும். ஆனால் அதையும் தாண்டி குறைகளை ஏற்கும் முதிர்ச்சி வேண்டும். பாராட்டுகளை மேடையில் கேட்க விரும்பும் நாம் குறைகளை மேடையில் கேட்க விரும்பவில்லை. இதுவும் இயற்கைதான். அதற்கு தீர்வு, நூல் வெளியீட்டு விழா நடத்துபவர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து விமர்சனக் கூட்டங்களையும் நடத்துங்கள். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே வாழ்த்துரை, அறிமுக உரை கொடுப்பவர்கள் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளுங்கள். இது வாசிப்பையும் வளர்க்கும். தரமான எழுத்துகள் உருவாக வழி வகை செய்யும். பிற்காலத்தில் நான் தனிப்பட்ட முறையில் நூல் வெளியிட்டால் இதை கண்டிப்பாக செய்வேன்.
ஊடகத்துக்கு ஒரு வேண்டுகோள்
———————————–
தமிழ் முரசில் நூல் வெளியீட்டு விழா செய்தி வெளியிடுவது போல் நூல் விமர்சன கூட்டங்கள் குறித்தான செய்தியையும் வெளியிடுங்கள். தனியாக மாதம் ஒரு நூலை தேர்ந்தெடுத்து விமர்சன பகுதி ஒதுக்கி வெளியிடுங்கள். இது படைப்பாளனையும், வாசகர்களையும் ஊக்கப்படுத்தும்.
ஒலி 96.8லும், வசந்தத்திலும் இது போல ஒரு விமர்சன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.
அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்
————————————
இந்த கூட்டத்தில நான் பார்த்த இன்னொரு நல்ல விஷயம், சிங்கையின் பல அமைப்புகளிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். இதே கூட்டத்தை எந்தவொரு தமிழ் அமைப்பாவது நடத்தியிருந்தால் மற்றவர்கள் வந்திருக்க மாட்டார்கள். இது தான் கசப்பான உண்மை. அதனால் இந்த மாதிரியான கூட்டங்களை, விவாதங்களை தேசிய கலைகள் மன்றமோ அல்லது மற்ற பொதுவான அமைப்புகளோ தொடர்ந்து நடத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் சிங்கை தமிழுக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்.
எல்லோருமே அவரவர் பணிகளை சிறப்பாக செய்து படைப்பிலக்கியத்திற்கு பெரும்பங்காற்றுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு சில முறை ஒன்றுபட்டு விவாதங்களை முன் வைத்து, வளர்ச்சியை அலசிப்பார்த்து, நடவடிக்கை மேற் கொள்ளுதல் அவசியம்.
சிங்கை இலக்கியம் என்பது ஒரு குறிப்பட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கோ, தனி அமைப்புகளுக்கோ, தனி மனிதர்களுக்கோ சொந்தமானதல்ல. அது படைப்பாளிகளின் உலகம். அவர்களை வழி நடத்துவதும், ஊக்குவிப்பதும் தமிழ் ஆர்வமுள்ள அனைவரது கடமையாகும். இதில் சார்பற்று இயங்குவது மிக முக்கியம்.
அப்படி நடந்தால் அதன் மூலம் சிங்கை இலக்கிய உலகில் அடுத்த மூன்று ஆண்டில் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாக்க வாய்ப்பாக அமையும். நிறைய வாசிப்பு, சிறந்த படைப்புகள் உருவாக ஒரு நல்ல களம் அமையும். இதில் வெற்றி பெறப்போவது தமிழாக இருக்கும்.
இதில் அணில் போல் என்னால் முடிந்த சின்ன சின்ன விஷயங்களை பலர் ஆதரவுடன் நான் செய்து கொண்டிருக்கிறேன், தொடர்ந்து செய்வேன்.
பி.கு: இந்த பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.