“டே, சாப்பிட்டா என்னைப் போல இலைய சுத்தமா துடைச்ச மாதிரி, ஒரு பருக்கை மிச்சம் வைக்காம சாப்பிடனும். இப்படி சோத்தையும் காய்கறியையும் மிச்சம் வைக்கலாமா?”னு கல்யாண மண்டபத்தில பக்கத்தில சாப்பிட்டிட்டுருந்த என் நண்பனை கேட்டேன்.
‘அட, சாப்பிடறதுக்கு பிறந்தவனே, இப்படி சுத்தமா வழிச்சு சாப்பிட்டு, கழுவுன மாதிரி இருக்கிற இலையை கொண்டு போய் குப்பத்தொட்டியில போட்டா, அங்க வர்ற நாய்யி, நமக்கு முன்னாடி ஒன்னு வந்து நல்ல நக்கிட்டு போயிடுச்சேனு, திட்டிட்டே போகுமாம்”னு சொன்னான் நண்பன்.
இது நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆச்சு. அதுக்காக எல்லாம் நான் ரோஷப்பட்டு சின்ன வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் கொள்கைய மாத்திக்கிறதில்லை. இன்றைக்கும் தட்டிலோ, இலையிலோ பரிமாறினத காலி பண்ணாம எழுந்திருக்க மாட்டேன். அத பல பேர் சில காரணங்களுக்காக திட்டியதும், கேலி செய்ததும் உண்டு.
உணவு எங்கெல்லாம் எப்படியெல்லாம் வீணாகுதுனு பார்ரப்போமா?
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதல் படி சமைக்கப்பட்ட உணவை சாதாரன தட்பவெட்பநிலையில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக வைக்கக்கூடாது. நான்கு மணி நேரமென்பது சமைக்கப்பட்ட நேரத்திலிருந்து உட்கொள்ளும் நேரத்தை குறிக்கும். அதனால் தான் சிங்கையில் விழாக்களில், நிகழ்வுகளில் எத்தனை மணிக்குள் சாப்பிட உகந்தது என்ற குறிப்பை சாப்பாட்டுக்கு பக்கத்தில வச்சிருப்பாங்க. அதற்கு மேல் போனால் யாரும் சாப்பிட முடியாது. குப்பைக்கு தான் போகும். அதனால விழா/நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நம்ம வருகையை முன்னரே தெளிவாக சொல்லிவிட்டால் இதை ஓரளவு தவிர்க்கலாம்.
இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை வீட்டில் உணவை வீணாக்குவது. 77 விழுக்காடு சிங்கப்பூரர்கள் வீட்டில் உணவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. பொரும்பாலோனோர் வீட்ல உணவை அப்புறம் சாப்பிடலாம்னு குளிர்ப்பதன பெட்டியில வச்சிருவாங்க. அடுத்து புதுசா சமைச்சு அதுல மீதியானத பழசுக்கு முன்னாடி வைப்பாங்க. அப்படியே தினமும் முன்னால பழைய சாப்பாட்ட வச்சு முதல் நாள் வச்சது, திருடன் மாதிரி உள்ள ஒழிஞ்சுகிட்டு இருக்கும். தலைவர்கள் பிறந்தநாள் அன்றைக்கு சில கைதிகள விடுவிக்கிற மாதிரி என்றைக்காவது நம்ம விடுதலைக் கொடுத்தா அந்த உணவு பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கும். நம்ம பண்ண அகழ்வாராய்ச்சி வீணாப்போச்சேனு யாருக்கும் தெரியாம அந்த இடத்தைவிட்டு காலி பண்ண வேண்டியது தான். நான் எங்க வீட்டை பத்தி சொல்லல்ல….அட உங்க வீட்டை பத்தியும் சொல்லல்ல, பொதுவாச் சொன்னேன். ஆனா உண்மை என்னன்னா 92 விழுக்காடு குளிர்பதன பெட்டியில வைக்கிற உணவு வீணாவதாக 2015ல் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் எடுத்த ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.
கடந்த பத்து ஆண்டில் 50 விழுக்காடு அதிகரித்து சிங்கையில 2015ல் உணவு கழிவின் அளவு 785,500 டன்னாக உயர்ந்தது. அதாவது நாம் ஒவ்வொருவரும் இரண்டு குவளைச் சோற்றை குப்பையில் கொட்டுவதற்கு சமமானது. சிங்கப்பூரில் விளைநிலம் இல்லாததால் தேவையான உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2014ல் ஏறக்குறைய 15 பில்லியன் வெள்ளிக்கு உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன அதில் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மதிப்புடையவை வீணாக்கப்பட்டதாக புள்ளிவிவரம் சொல்லுது. அதை அப்புறப்படுத்துவது, அழிப்பது, மறுசுழற்சி செய்வது இப்படி இந்த உணவு கழிவு மேலான்மை பத்தி தனியா ஒரு புத்தகமே போடலாம்.
