கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க.
இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு.
இன்றென்ன
காதல் ஜெயந்தியா
என்
வீடெங்கும்
உன்
கால் தடங்கள்
இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும்.
“எப்போதும் போல்
இயல்பாகப் பேசிச்சிரிக்கும்
தோழிகள்
தோழிகளாகவே இருக்கின்றனர்
அதைக்கண்டு
சிறு கோபம் கொள்ளும்
நீ
காதலியாகிக் கொண்டிருக்கிறாய்”
என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது.
கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும்.
கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார்.
நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க.
நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016,
இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்)
நேரம் : மாலை 7 மணி