“ஏங்க, நாளைக்கு காய்த்திரிக்கு சாயங்காலம் 6 மணிக்கு ‘டான்ஸ் கிளாஸ்’ இருக்கு, 8 மணிக்குத்தான் முடியும், இருந்து கூட்டிட்டு வந்திருங்க. இன்னைக்கே சொல்லிட்டேன், சும்மா அந்த நிகழ்ச்சிக்கு போறேன், இந்த நிகழ்ச்சிக்கு போறேன்னு எங்கேயாவது எஸ்கேப் ஆகலாம்னு பார்க்காதீங்க”னு மனைவி வெள்ளிக்கிழமையே எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்வாங்க.
நம்ம இந்த வாரம் எங்க போகனும்னு ஒரு மாசம் முன்னாடியே ‘பிளான்’ பண்ணியிருந்தாலும் வேலைக்காவாது. அவங்க போடுற பிளான் தான் செயல்படுத்தப்படும். இது தான் குடும்ப நியதி. இப்படித்தான் என்னை போல பலரும் குடும்பம், பிள்ளைகள்னு வார இறுதியும், கடுமையான வேலை பளுவோட வார நாட்களும் என நம் வாழ்க்கைய கடத்திகிட்டு வருவோம். அதைத் தாண்டி சமூகத்துக்கும், மொழிக்கும், கலைக்கும், நாட்டுக்கும் சேவையாற்றும் மனமும், நேரமும், வசதியும் உள்ளவர்வர்கள் சிலரே உள்ளனர்.
இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூகத்துக்கு தன்னோட நேரத்தை நல்வழியில் செலவு செய்து இவ்வளவு இள வயதில் ‘Pingat Bakti Masyarakat’ PBM) என்ற ‘பொதுச் சேவை விருதை’ வாங்கியிருக்கிறார்கள் நம்மில் பலருக்கு தெரிந்த இரு தமிழர்கள், ஒன்று நண்பர் Nizamமற்றொருவர் நண்பர். Moor Thy . மூர்த்தி மேற்கில் சேவை செய்கிறார், நிஜாம் கிழக்கில் சேவையாற்றுகிறார். ஆளுக்கொரு திசை என்றாலும் இருவரும் பொதுச் சேவையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.
திரு மூர்த்தி பெருமாள்
———————-
இவர் தலைமையேற்று நடத்தும் புக்கிட்பஞ்சாங் பொங்கல் நிகழ்ச்சி அந்த வட்டாரத்தில் மட்டுமில்லாமல் சிங்கை முழுவதும் மிகவும் பிரபலமானது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டிப் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தேக்கா வட்டாரத்தில் நடைபெற்று வந்த பொங்கல் விழாவை வீடமைப்பு பேட்டைக்கு கொண்டு சேர்த்ததில் மூர்த்தி தலைமையில் இயங்கிய புக்கிட்பஞ்சாங் பொங்கல் குழுவிற்கு முக்கிய பங்குண்டு. இதில் தமிழர்களுடுன் மற்ற இன மக்களும் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகின்றனர். ஒன்றரை மீட்டர் அகலம் உள்ள பெரிய பானையில் ஆயிரம் கிலோ பொங்கல் வைப்பது, 250 பேர் இணைந்து பொங்கல் வைப்பது, 25 உரல்களில் ஐம்பது பேர் அரிசி இடித்தல் என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆறு முறை சிங்கப்பூர் சாதனையாளர்கள் புத்தகத்தில் இவரின் திட்டங்கள் இடம் பெற்றன. மாட்டு வண்டியில் வலம் வருவது மற்றும் உறி அடித்தல், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது என்று பல்சுவை விருந்தளிக்கும் ஒரு நிகழ்வாக அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சி சிங்கப்பூரர்களையும், புதிய குடியிருப்பாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக பாராட்டப்பட்டது. மேலும் இரத்ததான முகாம், வசதி குறைந்தோருக்கான நிதி திரட்டியது என பல திட்டத்தை சிறப்பாக நடத்தியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தைத் தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவர். அதன் தலைமைப் பொறுப்பில் முனைவர் சுப திண்ணப்பன் அய்யா பதவி வகித்த காலத்தில் திரு மூர்த்தி செயலாளராக பதவி புரிந்து இவர் சிங்கையில் தமிழுக்கும் மக்களுக்கு பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் புக்கிட்பஞ்சாங் வட்டாரத்தில் குடிமக்கள் கலந்தாலோசனைக் குழு(CCC), குடியிருப்பாளர்கள் குழு(RC) ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராகவும், புக்கிட்பஞ்சாங் ஒருங்கிணைப்பு மற்றும் குடியுரிமை பரிந்துரைப்பாளர் மன்றத்தின்(INC) தலைவர், மக்கள் கழக ஒருங்கிணைப்பு மன்றத்தின்(PA Integration Council) செயலவை உறுப்பினர் என பல பொறுப்புகளில் தொடர்ந்து அயராது இயங்கி வருகிறார்.
