அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து
துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து
வடிவான மன்னவனை வாவென் றழைத்து
பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து
மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து
படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து
முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று
வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன
நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட
புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த
அடியோ(டு) அவள்மறந்தா ளே!

*புடிகை = ஏலம்

அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து வடிவான மன்னவனை வாவென் றழைத்து பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த அடியோ(டு) அவள்மறந்தா ளே! *புடிகை = ஏலம் #தீபாவளி_சிறப்பு_கவிதை

வசந்தா ஹரிகிருஷ்ணன் இரங்கல்

எந்த ஒரு மரணமும் துயரமானது. அதிலும் 46 ஆண்டுக்கால மணவாழ்க்கையில் தன்னுடனே பயணம் செய்து, துடிப்புடன் நல்ல சமூகத் தலைவராக செயல்பட உறுதுணையாக இருந்த அவரின் மனைவியின் இழப்பு திரு ஹரிகிருஷ்ணன் அவர்களை எப்படியெல்லாம் பாதித்துள்ளது என்பதை கேட்ட போது என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

மறைந்த திருமதி வசந்தா ஹரிகிருஷ்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

உருளி என்னை உருட்டிய கதை

போன வாரம் திங்கள்கிழமை மாலை, ஆயுத பூசைனு “‘கார’ சுத்தம் பண்ணி பூசை போடுங்க”னு மனைவி சொன்னாங்க. “அப்படியே, ஒவ்வொரு சக்கரத்துக்கு(சுழலி) கீழேயும் ஒரு எலும்பிச்சை பழம் வச்சு, வண்டிய எடு”னு அம்மா சொன்னாங்க. சரி, ஆண்டுக்கொரு முறையாவது சுத்தம் செய்வோமேனு மாலை கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி, வண்டிய சுத்தம் பண்ணி பூவு, பொட்டு எல்லாம் வச்சு அழகா வண்டிக்கு ‘மேக்கப்’ போட்டு கிளப்புனா…அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு எலுமிச்சை பழம் வைக்கலேயேனு. நாலாயிரம் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ல ஓடாத வண்டியா இந்த நாலு எலுமிச்சை பழத்துல ஓடப்போவதுனு கேக்கறவங்க அடுத்த பத்திக்கு தாவிடுங்க.

கீழே இறங்கி முன்னாடி சுழலிக்கு அடியில பழத்தை வச்சுட்டு பின்னாடி வைக்கும்போது தான் பார்த்தேன் உருளியில(டயர்) காத்தே இல்ல. ஆஹா சந்தனம், குங்குமம் வைக்கும் போது கூட இத பார்க்கலேயேனு யோசிச்சிட்டே உருளிய பார்த்தா, யாரோ ஒருவர், ஒரு ‘ஸ்குரூ’வ அழகா உருளிக்கு நடுவுல திருப்புளி வச்சு நுழைச்ச மாதிரி இருந்தது.

என்னடா இது ஆயுத பூசையும் அதுவுமா பூசை போட்டு வண்டிய எடுத்துட்டு கோயிலுக்கு போகலாம்னு பார்த்தா இப்படி ஆயிடச்சேனு ஒரு நிமிடம் தோனுச்சு. அடுத்த ஆயுத பூசை வரை வண்டி ஒழுங்கா ஓடனுமே அப்படினும் தோனுச்சு. ஆனா இதெல்லாம் அபசகுனமா எடுத்திட்டு மனச குழப்பிக்க வேண்டாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டிருக்கேன், மனைவி கிட்டயிருந்து ‘ஃபோன்’ வந்துச்சு.

மேலும் படிக்க…

காத்துக்கிடத்தல்

காதலியைக் காண
கல்லூரி முடியும்
வேளைக்காக

மனம்விட்டுப் பேச
நண்பனின்
வருகைக்காக

வெளியூரில் படிக்கையில்
அப்பா தரும்
பணத்திற்காக

அன்பால் உருகும்
அம்மாவின்
கடிதத்திற்காக

புத்தாடையுடுத்த
பண்டிகைநாள்
விடியலுக்காக

பிடித்த நடிகரின்
புதிய
படத்திற்காக

விழாக்களில் மட்டுமே
கூடும்
சொந்தங்களுக்காக

தொடர்கதையின் முடிச்சினை
அறிந்திட
அடுத்த இதழுக்காக

பொருட்காட்சியின் பெரிய
இராட்டினத்தில்
சுத்துவதற்காக

ஆடிக்கொருமுறை
உணவகத்தில்
சாப்பிடுவதற்காக

என இத்தனை
காத்திருத்தலும்
கொடுத்த
இன்பம் கிடைக்குமா
என்
அடுத்த தலைமுறைக்கு?