போன வாரம் திங்கள்கிழமை மாலை, ஆயுத பூசைனு “‘கார’ சுத்தம் பண்ணி பூசை போடுங்க”னு மனைவி சொன்னாங்க. “அப்படியே, ஒவ்வொரு சக்கரத்துக்கு(சுழலி) கீழேயும் ஒரு எலும்பிச்சை பழம் வச்சு, வண்டிய எடு”னு அம்மா சொன்னாங்க. சரி, ஆண்டுக்கொரு முறையாவது சுத்தம் செய்வோமேனு மாலை கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி, வண்டிய சுத்தம் பண்ணி பூவு, பொட்டு எல்லாம் வச்சு அழகா வண்டிக்கு ‘மேக்கப்’ போட்டு கிளப்புனா…அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு எலுமிச்சை பழம் வைக்கலேயேனு. நாலாயிரம் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ல ஓடாத வண்டியா இந்த நாலு எலுமிச்சை பழத்துல ஓடப்போவதுனு கேக்கறவங்க அடுத்த பத்திக்கு தாவிடுங்க.
கீழே இறங்கி முன்னாடி சுழலிக்கு அடியில பழத்தை வச்சுட்டு பின்னாடி வைக்கும்போது தான் பார்த்தேன் உருளியில(டயர்) காத்தே இல்ல. ஆஹா சந்தனம், குங்குமம் வைக்கும் போது கூட இத பார்க்கலேயேனு யோசிச்சிட்டே உருளிய பார்த்தா, யாரோ ஒருவர், ஒரு ‘ஸ்குரூ’வ அழகா உருளிக்கு நடுவுல திருப்புளி வச்சு நுழைச்ச மாதிரி இருந்தது.
என்னடா இது ஆயுத பூசையும் அதுவுமா பூசை போட்டு வண்டிய எடுத்துட்டு கோயிலுக்கு போகலாம்னு பார்த்தா இப்படி ஆயிடச்சேனு ஒரு நிமிடம் தோனுச்சு. அடுத்த ஆயுத பூசை வரை வண்டி ஒழுங்கா ஓடனுமே அப்படினும் தோனுச்சு. ஆனா இதெல்லாம் அபசகுனமா எடுத்திட்டு மனச குழப்பிக்க வேண்டாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டிருக்கேன், மனைவி கிட்டயிருந்து ‘ஃபோன்’ வந்துச்சு.
“என்னங்க, இவ்வளவு நேரம், சீக்கிரம் வாங்க”னாங்க.
“இல்லம்மா, இந்நேரம், கோயில் கிட்ட வண்டி நிறுத்த இடம் கிடைக்காது அதனால நடந்த போயிடுவோம்’னு சொல்லி எல்லோரும் கோயிலுக்கு போயிட்டோம்.
இப்ப ‘பஞ்சர்’ ஆன உருளிய எப்படி சரி செய்வது?
என்கிட்ட ‘ஸ்டெப்னி’னு(stepney) கிடையாது. அட, வண்டிக்குச் சொன்னேங்க. வண்டி வாங்கும் போது ‘ரன் ஃப்ளாட் டயர்’ (Run Flat Tyre) இருந்துச்சு. அதனால ‘ஸ்டெப்னி’ என்கின்ற ‘ஸ்பேர்’ உருளி கிடையாது. ‘ரன் ஃப்ளாட் டயர்’ என்கின்ற உருளி பயன்படுத்துனா, அது ‘பஞ்சர்’ ஆனாலும் குறைஞ்சது ஒரு 100 ‘கிலோமீட்டர்’தூரம் ஓட்டலாம். அந்த உருளியோட பக்கச்சுவரு வலுவா வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனா, சில மாதங்களுக்கு முன்பு அது பழசாயிடுச்சுனு மாத்தும்போது சாதாரண உருளிய போட்டுட்டேன். அதோட மட்டுமில்லாம, ‘பஞ்சர்’ ஒட்ற ‘சீலன்ட்’ வேற காலாவதியாகிடுச்சு. நல்ல வேளை அது இல்லை. இருந்திருந்தா நானே ஒட்ட வேண்டியதாயிருக்கும்:)
அடுத்த நாள் காலைல, ‘வண்டி சர்வீஸ் சென்டர்’க்கு ‘ஃபோன்’ பண்ணேன்.
“அதிகமில்லை ஜென்டில்மேன், வண்டிய உங்க வீட்லயிருந்து ‘டோவ்’ பண்ணிட்டு போகனும், அதுக்கு 144 வெள்ளி 45 காசு ஆகும். அங்க உருளிய சரி பார்த்து ஓட்டைய அடைக்க முடிஞ்சா அடைப்பாங்க இல்ல புது உருளி மாத்தனுமா அதுக்கு ஏத்த மாதிரி செலவாகும்”னு சொன்னாங்க.
சரி, நம்ம கூகிள் அண்ணாச்சிகிட்டு கேட்டு பக்கத்தில உள்ள ஒரு கடை ஆளுக்கு ‘ஃபோன்’ பண்ணி
“வீட்டுக்கு வந்து ‘பஞ்சர்’ ஒட்ட முடியுமா”னு கேட்டா.