திரு நிஜாம்
—————
‘தேடல்’ என்ற தமிழ் இலக்கிய நிகழ்வை ‘பொங்கோல்’ வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி என பல நிகழ்வுகளை நடத்தி தமிழ் பேசத் தயங்கும் பல அக்கம்பக்க மாணவர்களிடம் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயல்படுகிறார். குடியிருப்பாளர்கள் ஒன்று கூடி உணவு உண்பதற்காக ‘காலை பசியாறும் திட்டம்’ நடத்துகிறார். ஏழை எளிய மக்களுக்கான நிதி திரட்டும் திட்டத்தையும் நடத்தியிருக்கிறார். பசுமை வாரத் திட்டதையும், திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்று கூடி திரைப்படம் பார்ப்பதற்கான திட்டத்தையும் பொங்கோல் வட்டாரத்தில் முதன் முதலில் நடத்திய பெருமை இவருக்குண்டு. அங்கு ‘மக்கள் குறை தீர்க்கும்’ நிகழ்வில் முக்கிய பங்காற்றி பலரின் கஷ்டங்கள் தீர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் நிஜாம் பொங்கோல் வட்டாரத்தில் குடிமக்கள் கலந்தாலோசனைக் குழு(CCC), சமூக மைய மேலாண்மைக் குழு (CCMC) ஆகியவற்றின் துணைத்தலைவராகவும், குடியிருப்பாளர்கள் குழு(RC) தலைவராகவும் உள்ளார். பொங்கோல் விஸ்தா இந்திய நடவடிக்கை செயற்குழு(IAEC) தலைவர், பாஸிர் ரிஸ் பொங்கோல் நகர்மன்ற உறுப்பினர், வட கிழக்கு சமூக மேம்பாட்டு மையத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான திட்டக்குழுவில் உறுப்பினர் என பல பொறுப்புகளில் வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
விருது
——-
சரி இந்த விருதுக்கு என்ன சிறப்பு, இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால், ஆமாம். இது காசு கொடுத்து வாங்கும் ‘மதிப்புறு முனைவர்’ மாதிரியோ, இல்லை ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பத்தால் எந்த ஒரு செயல்முறையோ, போட்டியோ இல்லாம நானும் கொடுக்கிறேன் ‘விருது’ங்கற மாதிரியான விருதோ கிடையாது. இது ஓர் அரசு அங்கீகாரம். சிங்கையில் 1973லிருந்து கொடுக்கப்படும் ‘PBM’ என்கின்ற இந்த ‘பொதுச் சேவை விருது’ கலை மற்றும் இலக்கியம், விளையாட்டு, அறிவியல், வணிகம், தொழில் மற்றும் தொழிலாளர் இயக்கம் போன்ற துறைகளில் போற்றத்தக்க வகையில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக அடித்தள அமைப்புகளில் சிறப்பாக தொண்டாற்றுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
சரி என்ன மாதிரியான அடித்தள அமைப்புகள் இருக்கின்றன என்று பார்ப்போம். முதலில் மக்கள் கழகம்(PA) அது தான் தாய்கழகம், அதன் கீழ் குடிமக்கள் கலந்தாலோசனைக் குழு(CCC) உள்ளது. மொத்தம் 100 சமூக மன்றங்கள்(CC) உள்ளன். அதன் கீழ் 550 குடியிருப்பாளர்கள் குழுவும்(RC), 100 அக்கம்பக்கக் குழுவும் உள்ளன. அது தவிர சமூக மைய மேலாண்மைக் குழுவும் (CCMC) மக்கள் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. விளையாட்டிற்கு, பெண்களுக்கு, முதியோர்களுக்கு, இளையர்களுக்கு, இந்தியர்களுக்கு(இந்திய நடவடிக்கை செயற்குழு(IAEC)), மலாய்க்காரர்களுக்கு என மொத்தம் 1,800 அடித்தள அமைப்புகள் உள்ளன. இவற்றில் நீங்களோ உங்கள் பிள்ளைகளோ, பெற்றோர்களோ சேர்ந்து மக்கள் பணியாற்றலாம்.
மொத்தம் 3959 பேருக்கு இந்தாண்டு தேசிய தின விருது வழங்கப்படுகிறது. அதில் 171 பேருக்கு வழங்கப்பட்ட இந்த PBM விருதில் பதினைந்துக்கும் கீழே தான் தமிழர்கள் உள்ளார்கள். அதில் இவ்விருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த விருதை வாங்கிய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த உயரிய விருதை மதிப்பிற்குரிய சிங்கை அதிபர் பிறகு ஒரு நிகழ்வில் இவர்களுக்கு வழங்கி கௌரவிப்பார்கள்.
சமூகச் சேவையை அங்கீகரிக்கும் இந்த மாதிரியான விருதுகள் மேலும் பல நல்ல சமூக நல விரும்பிகளை பொதுச் சேவையில் இயங்கத்தூண்டும் என்பதில் எந்த வித ஐயமில்லை. சமூக பணிக்கான தேவையும் வாய்ப்புகளும் அதிகம் உள்ள நிலையில் அது குறித்தான விழிப்புணர்வையும் அதிகப்படுத்த வேண்டும். எதிர்கால சிங்கையை நிர்மாணிக்க இளையர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக பணிகளுக்கான அங்கீகாரங்கள் குறித்தும் அவர்களிடம் எடுத்துச் செல்வது அவசியம். அங்கீகாரத்துக்காக யாரும் சேவை செய்வதில்லை செய்யவும் கூடாது என்பது சரிதான். ஆனால் பொதுச் சேவையை அங்கீகரிக்கும் வழிமுறைகள் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொண்டால் தான் அந்த அங்கீகாரங்களுக்கு மதிப்பு இருக்கும்.
மீண்டும் திரு மூர்த்திக்கும், திரு நிஜாம்க்கும் என் மனமார்ந்த வாழ்த்தினை தமிழர் என்ற முறையிலும், நல்ல நண்பர்கள் என்ற முறையிலும் அரசியல் சார்பின்றி பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். மேலும் தமிழர்களுக்கும், தமிழுக்கும், சிங்கைக்கும் பல நல்ல சேவை செய்து அங்கீகரிக்கப்பட்ட, மதிப்புடைய பல விருதுகளை வாங்க வேண்டும்.