சரி இந்த உணவு வீணாகமாக எப்படி பயனுள்ளதாக மாத்துறாங்கனு பார்ப்போம். சிங்கையில் எல்லாரும் அதிகமாக சாப்பிடும் ரொட்டி(பிரட்), தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 7 நாள் வரை சாப்பிட உகந்ததாக இருக்கும். அதற்கு பிறகு காய்ந்து பூஞ்சை படிய ஆரம்பிக்கும். அதனால அதற்குள்ளாகவே அதை விற்க வேண்டும். அப்படி விற்காத ரொட்டிகளை குப்பையில் தான் போட வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு மாதமும் வீணாகும் ரொட்டிகளின் அளவு 336 டன்னாகும்.
இன்னொரு பக்கம் இந்த உணவு தேவைப்படுபவர்களுக்கு சென்றடைந்தால் பயனுள்ளதாக அமையும்.
அந்த நோக்கில் இவர்கள் இருவருக்கும் பாலமாக “புட் ஃபிரம் த ஆர்ட்(Food from the Heart)” என்ற லாபநோக்கமற்ற அற நிறுவனம் 2003ம் ஆண்டு சிங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. விரைவில் காலாவதியாகும் உணவு பொருள்களை இவர்கள் அடுமனைகளிடமிருந்தும், கடைகளிலிருந்தும், உணவகத்திலிருந்தும் நன்கொடையாக பெற்று அதை நலக் காப்பகத்துக்கும், முதியோர் இல்லங்களுக்கும், சுய சேகரிப்பு மையங்களுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் விநியோகிக்கிறார்கள்.
120 தொண்டூளியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 1,700 தொண்டூளியர்களுடன் செயல்படுக்கின்றது.
இந்நிறுவனம் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 28,000 கிலோ ரொட்டிகளைக் ஏறக்குறைய 15,000 பயனாளிக்கு விநியோகிக்கிறது.
அதே போல மற்ற உணவு பொருள்களையும் சேர்த்து 25,000 பயனாளிகளுக்கு உதவுகிறது. நடைமுறைச் சிக்கல் உள்ளதாலும், வசதியின்மை காரணமாகவும் சமைக்கப்பட்ட உணவை இவர்கள் விநியோகிப்பது இல்லை.
இவர்களுக்காக தான் நான் சில வாரங்களுக்கு முன் உணவு நிறுவனங்களை அழைத்து இந்த அற நிறுவனத்துக்கு உணவு பொருள்களை தந்து உதவும்படி தொலைபேசி வழி கேட்டுக் கொண்டேன்.அந்த பதிவை #உணவும்_உதவியும் என்ற ஹாஷ்டாகில் பார்க்கலாம்.
(https://www.facebook.com/ShanmugamTam/posts/1298966733448833)
நீங்களும் இவர்களுக்கு பல வழிகளில் உதவலாம். வாகன வசதி இருந்தால் உணவுப் பொருள் விநியோகிக்க உதவலாம். அதை ஒழுங்குப்படுத்த உதவலாம். பணமாகவோ பொருளாகவோ கொடுத்துதவலாம். இந்நிறுவன இணையதள முகவரி மற்றும் அழைப்பு எண் கீழேயுள்ளது.
உணவை வீணடிப்பது என்பது வெறும் காசை வீணடிப்பது மட்டுமல்ல, பயிரிட்டவர் முதல் பரிமாறியவர் வரை பலரது உழைப்பை, வியர்வையை, ஆற்றலை, திறமையை வீணடிப்பதாக நான் கருதுகிறேன். ஆசையாய், பாசத்தோடு நமக்கு சமைத்து பரிமாறப்பட்ட உணவை குப்பைத்தொட்டிக்கு பகிர்ந்தளிப்பது என்பது சமைத்தவர்களின்/பரிமாறியவர்களின் மகிழ்ச்சியை, அன்பை குப்பைத்தொட்டியில் கொட்டி அவர்களை அவமதிப்பதற்கு சமம்னு என்பது என் கருத்து.
இதை படித்த பிறகு உணவை தட்டுல விட்டு போகும் நாலு பேராவது வீணாக்காமல் சாப்பிட்டால் அதுவே மகிழ்ச்சி.
இனிமே சாப்பிடற படங்கள முகநூல்ல போடுறவங்க, சாப்பிட்டு முடிச்ச பிறகும் அந்த தட்ட படம் பிடிச்சு, ‘நான் உணவ வீணாக்கல’னு சொல்ற மாதிரி முகநூல்ல போடலாம்:)
Contact details of Food from the Heart:
தொலைப்பேசி எண் : 62804483
https://www.facebook.com/foodheart/
www:foodheart.org
PC: https://goo.gl/images/cFO4bP