“70 வெள்ளியாகும் வீட்டுக்கு வர அது போக மத்தது”னு சொல்ல.
சரி திரும்ப கூப்பிடுறேனு சொல்லி AAS எனப்படும் ‘ஆட்டோமொபைல் அசோசியேசன் ஆஃப் சிங்கப்பூர்’க்கு அழைச்சேன்.
அங்க நான் உறுப்பினர் இல்ல. அதுல உறுப்பினராக சேர்ந்தால் ஆண்டுக்கு ஆறு முறை ‘டோ’ செய்வது உட்பட சில சேவைகள் இலவசமா கிடைக்கும். வண்டி ‘ரோடு’ல சிங்கப்பூர்ல எங்க நின்னாலும் உதவி கிடைக்கும்.
அங்க நம்ம அழைப்பை எடுத்தவர்,”எந்த ‘உருளி’ பழுதாயிருக்கு”னு கேட்க
“பின்னாடி,’உருளி’ தான்”னு சொல்ல.
“அப்ப அப்படியே ‘டோவ்’ பண்றது கஷ்டம், பின்னாடி சக்கரத்தையும் தரைல படாம ‘டோவ்’ பண்ணனும், சாதாரண ‘டோவ்’ சேவைக்கு உறுப்பினராக சேர்ந்தால் இலவசம், ஆனால் இதுக்கு 60வெள்ளி ஆகும்”னாங்க.
“அப்படியா, சரி வந்து காத்தடிச்சு தர முடியுமா”னு கேட்டேன்.
“அது, முடியும், உறுப்பினராக சேர்ந்தால் இலவசம் தான். அங்க வருகிறவர்கிட்ட 139 வெள்ளி ஆண்டிச் சந்தா கட்டிடுங்க”னு சொன்னாங்க.
“சரி”னு ஒத்துகிட்டு, அவர் வந்தவுடனே காச கொடுத்து காத்து அடிச்சு வண்டியி எடுத்துட்டு பக்கத்தில இருக்கிற புக்கிட் மேரா ‘கார்’ பட்டறைக்கு போனேன்.
அங்க, உருளிய கழட்டி ‘ஸ்குரூ’வ புடுங்கி எடுத்துட்டு,
“இது ரொம்ப ஆழமா இருக்கு, புது உருளிதான் போடனும்”னு சொன்னாரு.
நமக்கு இதுக்கு முன்னாடி ஒரு அனுபவம் இருந்துச்சு. ஒரு ஏழு மாசம் முன்னாடி ஒரு உருளில காத்து போன போது பக்கத்து கடைகாரர்கிட்ட போயிருந்தேன்(அப்ப காத்து லேசாதான் இறங்கியிருந்துச்சு ‘கார்’ பட்டறைக்கு உடனே போயிட்டேன்), அவரும் இதே மாதிரி தான் சொன்னாரு. அப்ப முதல் தடவைனாலே சரி மாத்திடுங்கனு ஒரு நூத்தாம்பது வெள்ளி செலவு பண்ணி ஒரு ஓட்டைக்காக ஒரு புது உருளி மாத்துனேன். ஏற்கனவே பட்ட அடியால இந்த தடவை “புதுசெல்லாம் மாத்த முடியாது நீங்க ஓட்டைய மட்டும் அடைச்சு கொடுங்க”னு சொல்லிட்டேன்.
அடைச்சவரு, அந்த இடத்துல தண்ணி வச்சு பார்த்துட்டு, “பாருங்க, குமிழி வருது,அடைக்க முடியாது, புதுசு தான் போடனும்”னு சொன்னாரு.
“இல்ல, இன்றொரு அடைப்பான போட்டு நல்லா ஓட்டைய அடைங்க”னு சொன்னக்கப்புறம், அத அடைச்சு தண்ணீர் வச்சு பார்த்தார். இப்ப குமிழி வரல.
அவர் கேட்ட 10 வெள்ளிய கொடுத்துட்டு, “ஓட்டி பார்க்குறேன், நடுவுல பிரச்சனைனா வரேன்”னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.ஒரு வாரமாச்சு, இன்னைக்கு வரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்ல. பார்ப்போம். ஆனா இதுல கத்துக்கிட்டது நிறைய.
ஏதோ ஒரு வகைல உங்களுக்கும் இது பயனுள்ளதா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்:)
பி.கு: ‘டயர்’க்கு ‘உருளி’ என்ற தமிழ்ச் சொல்ல எனக்கு சொல்லிக் கொடுத்து உதவியவர் கவிஞர் மகுடேசுவரன் அய்யா. அவருக்கு நன்றி. இருந்தாலும் பல ஆங்கிலச் சொல்ல வேனும்னு பயன்படுத்தியிருப்பேன். படிக்கிறவங்களுக்கு பழக்கப்பட்ட சொல்லும் இருக்கனும் அதே சமயம் புதிய சொல்லையும் தெரிஞ்சகனும்னு பயன்படுத்தியிருப்பேன்.