#தமிழ்மொழி_விழா_2016 சொற்களம் 2016 —————— மாணவர்களின் கற்றல் பயணம்: ——————————- “புரிந்துணர்வு இருப்பதால் தான் பண்டிகை தினங்களில் அண்டை வீட்டிலுள்ள மற்ற இனத்தாரிடமும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று ஒட்டிப் பேசிய அணியின் மாணவர் கூறியபோது “அரசாங்கம் போட்ட சட்டத்தினால்தான் மற்ற இனத்தவர்கள் நம் அண்டை வீட்டில் வாழும் சூழுல் ஏற்பட்டது” என்று அழகாக தங்களின் எதிர்வாதத்தை வைத்தார் வெட்டிப் பேசிய அணியிலுள்ள மாணவர். பல இன மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ சட்டங்களைவிடப் புரிந்துணர்வே அவசியமாகும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9ம் தேதி , சனிக்கிழமை மீடியாகார்ப் அரங்கத்தில் சொற்களம் 2016 இறுதிச்சுற்றில் நடந்த சுவாரசியமான அங்கமிது. இப்படி முதல் சுற்றிலிருந்து இறுதிச்சுற்று வரை கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்த சொற்களம் விவாதப் போட்டியில் சிங்கையின் அடுத்த தலைமுறையினர் தங்களது கருத்துகளை, வாதத் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெகு சிறப்பாக வெளிக்காட்டினர். இந்தப் போட்டிகள் மாணவர்களிடத்தில் வெறும் பேச்சுத் திறனையும், கவனிக்கும் ஆற்றலையும் மட்டும் வளர்க்கவில்லை, தமிழ் மீதான ஒரு பற்றுதலையும் உலக நடப்புகளை படித்து அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பினையும் வழங்குகிறது. மேலும், குழுவாக போட்டியிடுவதால் கூட்டு முயற்சியையும், விட்டுக் கொடுக்கும் பண்பையும் வளர்க்கிறது. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியுடன் தோல்வி என்பதும் தவிர்க்க முடியாததாகிறது. தோல்வி அடைந்த குழுக்கள் அத்தோல்வியை எப்படி அணுக வேண்டும், சக போட்டியாளர்களை எப்படி மதிக்க வேண்டும், நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துகளை எப்படி கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு தளமாக இச் சொற்களம் போட்டி அமைகின்றது. இந்தக் கற்றல் பயணம், மாணவர்களைப் பக்குவப்படுத்தி போட்டித்தன்மை மிகுந்த இக்காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் அவர்களை எந்த ஒரு சவாலான சூழலையும் சந்திக்க பெரிதும் உதவும் என்பது திண்ணம். அடித்தளத் தலைவர்களின் பங்களிப்பு: ————————————- 12வது முறையாக நடைபெறும் இப்போட்டியின் பின்னணியில் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் மத்திய வட்டார இந்திய நற்பணிச் செயற்குழுக்களிலிருந்து 50 அடித்தளத் தலைவர்களின் தன்னலமற்ற உழைப்பு அடங்கியிருக்கிறது. சுமார் 50 நடுவர்கள், 15 அவைத் தலைவர்கள், 15க்கும் மேற்பட்ட தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விவாதப்போட்டி சரியாக 6 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. 30 இந்திய நற்பணிச் செயற்குழுவினர் தீவிரமாக பணி செய்து மாணவர்களிடத்தில் தமிழ் புழக்கத்தை வளர்ப்பதற்காக, தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சொற்களம் 2016 நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்வை இணைந்து நடத்திய மீடியாகார்ப் நிறுவனம், இறுதிச்சுற்றின் நேரடி ஒளிபரப்பினையும் அரையிறுதிச்சுற்றின் பதிவுக் காட்சியையும் வசந்தம் ஒளிவழியில் சிறப்பாக ஒளிபரப்பி தன்னுடைய பங்களிப்பை நல்கியது. போட்டியின் வெற்றியாளர்கள்: —————————- 32 பள்ளிகள் கலந்துக்கொண்ட இவ்விவாதப்போட்டியின் முதல் சுற்றில் 16 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் 8 பள்ளிகள் கால்யிறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பேச்சுத்திறனை மேம்படுத்த பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது. காலிறுதிச்சுற்றிலிருந்து தயாரித்துப் பேசும் அங்கத்துடன், தலைப்பை போட்டியின் போதே கொடுத்து 3 நிமிடத்தில் முன் தயாரிப்பின்றி உடனடியாக பேசும் அங்கமும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் காலிறுதிச் சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளிகள் அரையிறுதி சுற்றில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பெண்டமீர் உயர்நிலைப்பள்ளி விக்டோரியா உயர்நிலைப் பள்ளியை எதிர் கொண்டு வெற்றி பெற்றது. ராஃபில்ஸ் கல்வி நிலையம் மெக்ஃபெர்ஸன் உயர்நிலைப் பள்ளியை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. முடிவில் ராஃபில்ஸ் கல்வி நிலையம் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. இருந்தும் போட்டியில் பங்குகொண்டு தங்கள் திறைமைகளை வெளிப்படுத்திய அனைவரும் வெற்றியாளர்களே. இளையர்களுக்கே முக்கியத்துவம்: ——————————– சிங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரவலாக அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்நிகழ்வில் சிறப்புரைகள் இல்லை, மாலைகள் இல்லை, பொன்னாடைகள் இல்லை, எந்தவித சம்பிரதாய சடங்குகளும் இல்லை. மாணவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அடித்தளத் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்விது. நேரடியாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியை முதன்முறையாக செய்தாலும் எந்தவித சிரமமுமின்றி மிக சிறப்பாக வழிநடத்திய அவைத் தலைவர் இலக்கியா செல்வராஜியும் ஒரு இளையரே. 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொற்களம் போட்டியாளரான இவர் அரையிறுதி போட்டியிலும் அவைத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இதுபோல மாணவர்களை முன்னிலைப்படுத்தும் விழாக்களும், இளையர்கள் ஏற்று நடத்தும் விழாக்களும் மேலும் அதிகமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் நிகழ்ச்சிகளின் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.